Thursday, May 16, 2013

திக்கெட்டும் பரவும் பெரியார் திடல் !


2012 ஆம் ஆண்டு, நவம்பர் மாதத்தின் ஓர் இறுதி வாரத்தில் , தமிழ்ப் பிள்ளைகளுக்கு நல்ல வாழ்விணையர் கிடைக்க,  மன்றல் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பெரியார் திடல் நிரம்பிக் கிடந்தது. அதைத் தொடர்ந்த தமிழர் திருநாள் பொங்கல் விழாவிலும் கூடி மகிழ்ந்தார்கள்! இதோ ... இப்போதும் போய் பாருங்கள்! தினமும் ஆயிரக்கணக்கில் வந்து போகிறார்கள் ; வாங்கிப் போகிறார்கள் ! ஆம்... சென்னை புத்தகச் சங்கமம் குறித்துப் பேசுகிறோம்!
தமிழ்நாட்டின் நாளிதழ்களிலும், வார இதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் சென்னை புத்தகச் சங்கமம் குறித்துப் பார்த்திருப்பீர்கள்!  "ஹலோ எப்.எம்" வழியே கேட்டிருப்பீர்கள் !
ஏப்ரல் - 23 உலகப் புத்தக நாள் !  அப்புத்தக நாளுக்கே, புத்தாக்கம் கொடுக்கும் வகையில், தனது வீச்சைப் பதிவு செய்து வருகிறது சென்னை புத்தகச் சங்கமம்! ஏப்ரல் 18 - இல் தனக்கான தொடக்கத்தைக் கொண்டாடி மகிழ்ந்தது.  ஏப்ரல் 19 முதல் 27 வரை மாபெரும் புத்தகக் கண்காட்சியைத்  தன்னகத்தே கொண்டு அது பயணித்து வருகிறது. பொதுவாக விழாக் காலங்கள் மற்றும் குறிப்பிட்ட மாதங்களில்  புத்தகக் கண்காட்சிகள் நடைபெறும். ஆனால் முதன்முறையாக உலகப் புத்தக நாளை முன்னிட்டு நடைபெறுவது இதன் மொத்தச் சிறப்பு ! "புத்தகக் கண்காட்சி என்றால் புத்தகங்கள் விற்பனை", என்பது தான் அதன் பொருள். ஆனால் அந்தப் பொருளையே புரட்டிப் போட்டு, புது வரலாறு எழுதி வருகிறது இப்புத்தகச் சங்கமம் !

இது பதிப்பாளர்கள் சங்கமம் :
இந்தப் புத்தகச் சங்கமத்தில் பதிப்பாளர்கள் மட்டும்தான் ! விற்பனையாளர்கள் கிடையாது. இரண்டுக்குமான வேறுபாடு  என்ன ? விற்பனையாளர்கள் பங்கு பெற்றால் குறிப்பிட்ட ஒரே புத்தகங்கள் நிறைய கடைகளில் இருக்கும். பார்த்தப் புத்தகத்தையே பார்க்க வேண்டிவரும். குறிப்பிட்ட எழுத்தாளர்களின் நூல்களுக்கு மட்டுமே முதல் வரிசை கிடைக்கும்.  அப்படி இருக்கலாமா? கூடாது.  "எல்லோருக்கும் எல்லாமும்" என்பதுதானே திடல் பண்பாடு.
அதன் அடிப்படையிலே இந்த ஏற்பாடு.  ஆம் ! இது பதிப்பாளர்களுக்கான சங்கமம் !  ஒரு அரங்கில் நீங்கள் காணும் நூல்களை, வேறொரு அரங்கில் காண முடியாது. (திருக்குறள், பாரதிதாசன் கவிதைகள் போன்ற ஒரு சில விதிவிலக்கு) தமிழ்நாட்டின் ஆகச் சிறந்த அனைத்து  நூல்களையும் நீங்கள் வாங்குகிறீர்களோ இல்லையோ, உங்களால் காண முடியும், ரசிக்க முடியும், வியக்க முடியும் !   எண்ணற்ற நூல்களும், குட்டி, குட்டி எழுத்தாளர்களும் உங்களுக்கு அறிமுகம் ஆவார்கள். இது மட்டுமா கண்காட்சி சிறப்பு ? இல்லையில்லை...!  இந்தப் பதிப்பாளர்கள் மற்றும் அவர்களின் பணியாளர்களுக்குப் பயிற்சிப்  பட்டறைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாசகர்கள் மற்றும் பொது மக்களை எவ்வாறு அணுகுவது, அவர்களின் தேவைகளைப் புரியும் விதம், நூல்களின் சிறப்புகள் குறித்து எடுத்துக் கூறுவது, மொத்தத்தில் மேன்மை பொருந்திய அணுகுமுறைகளை வளர்த்துக் கொள்ளும் விதம் குறித்தெல்லாம் பயிற்சிப்  பட்டறையில் தீட்டிக் கொடுக்கப்படுகிறது.  "நடந்தது கண்காட்சி, முடிந்தது விற்பனை",  என்பதாகவே பழகிய பதிப்பாளர் நண்பர்கள், இந்தப் பயிற்சிப் பட்டறைக் குறித்து மெய்சிலிர்த்து தான் போனார்கள். நம் குழந்தைகளிடம் பிறர் அன்பாகப் பழகினால் யாருக்குத்தான் பிடிக்காது ?

மக்கள் சங்கமம் :
மே மாதம் கல்வி நிலையங்கள் விடுமுறை. எல்லோரும் ஊர் செல்வார்கள், மாதக் கடைசி, புத்தகக் கண்காட்சிக்குப் பெரியார் திடல் புதிய இடம், கிரிக்கெட் வேறு நடைபெறுகிறது என்றெல்லாம் வார்த்தைகள் வந்து விழுந்தன. ஆனாலும் என்ன, மக்கள் வந்து குவிந்தனர். மக்கள் என்றால் பல்வேறு தரப்பு மக்கள்.
மடிசார் கட்டிய மாமி, தங்கள் வழக்கப்படி சுருட்டிக் கட்டிய வேட்டியுடன் அய்யர்வாள், உருது பேசும் இஸ்லாமியப் பெண்கள், வெள்ளை அங்கியுடன்  கிறிஸ்துவப் பெண்கள், வெளிநாட்டு மனிதர்கள், மாற்றுத் திறனாளிகள் என வகை வகை மனிதர்கள் ஒன்று கூடி பெரியார் திடலை மக்கள் சங்கமமாக மாற்றிவிட்டார்கள்.

குழந்தைகள் சங்கமம் !

புத்தகக் கண்காட்சியில் குழந்தைகள் சங்கமம் வெகு சிறப்பு. அவர்கள் உலகமே அங்கு தனிதான் ! கதைப் படைத்தல், கோட்டுச் சித்திரம் வரைதல், பேச்சுத் திறன் வளர்த்தல், சூழலியல், கவிதை எழுதுதல், நடிப்புக் கலை, வித்தியாசமான விளையாட்டுகள், வாசிப்புப் பழக்கத்தைத் தூண்டும் போட்டிகள் மற்றும் பயிற்சிகள் என குழந்தைகள் மகிழ்ந்திட வாய்ப்புகள் குவிந்துள்ளன.  குழந்தைகளுக்கான பயிற்சியாளர்கள் குழந்தைகளாகவே மாறி ஆடுவதும், பாடுவதும், குதிப்பதும், சிரிப்பதுமான காட்சிகள் தேர்ந்த ஒருங்கிணைப்பின் ஆகச் சிறந்த அடையாளங்கள் ஆகும்.  போட்டிகளில் வெல்ல முடியாமல் போன குழந்தைகளுக்கும் கழுத்தில் பதக்கம் அணிவித்து, சான்றிதழ் வழங்கி, அவர்களை உயர உயரத் தூக்கிப் பிடிக்கும் அழகை  இங்கன்றி வேறெங்கு நாம் காண முடியும்!
பல்வேறு சங்கமங்கள் :
ஒவ்வொரு நாள் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்படவில்லை; செதுக்கப்பட்டுள்ளன!  தினமும் பேசும் ஒவ்வொரு பேச்சாளர்களும் மனதில் நின்று போகிறார்கள்.  பேச்சாளர்களின் சங்கமம் மேடையை அதிர வைக்கின்றன.  இது  பொழுதுபோக்குப் பேச்சுகள் இல்லை, புலர வைக்கும் பேச்சுகள் ! அதேபோன்று சமூகக் கருத்துகள் இடம் பெறும் நகைச்சுவைச் சங்கமத்தில் தமிழக இளைஞர்கள் படுத்தும்பாடு சொல்லிமாளாது. அழகழகாய் சிந்தனைகளை அள்ளித் தூவுகிறார்கள். இலவசமாய் வயிற்று வலியும் தருகிறார்கள்! 
புத்தக வங்கி :
பண வங்கி தெரியும் தெரியும், இரத்த வங்கி தெரியும். அது என்ன புத்தக வங்கி ? நாம் பயன்படுத்தி முடித்த புத்தகத்தைப் பிறரும் பயன்படுத்தி மேன்மையடைய பிறருக்கு நன்கொடையாகக் கொடுத்து உதவுவதே புத்தக வங்கி ஆகும். . இந்த ஏற்பாடும் இப்புத்தகக் கண்காட்சியில் இருக்கிறது. அவ்வாறு புத்தகம் வழங்கும் அன்பர்களுக்கு "புத்தகக் கொடைஞர்" எனும் பெயரிட்டு சான்றிதழும் வழங்கப்படுகிறது. இப் புத்தகங்கள் கிராமப்புற நூலகங்களுக்கு அளிக்கப்பட்டு, எண்ணற்ற இளைஞர்களும், மாணவச் செல்வங்களும் பயன்பெற உதவுகிறது. அவ்வகையில் நன்கொடையாக வந்த புத்தகங்கள் ஆயிரத்தைத் தொடயிருப்பதும் ஆச்சர்யப் பட்டியல்களில் ஒன்று. அதேபோன்று இக்கண்காட்சியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. புத்தகக் கண்காட்சிக்கும், பரிசோதனை முகாமுக்கும் என்ன தொடர்பு எனச் சிலர் கேட்கிறார்கள். நல்ல செயல்கள் செய்வதற்குக் காரணங்கள் எதுவும் தேவையில்லை. அதேநேரம் கண்காட்சி - கண் சிறப்பாக இருந்தால் தான் காட்சியைப் பார்க்க முடியும். எனவே புத்தகக் காட்சிக்கு வருகிறவர்கள் கூடுதல் பயன் பெற வேண்டியே இந்த ஏற்பாடுகளையும் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். அதோடு முடிந்ததா இல்லை.  கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்களுக்கு இலவசமாக அனுமதிச் சீட்டுக் கொடுத்து, அதில் அவர்களின் விவரங்கள் பூர்த்தி செய்யப்பட்டு, தினமும் சிலரைத் தேர்ந்தெடுக்கின்றனர். முதல் பரிசாக திறன் பேசி என அழைக்கப்படும் கணினி சாதனமும், பல்வேறு தொகைகளில் புத்தகப் பரிசுகளும் வழங்கி மகிழ்விக்கின்றனர்.
கடற்கரைப் பேரணி:
உலகப் புத்தக நாளை முன்னிட்டு ஏப்ரல் 21 ஆம் தேதி, புத்தக வாசிப்புக் குறித்த விழிப்புணர்வு நடைபயணம், சென்னை மெரினாவில் நடைபெற்றது. பல நூறு மாணவர்கள், புத்தகப் பதிப்பாளர்கள், நடைப் பயிற்சியாளர்கள், பொது மக்கள் எனத் திரண்ட அந்தப் பேரணியைத் திரைப்பட நடிகர் விவேக் தொடங்கி வைத்தார். உழைப்பாளர் சிலை தொடங்கி, காந்தி சிலையில் முடிந்த அந்தக் கடற்கரை நடைபயணம் அவ்வளவு அழகு; அவ்வளவு நேர்த்தி ! குழந்தைகளும், மாணவர்களும் வாசிப்பின் நேசிப்புக் குறித்தப் பதாகைகளை தங்களின் மெல்லிய கரங்களில் ஏந்தி, வலுவான சமூகத்திற்கு வித்திட்டனர்.
இவ்வாறாக ஒரு புத்தகக் கண்காட்சியில் புத்தகங்கள் விற்பனை என்பதைக் கடந்து, வேறு என்னென்ன செய்ய முடியும் என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டி, சாதனைப்  படைத்திருக்கிறார்கள். ஒரு நாளின், ஒரு நிமிடத்தைக் கூட வீணடிக்காமல் அனைவருக்குமான நிகழ்ச்சியாகச் செதுக்கி இருக்கிறார்கள். அந்த அழகை எல்லோரும் பார்த்து மகிழ வேண்டும். சிற்பிக்கு நமது பாராட்டுகள் !
                                                                                                                                                                                                                                                                                        வி.சி.வில்வம்