Wednesday, October 20, 2010

குடி குடியைக் கெடுக்கும்! அமெரிக்க குடி உலகைக் கெடுக்கும்!

உங்களை இருகரம் நீட்டி வரவேற்கிறோம். எங்களின் கோகா - கோலா முற்றிலும் பாதுகாப்பானது. இதைவிடப் பாதுகாப்பானது வேறில்லை. எங்களின் உற்பத்தி இடத்திற்கே வந்து பார்த்துக் கொள்ளுங் கள்.”
இப்படித்தான் கெஞ்சிக் கொண்டிருந்தது, கோலா நிறு வனம். எதற்காக மான அவமானம் பாராமல் இப்படி விளம்பரம் வெளியிடுகிறார்கள்? அவர்களின் தயாரிப்பான கோகா - கோலா, பெப்சி போன்றவற்றின் விற்பனை ‘கொஞ்சமாகப்’ பாதித்துள்ளது. (அதிகம் பாதிக்கவில்லை. என்ன தான் பூச்சிக் கொல்லி மருந்து இருந்தாலும் ருசித்துக் குடிப் போம் என்கிறார்கள் இந்தியர்கள்) இதோ இன்னும் சில தினங் களில் வெப்பம் கடுமையாகி விடும். அதற்காகக் கோலா நிறுவனமும் பூச்சி மருந்து கலக்கப்பட்ட குளிர் பானங்க ளோடு சந்தையில் தயார் நிலையில் உள்ளது.

கோலா, பெப்சியில் பூச்சி மருந்து புதுதில்லியில் உள்ள, தரச் சான்று பெற்ற ஒரு தனியார் நிறுவனம் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வு மையம் ஒன்றை நடத்துகிறது. இது கோகா- கோலா, பெப்சிகளில் தரமான அளவிற்குப் பூச்சிக் கொல்லி மருந்துகள் இருப்ப தாக அறிவித்தது. இந்தத் தனியார் நிறுவன அறிவிப்பைப் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவும் ஆய்வு செய்து உண்மைதான் என உறுதிபடுத்தியது. வயல் வெளிகளில் பயன்படுத்தப்படும் பூச்சிக் கொல்லி மருந்துகள், கரப்பான் பூச்சிகள், மூட்டைப் பூச்சிகள், போன்றவற்றில் உள்ள நச்சுப் பொருள்கள்தான் கோலா, பெப்சியிலும் கலக்கப்பட்டுள் ளன. “கோலா- பெப்சி குடியுங் கள், ஒரே கலக்கல்தான்” என அந்நிறுவனம் விளம்பரம் செய் கிறது. இந்தக் கலக்கல் என்பது அந்தக் கலக்கல்தான் என்ப தைக் குடிப்பவர்கள் உணர வேண்டும். உணர மறுத்துக் குடித்தால் கல்லீரல், சிறுநீரகங்கள், நரம்பு மண்டலம், புற்றுநோய், ஆண்மைக் குறைவு, பிறவிக் கோளாறுகள், பாலியல் குறைபாடுகள், மூளை கோளாறுகள் என மொத்தத் திற்கும் ஆபத்து. “ குளிர்பானம் அருந்த வேண்டாம், அது உடலுக்குக் கேடு” என ஒற்றை வரியில் சொன்னால் யாரும் கேட்பதில்லை போலும்! அதனால் தான் ஒவ்வொரு உறுப்புகளை யும் தனித்தனியாகக் குறிப்பிட்டு மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

கோலா பிறந்த கதை
1890 இல் அமெரிக்காவின் நீயுபெர்ன் எனுமிடத்தில் ‘காலேப் பிரேட்காம்’ என்பவரால் தயாரிக்கப்பட்டதுதான் இக் குளிர்பானம். இவர் ஒரு மருந்து தயாரிப்பாளர். அப்போதைய நிலையில் இக்குளிர்பானம் வயிற்று வலியைப் போக்குவ தாகக் கருதப்பட்டது. 1903 இல் புட்டிகளில் நிரப்பி விற்றார். இவர் எதிர்பார்ப்பு போல் விற்பனை இல்லாததால் ‘ராய்சி மெகர்ஜெல்’ என்பவருக்குக் குளிர்பான உரிமத்தை விற்பனை செய்தார். இவர் அக்குளிர் பானத்திற்கு கோகா- கோலா எனப் பெயரிட்டு உற்பத்தியைத் தீவிரமாக்கினார். இக்குளிர்பானத் தை முதலில் தோற்றுவித்த காலேப் பிரேட்காம் என்ப வரின் நோக்கம் நல்லதாய் இருந்திருக்கிறது. ஆனால் ‘பார் முலா’ தவறு. அமெரிக்காவின் எந்த ஒரு பொருளும் உலக மக்களுக்கு ஏதாவது ஒரு கெடுதல் செய்ய வேண்டும்.


ஆனால், இக்குளிர்பானம் 1890 -களில் வயிற்றுவலியைச் சரி செய்திருக்கிறது. அதனால் தான் ‘பிரேட்காம்’ தோற்றுப் போனார். அடுத்து வந்த ‘மெகர் ஜெல்’ மகா புத்திசாலி. வயிற்று வலியை உண்டாக்கும் குளிர் பானத்தை உற்பத்தி செய்தார். கரப்பான் பூச்சி, மூட்டைப் பூச்சி விஷத்தைச் சேர்த்தார். இன்று 200 நாடுகளில் கொடி கட்டிப் பறக்கிறார்.

இந்தியாவைப் பொறுத்த வரை 1977-களில் (பெரா சட்ட காலங்களில்) பெப்சி - கோலா துரத்தப்பட்ட ஒரு நிறுவனம். அதன் பின்னர் 1993 - களில் மீண்டும் இந்தியாவிற்குள் நுழைந்தது. இன்று இதன் வளர்ச்சி பிரமிப்பாய் உள்ளது. நஞ்சு கலந்த ஒரு பொருளை ‘பிரமிப்பாய்’ விளம்பரம் செய் தால், அதைக் ‘கவுரவமாய்’ நினைத்து அருந்துபவர்கள் நம் மக்கள். திரைப்படங்களில் அநீதி கண்டு பொறுக்காத வரும், ஏழை எளிய மக்களுக்குச் சதா உதவும் கதாநாயகர்கள் தான் இந்தக் கேடுகெட்ட குளிர்பானங்களின் விளம்பர தாரர்கள். இந்தி நடிகர் அமிர் கான் ஒருமுறை சொன்னார். “கோகா- கோலாவை இந்தியா வில் தடை செய்தால் அமெரிக்கா சென்று குடிப்பேன்” என்று. இந்தியாவின் கோலாவும், அமெரிக்காவின் கோலாவும் வேறு வேறு. அமெரிக்கத் தயாரிப்பு தீங்கற்றது என்கிற அடிப்படையை அமீர்கான்கள் அறிய வேண்டும். சொந்த மக்களின் வாழ்க்கையை விட பத்து ரூபாய் அமெரிக்கக் குளிர்பானம் இவர்களுக்கு உயர்வாகிப் போனது. கோலாவை விட நாறுகிறது இவர்களின் இந்தியத் தேசியம்.

கேரள மண்ணின் சோகம்
பெப்சி - கோலா என்பது ஒரு குளிர்பானம், அது நஞ்சு கலந்தது என்பது மட்டும் செய்தியல்ல. அந்த அந்நியர் களால், இந்த புண்ணிய(!) பூமி இரண்டாகப் பிளக்கப் போ கிறது. இந்தியாவின் நிலத்தடி நீர் படு பாதாளத்திற்குப் போய் விட்டது. இன்னும் 10 ஆண்டு களில் பெரும் பூகம்பங்களை நாம் சந்திக்க வேண்டிவரும் என்கிறார்கள் நீர்வள ஆராய்ச்சி யாளர்கள். கேரளாவில் பாலக்காடு அருகே இருப்பது பிளாச்சி மடா கிராமம். செழுமைக்குப் பெயர் போன அவ்வூரில் கோலா நிறுவனம் கால்பதித்தது. மூன்றே ஆண்டுகளில் நீர் நிறைந்த பிளாச்சிமடா நீக்கமற சுடு காடானது. நீருக்குள்ளேயே வாழ்ந்த அம்மக்கள் இன்று குடிநீருக்காக அலைகிறார்கள். பல மைல்களுக்கு அப்பால் பூமிக்குள் சென்றுவிட்டது தண்ணீர். மேலும் பல மாசுக ளுக்கு உட்பட்டு, மனிதத் தேவை களுக்குப் பயன்படுத்த முடியாத நீராகவே அது மாறிவிட்டது. இதன் விளைவாக பெயரிடப் படாத பல நோய்கள் பிளாச்சி மடா மக்களை மரண பயம் கொள்ளச் செய்கின்றன. சோறு சமைத்தால் சில மணிநேரத்தில் கெட்டுப் போகிறது. அவ்வூர் மக்களும் தொடர்ந்து போராடி வருகிறார்கள். சென்ற ஆண்டு 59 ஆவது சுதந்திர நாளை இந்தியா கொண்டாடியது. பிளாச்சிமடா மக்கள் அன்றைய தினம் தண்ணீருக்காகப் போராடி உதை வாங்கினார்கள். ஒரு அமெரிக்க நிறுவனத்தைப் பாது காக்க சொந்த நாட்டு மக்களை யே வெளுத்து வாங்கியது சுதந்திர அரசு. தன் மக்களுக்கு அடிப் படைத் தேவையான தண்ணீ ரைத் தருவது ஒரு அரசின் இன்றியமையாமை. ஆனால் இருக்கின்ற நீரையும் லிட்ட ருக்கு 1.50 காசு வீதம் அமெரிக்க நிறுவனத்திற்கு விற்றுவிட்டது அரசு. எல்லாவற்றையும் முடித்து விட்டு 59 ஆவது சுதந்திர தினத் தையும் பலத்த காவல்துறை துணையோடு ‘ஜெய்ஹிந்த்’ கூறி முடித்திருக்கிறார்கள். பாவம் பிளாச்சிமடா மக்கள்! அவர்க ளுக்குள் எந்த தேசிய உணர்வும், சுதந்திர உணர்ச்சியும் ஏற்பட வில்லை. ஏனெனில் அவர்கள் செத்துதான் நாளாகிப் போனதே!

“பிளாச்சிமடா நீரை உறிஞ்சு வதற்கு கோக் நிறுவனத்திற்கு எல்லா உரிமைகளும் உண்டு “ என கோக்கிற்கு எதிரான ஒரு வழக்கில் கேரள உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது. அறியாமை யால் அல்லல்படும் மக்களுக்கு அரசும், நீதிமன்றங்களும் தானே பாதுகாப்பு. அவர்களும் மக்க ளுக்கு எதிராகிப் போனால் இந்த மக்கள் என்னதான் செய் வார்கள்? எங்குதான் போவார்கள்?

தமிழர் தம் சிந்தனைகள்
தவிக்கும் வாய்க்குத் தண்ணீர் கேட்டால், ஓடோடிச் சென்று தண்ணீர் கொடுத்து, கூடவே மோரும் கொடுத்தது நம் தமிழ்ச் சமூகம். ஆனால் இன்று . . . ? காசு கொடுத்தால் மட்டுமே தாகம் தீரும். தண்ணீரை இலவச மாய் கொடுக்காதே, ஒவ்வொரு குவளை நீரையும் பணமாக்கு என்கிறது அமெரிக்கா. அந்த வியாபாரத்தையும் எங்களிட மே கொடு என்கிறது. தண்ணீரும், காற்றும் மனித உயிர். ஒரு லிட்டர் மனித உயிர் இன்று 13 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அது வும் நமது இரத்தத்தை எடுத்து, நம்மிடமே விற்று கொள்ளை யடிக்கிறார்கள். நூறு விழுக் காடும் இலாபம்! ஏற்கெனவே அமெரிக்காவின் மான்சாண் டோ நிறுவனம் இந்திய விவ சாயத்தின் அத்தனை தளத்தை யும் பிடித்துவிட்டது. அவர்கள் விதை கொடுத்தால்தான் பயிரிட்டு உண்ண முடியும் என்ற நிலை. இப்போது தண்ணீரும் அவர் களிடம் போய்விட்டது. அமெரிக் கரிடம் எந்த வம்பும் செய்யா மலிருந்தால் தான் சோறும், தண்ணீரும் கிடைக்கும் என்ற நிலை. நமது சுதந்திர இலட் சணமும், வல்லரசு தம்பட்டமும் கடைக்கோடி இந்தியனுக்கும் தெளிவாய் தெரியும் நேரமிது.
காடுகள், இயற்கை வளங்கள், விவசாயம், தொலைப்பேசி, மின்சாரம், மருந்து வணிகம், கல்வி, சுகாதாரம், சில்லரை வணிகம், வங்கிகள் என மொத்த மும் அமெரிக்க மற்றும் உலக நாடுகளின் வசம் போய் விட்டன. இதன் விளைவுகளை அனுபவிக் கும் காலமும் இதோ நெருங்கிக் கொண்டிருக்கிறது. வரும் காலங் களில் காசு கொடுத்தால் மட்டு மே தண்ணீர் என்ற நிலை வரும். அப்போது தண்ணீர் இன்றியே ஏழைகள் சாகக் கூடும். இந்நிலையில் நாம் என்ன செய்யப் போகிறோம்?

வி.சி.வில்வம்

No comments:

Post a Comment