Thursday, May 16, 2013

தமிழர்களாக மாறிய பார்ப்பனர்கள் ! இது சிறீரங்கம் அதிரடி !

பார்ப்பனர்கள் தமிழர்களாக மாறிய வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு  நேற்று (12.05.2013) சிறீரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு "வயிறு குலுங்கச் சிரிங்க" என்றுதான் தலைப்பிட்டிருக்க வேண்டும். ஒரு கண்ணியம் கருதி நாம் அப்படிச் செய்யவில்லை. இரு தினங்களுக்கு முன், சிறீரங்கத்தில் வசிக்கும் நம் தோழர்கள் காலையில் வீட்டை விட்டு வெளியே வருகிறார்கள். அவர்கள் கண்ணில் பளிச்சிடுகிறது அந்தச் சுவரொட்டி. "பார்ப்பனர்கள் தமிழர்களா? ஆம் ! அவர்களும் தமிழர்களே! பிராமணர் சங்க விளக்கப் பொதுக் கூட்டம் !" எனச் சொல்கிறது அந்தச் சுவரொட்டி. அதன்படி நேற்று மாலை பொதுக் கூட்டமும் நடைபெற்றது. சில தினங்களுக்கு முன், திராவிடர் எழுச்சி மாநாடு நடத்தினோமே, அதே இடம். மாலை 6.30 மணிக்கு நாம் சிறீரங்கத்தில்  நுழைகிறோம். அங்கே ஒரு "பிளெக்ஸ்" விளம்பரம் நம்மைத் தடுக்கிறது. அதில் சில படங்கள் இருந்தன, பேச்சாளர்களின் பெயர்கள் இருந்தன, கூட்டத்திற்கான விளக்கமும் இருந்தது. அவற்றிற்குக் கீழே "ஆகவே பிராமணர்களே திரள்வீர்! திரள்வீர்! சிறீரங்கம் திணறத் திரள்வீர் !!" என்கிற உற்சாக வரியும் இருந்தது. அதைப் படித்து விட்டு வேக,வேகமாக நாம் கூட்ட இடத்திற்கு விரைகிறோம். அங்கே போனால் மேடையில் இரண்டு பேர், ஆங்காங்கே 4 பேர், 30 காலி இருக்கைகள் இருந்தன. சரி ! இன்னும் நேரம் இருக்கிறது போல, ஆட்கள் வருவார்கள் என்று ஓரமாய் காத்திருந்தோம். நமக்கு இருக்கிற பொறுப்புணர்வு கூட பிராமணர்களுக்கு இல்லை. கூட்டத்திற்குச் சரியான நேரத்திற்கு வராமல் அப்படி என்ன வேலை?
இப்படியான சூழலில் மணி ஏழானது. கூட்டம் வரத் தொடங்கியது. ஒரு இருபது பேர் இருப்பார்கள் எனத் தூரத்திலிருந்துக் கணித்தோம். நம் கணிப்புப்
பொய்யானது. காரணம் கூட்டத்தின் அருகில் சென்று பார்த்தால் இருபத்தி மூன்று பேர் இருந்தார்கள். இச்சூழலில் பேச்சாளர்கள் அய்ந்து பேர் மேடை ஏறினார்கள். கூட்டமும் தொடங்கியது.  முதலில் ஒருவர் வந்தார்.  இருபது  நிமிடம் வேக, வேகமாக, சத்தம், சத்தமாகப் பேசினார். பின்னர் சொன்னார், "ஆகவே இந்துக்களே! இப்போது என் உரையைத் தொடங்குகிறேன்", என்றார். அப்ப, இருபது நிமிடம் பேசியது என்னண்ணே? என்று யாராவது கேட்க முடியுமா?
இரண்டாவது  ஒருவர் வந்தார். இந்த மேடையைப் பாருங்கள் என்றார். எல்லோரும் மேடையைப் பார்த்தார்கள். மேடைக்குப் பின்னால் உள்ள "ப்ளெக்ஸில்" அம்பேத்கர், முத்துராமலிங்கம், ஜெயலலிதா படங்கள் இருந்தன. படங்களுக்கான காரணங்களை விளக்கினார். அம்பேத்கர் அவர்களை வளர்த்தது ஒரு பிராமணப் பெண். இந்து மதத்தை வளர்த்தவர் முத்துராமலிங்கம். ஜெயலலிதா எங்கள் குலப்பெண். அவர் முதல்வர் என்பது முக்கியமல்ல. அவர் ஓர் பிராமணர். எனவே இந்தப் படங்களை வைத்திருக்கிறோம் என்றார்.  மேலும் அவர் பேசும்போது, இந்த நாட்டுக்காகப் பாடுபட்டவர்கள் என, ஒரு பதினைந்துப்  பேரை வாசித்தார். எல்லோரும் பார்ப்பனர்கள். நாங்களும் தமிழர்களே எனக் கூறினாலும், அவர்களைப் பற்றியே பேசியதுதான், அவர்களாலே தவிர்க்க முடியவில்லை.
மூன்றாமவர் வந்தார். அவர் ஓர் தமிழர். பிராமணர்கள் எவ்வளவு நல்லவர்கள் தெரியுமா என்றார் ? (என்ன ஒரு அய்ந்து கிலோ நல்லவர்களா? எனக் கேட்கத் தோன்றியது )  இந்தத் தி.க. காரங்களுக்கு வேலையே இல்லாமப் போச்சு. எப்பப் பார்த்தாலும் நெற்றியில் பிறந்தவன், தோளில் பிறந்தவன், தொடையில் பிறந்தவன், காலில் பிறந்தவன் என்கிறார்கள். எங்கு பிறந்தால் என்ன ? ஒரு மனிதரின் எல்லா உறுப்புகளும் சமமானதே. இதில் தலை என்ன?  கால் என்ன ? ஒரு மனிதரை வணங்கும்போது காலில்தானே விழுந்து வணங்குகிறோம். கால்கள் ஒன்றும் மோசமானது இல்லை? என்று கூறிப் பார்ப்பனர்களை அசர வைத்தார். முடிவில், பிராமணக் கலாச்சாரமே இந்துக் கலாச்சாரம். அதுதான் எங்கள் கலாச்சாரம்! என்று கூறி நம்மையும் அசர வைத்தார்.
அடுத்து அவாளில் ஒருவர் வந்தார். கடவுளைப் பார்த்துக் கல், கல் என்கிறார்கள். எங்களுக்குத் தெரியாதா அது கல்லென்று ! இதை இவர்கள் தான் சொல்ல வேண்டுமா என நியாயமாகத் தொடங்கினார். ஊருக்கு நான்கு பேர் இருந்தால் நீங்கள் அறிவாளிகளா? நீங்கள் நிறைய புத்தகம் படிக்க வேண்டும். தமிழ்நாட்டிலேயே இந்து மக்கள் கட்சியில் தான் ஜாதியே இல்லை.  இராஜகோபுரம் முன்பாக பெரியார் சிலை வைத்திருக்கிறார்கள். நாங்களும் ஒரு தீர்மானம் போட்டுள்ளோம். தி.க. அலுவலகங்கள் முன் ஆஞ்சநேயர் அல்லது பிள்ளையார் சிலை வைக்கப் போகிறோம். எங்கள் சாமிக்கு எந்த மொழியில் அர்ச்சனைச் செய்வதென்று எங்களுக்குத் தெரியாதா? உங்களுக்குச்  சமஸ்கிருதம் தெரியாவிட்டால்  நாங்கள்  என்ன செய்வது?  இந்து மதத்தைக் கண்டுபிடித்த நாங்களும் பகுத்தறிவாளர்களே!
தி.க.வுக்கு விளக்கம் சொல்வதால் எங்கள் நேரமே வீணாகிப் போகிறது.  இருந்தாலும் 2013 ஆண்டில் பதில் சொல்ல ஒரு படைப் புறப்படுகிறது. தமிழர்களை அழிக்கவும், தமிழ்மொழி, சமஸ்கிருதம் ஆகியவற்றை ஒழிக்கவும் வெள்ளையர்களால் கண்டுபிடிக்கப்பட்டதே திராவிடர் கழகம். இனிமேல் எங்கள் குறைகளை ரெங்கநாதர், பெருமாளிடம்  முறையிட  மாட்டோம். நேரடியாகக் கூட்டம் போட்டுப் பேசுவோம். இந்துக்களே இனி யாரும் வெளிநாட்டிற்குப் போகாதீர்கள். இங்குதான் நம் சிவபெருமாள், ரங்கநாதர் இருக்கிறார்கள். வெளிநாட்டில் அவர்கள் இல்லை. நம் மதத்தைக் காப்பாற்ற நாம் இங்கேயே இருந்து போராட வேண்டும் என்று அறிவியல்பூர்வமாகப் பேசினார்.
இறுதியாகச் சிறப்புரையாற்ற "ஸ்ரீதரன்ஜி" என்பவர் வந்தார். அவர் பேசுவதற்கு முன், தொகுப்பாளர் வந்து, "நம் ஸ்ரீதரன்ஜி  அவர்களுக்கு,  இன்று முதல் இனமானத் தளபதி என்கிற பட்டத்தை  வழங்குகிறோம்",  என்று அறிவித்தார். (ஒரே கைத்தட்டல் என்றெல்லாம் நாம் பொய் சொல்ல முடியாது) இதோ ஸ்ரீதரன்ஜி பேசுகிறார் கேளுங்கள். "தமிழக முதல்வர் தொகுதியில் தமிழில் பேசுவதற்கு வாய்ப்புக் கிடைத்ததற்கு நன்றி கூறுகிறேன். திராவிடர் கழகக் 
கருஞ்சட்டைகளை விட,
தமிழ்நாட்டில் உண்மையான சுயமரியாதை வீரர் ஒருவர் மட்டுமே உண்டு. அவர்தான் பாரதியார் !  காந்தியைவிட உயர்ந்த மனிதர் பாரதி. காந்தியைச் சுட்டவன் கோட்சே என்று தி.க.வினர் அடிக்கடி கூறுகின்றனர். காந்தியைக் கொன்றதற்கான நியாயத்தைக் கோட்சே சொல்லிவிட்டான். உலகிலேயே ஒரு வாக்குமூலத்தைக் கேட்டு நீதிபதி அழுதார் என்றால் அது கோட்சேவின் வாக்குமூலம்தான்.
புராணக் காலத்திலிருந்து இன்று வரை ஆயுதம் பிடித்தவர்களுக்கு வித்தைச் சொல்லிக் கொடுத்தது பிராமணர்களே. எனக்கு இந்தியாவின் சட்டம் புரியவில்லை. பெரும்பான்மை இந்து மதத்தை, அதுவும் பிராமணர்கள் நிறைந்த சிறீரங்கத்தில் பெரியார் சிலை வைத்து அதில் "கடவுள் இல்லை" என்று எழுத, எந்தச் சட்டத்தில் இடம் உள்ளது? பிராமணர்களை அனாதை என்று நினைத்து விடாதீர்கள். இந்து மதம் என்பது ஆலமரம். அதில் ஒரு கிளைப்  பாதித்தாலும், அதன் வேராகிய நாங்கள் கேள்வி கேட்போம்.
தமிழ் குறித்து இங்கு பேசுகிறார்கள். தமிழ் மொழியின் தந்தை உ.வே.சாமிநாத அய்யர்தானே. பாரதி எவ்வளவு பாடுபட்டான். ஆனால் அவரைத் தூக்குவதற்கு ஆளில்லை. தமிழ் கூறும் நல்லுலகம் துரோகம் செய்துவிட்டது. அதேபோல பிரச்சனைகளைத் தீர்ப்பதில் "ஸ்பெசலிஸ்ட்" எங்கள் இராஜாஜி. அடுத்த பிறப்புக் குறித்துச் சிந்திக்கும் புத்திசாலிகள் பிராமணர்களே.
முப்பத்தி முக்கோடி தேவர்கள் மற்றும்  இந்து மதப் பொக்கிசங்களைக் காக்க ஜாதி அமைப்புகள் வேண்டும். கடவுளால் இங்கு என்ன பிரச்சினை? கடவுள் மட்டும் இல்லாவிட்டால் 99 விழுக்காடு மனிதர்கள் பைத்தியமாய் போயிருப்பார்கள். மனைவியிடம், நண்பர்களிடம் பேச முடியாத விசயங்களைக் கடவுளிடம் தானே பேச முடியும்? கடவுளுக்கு அர்ச்சனை செய்ய எல்லோருக்கும் அனுமதி கேட்கிறார்கள். ஒருவருக்கு உடல் நிலை சரியில்லை என்றால் யார் வேண்டுமானாலும் ஊசி போட முடியுமா? அதற்கு மருத்துவம் படித்திருக்க வேண்டும். அதேபோல அர்ச்சனை செய்வது அவ்வளவு எளிதான காரியமல்ல. காலை நான்கு மணிக்கே எழுந்து சுத்தம் பேணி, அர்ச்சனை செய்ய வேண்டும். பிராமணப் பையன்கள் மிகப் பெரிய படிப்பை முடித்து, அர்ச்சனை செய்கிறார்கள். அவர்கள் வேறு வேலைக்குப் போனால் இலட்சக்கணக்கில் சம்பளம் பெறலாம். ஆனால் அதைத் துறந்து, தியாகம் செய்கிறார்கள்.
அதேபோல தமிழில் அர்ச்சனைக் கேட்கிறார்கள். கடவுளுக்கு இனம், மொழிப் பாகுபாடுகள் கிடையாது. நாளைக்கே அமெரிக்க அதிபர் ஒபாமா சிறீரங்கம் வந்து ரெங்கநாதரை  வழிபட்டால், அவர் ஆங்கிலத்தில்தான் முறையிடுவார். ரெங்கநாதரும் ஆங்கிலத்திலேயே பதில் சொல்வார்.
தீரத்தின் விளைநிலம் பார்ப்பனர்கள். எதையும் எதிர்கொள்வோம்" என ஸ்ரீதரன்ஜி முடித்தார்.  
இந்தக் கூட்டத்தின் தலைப்பே "பிராமணர்களும் தமிழர்களே" என்பதுதான். அதுகுறித்து யாரும் பேசவில்லை. ஏதேதோ பேசி, இறுதியில்  ஒபாமாவை  சிறீரங்கத்திற்கு அழைத்து வந்ததுதான் மிச்சம். இப்படியாகப் பிராமணர் சங்கப் பொதுக் கூட்டம் நிறைவு பெற்றது. எதிரில் 23 பேர் அமர்ந்திருந்தார்களே, அவர்களில் எத்தனைப் பேர் பார்ப்பனர்கள் என்கிறீர்களா? ஒருவர்கூட இல்லை. நன்றி!

                                                                                                                                                  வி.சி.வில்வம்