Friday, October 22, 2010

பணம் மனிதனுக்கு கவுரவத்தை வழங்குமா?

"பணம் என்னடா, பணம் பணம்? குணம் தானடா நிரந்தரம்! "என ஒரு பாடல் உண்டு.
அது நூறு விழுக்காடு சரியானது. ஆனால்
 நடைமுறையில் பணம் தான் முதலிடத்தில் மதிக்கப் படுகிறது. அதுமட்டுமின்றி,
 பணம் ஒன்றுதான்
மனிதனின் கவுரவத் தைத் தூக்கி நிறுத்தும்
எனவும் கருதப்படுகிறது.

உலகமயமாக்கல் எனும் நச்சுக் கொள்கை வளர்ந்த பிறகு “பணக்காரர் ஆவது எப்படி?” என்கிற நூல்கள் அதிகமாக விற் பனையாகின்றன. தமிழ்நாட்டில் தினமும் ஏதாவது ஒரு இடத்தில், யாராவது ஒருவர் பணம் சம்பாதிப்பது  எப்படி? எனப் பேசிக்  கொண்டிருக்கிறார். இப்படி எழுதியும், பேசியும் பணம் சம்பாதிப்பதே ஒரு தொழிலாகிவிட்டது.
வருமானம் ஈட்டுவது என்பது ஒவ்வொரு தனிமனிதரின் ஆர்வம், முயற்சி, திறமை, உழைப்பு ஆகிய தன்மைகளை அடிப்படையாகக் கொண்டது. இங்கே ஒவ்வொரு மனிதரும் தங்களின் திறமைக ளுக்கு ஏற்ப வருமானத்தை ஈட்டி வருகின்றனர். அந்த வருமானத்தை அதிகரிக்க வேண்டும் எனும் அவர்களின் முயற்சியில் தவறில்லை, அது இயல்பானது! ஆனால் அந்தப் பணம்தான் தனது குடும்ப மதிப்பை (கவுரவம்), சமுதாய மதிப்பை உயர்த்துகிறது எனக் கருதினால் அங்குதான் தவறு நிகழ்கிறது. மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு மனிதனுக்கு பணம் தான் சமூக மதிப்பைக் கொடுப்ப தாகத் தெரியும். ஆனால் அது உண்மையல்ல.
பணம் என்பது மனிதனின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு கருவிதான். மற்றபடி பணத் தால் மதிப்பு என்பதெல்லாம் போலியானது, தற்காலிகமானது. ஆனால் இங்கே என்ன நிகழ் கிறது? பணத்தின் மீது பேராசை அல்ல, வெறியூட்டப் படுகிறது. பணம்தான் மதிப்பு, அது ஒன்று மட்டுமே போதுமானது என மூளை யில் ஆணி அடிக்கப் படுகிறது. இந்த ஆணியை மேலும்  இறுகச் செய்யும் வேலை யைத்தான் உலகமயக் கொள்கை செய்து வருகிறது.

“பணத்தை எந்த வகையிலாவது பெருக்கு, அதனால் வாழ்வில் அமைதியை, நிம்மதியை இழந்தா லும் பரவாயில்லை, நமக்கென்று ஒரு ‘கவுரவம்’ வேண்டும். ஒரு வேளை பணம் பற்றாக்குறையாக இருக்கிறதா, கடன் வாங்கு, நாலு பேரிடம் கடன்பட்டாவது ஆடம் பரப் பொருள்களை வாங்கு. அப்போதுதான் நம் கவுரவத்தை நிலைநிறுத்த முடியும்” எனத் தொடர்ந்து மூளைக்கு விளம்பரம் செய்யப்படுகிறது.
சமூகத்தில் வேகமாகப் பரவி வரும் இந்த ‘கவுரவ நோய்’ மற்ற நோய்களைக் காட்டிலும் கொடும் விஷத்தன்மை கொண்டது. ஒரு தெருவில் 100 குடும்பங்கள் உள்ளன. அதில்  5 குடும்பங்களை மட்டும் கோடீசுவரர்களாக ஆக்கு வதே உலகமயத்தின் கொள்கை! அதாவது பணக்காரர்களை மேலும் பணக்காரர் களாக ஆக்கும் வேலை.

இந்த மாயத் தோற்றத்தை உண்மையென நம்பி நாம் உள் ளே போய்விடக் கூடாது. அதிக பட்சமாக நாம் முயற்சி செய்து, உழைத்து வரக் கூடிய பணத் தைக் கொண்டு, திட்டமிட்டு, நிறைவாக, மகிழ்ச்சியோடு வாழ வேண்டும். அது ஒன்று தான் இயற்கையானது; நிரந்தரமானது. ஒருவரிடம் அதிகமான பணம் இருக்கிறது என்பதற்காகவே யாரும் அவரை மதித்துவிடு வதில்லை. அதே நேரம் நல்ல குணம் நிறைந்த ஒருவர் ஏழை யாக இருக்கிறார் என்பதற்காகவே யாரும் மதிக்காமல் இருப்பதில்லை.

எனவே பணம் ஈட்டுவது, பெருக்குவது என்பது வேறு, ஆனால் அதுதான் கவுரவத்தை, சமூக மதிப்பை பெற்றுத்தரும் என நினைப்பது வேறு.  இங்கே சமூக மதிப்பிற்கும், கவுரவத்திற்கும்  பணமே காரணம் என நினைத்ததன் விளைவால் இயந்திரத்தமான மனிதர்கள் கூடிக்கொண்டே இருக்கிறார்கள். இயந்திரம் என்று ஆன பிறகு அங்கு மனித நேயத்திற்கு இடமில்லை.

எனவே நல்ல குணம் நிறைந்த மனிதர்களே சமூகத் திற்குத் தேவைப்படுகிறார்கள். அவ்வாறான சமூகம்தான் மனிதர் களுக்கு ஆரோக்கியத்தைத் தரும். பணம் என்பது மனிதர்களின் பின்னே வரவேண்டும். மாறாக பணத்திற்குப் பின்னால் நாம் செல்ல நேர்ந்தால் நமக்கு அடிமை வாழ்வுதான் மிஞ்சும். எனவே எதையும் பகுத்தறிந்தே முடிவு செய்வோம். சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு என்பதை உலகுக்கு உணர்த்துவோம்!
                                              வி.சி.வில்வம்