Tuesday, October 19, 2010

தலைசிறந்த மனிதநேயம்!

வாழ்க்கையில் மனிதநேயம் கொண்டவர்களை எப்போதாவது நாம் சந்திப்பதுண்டு. அந்நேரங்களில் நாம் மிகுந்த மகிழ்ச்சி அடைவோம்! நாமும் பிறருக்கு உதவியாக இருக்க வேண்டும் என்கிற சிந்தனை அப்போது எழும்!
சக மனிதர்களின் குறைகளையே பேசிக் கொண்டிராமல், நம்மால் முடிந்த உதவிகளையும், நற்பண்புகளையும் வெளிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் நம்மைப் பின்பற்றியும் சிலர் உருவாகக்கூடும்.

சிலர் நம் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருப்பர். அவர் சிறந்த மனிதநேயராக, பண்பாளராக இருப்பார். ஆனால் அதுகுறித்து நாம் அறியாமல் இருந்திருப்போம். ஏதோ ஒரு கட்டத்தில் தெரிய வரும்போது, ஆகா! எவ்வளவு சிறந்த மனிதநேயர் என நெகிழ்ந்து போவோம். அப்படியான மனிதர்தான் தி.மா.சரவணன் (வயது 44).

இவர் திருச்சி. கே.கே.நகர் பகுதியில் வசிக்கிறார். தனது 20 ஆவது வயதில்
நூல்களை வாசிப்பதிலும், அதனைச் சேகரிப்பதிலும் ஆர்வம் காட்டியுள்ளார். தன் மாத வருவாயில் சிறு பகுதியை நூல்களுக்காகவே செலவழித்துள்ளார். (இன்றைக்கு அவரிடம் ஆயிரக்கணக்கான அரிய நூல்கள் உள்ளன.)

இந்நிலையில் அவர் குடியிருந்த வீட்டிற்கு அருகில் கோமதி (வயது 17) என்கிற பெண் தனது பெற்றோருடன் வசித்துள்ளார். கோமதிக்குப் பிறக்கும் போதே பல்வேறு இருதய நோய்கள் இருந்திருக்கிறது.  பல இடங்களில் சிகிச்சை அளித்தும் பயன் இல்லாததால், அவரின் பெற்றோர் கவலை அடைந்துள்ளனர்.
இந்நிலையில்தான் தி.மா. சரவணன் வருகிறார்.

கோமதியின் பெற்றோர் கேட்டுக் கொண்டதற்கிணங்க சிறந்த சிகிச்சை அளிக்க வேண்டும் என முனைகிறார். திருச்சி, மதுரை, சென்னை எனப் பல்வேறு ஊர்களுக்கும் கோமதியை அழைத்துச் செல்கிறார். ஆனால் அவரின் இருதய நோய்க்கு உரிய சிகிச்சை இல்லை எனவும், அப்படியே அறுவை சிகிச்சை செய்தாலும் அவரின் உடல்நிலை ஏற்காது எனவும் மருத்துவர்கள் திட்டவட்டமாகக் கூறிவிட்டனர். ஆக கோமதிக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து வரலாம் என அவரின் பெற்றோர் முடிவுக்கு வருகின்றனர்.

இந்நிலையில் கோமதி என்கிற இளம்பெண்ணை, தி.மா.சரவணன் எனும் இளைஞர் பல்வேறு மருத்துவமனைகளுக்கும் அழைத்துச் சென்றது விமர்சனம் ஆக்கப்படு கிறது. எப்படி ஒரு பெண்ணை இவர் அழைத்துச் செல்லலாம் என்கிற கேள்விகள் வெளிவரத் தொடங்கின? உயிருக்குப் போராடும் ஒரு பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது தவறில்லை என்கிற சிந்தனையுடன் தி.மா. சரவணன் இருந்துள்ளார்.
எதையுமே  கொச்சையாகவே பார்க்கத் தெரிந்த சமூகம் இதை ஏற்க மறுத்துள்ளது. இந்நெருக்கடியில்தான் தி.மா.சரவணன் ஒரு முடிவுக்கு வருகிறார். கோமதியைத் தானே வாழ்க்கைத் துணைவராக ஏற்பது என்பதுதான் அந்த முடிவு.

இயல்பாகவே கோமதிக்கு இருதயநோய் இருக்கிறது. இந்நிலையில் இம் மனிதர்களால் கோமதிக்குப் புதிய நோய் எதுவும் வந்து விடக்கூடாது என்பதற்காகவே அவர் இம்முடிவுக்கு வந்துள்ளார். அவரின்  இம்முடிவு
உறவினர்கள், நண்பர்கள் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அவரின் குடும்பத்தில் இதை ஏற்க மறுத்து, அழுது புலம்பியுள்ளனர். இன்றோ, நாளையோ இறக்கப் போகும் ஒரு பெண்ணை ஏன் திருமணம் செய்கிறாய்? எனக் கேட்டுள்ளனர். ஆனால் அவர் எதைப்பற்றியும் கவலைப்படாமல், கோமதியை வாழ்க்கைத் துணைவராக ஏற்றுக் கொண்டார்.

இப்போது திருமணம் முடிந்து 20 ஆண்டுகள் ஓடிவிட்டன. இன்றோ, நாளையோ எனக் கருதப்பட்ட ஓர் உயிர் 20 ஆண்டுகள் கடந்து வந்திருக்கிறது. அந்த உயிர் 26.04.2008  நின்றுவிட்டது. கோமதியின் பெற்றோரே ஒரு கட்டத்தில் கைவிட்ட பிறகு, தி.மா.சரவணன் எனும் பெரியாரியத் தோழர் அப்பெண்ணின் மீது நேசம் காட்டி, வாழ்க்கைத் துணைவராக ஏற்று, எந்த மருத்து வமும் இன்றி, அவரின் அன்பினாலும், காதலாலும் 20 ஆண்டுகள் பிழைக்க வைத்திருக்கிறார்.

இதில் குறிப்பிடத்தக்க மற்றுமொரு செய்தி என்ன தெரியுமா? இவர்களுக்குக் குழந்தை இல்லை. காரணம் என்ன தெரியுமா? உடலுறவுக்கு ஏற்ற உடல்நிலை கோமதிக்கு அமையவில்லை. இவையனைத்தையும் தெரிந்துதான் தி.மா.சரவணன் இந்த வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துள்ளார். அவர் மனைவியின் கடைசி நாளில் அவரைச் சந்தித்து போது, “ இயல்பாகவே எனக்குத் திருமணம் செய்து கொள்வதில் ஆர்வமில்லை. இந் நிலையில்தான் கோமதியைச் சந்தித்தேன். வாழ்நாளோடு போராடும் ஒரு பெண்ணுக்கு நாம் ஏன் நல்ல தோழனாக இருக்கக் கூடாது என்கிற சிந்தனை எனக்குள் வந்தது. இப்போது அந்தத் தோழமை என்னைப் பிரிந்து சென்று விட்டது,” எனக் கண்ணீர் வடிக்கிறார்.

அக் கண்ணீரில் இச்சமூகம் மனிதநேயத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்!

வி.சி.வில்வம்

No comments:

Post a Comment