Sunday, March 10, 2013

அமெரிக்காவின் அய்ந்தாறு பக்கங்கள் !


ஈராக் அதிபர் சதாம் உசேனுக்கு தூக்கு வழங்கிய போது  உலகமே அதிர்ச்சிக்கும், பரபரப்பிற்கும் உள்ளாகியிருந்தது. அமெரிக்க நிறுவனங்களை இராக்கில் அனுமதிக்க மறுத்ததும், அமெரிக்கப் பேச்சுகளைக் கேட்க மறுத்ததுமே இந்தச் சாவுக்குக் காரணம். சதாம் உசேன் ஆட்சியை அகற்றுவது அமெரிக்காவிற்குப் பெரிய விசயமே இல்லை.அதேநேரம் தங்களை எதிர்ப்பவர்களை தடயமே இல்லாமலும், படுகொலை செய்வதும் அமெரிக்காவிற்குப் புதியதும் அல்ல. அமெரிக்கா நினைத்த எல்லாமே இராக்கில் முடிந்துவிட்டன. அங்கொன்றும், இங்கொன்றுமாகக்  கேட்ட சில எதிர்ப்புகளும் அவர்களை ஒன்றும் செய்துவிடவில்லை. உலகில் யாரைப் பற்றியும், எதைப் பற்றியும் கவலைப்பட்டதான வரலாறும் அமெரிக்காவிற்குக் கிடையாது. அந்தக் கறைபடிந்த வரலாற்றின் சில பக்கங்களை நாம் அறிவதன் மூலம், அமெரிக்காவின் நிலையை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.


போர் செய்வது எங்கள்  தொழில் :

"போர் அமெரிக்காவின் பிசினஸ்", என்றார் அமெரிக்க அதிபராக இருந்த (1931) கால்வின் கூலிட்ஜ். "ஆதியில் உலகம் முழுமையும் அமெரிக்காகவே இருந்தது ", என்றார் இன்னொரு அதிபர் ஜான் லோக்கே. அதிபர் வில்லியம் மெகின்லே (1898) இன்னும் உச்சம் தொட்டுச் சொன்னார். "இறைவன் எங்களை உலகின் அறங்காவலராக நியமித்துள்ளார்!"

1492 - இல் கண்டுபிடிக்கப்பட்ட இன்றைய அமெரிக்க மண்ணில், அன்று வாழ்ந்த பழங்குடி மக்களான செவ்விந்தியர்கள், அராவக், க்ரீக், சோக்டா, சிக்கசாவாப் உள்ளிட்ட மண்ணின் மைந்தர்களை அழித்துதான், இன்றைய அமெரிக்காவை எழுப்பியுள்ளனர். அன்று தொடங்கி, உலக மக்களுக்குச் சமாதி கட்டும்  பொறுப்பைத் தொடர்ந்து செய்கிறது அமெரிக்கா.

இதற்காகவே சி.அய்.ஏ என்கிற உளவு மையத்தை 1947 - இல் தொடங்கியது. தங்களுக்குக் கட்டுப்படாத நாடுகளுக்குள் சென்று கீழறுப்பு, மேலறுப்பு, நடுஅறுப்பு, உள்ளறுப்பு என ஒன்றுவிடாமல் செய்பவர்கள்தான் இந்த சி.அய்.ஏ அதிகாரிகள். 1960 தொடங்கி 1980 வரை, சற்றொப்ப 40 நாடுகளின் ஆட்சிகளைக் கவிழ்த்துச் சாதனைகளைப் படைத்தவர்கள் இவர்கள்.  1948 முதல் 1954 வரையிலான ஆறு ஆண்டுகளில் மட்டும் 50 க்கும் மேற்பட்ட கம்யூனிச எதிர்ப்புத் திரைப்படங்களை உலகம் முழுவதும் உலவ விட்டவர்கள். இன்றைக்கு அல்-கொய்தாவின் தலைவர்களாக, தளபதிகளாக இருப்பவர்களை, அன்றைய சோவியத் ரஷ்யாவிற்கு எதிராக தயார் செய்தவர்கள்தான் இவர்கள்தான்.

உலகம் முழுவதும் தங்களின் நாச காரியங்களுக்குப் பயங்கரவாதிகளை உற்பத்தி செய்பவர்களும்  இவர்களே. அமெரிக்காவின், ஜார்ஜியா பென்னிங்கோட்டை அதற்குரிய பயிற்சி முகாமாக, உலைக்களமாக இன்றும் செயல்பட்டு வருகிறது. இச்செயல்கள் எல்லாம் வெளியுலகிற்குத் தெரியும். சி.அய்.ஏ செய்யும் அத்தனைத் தீவிரவாதச் செயல்களையும், ஒவ்வொரு 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை அமெரிக்க அரசாங்கமே வெளியிடும். "எங்களை யார் என்ன செய்துவிட முடியும் ?" என்கிற எண்ணம் அவர்களுக்கு ! அதுதானே உண்மையாகவும்  இருக்கிறது ! அந்த உண்மைகளில் சில பார்க்கலாமா?


முகமது கடாபி :

 

லிபியாவை ஆண்ட மன்னர் இத்ரிசை அகற்றி, அத்தலைமைக்குப் பொறுப்பேற்றவர்தான் முகமது கடாபி. மக்களின் நல்வாழ்வுக்காகவே  ஆட்சி செய்தார். அப்படி செய்கிறபோது கொள்ளைக்கார, வெள்ளையர்  நிறுவனங்கள் மீது கை வைத்தார் முகமது கடாபி.  பொறுக்குமா அமெரிக்கா ? பொங்கி எழுந்தது. 1981 - இல் 19 விமானங்களை ஒன்று சேர அனுப்பியது அமெரிக்கா. முகமது கடாபியைக் கொள்வதுதான் எங்கள் நோக்கம் எனக் கொக்கரித்தார் அன்றைய அதிபர் ரொனால்ட் ரீகன். ஆனால் முகமது கடாபி பிழைத்துக் கொண்டார். ஒருமுறை முகமது கடாபி செல்லும் விமானம் எனக் கருதி, அவ்விமானத்தையே சுட்டுப் பொசிக்கியது அமெரிக்கா. ஆனால் அது பயணியர் விமானம். அதில் பயணம் செய்த 81 மனிதர்கள் அநியாயமாய் செத்துப் போனார்கள். பிறிதொரு நாளில் கடாபி இருக்குமிடம் என அறிந்து குண்டு வீசினார்கள். அங்கும் அவர் இல்லை. ஆனால் அந்தக் குண்டுக்கு கடாபியின் வளர்ப்பு மகளும், 65 லிபிய மக்களும் மாண்டு போனார்கள்.

மொசாடே :

இவர் ஈரானின் பிரதமராக இருந்தவர். தானுண்டு, தன் வேலையுண்டு என்றில்லாமல், ஈரான் வளங்களைச் சுரண்டும் அமெரிக்க நிறுவனங்களை நாட்டுடமை ஆக்கிவிட்டார். பொறுப்பாரா  அமெரிக்க அண்ணன்?  சற்றொப்ப 20 இலட்சம் டாலர்களை ஈரானில் செலவழித்தது. பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகளை விலைக்கு வாங்கியது. டாலர்கள் பெற்றவர்கள் தோழர்கள் ஆனார்கள்.  மொசாடேவுக்கு எதிரான பேரணி தொடங்கியது, வன்முறை உருவானது, மொசாடா படங்கள் தீயில் கருகின. அந்நாட்டு வானொலி, அமெரிக்க சி.அய்.ஏ. வின் கைக்கூலிகளால் கைப்பற்றப்பட்டது. மொசாடே பதவி விலகிவிட்டார் என இவர்களே அறிவித்தனர். இக் கலவரங்களில் ஆயிக்கணக்கான பொது மக்கள் இறந்து போயினர். மொசாடே அமெரிக்காவால் பதவி நீக்கம் செய்யப்படுகிறார். அமெரிக்க அடிமை சாஹிடி பிரதமரானார்.


அலண்டே  :

1964 சிலி நாட்டுத் தேர்தலில், அலண்டே வெல்வார் என அமெரிக்கா கணிக்கிறது. ஒரு நாட்டின் அதிபராக அல்லது பிரதமராக யார் வர வேண்டும் என்பதை, அமெரிக்காவே முடிவு செய்யும். இப்போது சிலியில் அலண்டே வேண்டாம் என முடிவு செய்கிறது அமெரிக்கா. 1964 சிலி தேர்தலுக்கு 1961 ஆம் ஆண்டிலே குழு அமைத்தது அது. அப்போதைய அமெரிக்க அதிபராக இருந்தவர் கென்னடி.  சி.அய்.ஏ - வை சிலிக்கு எதிராக சிலிர்க்க வைத்தார். சிலி நாட்டுத் தேர்தலுக்காக அமெரிக்கா செய்த செலவுகள் அதிகமில்லை. வெறும் 2 கோடி டாலர்கள் தான். இத் தொகையிலிருந்து 26 பத்திரிகைகள் தொடங்கினார்கள், 20 வானொலி நிலையங்களும், 44 மண்டல ஒலிபரப்புகளும் இயக்கப்பட்டன. கூடவே கொஞ்சம் தலைவர்களையும் வாங்கினார்கள். குறிப்பாக ஜீனிட்டா காஸ்ட்ரோ. இவர் யார் தெரியுமா?  சற்றொப்ப 50 ஆண்டுகளாய், அமெரிக்காவை ஆட்டிப் படைக்கும்  கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் சகோதரியாவார். இறுதியில் அமெரிக்கா நினைத்தது நடந்தது. அலண்டே தோற்கடிக்கப்பட்டார். அற்புதமான அந்த மார்க்சிய மனிதன் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்து போனார். அந்தத் தேதி கூட செப்டம்பர் - 11. ஆண்டு - 1973.


டேனியல் ஓர்ட்டேகா :



இவருக்கு மிகவும் பிடித்தவர் கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ.  இது போதுமல்லவா ஒர்ட்டேகாவை ஒழிக்க ?  ஆம் ! நிகரகுவா அதிபராக டேனியல் ஓர்ட்டேகா வரக்கூடாது என்றது அமெரிக்கா. அதற்கான கூட்டணியும் அமைத்தது. டேனியல் ஓர்ட்டேகா கொஞ்சம் வலிமை, கொஞ்சம் செல்வாக்குக் கொண்டவர். இந்நிலையில் "நிகரகுவா தேர்தல் நியாமாக நடைபெறாது", என அமெரிக்க நியாயவான் கூச்சல் போடுகிறார். உடனே 40 நாடுகளில் இருந்து, 400 பிரதிநிதிகள் நிகரகுவாவில் நிரம்பினார்கள். தேர்தல் நடந்தது. மக்கள் தீர்ப்பில் ஓர்ட்டேகா எழுகிறார், அமெரிக்கா வீழ்கிறது. பொறுக்குமா அமெரிக்கா?  நிகரகுவா மீது பொருளாதாரத் தடை, உலக வங்கியில் கடன் மறுப்பு, ஏனைய நாடுகளும் உறவைத் துண்டிக்கும் ஏற்பாடு என பலவும் செய்தது. அராஜகம் இத்தோடு முடிந்ததா? பிறகுதான் முழு வீச்சில் தொடங்கியது. ஆம் ! அறிவிக்கப்படாத போரே  வந்தது. பள்ளிகளில் கூட குண்டு வீசப்பட்டது. நிகரகுவா மக்களின் கை, கால்கள் வெட்டப்பட்டன, கண்கள் தோண்டப்பட்டன, நாக்கைப் பிடுங்கினார்கள், குரல்வளை நெறிக்கப்பட்டது, இதயத்தை அறுத்து வெளியில் போட்டார்கள். இறுதியில் பல்லாயிரம் மக்கள் செத்துப் போனார்கள். இந்நிலையில் அமெரிக்கா எதிர்பார்த்த் தேர்தலும் முன்கூட்டியே வந்தது. டேனியல் ஒர்ட்டேகாவை வீட்டுக்கு அனுப்பிவிட்டு,  அமெரிக்க அடிமை ஒருவரை அதிபராக்கினர்.


வெலாஸ்கே இபாரா :



சுயமரியாதையை விரும்பிய  இந்த மனிதர்தான் ஈக்வடாரின் புதிய தலைவராகிறார். தென் அமெரிக்காவின் ஒரு குட்டி நாட்டுத்  தலைவர் மரியாதையை எதிர்பார்ப்பதா ?  அது தனக்குண்டான அவமரியாதை என்றது அமெரிக்கா.   சரி ! கூட்டிக் கழித்து இரண்டு விசயங்களுக்கு உடன்படு என உத்தரவிட்டது அமெரிக்கா. ஈக்வடாரின் பொதுவுடமைவாதிகளை ஒடுக்கு, கியூபாவின் நட்புறவை முடக்கு என்றார்கள். ஒப்புக் கொள்ள மறுத்தார்  வெலாஸ்கே இபாரா.  பிறகென்ன?  வழக்கம் போலத்தான்.  பல்லாயிரம் டாலர்களோடு ஈக்வடார் போனது சி.அய்.ஏ. எல்லா அநியாயங்களும் செய்தனர்.  கலவரங்கள் வெடித்தன. அதிபரின் தனி மருத்துவர் விலைக்கு வாங்கப்பட்டார். 1961 இல் இபாராவைத்   துரத்தினர்.. 1963 இல் குடியரசு மாளிகையைக் கைப்பற்றினர்.

பனாமா :

1989 - இன் இறுதியில் நடந்த அந்த பனாமா சோகத்தை யாராலும் மறக்க முடியாது. பல்லாயிரம் மக்கள் வசித்த அந்தக் குடியிருப்பு பகுதிக்குள் அமெரிக்க இராணுவம் நுழைந்தது. மொத்தக் குடியிருப்பு வளாகத்தையும் சுற்றி வளைத்துச் சுடுகின்றனர். 500 - க்கும் மேற்பட்டோர்  செத்து விழ, 3000 - க்கும் மேற்பட்டோர் படுகாயமடைய, 15 ஆயிரத்திற்கும் மேலானோர் வீடிழந்தனர். சில மணி நேரங்களில் முடிந்த கொடுமைக் கண்டு உலகமே கண்ணீர் வடித்தது. பனாமா மீது, அமெரிக்காவிற்கு என்ன கோபம் உலகம் குழம்பித் தவித்தது. காரணம் பின்னாளில் தெரிய வந்தது. சாலை விதிகளை மீறியும், கட்டுப்பாட்டை இழந்தும் அமெரிக்கர் ஒருவர் கார் ஓட்டி வந்துள்ளார். பனாமா பாதுகாப்புப் படையினர் காரை நிறுத்தும்படி  கேட்கின்றனர். வாய்ப்புகள் ஏதுமற்ற நிலையில், பாதுகாப்புக் கருதி அந்த அமெரிக்கரைச்  சுட்டுவிட்டனர். ஒரு அமெரிக்கரைச் சுட்டவுடன், அமெரிக்காவையே தகர்த்ததாக அலறினர். சில மணி நேரங்களில் பனாமா இராணுவத்தையே தன் வசப்படுத்தினார்கள். பனாமா அதிபர் நொரீகா அமெரிக்க எதிர்ப்பாளர் அல்ல. டாலரால் ஆட்சிக்கு வந்தவர்தான். அவரும் ஒரு அமெரிக்க அடிமைதான். எனினும் அந்த நேரத்தில் அமெரிக்கா அதை ஏற்கவில்லை. ஒரு அமெரிக்க உயிருக்குப் ஈடாக  500 உயிர்களை வாங்கியது. இது பனாமாவுக்கு மட்டுமல்ல, எங்களிடம் வைத்துக் கொள்ளாதீர்கள் என உலக நாடுகளுக்கான எச்சரிக்கையும் கூட!

சூடான் :

மனித குலத்திற்கே அழிவைத் தரும் இரசாயன ஆலையைச் சூடான் வைத்திருக்கிறது, உலகமே அழியப் போகிறது என அலறியது அமெரிக்கா. ஆனால் சூடானோ அதை மறுத்து, உலகத்தாரிடம் முறைப்படியான விளக்கத்தை முன்வைத்தது. அமெரிக்காவோ தொடர்ந்து அதட்டியது. சூடான் சூடாகவில்லை. இந்நிலையில்தான் அது நடந்தது. ஆண்டு 1998.  அமெரிக்காவின் ஏவுகணைகள் சூடானை நோக்கிப் பறக்கின்றன. அமெரிக்கா சந்தேகப்பட்ட அந்தத் தொழிற்சாலை சில நிமிட நேரத்தில் சின்னாபின்னமானது.  பற்றியெறிந்த தொழிற்சாலைக் கண்டுப் பதறிப்போனார்கள் சூடான் மக்கள் . காரணம் அந்தத் தொழிற்சாலையில், அமெரிக்கா சொல்வதைப் போல இரசாயனம் எதுவுமில்லை. மாறாக அது ஓர் மருந்துத் தொழிற்சாலை. ஆப்பிரிக்க மக்களின் உயிர் காக்கும் மருந்துகளை உற்பத்தி செய்யும் உன்னத இடம். அதைத்தான் ஏவுகணை கொண்டு அழித்தது அமெரிக்கா. சூடானுக்கு ஏற்பட்ட இக்கொடுமையறிந்து, உலக நாடுகள் அங்கொன்றும், இங்கொன்றுமாக முணுமுணுத்தன. அமெரிக்கா அதுகுறித்தெல்லாம் அலட்டிக் கொள்ளவில்லை. குறைந்தபட்சம் வருத்தமோ, இழப்பீடோ... எதுவுமே இல்லை.

இவையெல்லாம் ஒரு துளி உதாரணங்கள். இன்னும் வியட்நாம், கியூபா, பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தான், ஜோர்டான், சிரியா, அங்கோலா, நமீபியா, ஜிம்பாவே, மொசாம்பிக், ஜாமீபியா, கானா, எத்தியோப்பியா, காங்கோ, பெனின், டான்சான்யா, கென்யா, லெபனான்
என அமெரிக்காவின் கறைபடிந்த வரலாறுகள் மிக நீண்டது. இதில் கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோவை மட்டும் 300 முறைக்கு மேல் கொலை செய்ய முயன்றுள்ளனர்.

ஒவ்வொரு நாடுகளிலும் அமெரிக்காவின் சி.அய்.ஏ செய்யும்  நடவடிக்கைகள் பயங்கரவாதத்தின் உச்சம் ! அடிப்படையாக எல்லைக்குள் ஊடுருவது, விவசாயிகளை அரசுக்கு எதிராகத் திருப்பி விடுவது, குண்டு வைப்பது, நீர், எண்ணெய், பெட்ரோலியப் பொருள்களில் விசம் கலப்பது,  வானொலிகள் அமைப்பது, நாச வேலைகளுக்கு நிபுணர் குழுக்கள் ஏற்படுத்துவது, உள்ளூரில் முகவர்கள் உருவாக்குவது, அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளை விலைக்கு வாங்குவது, ஆயுதம் கடத்துவது, பெண்களைப் பயன்படுத்துவது, கொரில்லா போர் நடத்துவது, தயார் செய்த பயங்கரவாதிகளை கைவசம் வைத்திருப்பது என, நாம் கற்பனை செய்யக் கூட  முடியாத கொடூரங்கள் நிறைந்தது   சி.அய் ஏ.  இந்தத் தீவிரவாதப் பட்டியல்களை, சி.அய்.ஏ - வின் உயர் அதிகாரிகளே நூலாக வெளியிட்டுள்ளனர். அதிலும் பிலிப்ஆகி என்பவர்  வெளியிட்ட நூலைப் பார்த்து உலகமே உறைந்து போனது.  உறைந்து போன நாடுகள் உணர்வு பெற வேண்டும். இது அமெரிக்காவின் ஆயிரக்கணக்கான பக்கங்களில் அய்ந்தாறு பக்கங்கள் மட்டுமே ! 








                                                                                                                   வி.சி.வில்வம்

                                     

                                                                                                       
                                                                                                                 






                                                                                                                                        

                                                                                                                                                      
                              
                                                                                                                                                                                                      
                              
                                                                                 
                                                                                                                                              

Wednesday, March 6, 2013

தெரியாத வரலாறு!



உன்
வரலாறு
அத்தனையும் தெரியும்
எங்களுக்கு!

சிவப்புத் தோல்
விரித்தாய்...
விழுந்தவனை
அழித்தாய்

மந்திரம் சொல்லி,
மத மயக்கம்
கொடுத்தாய்

ஜாதி
வலையில்
சதி
பின்னினாய்

கடவுளென்ற
கயமை
கற்பித்தாய்

நீ
அழித்திடாத
அழிவுகளே
அரிது

சூழ்ச்சிதானே
உன்
சூத்திரம்


எதுவும்
தெரியாதென்று
திரியாதே ?

உன் வரலாறு
அத்தனையும்
தெரியும் எங்களுக்கு...

ஒன்றே
ஒன்று
புரியவே இல்லை.

ஆறறிவு மக்களுக்கே
கேடுகள் 
பல செய்துள்ளாயே...

நீ
மேய்த்தாயே
ஆடு, மாடுகள்...
அதற்கு
எவ்வளவு கொடுமைகள்
செய்திருப்பாய் ?

                                                                    வி.சி.வில்வம்

கவிதைகள்


உன் கடவுள் செய்வாரா ?

மரம்
மழை தரும்

மாடு
பால் தரும்

கழுதை
பொதி சுமக்கும்

மரம்,மாடு,கழுதை
செய்வதை
உன் கடவுள்
செய்வாரா ?
                                              
 



கதை எதற்கு ?

 

முருகனையும்
முனியனையும்
மனிதன் செய்தான்

காளியும்
மாரியும்
மனிதன் செய்தது 

பெருமாளும்
பிள்ளையாரும் கூட
மனிதன் செய்தவையே...

பின்
கடவுள் படைத்தார்                                                 

என்ற கதை எதற்கு ?






 
                                                                     வி.சி.வில்வம்