Tuesday, January 29, 2013

பிராமணாள் ஹோட்டலும் சிறீரங்கம் கூட்டமும் !

            பிராமணாள் ஹோட்டலும்  சிறீரங்கம் கூட்டமும் !

 நாம் செய்ய வேண்டியதை நாம் தீர்மானிப்பது ஒருபுறம் ; பார்ப்பனர்கள் தீர்மானிப்பது மறுபுறம்.
நமக்கு வேலை கொடுத்துவிட்டு,  அதன் விளைவுகளை மொத்த விலைக்கு வாங்கிக் கொள்வது அவர்களின் வாடிக்கை! அப்படித்தான் தொடங்கியிருக்கிறது  "கிருஷ்ணய்யர் பிராமணாள் கபே" விவகாரமும்!  இது சாதாரண கபே அல்ல,  பாரம்பரிய பிராமணாள் கபே. என்ன பாரம்பரியம் ? எனக் கேட்காதீர்கள்.தொட்டுத் தொடரும் பட்டுப் பாடம்பரியம் போல இது ஒரு வகை. பிராமணன் என்றால் உயர்ந்தவர்  என்று எல்லாப் புத்தகத்திலும் எழுதி வைத்துள்ளனர். (எத்தனை அடி உயர்ந்தவர் என்பதற்கான சான்றுகள் அதில் இல்லை).  இப்படி அவர்கள் எழுதியும் , சொல்லியும் வந்ததைச்  சற்றொப்ப 80 ஆண்டு காலமாக ஒரு இயக்கம் மறுத்து வருகிறது. அவர்கள் கேட்ட  ஒரே கேள்வி,  நீங்கள் உயர்ந்தவர் என்றால் நாங்கள் யார் ?

காலச் சக்கரங்கள் வேகமாக ஓடிய  நிலையில், "நாங்கள் உயர்ந்தவர்கள்" என்பதை  வெளிப்படையாகச்  சொல்வதை விட்டிருந்தார்கள். இதோ இப்போது வந்திருக்கிறார்
"கிருஷ்ணய்யர் பிராமணாள் கபே" உரிமையாளர்  மணிகண்டன். விடாக் கொண்டான், கொடாக் கொண்டான் என்றெல்லாம் சொல்வார்களே, அதுபோல இருக்க ஆசைப்படுகிறார்
இக்கண்டன். இருந்துவிட்டுப் போகட்டும் நமக்கு ஒன்றுமில்லை. அதேநேரம்  அவரின் முரளி தாத்தா (கபே)  குறித்தெல்லாம் தெரிந்து கொள்வது நலம் நலமறிய ஆவல் என்கிறோம்.

கடந்த 04.11.2012 திருவானைக்காவலில் நடைபெற்ற கூட்டம்  என்பது ஆரம்பம்! மற்ற முடிவுகளை நாங்கள் எப்படி எடுக்க  வேண்டும் என்பதை அந்த ஹரிஹரசுதன் (அதான் மணிகண்டன்) எடுப்பார்! இது ஒருபுறமிருக்க  சிறீரங்கத்தில் நடைபெறும்  இந்த விவகாரத்தைப் பொது மக்கள் எப்படிப்  பார்க்கிறார்கள் என்பதை அறிய ஆவல் கொண்டோம்.

நாம் இன்னார் என அறிமுகம் செய்து கொள்ளவில்லை. செய்தியாளர் என்பதாகப்  பொதுவாகவே  நடந்து கண்டோம். இந்த இயக்கம், இன்ன பத்திரிகை என்றால், அதற்கேற்ப அவர்கள் கருத்தில் ஆதரவோ, சார்போ இருந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். நம்முடைய கேள்வியை நாம் இப்படித்தான் அமைத்திருந்தோம். "சிறீரங்கத்தில் ஒருவர் "பிராமணாள் கபே"  எனக் கடைக்குப் பெயர் வைத்திருக்கிறார். இதைத் திராவிடர் கழகம் கடுமையாக எதிர்த்து வருகிறது.  நான்காம் தேதி
கூட பொதுக் கூட்டம் நடத்தினார்கள், இந்தப் பிரச்சினையைப் பொது மனிதராய்  நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் ? இதுகுறித்த உங்களின் கருத்து என்ன ?"

முதலில் "ஜெயம் சேவா சங்கத்தின்" நிறுவனரும், கடவுள் பக்தியும் நிறைந்த தா.ஜெயராஜன் (63)  அவர்களைச் சந்தித்தோம். "பிராமணன் என்பதே கிடையாதே, இங்கு ஒருவராவது பிராமணராக  இருக்கிறார்களா என்பதே என் கேள்வி. பிரம்மன் நெற்றியில் பிறந்தோம் என அடிக்கடி சொல்கிறார்களே,  அப்படி என்றால் உங்களுக்கு அம்மா, அப்பா இல்லையா ?  பெண்களை பஞ்சமன் மற்றும் தாழ்த்தப்பட்டவருக்குக் கீழாக ஆறாவது இடத்தில் வைத்துள்ளீர்கள். அப்படி என்றால் அப்பெண் பிராமணாள் இல்லை.  பிராமணாள் இல்லாத பெண்ணோடு வாழும் நீங்கள் எப்படி பிராமணராக இருக்க முடியும் ? பிராமணாள் என்றால் வெங்காயம், உப்பு உள்ளிட்ட உணர்வுகளைத் தூண்டும் எப்பொருளும் சேர்க்காமல், தினமும்  5 குவளம் மட்டுமே  உணவு செய்ய வேண்டும். அதில் ஒரு குவளை பட்சிக்கும், இன்னொரு குவளை பிராணிக்கும், மீதம் 3 குவளை  தனக்கும்  வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்த வேலைக்கென்று உணவை சேமித்து வைக்கக் கூடாது. அதேபோல் சத்திரியன், வைசியன், சூத்திரன் ஆகிய மூவருக்காகவும் மட்டுமே பிரார்த்தனை செய்ய வேண்டும், தனக்காகப் பிரார்த்தனைச் செய்து கொள்ளக் கூடாது. இங்கு அப்படியா நடக்கிறது? வைசியன் என்றால் யார் ?  வியாபாரி. அதாவது வியாபாரம் செய்பவன் வைசியன்.  நீங்கள் ஹோட்டல் வியாபாரம் செய்க்ரீர்கள்...நான் கேட்கிறேன் , நீங்கள்  வைசியரா? பிராமணரா?. சரி ! அதுபோகட்டும். உங்கள் கடையில் சமைப்பவர் யார் ? சூத்திரர். சாப்பிடுபவர் யார் ? சூத்திரர். பிறகு எதற்கு பெயரில் மட்டும் "பிராமணாள் கபே ?" என நெற்றியில்  திலகமிட்டவாறே பேசி முடித்தார் தா.ஜெயராஜன்.

அவரைத் தொடர்ந்து மு.கருணாநிதி (25) என்ற இளைஞரைக் கேட்ட போது, தான்  எம்.பி.ஏ., எம்.எஸ்.டபுள்யு முடித்திருப்பதாகக் கூறினார். "வெள்ளைகாரன்  இந்த நாட்டை விட்டு போகக் கூடாது எனச் சொன்னவர்
பெரியார்" என பிராமணர்கள் ஒரு துண்டறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள் வெள்ளைக்காரன் தானே உணவு, மருத்துவம், கல்வி எல்லாம் கொடுத்தனர்.  நீங்களோ  அடிமை வாழ்வை மட்டும் தானே கொடுத்தீர்கள்", எனச் சுருக்கமாக முடித்தார் .

மூன்றாவதாக, சிறீரங்கம் காளியம்மன் கோயில்  நிர்வாகியும், டிவிஎஸ் அய்யங்கார் நிறுவனத்தில் 13 ஆண்டுகள் வேலை செய்தவருமான மா.முத்துக்கண்ணன் (80) நம்மிடையே பேசினார். "நான் திருச்சி டிவிஎஸ் நிறுவனத்தில்தான் வேலை பார்த்தேன். நல்ல சம்பளம், நிறைவான வேலை. அதற்காக அவர்கள் செய்யும் தவறுகளை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் ?  நான் சாதரணமாகவே கொஞ்சம் புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளவன். அதில் பிராமணன்  என்ற சொல்லுக்கு உயர்ந்த ரகம் என்பதாகப் பொருள் உள்ளது. நீ உயர்ந்த ரகம் என்றால் நான்  யார் என்ற கேள்வி எனக்கு இயல்பாகவே எழும்.  பிறகு எப்படி பிராமணாள் கபே என்பதை ஏற்க முடியும் ?  நம்மைவிட அவர்கள் உயர்ந்தவர்கள்  என்பதை என்னால் ஏற்க முடியாது. நாம் செய்யும் ஒரு வேலையையாவது அவர்களால் செய்ய முடியுமா? சிறீரங்கத்தில்  அய்யங்கார், அய்யர்  உள்ளிட்ட வேறு சில பிரிவுகளும் உள்ளனர் . எனினும் அய்யங்கார் ஆதிக்கமே அதிகம். அவர்கள் நிறைய பிரிவுகளில் இருந்தாலும், நம்மை இழிவுபடுத்தும்போது மட்டும் பிராமணர்களாகச் சேர்ந்து கொள்கிறார்கள்" என அழகுக் கூறினார்.

அவரைத் தொடர்ந்து ஒலி ஒளி அமைப்பாளர் கலியபெருமாள் (44) என்பவர் கூறும்போது, பிராமணர் என்ற வார்த்தை தமிழர்களை இழிவுபடுத்துவதாகச் சொல்கிறார்கள். அப்படி என்றால் அவர்கள் கடைக்கு நாம் போகாமல் இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் தங்கள் பெயரை மாற்றிக் கொள்வார்கள்" என்று கூறினார்.

தேநீர் கடை வைத்திருக்கும் கலைவாணன் (35) என்ன சொல்கிறார் பார்ப்போம். "பொதுவாகப் பார்த்த போது பிராமணாள் என்பது எனக்குப் பிரச்சினையாகத் தெரியவில்லை. அவர்கள் கடைக்கு அவர்கள் பெயர்
வைத்திருக்கிறார்கள் என்றே கருதினேன். ஆனால் பிராமணாள்  என்பதற்குப் பொருள் தெரிந்த பிறகு, என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பிராமணாள் என்பதை ஜாதிப் பெயராகவே இவ்வளவு நாள் கருதி வந்தேன்", என மனதில்பட்டதைப்  பளிச்சென்று கூறினார்.

ரைஸ்மில் ஊழியர் செல்வராஜ் (58) என்ன சொல்கிறார்?   "எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அதுதான்  என் ஆசை.  பிராமணாள் எனப் பெயர் வைத்துப் பிரச்சினை செய்ய வேண்டாம் என்பதே என் கருத்து. சைவ உணவகம் என்று வைத்தாலே போதுமே? உயிர்களைக் கொள்ளக் கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் சைவம் சாப்பிடுகிறோம் என்கிறார்கள். அய்ந்தறிவு உயிர்களைக் கூடக் கொள்ளக் கூடாது எனக் கருதும் அவர்கள், சக மனிதர்களை  இழிவுபடுத்துவது எந்த விதத்தில் நியாயம்? அய்யர் என்றால் சுத்தமானவர் என்கிறார்கள். பிறகு நாங்கள் எல்லாம் அசுத்தமானவர்களா?  சமுதாயத்தில் எல்லோரும் மனிதர்கள் என்ற நிலை வர வேண்டும் என செல்வராஜ்  தன் ஆசையை வெளிப்படுத்தினார்.

அதேபோல வெற்றிலை வியாபாரி தயாநிதி (38) கூறுகையில், "அந்தப் பெயரில் அவுங்க பெரியவுங்க, நாம தாழ்ந்தவுங்க என இருப்பதாகச் சொல்கிறார்கள். இது தொடர்பா பழைய விசயங்களும் கேள்விப்பட்டிருக்கிறேன்.  ஏற்கனவே நடந்ததிலும், இப்போது நடப்பதிலும்  ஏதோ பொருள் உள்ளதாகவே கருதிகிறேன் என்றார். 



இறுதியாக ஒருவரை நாம் தொடர்பு கொண்டோம். அவர் பெயர் வீரராகவன். வயது 50. பெயரைப் படித்ததும் அய்யராக இருப்பாரோ என நீங்கள் எண்ணக்கூடும்? அப்படியெனில்  உங்கள் எண்ணம் சரிதான். தமிழர்களாகப் பார்த்து மட்டும் ஏன் கேட்க வேண்டும் ? அவர்களில் ஒருவரைக் கேட்கலாமே என நினைத்த  போது  நமக்குக் கிடைத்தவர் வீரராகவன். இப்போது அவரைப்  பேச விடுவோம்."தொழில் நிலையங்களில் பிராமணர் என்று சொல் பயன்படுத்துவது மறைந்து போன ஒன்று. பொது மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தவும், சிறீரங்கத்தில் வாழும் எங்களுக்குப் பிரச்சினை உண்டாக்கவும் செய்த செயலாகவே இதனை நான் பார்க்கிறேன்.
இதையே தி.மு.க ஆட்சியில் செய்திருப்பார்களா ? அ.தி.மு.க ஆட்சி வந்ததும் செய்கிறார்கள். உணர்வு என்பது எப்போதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். ஆட்சிக்குத் தகுந்தார் போல மாறக்கூடாது.   நான்  கடை உரிமையாளர் மணிகண்டனிடம் நேரடியாகவே இதனைத் தெரிவித்தேன்.



தமிழர்களுக்குப் பெரியார் பெற்றுத் தந்த  பல்வேறு  உரிமைகளை நாங்களும்  அனுபவிக்கிறோம். பெரியாரிடம் நாங்கள் ஏற்காதது இரண்டு. ஒன்று கடவுள் மறுப்பு, இன்னொன்று ஜாதி மறுப்பு. ஒரு காலத்தில் கணவன் இறந்ததும், மனைவிக்கு மொட்டை அடிப்பார்கள்.  "மொட்டைப் பாப்பாத்தி" என்ற சொல் கூட இருந்தது. ஆனால் இன்றைக்கு யார் மொட்டை அடிக்கிறார்கள்?  மொட்டை அடிக்காமல் இருப்பது மட்டுமல்ல, பூ வைத்துக் கொள்கிறார்கள், மூக்குத்தி அணிந்து கொள்கிறார்கள், மறுமணம் செய்து கொள்கிறார்கள்... இந்த வாய்ப்பும்,  மகிழ்ச்சியும் எங்களுக்கு எப்படிக் கிடைத்தது ? பெரியார் தானே  காரணம். இதை வெளியில் சொல்வதற்குத் தயங்கலாம். அதற்காக  உண்மையை மறைத்துவிட முடியாதே !



சிறீரங்கத்தில் அய்யர், அய்யங்கார்கள் எத்தனையோ பேர் உணவகம் வைத்திருக்கிறார்கள். ஆனால் இப்படி யாரும் பெயர் வைக்கவில்லையே? அதேநேரம் நேரம் உள்ளூரில் இருக்கும் பெரும்பாலான நாங்கள் இதனை விரும்பவில்லை. அதற்குச் சான்றாகவும் ஒன்றை நான் சொல்வேன். கடந்த 04.11.2012 அன்று  சிறீரங்கத்தில் நடைபெற்ற பிராமணர் சங்க உண்ணாவிரதத்தில், சிறீரங்கத்தைச் சேர்ந்தவர்கள் மூன்று பேர் மட்டுமே நேரடியாகக் கலந்து கொண்டார்கள்.  எனவே இந்தப் பெயர் வைத்ததில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதைச் தைரியமாகச் சொல்வேன். இன்னும் சொல்லப் போனால் ஜாதிய உணர்வுக்குக் கூட நான் தகுதியானவன் இல்லை.   பிராமணன் என்றால் வேதம் படித்திருக்க வேண்டும் உள்ளிட்ட ஏகப்பட்ட நிபந்தனைகள் உள்ளன. அதில் எந்த ஒன்றையும் நான் செய்யவில்லை. பிறகு எப்படி பிராமணன் என்று சொல்லிக் கொள்வேன் ? என் மனதுக்குப்பட்ட நியாயங்களை நீண்ட நாட்களாகவே நான் ஒப்புக் கொண்டு வருகிறேன்," என நீண்ட விளக்கம் கொடுத்தார்.


ஆக இந்தக் கருத்துகளின் வாயிலாக பொதுவான தமிழர்களும், கணிசமான  பார்ப்பனர்களும் கூட  இதை விரும்பவில்லை எனத் தெரிய வருகிறது.  ஆக ஏதோ  ஒரு காரணத்தை முன்னிட்டு, திட்டமிட்டு செய்வதாகவே  நாம் கருதமுடிகிறது. அவர்களால் முடிகிறபோது, அதை வெல்வதற்கு நம்மால் நிச்சயம் முடியும் என்பதையும்  அவர்கள் அறிவர்.

தமிழ்நாட்டின் பிற பகுதித்  தோழர்களுக்கும், சிறீரங்கம் போன்ற பகுதித் தோழர்களுக்கும்   உள்ள   வித்தியாசங்களை நாம் அறிய வேண்டியிருக்கிறது. தலையில் உச்சுக்குடிமியுடன், பஞ்சக்கச்சம் கட்டிக் கொண்டு, பூணூல் மேனியாய் போய்  வருபவர்களை பிற பகுதிகளில் ஒன்றிரண்டுதான் நாம் காண முடியும். ஆனால் சிறீரங்கம் பகுதிகளில்  நூற்றுக்கணக்கில் காணலாம். தொழிற்சாலையில் வேலை முடித்துப் போய் வருவதைப் போல, ரெங்கநாதர் கோவிலுக்குள்  போவதுமாக வருவதும் இருப்பார்கள்.  அதிகாரம், ஆதிக்கம் இவைகளைக் கொண்டு  என்னென்னமோ செய்யப் பார்க்கிறார்கள் சிறீரங்கத்துப் பார்ப்பனர்கள். ஆனாலும் நமது சிறீரங்கம் தோழர்கள் எதையும் விடுவதாய் இல்லை. அவர்களிடம்  அய்யா சிலை உண்டு,  படிப்பகம் உண்டு,  இயக்க அலுவலகம் உண்டு,  அடிக்கடி கூட்டம் போடும் ஆற்றல் உண்டு.  மொத்தத்தில் இனமானம் காக்கும் போரில் அவர்களுக்குரிய சவால்களை  லாவகமாக சமாளித்து, தொடர் சாதனை படைத்து வருகிறார்கள் ! 


                                                                                                                          வி.சி.வில்வம் 

No comments:

Post a Comment