Thursday, May 16, 2013

தாலி என்னும் மோசடி


பெரியாரால் அறிமுகப்படுத்தப்பட்ட சுயமரியாதைத் திருமணத்தில் ‘தாலி’ என்கிற அடிமைச் சின்னம் கிடையாது. பண்டையத் தமிழர் திருமணங்களிலும் தாலி என்பது இல்லை. இடையில் ஏற்பட்ட தவறான பழக்கமே இது. தாலி கட்டுவதன் அவசியத்தை பழமைவாதிகளே உயர்த்திப் பிடிக்கிறார்கள்.

தாலி என்பது புனிதச் சின்னம். ஒரு பெண்ணுக்குத் திருமணம் முடிந்துவிட்டது என்பதற்கான அடையாளம். தாலி என்பது பெண்ணுக்குப் பாதுகாப்பு என்பதும் அவர்களின் வாதம்.

தாலி என்பது அடிமைச் சின்னமே தவிர வேறல்ல. ஐம்பது காசு மதிக்கத்தக்க மஞ்சள் கயிறும் ஐந்து கிராம் தங்கத்தையும் தவிர அதில் வேறெதுவும் கிடையாது. அந்தத் தாலி எந்தவிதத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பைத் தருகிறது என்பது புரியாததாகவே இருக்கிறது.

சாலையில் செல்லும்போது கழுத்தில் தாலி உள்ளவர்களை எல்லாம் கிண்டல் செய்யாமல் இருக்கிறார்களா? இருபொருள் படப் பேசாமலிருக்கிறார்களா? அல்லது பாலியல் வன்முறைக்கும் பாலுறவு வன்கொடுமைக்கும் அவர்களை ஆட்படுத்தாமல் இருக்கிறார்களா? இவற்றிற்கெல்லாம் பழமைவாதிகளின் பதில் என்ன?

தாலி அணிவது ஒழுக்கத்தின் சின்னம் என்று சொன்னால் வெளிநாடுகளில் தாலி என்பதே கிடையாது. தாலி அணியாத அப்பெண்கள் ஒழுக்கம் இல்லாதவர்களா? இன்னும் சொல்லப் போனால், வெளிநாடுகளில் இரவு நேரங்களில் பெண்கள் தனிமையில் சென்று வரக்கூடிய வாய்ப்பிருக்கிறது. ஆனால் இந்தப் புண்ணிய(?) பூமியில் அந்தப் புனிதச் சின்னத்தைக் கழுத்தில் மாட்டிக் கொண்டாலும் சரி, எங்குமே அப்பெண்கள் தனியே சென்றுவர முடியாது என்பதுதான் சோகம். சமயங்களில் புனிதம் என்றும் பாதுகாப்பு என்றும் கருதப்படுகிற அந்த ‘அடிமைச் சின்னத்தையே’ கொள்ளையடித்துப் போய்விடும் நிகழ்ச்சிகள் தான் ஏராளமாக நடக்கின்றன. பிறகென்ன புனிதம் என்றும் பாதுகாப்பு என்று பசப்பு வசனங்கள்? தாலி என்பது அடங்கிப் போவதற்கும், அச்ச மூட்டுவதற்கும், அடிமைப்படுத்துவதற்குமேயன்றி வேறெதற்கும் இல்லை. திருமணம் ஆனதற்கு ‘தாலி’தான் பெண்களின் அடையாளம் எனில், ஆண்களுக்கு என்ன அடையாளம் இருக்கிறது?

கணவனை இழந்த பெண்களுக்கு வெள்ளைச் சேலை உடுத்தி, பூ, பொட்டை மறுத்து, ‘விதவை’ என்னும் பெயர்சூட்டி வெளியில் போய்வர அனுமதி மறுக்கிறோம். ‘முண்டச்சி’ என்கிற கொச்சைத் தன்மான பட்டத்தைக் கொடுத்து அவர்களைக் காண்பதே அபசகுனம் என்கிறது மூடத்தனத்தில் ஊறிய சமூகம். இதேபோன்று மனைவியை இழந்த ஆண்களுக்கு ஏதாவது பெயர் இருக்கிறதா? மேற்குறிப்பிட்டது போன்று கொடுமைகள் நிகழ்கிறதா?

ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனி நியாயம். இதென்ன அநியாயம்? கணவன் இறந்தால் தாலியைக் கழற்ற மாட்டார்கள்- அறுத்தெறிவார்கள். பொட்டை அழிப்பார்கள்; பூவை இழுப்பார்கள்; வளையலை உடைப்பார்கள். கணவன் இறந்து போன வேதனையில் இருக்கும் பெண்ணை அலங்கோலப்படுத்தி துன்புறுத்திக் கொடுமை செய்வார்கள். காட்டுமிராண்டிக் காலத்தில் செய்துவந்த பழக்கங்களைக் கணினிமயக் காலத்திலும் செய்கிற பைத்தியக்கார மனிதர்கள்.

எந்தத் தாலியைப் புனிதம், அடையாளம், பாதுகாப்பு என்று கருதி வந்தார்களோ அந்தத் தாலியையே அறுத்தெறிவதற்கும் காரணம் என்ன? கணவன் இருக்கும் வரை சுமப்பது இறந்த பின் அறுப்பது. ஆக அந்தப் பெண் கணவனைச் சார்ந்து வாழவே பயிற்றுவிக்கப்படுகிறாள். கணவன் இறந்த பிறகு அப்பெண்ணுக்கு எதுவுமே இருக்கக் கூடாது. அழகான பெண்ணை அலங்கோலமாக்கி மூலையில் அமரச் செய்து விடுவார்கள். அப்பெண் யார்மீதும் ஆசை வைத்து விடக்கூடாது; அப்பெண்ணின் மீதும் யாரும் ஆசை வைத்து விடக் கூடாது. அவளது இன்ப வாழ்க்கை முடிவடைந்தது என்பதற்கான ஏற்பாடே இது.

இம்மூடத்தனமான ஏற்பாடுகளை முறியடிக்கத் தமிழ்ப் பெண்கள் அணி திரள வேண்டும்.


                                                                                      - வி.சி.வில்வம்

திக்கெட்டும் பரவும் பெரியார் திடல் !


2012 ஆம் ஆண்டு, நவம்பர் மாதத்தின் ஓர் இறுதி வாரத்தில் , தமிழ்ப் பிள்ளைகளுக்கு நல்ல வாழ்விணையர் கிடைக்க,  மன்றல் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பெரியார் திடல் நிரம்பிக் கிடந்தது. அதைத் தொடர்ந்த தமிழர் திருநாள் பொங்கல் விழாவிலும் கூடி மகிழ்ந்தார்கள்! இதோ ... இப்போதும் போய் பாருங்கள்! தினமும் ஆயிரக்கணக்கில் வந்து போகிறார்கள் ; வாங்கிப் போகிறார்கள் ! ஆம்... சென்னை புத்தகச் சங்கமம் குறித்துப் பேசுகிறோம்!
தமிழ்நாட்டின் நாளிதழ்களிலும், வார இதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் சென்னை புத்தகச் சங்கமம் குறித்துப் பார்த்திருப்பீர்கள்!  "ஹலோ எப்.எம்" வழியே கேட்டிருப்பீர்கள் !
ஏப்ரல் - 23 உலகப் புத்தக நாள் !  அப்புத்தக நாளுக்கே, புத்தாக்கம் கொடுக்கும் வகையில், தனது வீச்சைப் பதிவு செய்து வருகிறது சென்னை புத்தகச் சங்கமம்! ஏப்ரல் 18 - இல் தனக்கான தொடக்கத்தைக் கொண்டாடி மகிழ்ந்தது.  ஏப்ரல் 19 முதல் 27 வரை மாபெரும் புத்தகக் கண்காட்சியைத்  தன்னகத்தே கொண்டு அது பயணித்து வருகிறது. பொதுவாக விழாக் காலங்கள் மற்றும் குறிப்பிட்ட மாதங்களில்  புத்தகக் கண்காட்சிகள் நடைபெறும். ஆனால் முதன்முறையாக உலகப் புத்தக நாளை முன்னிட்டு நடைபெறுவது இதன் மொத்தச் சிறப்பு ! "புத்தகக் கண்காட்சி என்றால் புத்தகங்கள் விற்பனை", என்பது தான் அதன் பொருள். ஆனால் அந்தப் பொருளையே புரட்டிப் போட்டு, புது வரலாறு எழுதி வருகிறது இப்புத்தகச் சங்கமம் !

இது பதிப்பாளர்கள் சங்கமம் :
இந்தப் புத்தகச் சங்கமத்தில் பதிப்பாளர்கள் மட்டும்தான் ! விற்பனையாளர்கள் கிடையாது. இரண்டுக்குமான வேறுபாடு  என்ன ? விற்பனையாளர்கள் பங்கு பெற்றால் குறிப்பிட்ட ஒரே புத்தகங்கள் நிறைய கடைகளில் இருக்கும். பார்த்தப் புத்தகத்தையே பார்க்க வேண்டிவரும். குறிப்பிட்ட எழுத்தாளர்களின் நூல்களுக்கு மட்டுமே முதல் வரிசை கிடைக்கும்.  அப்படி இருக்கலாமா? கூடாது.  "எல்லோருக்கும் எல்லாமும்" என்பதுதானே திடல் பண்பாடு.
அதன் அடிப்படையிலே இந்த ஏற்பாடு.  ஆம் ! இது பதிப்பாளர்களுக்கான சங்கமம் !  ஒரு அரங்கில் நீங்கள் காணும் நூல்களை, வேறொரு அரங்கில் காண முடியாது. (திருக்குறள், பாரதிதாசன் கவிதைகள் போன்ற ஒரு சில விதிவிலக்கு) தமிழ்நாட்டின் ஆகச் சிறந்த அனைத்து  நூல்களையும் நீங்கள் வாங்குகிறீர்களோ இல்லையோ, உங்களால் காண முடியும், ரசிக்க முடியும், வியக்க முடியும் !   எண்ணற்ற நூல்களும், குட்டி, குட்டி எழுத்தாளர்களும் உங்களுக்கு அறிமுகம் ஆவார்கள். இது மட்டுமா கண்காட்சி சிறப்பு ? இல்லையில்லை...!  இந்தப் பதிப்பாளர்கள் மற்றும் அவர்களின் பணியாளர்களுக்குப் பயிற்சிப்  பட்டறைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாசகர்கள் மற்றும் பொது மக்களை எவ்வாறு அணுகுவது, அவர்களின் தேவைகளைப் புரியும் விதம், நூல்களின் சிறப்புகள் குறித்து எடுத்துக் கூறுவது, மொத்தத்தில் மேன்மை பொருந்திய அணுகுமுறைகளை வளர்த்துக் கொள்ளும் விதம் குறித்தெல்லாம் பயிற்சிப்  பட்டறையில் தீட்டிக் கொடுக்கப்படுகிறது.  "நடந்தது கண்காட்சி, முடிந்தது விற்பனை",  என்பதாகவே பழகிய பதிப்பாளர் நண்பர்கள், இந்தப் பயிற்சிப் பட்டறைக் குறித்து மெய்சிலிர்த்து தான் போனார்கள். நம் குழந்தைகளிடம் பிறர் அன்பாகப் பழகினால் யாருக்குத்தான் பிடிக்காது ?

மக்கள் சங்கமம் :
மே மாதம் கல்வி நிலையங்கள் விடுமுறை. எல்லோரும் ஊர் செல்வார்கள், மாதக் கடைசி, புத்தகக் கண்காட்சிக்குப் பெரியார் திடல் புதிய இடம், கிரிக்கெட் வேறு நடைபெறுகிறது என்றெல்லாம் வார்த்தைகள் வந்து விழுந்தன. ஆனாலும் என்ன, மக்கள் வந்து குவிந்தனர். மக்கள் என்றால் பல்வேறு தரப்பு மக்கள்.
மடிசார் கட்டிய மாமி, தங்கள் வழக்கப்படி சுருட்டிக் கட்டிய வேட்டியுடன் அய்யர்வாள், உருது பேசும் இஸ்லாமியப் பெண்கள், வெள்ளை அங்கியுடன்  கிறிஸ்துவப் பெண்கள், வெளிநாட்டு மனிதர்கள், மாற்றுத் திறனாளிகள் என வகை வகை மனிதர்கள் ஒன்று கூடி பெரியார் திடலை மக்கள் சங்கமமாக மாற்றிவிட்டார்கள்.

குழந்தைகள் சங்கமம் !

புத்தகக் கண்காட்சியில் குழந்தைகள் சங்கமம் வெகு சிறப்பு. அவர்கள் உலகமே அங்கு தனிதான் ! கதைப் படைத்தல், கோட்டுச் சித்திரம் வரைதல், பேச்சுத் திறன் வளர்த்தல், சூழலியல், கவிதை எழுதுதல், நடிப்புக் கலை, வித்தியாசமான விளையாட்டுகள், வாசிப்புப் பழக்கத்தைத் தூண்டும் போட்டிகள் மற்றும் பயிற்சிகள் என குழந்தைகள் மகிழ்ந்திட வாய்ப்புகள் குவிந்துள்ளன.  குழந்தைகளுக்கான பயிற்சியாளர்கள் குழந்தைகளாகவே மாறி ஆடுவதும், பாடுவதும், குதிப்பதும், சிரிப்பதுமான காட்சிகள் தேர்ந்த ஒருங்கிணைப்பின் ஆகச் சிறந்த அடையாளங்கள் ஆகும்.  போட்டிகளில் வெல்ல முடியாமல் போன குழந்தைகளுக்கும் கழுத்தில் பதக்கம் அணிவித்து, சான்றிதழ் வழங்கி, அவர்களை உயர உயரத் தூக்கிப் பிடிக்கும் அழகை  இங்கன்றி வேறெங்கு நாம் காண முடியும்!
பல்வேறு சங்கமங்கள் :
ஒவ்வொரு நாள் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்படவில்லை; செதுக்கப்பட்டுள்ளன!  தினமும் பேசும் ஒவ்வொரு பேச்சாளர்களும் மனதில் நின்று போகிறார்கள்.  பேச்சாளர்களின் சங்கமம் மேடையை அதிர வைக்கின்றன.  இது  பொழுதுபோக்குப் பேச்சுகள் இல்லை, புலர வைக்கும் பேச்சுகள் ! அதேபோன்று சமூகக் கருத்துகள் இடம் பெறும் நகைச்சுவைச் சங்கமத்தில் தமிழக இளைஞர்கள் படுத்தும்பாடு சொல்லிமாளாது. அழகழகாய் சிந்தனைகளை அள்ளித் தூவுகிறார்கள். இலவசமாய் வயிற்று வலியும் தருகிறார்கள்! 
புத்தக வங்கி :
பண வங்கி தெரியும் தெரியும், இரத்த வங்கி தெரியும். அது என்ன புத்தக வங்கி ? நாம் பயன்படுத்தி முடித்த புத்தகத்தைப் பிறரும் பயன்படுத்தி மேன்மையடைய பிறருக்கு நன்கொடையாகக் கொடுத்து உதவுவதே புத்தக வங்கி ஆகும். . இந்த ஏற்பாடும் இப்புத்தகக் கண்காட்சியில் இருக்கிறது. அவ்வாறு புத்தகம் வழங்கும் அன்பர்களுக்கு "புத்தகக் கொடைஞர்" எனும் பெயரிட்டு சான்றிதழும் வழங்கப்படுகிறது. இப் புத்தகங்கள் கிராமப்புற நூலகங்களுக்கு அளிக்கப்பட்டு, எண்ணற்ற இளைஞர்களும், மாணவச் செல்வங்களும் பயன்பெற உதவுகிறது. அவ்வகையில் நன்கொடையாக வந்த புத்தகங்கள் ஆயிரத்தைத் தொடயிருப்பதும் ஆச்சர்யப் பட்டியல்களில் ஒன்று. அதேபோன்று இக்கண்காட்சியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. புத்தகக் கண்காட்சிக்கும், பரிசோதனை முகாமுக்கும் என்ன தொடர்பு எனச் சிலர் கேட்கிறார்கள். நல்ல செயல்கள் செய்வதற்குக் காரணங்கள் எதுவும் தேவையில்லை. அதேநேரம் கண்காட்சி - கண் சிறப்பாக இருந்தால் தான் காட்சியைப் பார்க்க முடியும். எனவே புத்தகக் காட்சிக்கு வருகிறவர்கள் கூடுதல் பயன் பெற வேண்டியே இந்த ஏற்பாடுகளையும் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். அதோடு முடிந்ததா இல்லை.  கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்களுக்கு இலவசமாக அனுமதிச் சீட்டுக் கொடுத்து, அதில் அவர்களின் விவரங்கள் பூர்த்தி செய்யப்பட்டு, தினமும் சிலரைத் தேர்ந்தெடுக்கின்றனர். முதல் பரிசாக திறன் பேசி என அழைக்கப்படும் கணினி சாதனமும், பல்வேறு தொகைகளில் புத்தகப் பரிசுகளும் வழங்கி மகிழ்விக்கின்றனர்.
கடற்கரைப் பேரணி:
உலகப் புத்தக நாளை முன்னிட்டு ஏப்ரல் 21 ஆம் தேதி, புத்தக வாசிப்புக் குறித்த விழிப்புணர்வு நடைபயணம், சென்னை மெரினாவில் நடைபெற்றது. பல நூறு மாணவர்கள், புத்தகப் பதிப்பாளர்கள், நடைப் பயிற்சியாளர்கள், பொது மக்கள் எனத் திரண்ட அந்தப் பேரணியைத் திரைப்பட நடிகர் விவேக் தொடங்கி வைத்தார். உழைப்பாளர் சிலை தொடங்கி, காந்தி சிலையில் முடிந்த அந்தக் கடற்கரை நடைபயணம் அவ்வளவு அழகு; அவ்வளவு நேர்த்தி ! குழந்தைகளும், மாணவர்களும் வாசிப்பின் நேசிப்புக் குறித்தப் பதாகைகளை தங்களின் மெல்லிய கரங்களில் ஏந்தி, வலுவான சமூகத்திற்கு வித்திட்டனர்.
இவ்வாறாக ஒரு புத்தகக் கண்காட்சியில் புத்தகங்கள் விற்பனை என்பதைக் கடந்து, வேறு என்னென்ன செய்ய முடியும் என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டி, சாதனைப்  படைத்திருக்கிறார்கள். ஒரு நாளின், ஒரு நிமிடத்தைக் கூட வீணடிக்காமல் அனைவருக்குமான நிகழ்ச்சியாகச் செதுக்கி இருக்கிறார்கள். அந்த அழகை எல்லோரும் பார்த்து மகிழ வேண்டும். சிற்பிக்கு நமது பாராட்டுகள் !
                                                                                                                                                                                                                                                                                        வி.சி.வில்வம்

எங்கள் சாருக்குப் பாராட்டு விழா!

வணக்கம் !             
எங்கள் சாருக்குப்
பாராட்டு விழா!
எஸ்.பி.ஏ
எனும் மூன்றெழுத்தில்
எங்கள்
உள்ளம் நிறைந்தவர் !
ஆதலால்
புதல்வர் நாங்கள்
முதல்வர் உங்களை
சந்திக்க மே- 26
வருகிறோம்...
குடும்பம் குடும்பமாய்
வருகிறோம்.
குழந்தைகளுடன்
வருகிறோம்.
பேராசிரியராய்
பெருமை சேர்த்தீர்கள் !
முதல்வராய்
முன்னோடி ஆனீர்கள் !                                                                                                        
தமிழக முதல்வர்கள் போல்
5 ஆண்டுகள்
ஆட்சி செய்தீர்கள் !
உங்களின் ஆட்சிக் காலம்
ஓர் பொற்காலம் !
ஆம்!
கல்லூரிக்குள்
கலையம்சம்
கொண்டு வந்தீர் !
கூடவே
கட்டிடங்களையும்
அள்ளித் தந்தீர் !
ஓய்வற்ற
உங்கள் உழைப்பால்
ஆய்வுத் துறை வந்தது.
முதுகலைப் படிப்புகளும்
முளைத்தன.
நிர்வாகம் செய்வதில்
நீங்கள் நிகரற்றவர்!
நிர்வாக மேலாண்மையை
அமெரிக்கா, இலண்டன்
சென்று பயில வேண்டாம்.
உங்களிடம்
6 மாதம்
பழகினால் போதும்!
அன்றைய காலத்தில்
அடிக்கடி நிகழ்ந்தன
வேலை நிறுத்தம்...
அதற்கு நீங்கள்
வைத்தீர்கள்
முற்றுப்புள்ளி !
அதுவே
உங்கள் சாதனையின்
முதற்புள்ளி !
அவரவர்
ஆர்வமரிந்து
வேலை கொடுப்பது
உங்கள் தனித்தன்மை !
அவ்வேலை
தாமதமானால்
தானே முடித்து விடுவது
உங்களின்
பெருந்தன்மை !
மாணவர்களைத்
தட்டிக் கேட்பதிலும்,
மாணவர்களுக்காக
முட்டுக் கொடுப்பதிலும்
நீங்கள் வல்லவர் !
கல்லூரி
கழிப்பறைகளையும்
சுத்தமாகப்
பேணச் செய்த
நல்லவர்!
மொத்தத்தில் உயர்ந்தது
கல்லூரியின் தரம்.
நீங்களே ஆனீர்கள்
அதற்கு உரம் !
நிறைய புகழ்வது
என் நோக்கமல்ல !
நிகழ்ந்ததைச்
சொல்வதொன்றும்
குற்றமல்ல.
துருதுருவென்ற
உங்கள்
சுறுசுறுப்பு
ஆயிரம் சேதி சொல்லும்.
நீங்கள் நடந்து
நான் பார்த்ததில்லை.
காரணம்
உங்கள் நடையே
ஒரு ஓட்டம்!
உங்கள்
ஆளுமை கண்டு
நான் அசந்திருக்கிறேன்.
சக மாணவர்களிடமும்
இதைப் பகிர்ந்திருக்கிறேன்!
ஆக மொத்தம்
நிறைவாய்
முடித்துவிட்டீர்கள்
உங்கள் பணியை !
தொடர்ந்து
காக்க வேண்டும் 
இவ் வெற்றிக் கனியை
கல்வி வரலாறும்
கல்லூரி வரலாறும்
உங்கள் பெயரை
எழுதிக் கொள்ளும்!
அதைப்
படித்துப் படித்து
எங்கள்
மனமெல்லாம்
துள்ளும்!
வாழ்த்துகள் !


  வி.சி.வில்வம்

பதிப்பாளர்களின் பார்வையில் சென்னை புத்தகச் சங்கமம் !



 பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் ஏப்ரல் 18 தொடங்கி 27 முடிய புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. சென்னை புத்தகச் சங்கமம் எனும் அந்நிகழ்ச்சி  திராவிடர் கழகத்தின் மிகச் சிறந்த வரலாற்றுப் பதிவுகளில் ஒன்றாக அமைந்துவிட்டது. அறுபதுக்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் பங்கு பெற்றுச் சிறப்பாக்கினர்.  தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி சிந்தனைச் சுகம் கண்டனர். இந்தச் சென்னை புத்தகச் சங்கமத்தின் முதல் ஏற்பாட்டை பதிப்பாளர்கள் எப்படி பார்க்கிறார்கள்?  புத்தக உலகில்  பேராற்றல் கொண்டவர்களின் எண்ணங்களாக  இந்தப் பதிவு அமைகிறது. பங்கேற்ற அனைவர் சார்பாக நால்வர் பேசியதின் தொகுப்பு.
சிக்ஸ்சென்ஸ் பதிப்பாளர் புகழேந்தி !
எனது தந்தை வே.சுப்பையா அவர்கள் 1968 - இல் பூங்கொடி பதிப்பகத்தைச் சென்னையில் தொடங்கினார்கள். அப்போது என் வயது 13. படித்துக் கொண்டே பதிப்புத் துறையிலும் வேலை செய்தேன். அன்றிலிருந்து 40 ஆண்டுகளைக்  கடந்துவிட்டேன். சிக்ஸ்சென்ஸ் பதிப்பை 2000 - த்தில்
தொடங்கினேன். எங்களின் முதல் வெளியீடு "இனியெல்லாம் இன்டர்நெட்".  அதைத் தொடர்ந்து 200 - க்கும் மேலான நூல்கள் வரப் பெற்றன.   வெளியீடுகளின் எண்ணிக்கையில் எனக்கு உடன்பாடில்லை. புத்தகங்கள் கனமான விசயங்களைக் கொண்டிருக்க வேண்டும். தரம் பேணுவதில் எப்போதும் நான் உறுதியாய் இருந்திருக்கிறேன். அவ்வகையில் தமிழ்நாடு அரசின் சிறந்த நூல் வெளியீட்டுக்கான முதல் பரிசை, பத்து முறைக்கு மேல் பெற்றுள்ளேன்.
தமிழ்நாட்டின் அனைத்துப் புத்தகக் கண்காட்சியிலும் நாங்கள் இடம் பெறுவோம். எங்களின் மொத்த விற்பனையில் 25 விழுக்காடு கண்காட்சி மூலம் கிடைக்கிறது. பெரியார் திடலில் புத்தகக் கண்காட்சி என்றதும் முதலில் சந்தேகம் வந்தது. காரணம் கட்சி சார்த்து காணப்படுமோ என்கிற தயக்கம். ஆனால் நான் நினைத்ததில் ஒரு விழுக்காடும்  உண்மையில்லை.  பொறுப்பேற்ற நோக்கத்தை மிகச் சிறப்பாக முடிகிறார்கள் பெரியார் தோழர்கள்.   வேறுபாடுகள் இல்லாமல் பழகுகிறார்கள். திணிப்பு என்பதை எங்கும் காண முடியவில்லை. கண்காட்சியில் நவீன தொழில்நுட்ப அறிவு என்னை அசர வைத்தது. நாம் ஏதாவது கோரிக்கைகள் வைத்தால் பணிவுடன் ஏற்கப்பட்டு, செயலாக்கப்பட்டு, முடிவும் அறிவிக்கப்படுகிறது. அதற்காக அவர்கள் எடுத்துக் கொள்ளும் நேரம் மிகக் குறைவு.
உலகப் புத்தக நாளை முன்னிட்டு இதைச் செய்தது புத்தகங்களுக்கான மரியாதை.  கண்காட்சிகளில் பதிப்பாளர்கள் மட்டுமே பங்கேற்றது  இதுவே முதன்முறை ஆகும்.  கண்காட்சி விளம்பரங்களில் வித்தியாசமான  கவனம் தெரிந்தது. பதிப்பாளர்களின்  மேம்பாடு குறித்தப் பயிற்சிப் பட்டறைப்  பலரையும் சிலிர்க்க வைத்தது. சமூக நோக்கம் என்பதில் இவையெல்லாம் அடங்கும். கண்காட்சிகளை ஒரு சில சிறு குறைகள் இருந்தாலும், முதல் ஏற்பாடே மனதில் பதிந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
நேஷனல் புக் டிரஸ்ட் மதன்ராஜ் !
புத்தகத் துறைக்கு வந்து 12 ஆண்டுகள் ஆகிறது. இந்தியா முழுவதும் கண்காட்சிகளை ஊக்குவிப்பதுதான் நேஷனல் புக் டிரஸ்ட் நோக்கம். ஆண்டுக்கு 15 முதல் 20 கண்காட்சிகள் நடத்துவோம். தமிழ்நாட்டில் இதுவரை கண்காட்சி நடைத்தியதில்லை. முதன்முறையாக பெரியார் புத்தக நிலையத்தோடு இணைந்திருக்கிறோம். தொடக்கமே நல்ல அடையாளம் கிடைத்திருக்கிறது. எங்கள் நிறுவனம் இந்திய அரசின் மனித வள மேம்பாட்டின் கீழ் வருகிறது. இந்தக் கண்காட்சியில் எண்ணற்ற நூல்களையும், வித்தியாசமான பார்வையாளர்களையும் காண முடிந்தது. சில கண்காட்சிகள் திருவிழா மாதிரி இருக்கும். விற்பனை இருக்காது. இங்கே அந்த மாதிரி எதுவும் இல்லை. எனினும் வந்தவர்கள் எல்லோரும் வாங்கினார்கள் என்பது புது அனுபவம். எங்களுக்குத் தினமும் 15 ஆயிரம் விற்றதில் மகிழ்ச்சி !  காரணம் சிறு இடம், புது இடம். அதுவும் இவ்வளவு குறைந்த வாடகையில் அரங்கு கிடைப்பது எளிதல்ல.
சின்ன விசயங்களும் நேர்த்தியாக இருந்தன. நுழைவாயிலில் இரு இளம்பெண்கள் எல்லோரையும் வரவேற்றதை நெகிழ்வாகக் கருதுகிறோம். சக மனிதர்களைப் பெருமைபடுத்துகிற செயல்கள் அவைகள். புத்தக விற்பனை என்பதையும் கடந்து குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள், பயிற்சிப் பட்டறை, கண் பரிசோதனை போன்றவை சமூகச் சிந்தனையை வெளிப்படுத்தின. பதிப்புத் துறையில் பல ஆண்டுகள் இருப்போரே பயிற்சிப் பட்டறை கண்டு அசந்துதான் போனார்கள்.  அதேபோல மாலை நேரக் கூட்டங்களில் "புகழ்பெற்ற" மனிதர்களை அழைக்காமல், புத்தகம் அறிந்த மனிதர்களைப் பேச வைத்து நிகழ்ச்சிக்குப் பொருள் கூட்டினார்கள்.  பொதுவாக மாலை நேர நிகழ்சிகளில் ஒரு மினுமினுப்புக் காட்டுவார்கள். அம்மினுப்பில் நோக்கம் சிதைந்துவிடும். இங்கு அதுபோன்ற சிதைவுகள் இல்லை. இன்னும் அழகாகச் சொல்வதென்றால், ஏற்பாடுகள் முழுவதிலுமே ஒரு இயல்பு தெரிந்தது. இயல்பான செயல்களும், அதே மாதிரியான மனிதர்களுமே இவ்வெற்றிக்கான ஆதாரம்.
கண்காட்சியில் இலாபம் இல்லாவிட்டாலும், நட்டம் ஏற்படக் கூடாது. அப்போதுதான் தொடர்ந்து செய்ய முடியும். நுழைவாயிலில் வளைவு ஒன்று வைத்திருக்கலாம். புத்தக வங்கித் திட்டத்தில் புத்தகம் கொடுப்பவர்களுக்கு மாற்றாக வேறு புத்தகம் கொடுக்கலாம். அதன் மூலம் ஈடுபாடுகள் அதிகமாகலாம். மொத்தத்தில் புத்தகக் கண்காட்சிகளின் முன்னோடியாக நிகழ்ச்சிகள் அமைந்திருந்தன. எல்லா விசயமும் இருப்பது மாதிரி பார்த்துக் கொண்டார்கள்.மகிழவும், நெகிழவும் நிறைய இருந்தன.  

எமரால்ட் பதிப்பகம் ஒளிவண்ணன் !
எனது 12 வயதில் "மெய்" திருத்தத் தொடங்கினேன். 1982 - இல் பதிப்பகம் தோற்றுவித்தேன். புத்தகங்களோடு 28 ஆண்டுகள் முடிந்திருக்கிறது.
தமிழ்நாட்டின் பல இடங்களிலும், இந்தியாவின் சில இடங்களிலும் கண்காட்சியில் பங்கேற்றுள்ளோம். உலகப் புகழ் பெற்ற ஜெர்மன் பிராங்பர்ட்  கண்காட்சியில் பார்வையாளனாக போய் வந்தேன். உலகின் அனைத்து நூல்களையும் அங்கு பார்க்கலாம். புத்தகங்களோடு  எழுத்தாளர்களும் இருப்பார்கள்.  வாசகர்கள் அவர்களைச் சந்தித்து ஆரோக்கியமாய் பேசிக் கொள்வார்கள். சென்னை புத்தகச் சங்கமம் மூலம் கல்வியாளர்கள் - பதிப்பாளர்கள் சந்திப்பு நிகழ்ந்தது. இருவருக்குமான தேவைகளைப் பகிர்ந்து கொண்டார்கள். நல்ல தொடக்கமாக அது அமைந்தது. கண்காட்சியில் விற்பனை மட்டுமே வெற்றி அல்ல. அதைக் கடந்து நிறைய இருக்கிறது.
 புத்தக வாசிப்பை உருவாக்குவதும், அதனைத் தூண்டிவிடுவதும் அவசியத் தேவையாகும். ஏப்ரல் 21 இல் கடற்கரையில் நடைபெற்ற புத்தக நடைபயணம் அதற்கான அடையாளம். சென்னை புத்தகச் சங்கமம் எதிர்பார்த்ததைவிட அதிகம் சாதித்துள்ளது. ஒரு விற்பனைக் கண்காட்சியை எல்லோரும் செய்துவிடலாம். ஆனால் இவர்கள் போன்று செய்வது அவ்வளவு எளிதல்ல. ஒவ்வொரு வரிசைக்கும் ஒரு தன்னார்வலர். ஒவ்வொரு அரங்கிலும் அவர்களின் கைப்பேசி எண். அதுவும் மழை பெய்த ஓர் நாளில் அவர்கள் ஆற்றிய பணிகள் கண்டு பதிப்பகத்தார்கள் மெய்சிலிர்த்துப்  போனார்கள். வாழ்வில் மறந்து போய்விடாத நிகழ்வுகள் அவை.
"ஒன்றாய் சேர்வது நல்ல தொடக்கம். பிறகு ஒன்றிணைவது வளர்ச்சி. பின்னர் சேர்ந்து உழைப்பது வெற்றி," என்பார் ஹென்றி போர்டு. சென்னை புத்தகச் சங்கமம் ஒரே தளத்தில் எல்லோரையும் கொண்டு சேர்த்துள்ளது. தொடர்ந்து சேர்ந்திருந்தால் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரலாம்.

விழிகள் பதிப்பகம் வேணுகோபால் !
விழிகள் பதிப்பகத்தை 2000 ஆம் ஆண்டில் தொடங்கினேன். ஆனால் பதிப்புத் துறை அனுபவம் 43 ஆண்டுகள். தமிழ்நாடு முழுக்கவும் சுற்றி வந்தாயிற்று.
பதிப்பாளர்கள் கண்காட்சி இதுவே முதன்முறையாகும். இதுபோன்ற திட்டங்கள் ஆங்காங்கே இருந்தன. ஆனால் இங்கு தான் அது சாத்தியாமானது. கண்காட்சி முழு வெற்றி! பதிப்பாளர்களும் மகிழ்ச்சியோடு இருந்தார்கள். காரணம் பதிப்பாளர்களின் நேரடி விற்பனை இது. ஒரே இடத்தில் பதிப்பக விலைப் பட்டியல் கிடைக்கும். மிகச் சமீபத்திய வெளியீடுகளும் பார்வைக்கு வைக்கப்படும். நிறுவனங்கள்,கல்லூரிகளுக்கு நேரடி விற்பனை செய்ய இயலும்.
அரங்கு ஒதுக்கீடு தொடங்கி சிறந்த ஏற்பாடுகள். போக்குவரத்துக்கு ஏற்ற இடம். கண்காட்சியின் எல்லா நாட்களிலும் குழந்தைகளுக்கான  நிகழ்ச்சியை இங்குதான் கண்டேன். மாலை நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக இருந்ததால் விற்பனையும் சிறப்பு. தலைப்பைத் தேர்ந்தெடுத்து நூல்கள் வாங்கினார்கள். எதிர் காலங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வர ஏற்பாடு செய்தால் மேலும் சிறப்பாகும்.
 
பதிப்பாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை வெகு சிறப்பு. இது தொடர்பான ஆங்கில நூல் ஒன்றும் நான் வாசித்துள்ளேன். எனினும் இந்த பட்டறை அருமை. சிறு சிறு மாற்றங்கள் வரும் காலத்தில் செய்ய வேண்டும் என்றாலும், இக்கண்காட்சி மிகப் பெரிய சாதனை புரிந்துவிட்டது  என்றே சொல்ல வேண்டும்.

                                                                                                                                                                                                                                         வி.சி.வில்வம்

                                              

மாநாடு நடத்துவது எளிது !


                                                                                                                         

இந்தத் தலைப்பைப் படித்தவுடன் "எழுதுவது எளிது"  என்று நீங்கள் எண்ணக் கூடும். எண்ணிய பிறகும் கூறுகிறோம், "மாநாடு நடத்துவது எளிது".   உதாரணம் இராஜபாளையம்!
வாய்ப்பு, வசதிகள் குறைந்த ஊரில், ஜாதி, மதம். ஆர்.எஸ்.எஸ். பூச்சாண்டிகள் நிறைந்த ஊரில் சாதனைப் படைப்பது கூட, நம் தோழர்களுக்கு எளிதுதான்!   அதனால் தான் ஆசிரியர் அவர்கள் 07.05.2013 நாளிட்ட தம் அறிக்கையில்," இராஜபாளையம் மாநாடு உண்மையிலேயே ஒரு வரலாறு படித்த மாநாடாகும். தென்திசையில் ஏற்பட்ட புத்துணர்ச்சி வெள்ளத்தில் பூரிப்பின் உச்சிக்கே சென்றேன்," என எழுதி இருக்கிறார்கள்.

அந்தளவிற்கு இது திட்டமிடப்பட்ட மாநாடாக அமைந்துவிட்டது.  எதிர் காலங்களில் இம்மாநாட்டின் செயல் முறைகள் நமக்கு வழிகாட்டும் திசைக் கருவியாக விளங்கிடும்.

தலைமைச் செயற்குழுக் கூட்டம்  ஜனவரி 19 அன்று சென்னையில் நடைபெறுகிறது. அன்றுதான் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் இம் மாநாட்டை அறிவிக்கிறார்கள். அறிவிப்பு வெளியான அக்கணமே, தோழர்கள் தங்களைத் தயார் செய்து கொள்கிறார்கள். மாநாட்டுச்  சீருடை அணிவகுப்பில் மூவாயிரம் தோழர்களைப் பங்கேற்கச் செய்வது எனவும், 15 இலட்சம் ரூபாய் நன்கொடைத் திரட்டுவது என்றும் தீர்மானிக்கிறார்கள்.
அதற்கு முன்னோடியாக 24.02.2013 அன்று 12 மாவட்டங்கள் பங்கேற்ற, மதுரை -  திருநெல்வேலி மண்டலக்  கூட்டம் இராஜபாளையத்தில் நடைபெறுகிறது. துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பங்கேற்ற அக்கூட்டத்தில் நன்கொடையாக 1,48,000 அறிவிக்கப்பட்டது. இதில் இளைஞரணியின் அறிவிப்பு மட்டும் ரூபாய் 80 ஆயிரம் ஆகும். அறிவிப்பு மட்டுமல்ல, 50 ஆயிரம் ரூபாய் அங்கேயே வசூலாகி, சாதனையானது.

அதன் மூலம் சுவரெழுத்துகள் முடுக்கிவிடப்பட்டன. தெற்கின் 12 மாவட்டத்திற்கும், மாநாட்டின் சார்பாகவே எழுதப்பட்டன. அவைகளின் எண்ணிக்கை 50, 100 இல்லை, 300 க்கும் மேற்பட்ட சுவரெழுத்துகள். தென்மாவட்டங்களை அழகுறச் செய்து, அதிரச் செய்த பணிகள் அவை.  இதைத் தொடர்ந்து  தமிழகம் முழுவதும் சுவரெழுத்துகள் பரவத் தொடங்கின. தஞ்சாவூர் நகரில் மட்டும் 22 இடங்களில் இராஜபாளையம் பெருமைப் பேசப்பட்டது.
இவைகள் ஒருபுறமிருக்க மானமிகு கலி.பூங்குன்றன், வீ.அன்புராஜ், இரா.செயக்குமார் உள்ளிட்ட 10 பேர் ஒருங்கிணைப்புப் பணி ஏற்கிறார்கள். தென்மாவட்டப் பொறுப்பாளர்கள் 8 பேர் வரவேற்புக் குழுவில் இடம் பெறுகிறார்கள். இதன் உறுப்பினர்களாக 12 மாவட்டத்தைச் சார்ந்த 67 பேரும், விளம்பரக் குழுவிற்குத் தனியாக 20 பேரும் நியமிக்கப்பட்டு, மாநாட்டுப் பணிகள் வேகமெடுக்கத் தொடங்குகின்றன.

கலந்துரையாடல் கூட்டம் நடத்த வலியுறுத்தியும், சமூகக் காப்பணி, சீருடை அணிவகுப்புக்கு இளைஞர்களைத் தயார் செய்திடக் கோரியும், விளம்பரங்களை வேகப்படுத்தத் தூண்டியும்  தமிழகம் முழுவதும் கடிதங்கள் பறக்கின்றன, பொதுச் செயலாளர் அன்புராஜ் அவர்கள் மூலம். இதில் ஏற்கனவே மாநாட்டின் சமூகக் காப்பணியில் பங்கேற்ற 80 தோழர்களுக்கும் கடிதங்கள் செல்கின்றன.
அதனைத் தொடர்ந்து 24.03.2013 அன்று மாநில இளைஞரணி, மாணவரணி கலந்துரையாடல் கூட்டம் மதுரையில் நடைபெறுகிறது.
அங்கு இரு அணிகளும் பட்டைத்  தீட்டப்பட்டு, கூராக்கப்படுகின்றன.  இதற்கிடையில் 06.07.2002 ஆம் ஆண்டு நடைபெற்ற சேலம் மாநாட்டு  அணிவகுப்புப் புகைப்படத்தை விடுதலையில் வெளியிட்டு,  இதுபோல தோழர்கள் ஆயத்தமாக வேண்டும் எனக்  கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். இப்பெரு முயற்சியினால் 105 தோழர்கள் சமூகக் காப்பணியில் பங்கேற்கின்றனர். திருச்சி புத்தூர் மாளிகையில் நடைபெற்ற இப்பயிற்சியை, பல்வேறு பணிகளுக்கிடையேயும் தமிழர் தலைவர் அவர்கள் பார்வையிட்டுப் பாராட்டிச் செல்கிறார்கள். தொடர்ந்து சமூகக் காப்பணித் தோழர்களுக்குப் பெரியாரியல் வகுப்பு  25.04.2013 தொடங்கி 03.05.2013 வரை நிகழ்த்திப் புத்துயிர் ஊட்டப்படுகிறது.

பிறகு மாநாட்டை பெரு வெற்றியாக்கிட 3 மாவட்டங்களை உள்ளடக்கிய  தஞ்சை மண்டலம், 
5 மாவட்டங்களை உள்ளடக்கிய  சென்னை மண்டலம், 5 மாவட்டங்களை உள்ளடக்கிய  வேலூர் மண்டலம்,  3 மாவட்டங்களை உள்ளடக்கிய  ஈரோடு மண்டலம், 5 மாவட்டங்களை உள்ளடக்கிய  கோவை மண்டலம் மற்றும்  திருவாரூர், நாகப்பட்டினம், சிதம்பரம், கடலூர், விருத்தாசலம், திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பாண்டிச்சேரி, திருச்சி, இலால்குடி, அரியலூர், பெரம்பலூர், கரூர், மதுரை, திண்டுக்கல், பழனி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி என அனைத்து மாவட்டங்களிலும் தோழர்கள் கலந்து பேசி, மாநாட்டைச் சிறப்பாக்க முடிவு செய்கின்றனர்.
கண்ணைக் கவரும் அழகிய சுவரொட்டிகள் ஆறாயிரம் தயார் செய்யப்பட்டு, மாநாட்டிற்குப் பத்து நாள்களுக்கு முன்னரே தமிழகம் முழுக்க வழங்கப்படுகிறது. அழைப்பிதழ்கள் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு திராவிடர் கழக நிர்வாகிகள், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, மாணவரணி, வழக்கறிஞரணி, விவசாய அணி, தொழிலாளரணி, பொதுக்குழு உறுப்பினர்கள் என எந்த ஒருவரும் விடுபடாதவாறு  1500 - க்கும்  மேல் அனுப்பப்படுகிறது. அதுமட்டுமின்றி மாநாட்டுப் பொறுப்பாளர்கள் தமிழ்நாட்டின் 60 கழக மாவட்டங்களோடும்  தொடர்ந்து இணைப்பில் இருக்கிறார்கள்.
மாநாடு நெருங்கி வரும் வேளை. ஏப்ரல் 15 ஆம் தேதி இராஜபாளையத்தில் நன்கொடை பணியைத் தொடங்குகிறார்கள். அவர்களுக்குத் தேவைப்பட்டது 20 நாட்கள் மட்டுமே. சிவகாசி, விருதுநகர், திருத்தங்கல், அருப்புக்கோட்டை, சாத்தூர், சங்கரன்கோயில், ராயகிரி, வாசுதேவநல்லூர், சேத்தூர், வத்திராயிருப்பு, தளவாய்புரம், திருவில்லிபுத்தூர், இராஜபாளையம் ஆகிய பகுதிகளில் பொறுப்பாளர்கள் வேகமெடுத்தும்,  இதே பகுதிகளின் கடைத் தெருக்களில் தோழர்கள் திரண்டு சென்றும் நன்கொடை பணிகளை முடிக்கிறார்கள்.

இதனிடையே தமிழகம் முழுக்கவுள்ள  நம் தோழர்களுக்கு இராஜபாளையம் நினைவில் வந்து கொண்டே இருக்கிறது. நினைவூட்டும் அந்தப் பணியை விடுதலை விடாமல் செய்தது. குறிப்பாக 29.04.2013 அன்று, "சிறைக்கு அனுப்பிட தீர்மானிக்கும் மாநாடு ! ஜாதி ஒழிப்புக்குப் போர்ச் சங்கு ஊத இராஜபாளையம் நோக்கி வாரீர் ! வாரீர் !  தோழர்களே !! ", என்கிற ஆசிரியரின்  அறிக்கை எவரையும் அவரின் சொந்த ஊரில் இருக்கவிடவில்லை.

இவ்வளவு சிறப்போடு ஏற்பாடுகள் முடிந்தன.  பொழுது விடிந்தால் மாநாடு. அந்திசாய்ந்த அந்த நேரத்தில் காவல்துறை அழைக்கிறது.  "பேரணிக்கு அனுமதி இல்லை. கூட்டம் நடத்தி விட்டுப் போங்கள்", என்கிறார்கள்.  எந்த ஒன்றுக்கும் பதறுவதும், சிதறுவதும் தோழர்களுக்குப் பழக்கமில்லையே ! எங்குமே காணக் கிடைக்காத  நம் கழக அணுகுமுறைக்குத் தோல்வியும் ஏற்படுமோ?  வெற்றி தான் கிடைத்தது.

பொழுது விடிந்தது ! மாநாடு பிறந்தது ! அது எப்படியெல்லாம் மலர்ந்தது என்பதைக் கண்டு இரசித்தோம்.  இராஜபாளையத்தை விட்டு எல்லோரும் ஊருக்குப் போய்விட்டார்கள். ஆனாலும் இராஜபாளையத்தை விட்டு வெளிவர முடியவில்லை.

திட்டமிட்டு செய்தால் எல்லாமே சாத்தியம்தான் ! இப்போது சொல்லுங்கள், மாநாடு நடத்துவது எளிதா இல்லையா ?

  வி.சி.வில்வம்

இராஜபாளையம் மாநாடும், வித்தியாசமான சில கோணங்களும் !

                                                                                                                                                 
திராவிடர் கழக இளைஞரணி மாநாடு 2002 நடைபெற்று மிகப் பெரும் சாதனை படைத்திருந்தது. இடையில்  கொஞ்சம் தூரம் ஏற்பட்டாலும், அந்தத் தூரத்தின் பாரத்தை 2013 ஆம் ஆண்டின் இராஜபாளையம் மாநாடு புரட்டிப் போட்டுவிட்டது. இன்னும் சொன்னால் நம் தோழர்களை உலுக்கியும், பொது மக்களைக் குலுக்கியும் போட்டது.
நூற்றுக்குப் பத்துப் பேர் இருப்பீர்களா ? எனப் பெரியார் தோழர்களைச் சிலர் கேட்பதுண்டு. அப்படிக் கேட்பதில் அவர்களுக்கு ஓர் மகிழ்ச்சி. அந்தப் பத்துப் பெரும் இல்லாவிட்டால் தம் வீழ்ச்சி எத்தகையது என்பதை அறியாதவர்கள். இதில் அறியாதவர்கள் உண்டு, புரியாதவர்கள் உண்டு, அறிந்தே ஏற்க மறுப்பவர்களும் உண்டு. இவர்களில் எவர் எப்படி இருந்தாலும், அவர்களுக்கும்  பெரியார் கொள்கை நன்மை மட்டுமே செய்யும்.
சமூகம் எந்த நிலையில் இருந்தாலும் பெரியார் கருத்துகளும், அதன் தோழர்களும் நிமிர்ந்தே காணப்படுவார்கள். நன்றாகப் பயின்ற மாணவர்  தேர்வுக்குத்  தயங்கமாட்டார். அதைப்போல சமூகத்தின் நிலையறிந்து, அதற்கான தீர்வுகளையும்  வைத்திருக்கும் ஒரு பெரியார் தோழர் எதற்கு அஞ்சப் போகிறார்?
எப்பேற்பட்ட மனிதருக்கும், அறிஞருக்கும் பதில் சொல்லும் சமூகப் புத்தகம் பெரியாருடையது. அதையறிந்து வைத்திருக்கும் பெரியார் தோழர்கள் 100 க்கு 10 அல்ல, 5 அல்ல, ஒருவர் இருந்தாலும் அவரை ஒன்றும் செய்துவிட முடியாது. பெரியாரின் தொடக்கக் காலங்களில் "ஊருக்கு ஒருவர் இருப்பீர்கள்" எனக் கிண்டலாகச் சொல்வதுண்டு. அதை நாம் மறுக்கப் போவதில்லை. காரணம் அதில் உண்மை இருந்தது. அதேநேரம் அந்த ஒவ்வொருவரும்தான் தமிழ் கூறும் நல்லுலகையே மாற்றிப் போட்டார்கள்.
நாம் ஒரு கேள்விக்  கேட்கிறோம். நூற்றுக்கு ஒருவர் என்றாலும், அந்த ஒருவரின் கேள்விக்குத் தொண்ணூற்றி ஒன்பது பேராகிய உங்களால் பதில் சொல்ல முடிந்ததா? பதில் சொல்ல வகையற்று, எண்ணிக்கைக் கணக்குப் போடுவது தானே உங்கள் வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. "நீங்கள் என்னதான் பகுத்தறிவுப் பேசுங்கள், பழனிக் கூட்டமும், அய்யப்பன் கூட்டமும் குறைந்ததா எனக் கேட்கிறார்கள். நாளுக்கு நாள் ஆன்மிகம் பெருகி வருகிறதே  தவிர, அருகி வரவில்லை என எதுகை மோனைப் பேசுகிறார்கள். ஜாதி, மதங்கள் சௌக்கியமாய் இருப்பதாய்  சான்றிதழும் கொடுக்கிறார்கள்.
இப்படி பேசுகிறவர்களிடம் முதலும், கடைசியுமாய் ஒரே கேள்விதான் கேட்கிறோம். ஆன்மிகம் பெருகி, ஜாதி, மதம் வளர்ச்சி அடைந்தால் யாருக்கு என்ன பயன் ? நாங்கள் ஒழிக்க விரும்புவதும், நீங்கள் வளர்க்க விரும்புவதுமாக இங்கே நீயா ? நானா? போட்டி நடைபெறவில்லை. முன்பே சொன்னதுபோல, சமூகம் எப்படி இருந்தாலும் அதில் பகுத்தறிவாளன் பாதிக்க மாட்டான். எங்களுக்கான வழிமுறைகள், வாய்ப்புகள், தற்காப்புகள் நேர்த்தியாகக்
வகுக்கப்பட்டுள்ளன.
இடஒதுக்கீடு போன்ற சில விசயங்களில் மட்டுமே எங்களுக்கும் சேர்த்து, உங்களுக்காகப்  போராடுகிறோம். மற்றபடி ஜாதி, மதம், மூடநம்பிக்கைகள், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் போன்ற  எண்ணற்ற விசயங்களில் உங்களுக்காக மட்டும்  பாடுபடுவதே நீங்கள் சொல்கிற அந்த "ஒற்றை" ஆட்களின் வேலை.

எங்களோடு நீங்கள் அறிவுப் போராட்டம் நடத்தத் தேவையில்லை. எங்களோடு, எங்களுக்குப் பிடிக்கவே பிடிக்காத "கௌரவம்" என்கிற எண்ணத்தைப் பொருத்திப் பார்க்க வேண்டாம். "நாங்கள் எல்லோரும் சாமி கும்பிட, நீங்கள்  மட்டும் என்ன கடவுள் இல்லை என்பது ? உங்களுக்கு மட்டும் என்ன தனி அறிவா? என்கிற அந்த அறிவுப் போராட்டமும், நாங்கள் மிக, மிகப் பெரும்பான்மையாக இருக்கிறோம், நீங்கள் வெகு சிலர் இருந்து கொண்டு என்ன கொள்கை பேசுவது என்கிற அந்தக்  கௌரவச் சிந்தனையும் எல்லா மட்டத்திலும், எல்லா காலத்திலும் இருந்தே வந்திருக்கிறது.
அதன் தொடர்ச்சியாகத்தான் "ஊருக்குப் பத்து பேர்" என்கிற கிண்டல். உங்கள் கணக்குப்படியே  ஊருக்குப் பத்து பேர் என்றாலும் தமிழகம் முழுக்க எவ்வளவு என்று பெருக்கிக் கொள்ளுங்கள்.  அந்தக் கணக்கையும் மிஞ்சித்தான் இராஜபாளையம் மிதந்தது. மாநாட்டு நிகழ்ச்சிகளை விடுதலை மூலம் விரிவாக அறிந்திருப்பீர்கள். இங்கே நிகழ்ச்சியின் தொகுப்புகளின்றி, அதன் பின்னனிகளைப் பதிவு செய்ய விரும்புகிறோம்.
ஏனெனில் எங்களின் ஒவ்வொரு தோழர்களுக்கும் ஒரு வரலாறு உண்டு. அவ்வகையில் பல்லாயிரக்கணக்கான வரலாறுகளைக் கொண்ட மொத்தக் குவியல்கள் தான் இயக்க வரலாறு. அப்படியிருக்க அது எத்தகைய வலிமைப் படைத்தது என்பதையும் நாமறிய வேண்டும்.
அய்யாயிரம் ஆண்டு பார்ப்பனக் கோட்டையை இடித்துத் தள்ளி, அய்ம்பது ஆண்டுகளில் எழுப்பப்பட்ட பகுத்தறிவுக் கோட்டை தமிழ்நாட்டில் உள்ளது. வீதிக்கோர் ஜாதி மாநாடு போட்டு, தெருச் சண்டைகளை வளர்த்து விடலாம் என்று எண்ணிவிடாதீர்கள். ஏதோ ! கல்லெறிந்தும், மண்ணெறிந்தும் முயற்சித்தால், சிதைந்து போவது உங்கள் சேட்டை தானே தவிர, பகுத்தறிவுக் கோட்டை அல்ல.
ஜாதி மாநாடுகளில் ஜாதிக் கூட்டத்தையும், மத மாநாடுகளில் மதக் கூட்டத்தையும், கோவில்களில் ஆன்மீகக் கூட்டத்தையும் கண்டு மலைத்துப் போயுள்ளீர்கள். அதை மனதில் வைத்தே  சீண்டிப் பார்க்கிறீர்கள். ஒரு உண்மையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எண்ணிக்கை வேண்டுமானால் அதிகமாகத் தெரியலாம். ஆனால் தமிழ்நாட்டின் ஒவ்வொரு மனதிலும் பகுத்தறிவு உணர்ச்சி இருக்கிறது. ஏதோ ஒரு வகையில் பெரியார் இருக்கிறார். ஒரு மனிதரிடத்தில் 10 விழுக்காடு ஜாதி உணர்ச்சியும், 20 விழுக்காடு ஆன்மீக உணர்ச்சியும், 20 விழுக்காடு மூடநம்பிக்கை உணர்ச்சியும் இருக்கிறது. மீதத்தில் சமூக உணர்ச்சியும், பகுத்தறிவு உணர்ச்சியும், நியாயத் தன்மையும் பரந்தே பிரிந்து கிடக்கிறது. இவ்வுணர்ச்சிகளை அதிகப்படுத்தும் வேலையைத்தான் திராவிடர் கழகம் செய்து வருகிறது. அதன் விளைவு தான் இராஜபாளையம் மாநாடுகள் !
ஒரு மனிதரின் அறிவை தீ வைத்துக் கொளுத்தி விட முடியுமா? முடியாது. பெரியார் கொள்கைகள் என்பது அறிவு. அதை ஒருபோதும் ஒன்று செய்துவிட முடியாது. முழுவதுமாக ஏற்காமல் பலர் இருக்கலாம்; ஆனால் எதிர்க்கக் கூடாது என்பதில் தெளிவாய் இருக்கிறார்கள்.
தென் மாவட்டங்கள் ஜாதி வெறிப் பிடித்தவை என்கிறார்கள். ஒரே ஒரு தீக்குச்சியில் நெருப்பு எரிந்தால், ஊரே பற்றி எரிவதாய் பிரளயம் செய்வார்கள்.
பரபரப்புக் கொடுப்பதில் யார் வல்லவர் என்பதில் எப்போதுமே நம் ஊடகங்களுக்குள் ஒரு போட்டி இருக்கும்.  இரண்டு பக்கமும் 10 பேர் சேர்ந்து அடித்துக் கொ(ல்)ள்வார்கள். அது மிகப் பெரிய ஜாதிக் கலவரம் என்று பெரியளவில் கொண்டு போய் சேர்த்துவிடுவார்கள். அது ஜாதிக் கலவரம் தான் என்பதில் நமக்கும் அய்யமில்லை. அதேநேரம் அது முழுக்க முழுக்க ஜாதிக்கான காரணங்கள் மட்டுமின்றி பல்வேறு அரசியல் சூழ்ச்சிகளும் அடங்கியுள்ளன.
இப்படி பத்து பேர் அடித்துக் கொள்கிற ஒரு ஊரில், அந்த மக்களும் ஜாதி உணர்ச்சிகளோடு இருப்பதில்லை. தன மகனை ஜாதிக் கலவரத்திற்குப் போய் வா என எந்தப் பெற்றோரும் வாழ்த்தி அனுப்புவதில்லை.  மக்களிடம் நாம் இந்த ஜாதி என்கிற எண்ணம் தவிர, வேறெந்த உணர்ச்சிகளும் இருப்பதில்லை. பிள்ளைகளின்  திருமணத்தின் போது, ஜாதியில் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதுவும் ஜாதியைக் காப்பாற்றும் எண்ணத்தில் அல்ல. புதுமையைச் செய்வதில் தயக்கமும், சமூகத்தாரின் கேள்விக்கு அஞ்சியும் மட்டுமே.
இப்படியான நிலையில் தென் மாவட்டத்தின் இராஜபாளையத்தை உலகிற்கு எப்படி அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்கள் ? ஜாதி வெறி பிடித்த ஊர், இந்து மதத்தில் தீவிரம் கொண்டவர்கள், ஆன்மீக உணர்ச்சியில் திளைத்தவர்கள், அப்படிப்பட்டவர்கள், இப்படிப்பட்டவர்கள் என்றெல்லாம் சொல்லி வைத்துள்ளார்கள். மேற்கூறியவற்றில் "வெறி" பிடித்தவர்கள் இருக்கலாம். எத்தனை பேர் ? மொத்தத்தில் நூறு பேர் இருக்கலாம். வேண்டுமானால் அய்ம்பது சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த நூற்றி அய்ம்பது பேர்தான் இராஜபாளையமா?
ஆக ஜாதி, மதத்தைப் பிழைப்பாகக் கருதி சில பேர் இருந்தால் அந்த மாவட்டமே அப்படி என்று ஏற்றுக் கொள்ள முடியுமா? அந்த மாவட்டமே அப்படித்தான் என்பது பார்ப்பன விசத்திற்கு "பவர்" கூட்டு வேலை. இப்படி எல்லா மாவட்டத்தையும் சேர்த்து, தமிழ்நாடே அப்படித்தான் எனச் சொல்ல முயற்சிக்கிறார்கள். இந்துவுக்கே இந்தியா என்பது போன்ற விசமப் பிரச்சாரம் இது.
இவர்கள் சொல்லும் இராஜபாளையத்தில் தான் மேற் சொன்ன மாநாடு நடந்தது. என்ன நடந்தது, எப்படி நடந்தது, என்பதை அறிந்து அம்மாவட்டமே வியப்பில் ஆழ்ந்தது! நேர்மை இருந்தால் பார்ப்பனப் பத்திரிகைகள் பக்கம் பக்கமாக எழுதியிருக்க வேண்டியதுதானே ? உண்மையின் உரைக்கல் என்கிறார்கள், தமிழர்களின் நாடித் துடிப்பு என்கிறார்கள். ஒரு மனிதன் வன்முறையில் இதயம் பிளந்தும், நாடித் துடித்தும் செத்தால் பரபரப்புக் கூட்டும் நீ, சமூகத்திற்கு வாழ்வளிக்கும் செய்திகளை மறைப்பது ஏன்?
மாநாட்டுக்கு அனுமதிக் கேட்டுக் காவல் நிலையம் செல்கிறார்கள் தோழர்கள். செய்தியறிந்து காவல் துறையினர் மகிழ்ந்து போனார்களே ! ஊர் முழுக்க, முழுக்கப் பரவிக் கிடந்த விளம்பரங்களைக் கண்டு வியந்து போனார்களே, மாவட்ட மக்கள் ! தொழிலதிபர்கள் நிறைந்த ஊர் இராஜபாளையம். அந்தத் தொழிலதிபர்கள் வாரி, வாரிக் கொடுத்தார்களே மாநாட்டிற்கு. என்ன பொருள் அதற்கு ? பணம் கொடுக்காமல் போனால் படை எடுத்து நிற்கப் போகிறோமா அல்லது நம்மால் பதவி சுகம் உண்டா அல்லது தொழிற்சாலைகளுக்கு நம்மால் நன்மைதான் ஏதும் உண்டா? " தாங்கள் எந்த உணர்ச்சியில் இருந்தாலும் சமூகம் பாதுகாப்பாய் இருக்க வேண்டும். அதற்குப் பெரியார் கொள்கைத் தேவை" என்கிற எண்ணம் தானே காரணம்.
அதேபோல இராஜபாளையம் கடைத் தெருக்களில் நம் தோழர்கள் கருஞ்சட்டையுடன் சென்ற போது, நன்கொடைகளை அள்ளிக் கொடுத்து, பல்லாயிரக் கணக்கில் பணம் பெருகிடச் செய்தார்களே, அதற்கு என்ன பொருள் ? பணம் கொடுக்காவிட்டால் சோடா பாட்டில் எடுப்பார்கள் என்ற பயமா ? கல்லெறிவார்கள் என்ற எண்ணமா ? எதுவுமில்லையே ! நாம் யாரையும் அடிக்க மாட்டோம் என்பதும், அகிம்சாவாதிகளை விட நாம் கோழைகள் என்பதும் அவர்கள் அறியாததா?   அதேநேரம் மனிதர்களை வாழ வைப்பதில், அந்தக் கொள்கைகளில் யாருக்கும் சளைத்திராத வீரர்கள் என்பதையும் அவர்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள்.
மாநாட்டில் பேரணி நடத்தினோம். ஆயிரக்கணக்கில் தோழர்கள் வந்தார்கள். ஊர்வலத்தின் குறுக்கே கார் வந்தது, ஆட்டோ வந்தது, இருசக்கர வாகனம் வந்தது, மிதிவண்டி வந்தது, மனிதர்கள் வந்தார்கள். எங்களைக் குறித்தும் அவர்களுக்குத் தெரியும், அவர்கள் குறித்தும் நாங்கள் அறிவோம். காரணம் நாங்கள் தமிழர்கள் ! தமிழ்நாட்டின் பகுத்தறிவு உணர்ச்சி பெற்ற தமிழர்கள் !!
அவர்களுக்காகத்தான் நாங்கள் பேரணி நடத்துகிறோம். இதை அவர்களும் அறிவார்கள். வெளிப்படையாக சிலர் இதைச் சொல்வதில்லை. ஆனால் கண்டிப்பாக யாரும் மறுக்க மாட்டார்கள். வெளிப்படையாக அவர்கள் சொல்ல நினைக்கும் போது, அவர்களும் பேரணியில் இருப்பார்கள். இதுதான் இயக்க வரலாறு !
பேரணி நடைபெற்ற இருபுறமும் நூற்றுக்கணக்கில் வீடுகள் இருந்தன. இயல்பாய் இருந்தார்கள், பார்த்து இரசித்தார்கள், தோழர்களுக்குத் தண்ணீர் கொடுத்தார்கள். பறை முழங்கியதை, அரிவாள் மீது ஏறியதை, நாக்கில் சூடம் ஏற்றியதை, அலகுக் குத்தி வந்ததை, கார் இழுத்ததை, காவடி தூக்கியதை கண்டெல்லாம் யாரும் பார்த்து ஓடவில்லை. மனம் பனு புண்பட்டதாய் கதறவும் இல்லை.
ஆக ஜாதி, மதம், கடவுள் உணர்ச்சிகளில் மக்கள் ஊறிப் போகவில்லை, ஆறிப் போயிருக்கிறார்கள்! ஆறிப் போன சூழலை ஆற்றுப் படுத்தும் வேலையைத்தான் திராவிடர் கழகம் செய்கிறது. தொடர்ந்து செய்யும் ! 


வி.சி.வில்வம்

தமிழர்களாக மாறிய பார்ப்பனர்கள் ! இது சிறீரங்கம் அதிரடி !

பார்ப்பனர்கள் தமிழர்களாக மாறிய வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு  நேற்று (12.05.2013) சிறீரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு "வயிறு குலுங்கச் சிரிங்க" என்றுதான் தலைப்பிட்டிருக்க வேண்டும். ஒரு கண்ணியம் கருதி நாம் அப்படிச் செய்யவில்லை. இரு தினங்களுக்கு முன், சிறீரங்கத்தில் வசிக்கும் நம் தோழர்கள் காலையில் வீட்டை விட்டு வெளியே வருகிறார்கள். அவர்கள் கண்ணில் பளிச்சிடுகிறது அந்தச் சுவரொட்டி. "பார்ப்பனர்கள் தமிழர்களா? ஆம் ! அவர்களும் தமிழர்களே! பிராமணர் சங்க விளக்கப் பொதுக் கூட்டம் !" எனச் சொல்கிறது அந்தச் சுவரொட்டி. அதன்படி நேற்று மாலை பொதுக் கூட்டமும் நடைபெற்றது. சில தினங்களுக்கு முன், திராவிடர் எழுச்சி மாநாடு நடத்தினோமே, அதே இடம். மாலை 6.30 மணிக்கு நாம் சிறீரங்கத்தில்  நுழைகிறோம். அங்கே ஒரு "பிளெக்ஸ்" விளம்பரம் நம்மைத் தடுக்கிறது. அதில் சில படங்கள் இருந்தன, பேச்சாளர்களின் பெயர்கள் இருந்தன, கூட்டத்திற்கான விளக்கமும் இருந்தது. அவற்றிற்குக் கீழே "ஆகவே பிராமணர்களே திரள்வீர்! திரள்வீர்! சிறீரங்கம் திணறத் திரள்வீர் !!" என்கிற உற்சாக வரியும் இருந்தது. அதைப் படித்து விட்டு வேக,வேகமாக நாம் கூட்ட இடத்திற்கு விரைகிறோம். அங்கே போனால் மேடையில் இரண்டு பேர், ஆங்காங்கே 4 பேர், 30 காலி இருக்கைகள் இருந்தன. சரி ! இன்னும் நேரம் இருக்கிறது போல, ஆட்கள் வருவார்கள் என்று ஓரமாய் காத்திருந்தோம். நமக்கு இருக்கிற பொறுப்புணர்வு கூட பிராமணர்களுக்கு இல்லை. கூட்டத்திற்குச் சரியான நேரத்திற்கு வராமல் அப்படி என்ன வேலை?
இப்படியான சூழலில் மணி ஏழானது. கூட்டம் வரத் தொடங்கியது. ஒரு இருபது பேர் இருப்பார்கள் எனத் தூரத்திலிருந்துக் கணித்தோம். நம் கணிப்புப்
பொய்யானது. காரணம் கூட்டத்தின் அருகில் சென்று பார்த்தால் இருபத்தி மூன்று பேர் இருந்தார்கள். இச்சூழலில் பேச்சாளர்கள் அய்ந்து பேர் மேடை ஏறினார்கள். கூட்டமும் தொடங்கியது.  முதலில் ஒருவர் வந்தார்.  இருபது  நிமிடம் வேக, வேகமாக, சத்தம், சத்தமாகப் பேசினார். பின்னர் சொன்னார், "ஆகவே இந்துக்களே! இப்போது என் உரையைத் தொடங்குகிறேன்", என்றார். அப்ப, இருபது நிமிடம் பேசியது என்னண்ணே? என்று யாராவது கேட்க முடியுமா?
இரண்டாவது  ஒருவர் வந்தார். இந்த மேடையைப் பாருங்கள் என்றார். எல்லோரும் மேடையைப் பார்த்தார்கள். மேடைக்குப் பின்னால் உள்ள "ப்ளெக்ஸில்" அம்பேத்கர், முத்துராமலிங்கம், ஜெயலலிதா படங்கள் இருந்தன. படங்களுக்கான காரணங்களை விளக்கினார். அம்பேத்கர் அவர்களை வளர்த்தது ஒரு பிராமணப் பெண். இந்து மதத்தை வளர்த்தவர் முத்துராமலிங்கம். ஜெயலலிதா எங்கள் குலப்பெண். அவர் முதல்வர் என்பது முக்கியமல்ல. அவர் ஓர் பிராமணர். எனவே இந்தப் படங்களை வைத்திருக்கிறோம் என்றார்.  மேலும் அவர் பேசும்போது, இந்த நாட்டுக்காகப் பாடுபட்டவர்கள் என, ஒரு பதினைந்துப்  பேரை வாசித்தார். எல்லோரும் பார்ப்பனர்கள். நாங்களும் தமிழர்களே எனக் கூறினாலும், அவர்களைப் பற்றியே பேசியதுதான், அவர்களாலே தவிர்க்க முடியவில்லை.
மூன்றாமவர் வந்தார். அவர் ஓர் தமிழர். பிராமணர்கள் எவ்வளவு நல்லவர்கள் தெரியுமா என்றார் ? (என்ன ஒரு அய்ந்து கிலோ நல்லவர்களா? எனக் கேட்கத் தோன்றியது )  இந்தத் தி.க. காரங்களுக்கு வேலையே இல்லாமப் போச்சு. எப்பப் பார்த்தாலும் நெற்றியில் பிறந்தவன், தோளில் பிறந்தவன், தொடையில் பிறந்தவன், காலில் பிறந்தவன் என்கிறார்கள். எங்கு பிறந்தால் என்ன ? ஒரு மனிதரின் எல்லா உறுப்புகளும் சமமானதே. இதில் தலை என்ன?  கால் என்ன ? ஒரு மனிதரை வணங்கும்போது காலில்தானே விழுந்து வணங்குகிறோம். கால்கள் ஒன்றும் மோசமானது இல்லை? என்று கூறிப் பார்ப்பனர்களை அசர வைத்தார். முடிவில், பிராமணக் கலாச்சாரமே இந்துக் கலாச்சாரம். அதுதான் எங்கள் கலாச்சாரம்! என்று கூறி நம்மையும் அசர வைத்தார்.
அடுத்து அவாளில் ஒருவர் வந்தார். கடவுளைப் பார்த்துக் கல், கல் என்கிறார்கள். எங்களுக்குத் தெரியாதா அது கல்லென்று ! இதை இவர்கள் தான் சொல்ல வேண்டுமா என நியாயமாகத் தொடங்கினார். ஊருக்கு நான்கு பேர் இருந்தால் நீங்கள் அறிவாளிகளா? நீங்கள் நிறைய புத்தகம் படிக்க வேண்டும். தமிழ்நாட்டிலேயே இந்து மக்கள் கட்சியில் தான் ஜாதியே இல்லை.  இராஜகோபுரம் முன்பாக பெரியார் சிலை வைத்திருக்கிறார்கள். நாங்களும் ஒரு தீர்மானம் போட்டுள்ளோம். தி.க. அலுவலகங்கள் முன் ஆஞ்சநேயர் அல்லது பிள்ளையார் சிலை வைக்கப் போகிறோம். எங்கள் சாமிக்கு எந்த மொழியில் அர்ச்சனைச் செய்வதென்று எங்களுக்குத் தெரியாதா? உங்களுக்குச்  சமஸ்கிருதம் தெரியாவிட்டால்  நாங்கள்  என்ன செய்வது?  இந்து மதத்தைக் கண்டுபிடித்த நாங்களும் பகுத்தறிவாளர்களே!
தி.க.வுக்கு விளக்கம் சொல்வதால் எங்கள் நேரமே வீணாகிப் போகிறது.  இருந்தாலும் 2013 ஆண்டில் பதில் சொல்ல ஒரு படைப் புறப்படுகிறது. தமிழர்களை அழிக்கவும், தமிழ்மொழி, சமஸ்கிருதம் ஆகியவற்றை ஒழிக்கவும் வெள்ளையர்களால் கண்டுபிடிக்கப்பட்டதே திராவிடர் கழகம். இனிமேல் எங்கள் குறைகளை ரெங்கநாதர், பெருமாளிடம்  முறையிட  மாட்டோம். நேரடியாகக் கூட்டம் போட்டுப் பேசுவோம். இந்துக்களே இனி யாரும் வெளிநாட்டிற்குப் போகாதீர்கள். இங்குதான் நம் சிவபெருமாள், ரங்கநாதர் இருக்கிறார்கள். வெளிநாட்டில் அவர்கள் இல்லை. நம் மதத்தைக் காப்பாற்ற நாம் இங்கேயே இருந்து போராட வேண்டும் என்று அறிவியல்பூர்வமாகப் பேசினார்.
இறுதியாகச் சிறப்புரையாற்ற "ஸ்ரீதரன்ஜி" என்பவர் வந்தார். அவர் பேசுவதற்கு முன், தொகுப்பாளர் வந்து, "நம் ஸ்ரீதரன்ஜி  அவர்களுக்கு,  இன்று முதல் இனமானத் தளபதி என்கிற பட்டத்தை  வழங்குகிறோம்",  என்று அறிவித்தார். (ஒரே கைத்தட்டல் என்றெல்லாம் நாம் பொய் சொல்ல முடியாது) இதோ ஸ்ரீதரன்ஜி பேசுகிறார் கேளுங்கள். "தமிழக முதல்வர் தொகுதியில் தமிழில் பேசுவதற்கு வாய்ப்புக் கிடைத்ததற்கு நன்றி கூறுகிறேன். திராவிடர் கழகக் 
கருஞ்சட்டைகளை விட,
தமிழ்நாட்டில் உண்மையான சுயமரியாதை வீரர் ஒருவர் மட்டுமே உண்டு. அவர்தான் பாரதியார் !  காந்தியைவிட உயர்ந்த மனிதர் பாரதி. காந்தியைச் சுட்டவன் கோட்சே என்று தி.க.வினர் அடிக்கடி கூறுகின்றனர். காந்தியைக் கொன்றதற்கான நியாயத்தைக் கோட்சே சொல்லிவிட்டான். உலகிலேயே ஒரு வாக்குமூலத்தைக் கேட்டு நீதிபதி அழுதார் என்றால் அது கோட்சேவின் வாக்குமூலம்தான்.
புராணக் காலத்திலிருந்து இன்று வரை ஆயுதம் பிடித்தவர்களுக்கு வித்தைச் சொல்லிக் கொடுத்தது பிராமணர்களே. எனக்கு இந்தியாவின் சட்டம் புரியவில்லை. பெரும்பான்மை இந்து மதத்தை, அதுவும் பிராமணர்கள் நிறைந்த சிறீரங்கத்தில் பெரியார் சிலை வைத்து அதில் "கடவுள் இல்லை" என்று எழுத, எந்தச் சட்டத்தில் இடம் உள்ளது? பிராமணர்களை அனாதை என்று நினைத்து விடாதீர்கள். இந்து மதம் என்பது ஆலமரம். அதில் ஒரு கிளைப்  பாதித்தாலும், அதன் வேராகிய நாங்கள் கேள்வி கேட்போம்.
தமிழ் குறித்து இங்கு பேசுகிறார்கள். தமிழ் மொழியின் தந்தை உ.வே.சாமிநாத அய்யர்தானே. பாரதி எவ்வளவு பாடுபட்டான். ஆனால் அவரைத் தூக்குவதற்கு ஆளில்லை. தமிழ் கூறும் நல்லுலகம் துரோகம் செய்துவிட்டது. அதேபோல பிரச்சனைகளைத் தீர்ப்பதில் "ஸ்பெசலிஸ்ட்" எங்கள் இராஜாஜி. அடுத்த பிறப்புக் குறித்துச் சிந்திக்கும் புத்திசாலிகள் பிராமணர்களே.
முப்பத்தி முக்கோடி தேவர்கள் மற்றும்  இந்து மதப் பொக்கிசங்களைக் காக்க ஜாதி அமைப்புகள் வேண்டும். கடவுளால் இங்கு என்ன பிரச்சினை? கடவுள் மட்டும் இல்லாவிட்டால் 99 விழுக்காடு மனிதர்கள் பைத்தியமாய் போயிருப்பார்கள். மனைவியிடம், நண்பர்களிடம் பேச முடியாத விசயங்களைக் கடவுளிடம் தானே பேச முடியும்? கடவுளுக்கு அர்ச்சனை செய்ய எல்லோருக்கும் அனுமதி கேட்கிறார்கள். ஒருவருக்கு உடல் நிலை சரியில்லை என்றால் யார் வேண்டுமானாலும் ஊசி போட முடியுமா? அதற்கு மருத்துவம் படித்திருக்க வேண்டும். அதேபோல அர்ச்சனை செய்வது அவ்வளவு எளிதான காரியமல்ல. காலை நான்கு மணிக்கே எழுந்து சுத்தம் பேணி, அர்ச்சனை செய்ய வேண்டும். பிராமணப் பையன்கள் மிகப் பெரிய படிப்பை முடித்து, அர்ச்சனை செய்கிறார்கள். அவர்கள் வேறு வேலைக்குப் போனால் இலட்சக்கணக்கில் சம்பளம் பெறலாம். ஆனால் அதைத் துறந்து, தியாகம் செய்கிறார்கள்.
அதேபோல தமிழில் அர்ச்சனைக் கேட்கிறார்கள். கடவுளுக்கு இனம், மொழிப் பாகுபாடுகள் கிடையாது. நாளைக்கே அமெரிக்க அதிபர் ஒபாமா சிறீரங்கம் வந்து ரெங்கநாதரை  வழிபட்டால், அவர் ஆங்கிலத்தில்தான் முறையிடுவார். ரெங்கநாதரும் ஆங்கிலத்திலேயே பதில் சொல்வார்.
தீரத்தின் விளைநிலம் பார்ப்பனர்கள். எதையும் எதிர்கொள்வோம்" என ஸ்ரீதரன்ஜி முடித்தார்.  
இந்தக் கூட்டத்தின் தலைப்பே "பிராமணர்களும் தமிழர்களே" என்பதுதான். அதுகுறித்து யாரும் பேசவில்லை. ஏதேதோ பேசி, இறுதியில்  ஒபாமாவை  சிறீரங்கத்திற்கு அழைத்து வந்ததுதான் மிச்சம். இப்படியாகப் பிராமணர் சங்கப் பொதுக் கூட்டம் நிறைவு பெற்றது. எதிரில் 23 பேர் அமர்ந்திருந்தார்களே, அவர்களில் எத்தனைப் பேர் பார்ப்பனர்கள் என்கிறீர்களா? ஒருவர்கூட இல்லை. நன்றி!

                                                                                                                                                  வி.சி.வில்வம்