Sunday, January 20, 2013

கிளம்பிட்டாங்கய்யா... கிளம்பிட்டாங்க...

                                கிளம்பிட்டாங்கய்யா... கிளம்பிட்டாங்க...


திருச்சி மத்தியப் பேருந்து நிலையம். ஒரே கூட்டமாக இருந்தது. தலையா, கடல் அலையா என நானே வசனம் பேசிக் கொண்டேன். என்ன ஆச்சு இவர்களுக்கு? ஏன் ஒரே இடத்தில் கூடியிருக்கிறார்கள்...? கோக-கோலா, பெப்சியில் நஞ்சிருப்பதை எதிர்த்து நெஞ்சுயர்த்தும் போராட்டமா? அல்லது இட ஒதுக்கீட்டை மறு பேச்சின்றி அமுல்படுத்தக்கோரும் போராட்டமா? அல்லது வேறு என்னதான் போராட்டம்? எதற்குத்தான் கூடியுள்ளார்கள்? 

சதா கேள்வியே கேட்டுக் கொண்டிராமல், சற்று அருகில் போய் பார்த்தால்தான் என்ன? என என் சிந்தனை என்னை உசுப் பேற்றியது. நானும் என் சிந்தனைக்குக் கட்டுப்பட்டு (நாம் தாம் சாமிக்குக் கட்டுப் படாத அடங்காப்பிடாரிகளாச்சே!) அருகில் சென்றேன். காவி வேட்டியும், காவி சேலையும், காவி பெர்முடாசுமாக (இளைஞர் சாமிகள்) குழுமியிருந்தனர். என்னங்க எல்லோரும் எங்க போறீங்க? என்று சாதாரணமாகக் கேட்டேன். நாம பாட்டுக்கு நக்கலா கேட்டு, அது சாமிக் குத்தம் ஆயிடுச்சுண்ணா? அதற்கு ஒரு பாவி சொன்னார். (குறிப்பு : பாவி என்பதை சாமி என்று திருத்தி வாசிக்கவும். தவறுக்கு வருந்தவில்லை) நாங்கள் வேளாங்கண்ணி போறோம், அடுத்த வாரம் கொடியேற்றம் நடக்குது என்றார். அதுதான் போன வாரமே கொடி ஏற்றியாச்சே, இப்ப என்ன  வாம்? என்றேன். யோவ்! போன வாரம் ஏத்தினது ஆகஸ்டு --15 சுதந்திரக் கொடி, இப்ப ஏத்தப் போறது வேளாங்கண்ணி மாதா கொடி என்றார். 

அப்ப வேளாங்கண்ணி விழாவிற்குத்தான் கூட்டம் கூட்டமா நிக்கிறாங்களா? நான் கூட ஏதோ போராட்டம் அது இதுன்னு தப்பா நினைக்சுட்டேன். என் நினைப்புக்கும், இவுங்கப் பொழப்புக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையோ சரி... சரி... பேருந்துப் பிடித்து ஊர் போற வேலையைப் பார்ப்போம் என்ற முடிவுக்கு வந்தேன். அப்பொழுது ஒரு நண்பர் அருகில் வந்து, அண்ணே! இங்க என்ன ஒரே கூட்டமா இருக்கு எனக் கேட்டார். கிளம்பிட்டாங்கய்யா... கிளம்பிட்டாங்க... என்றேன். ஏங்க இப்படிக் கோபப்படுறீங்க? என்றார். நான் உங்களைச் சொல்லலை, இவுங்க எல் லோரும் வேளாங்கண்ணி போறாங்கண்ணு சொல்ல வந்தேன். அப்படியாண்ணே! நீங்களும் போறீங்களா எனக் கேட்டார். சரியாப் போச்சுப்போ! இனி இங்க நிற்கக் கூடாது, உடனே பேருந்தில் இடம் பிடித்தாக வேண்டும். சரி இவ்வளவுக் கூட்டமா இருக்கே, பேருந்தில் உட்கார இடம் கிடைக்காதோ என அருகில் இருந்த வரைக் கேட்டேன். அவனவன் வேளாங்கண்ணிக்குத் தொங்கிட்டுப் போறான், இவுங்களுக்கு இடம் வேணூமாமில்ல இடம் என நக்கல் பேச்சு பேசினார். பக்தர்கள் அந்தரத்தில் தொங்கிட்டுப் போகலாம். அவர்களுக்கு ஒரு விபத்து என்றால் பரலோகத்திலிருந்து வந்து இயேசு  காப்பாற்றுவார். நமக்கு யாரு இருக்கா? எனவே பொறுமை காத்து நின்றேன்.

காட்சி - 2

அப்பாடா! ஒரு வழியா பேருந்தில் ஏறி இடம் பிடிச்சாச்சு. நீண்ட நேரம் பேருந்து நிலையத்தில் நின்றதால் கால் வலித்தது. பயணச்சீட்டை வாங்கிவிட்டு கொஞ்சம் துங்கலாம் என்று நினைத்தேன். (பயணச் சீட்டு வாங்காமல் துங்கினால் நடத்துனர் ஏதாவது நினைப்பாரல்லவா?) பேருந்தில் ஒரே கூட்டம். சத்தமும் அதிகமாக இருந் தது. என் அருகிலும், சுற்றிலும் ஒரே பாவிகள் கூட்டம். பேருந்தில் அய்ந்து, ஆறு பேர்தான் அப்பாவிகள் இருப்போம். நல்ல களைப்பாக இருந்ததால் எப்போது துங்கினேன் என்று தெரியவில்லை. திடீரென கண் விழித்துப் பார்த்த போது, துவாக்குடி வந்திருந்தது. எனக்கோ கோபம் வந்துவிட்டது. காலை 8 மணிக்குத் திருச்சி யில் புறப்பட்ட பேருந்து 10 மணிக்குத்தான் துவாக்குடி வந்துள்ளது. நானோ நாகப் பட்டினம் போயாக வேண்டும், நிறைய வேலை இருக்கிறது. பேருந்து ஏன் இவ்வளவு மெதுவாகச் செல்கிறது என முன்னாடி கண்ணாடி வழியே பார்க்கிறேன். சாலையின் இருபுறமும் மக்கள் சாரை சாரையாக நடந்துச் செல்கின்றனர். 

வேகாத வெயிலில் வெந்து நடந்து போகிறார்கள்... எங்கே போகிறார்கள் எனக்கு உடனே தெரிந்தாக வேண்டும், இல்லாவிட்டால் தொப்பை வெடித்துவிடும். முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு, அருகிலிருந்த பாவியைக் கேட்டேன். ஏன் இந்த மக்கள் சாலையில் நடந்து போறாங்க-? -அவங்க வேளாங்கண்ணி போறாங்க என்றார். அப்ப நீங்க எங்க போறீங்க...? - நாங்களும் வேளாங்கண்ணி தான் போறோம். அவங்க வேளாங் கண்ணிக்கு எதுக்குப் போறாங்க? மாதாவை வழிபட. சரி.... நீங்க எதுக்குப் போறீங்க? நாங்களும் வழிபடத்தான். (ம்ம்..... அதாவது யோசிக்கிறேன்னு அர்த்தம்) எனக்கு எங்கோ இடிக்குதே என்றேன் உங்களுக்கு எங்கேயும் இடிக்கல, என்னைத்தான் நீங்க இடிக்கிறீங்க. கொஞ்சம் தள்ளி உக்காருங்க என்றார். மன்னிக்கணும் பாவி, தள்ளி இருக்கேன் என்றேன். யாரைப் பார்த்துப் பாவின்னு சொன்னே! என்று குதித்துவிட்டார். 

நான் ஒருத்தன் திருச்சியிலிருந்து மனசுக்குள்ளேயே பாவி, பாவின்னு சொன்னவன், உணர்ச்சி வசப்பட்டு இவருகிட்ட உளறிட்டேன். இருந்தாலும் சமாளிக்கணுமே! அதாவதுங்க...நானா உங்களைப் பாவின்னு சொல்லலை. பாதர்ஸ் முன்மொழிவதை நான் வழிமொழிஞ்சேன், அவ்வளவுதான். அவரும் கொஞ்சம் சமாதானமானார். மீண்டும் பேச்சுத் தொடங்கியது, நீங்களும் மாதாவை வழிபடப் போறீங்க... அவங்களும் மாதாவை வழிபடப் போறாங்க, உங்க நோக்கமும். அவுங்க நோக்கமும் ஒரே மாதிரிதான் இருக்கு. அப்ப நீங்க ஏன் பேருந்தில் போறீங்க? அவங்க ஏன் நடந்து போறாங்க? எனக் கேட்டேன். அவங்களுக்கு ஏதாவது வேண்டுதல் இருக்கும், நடக்குறாங்க என்றார். அப்ப உங்களுக்கு எதுவும் வேண்டுதல் இல்லையா? எங்களுக்கும் வேண்டுதல் இருக்கே! அப்ப நீங்க ஏன் பேருந்தில் போறீங்க? யோவ்! அது அவங்க விருப்பம். இது எங்க விருப்பம், உனக்கு என்னய்யா வந்துச்சு... எனக் கத்திவிட்டார். இப்படிச் சொன்னா எப்படிண்ணே?

இப்ப உங்க சொந்த ஊர் திருச்சி, சரி! அடுத்த வாரம் தஞ்சாவூர்ல ஒரு திருமணம். உங்க உறவினர்கள் ஒரு 10 பேர் போறீங்க, எல்லோரும் நடந்தே போவீங்களா? என்றேன். என்னய்யா கேள்வி கேக்குற...? நடந்து போறதுக்கு நாங்க என்ன கூமுட்டையா என்றார். 50கி.மீ. துரமுள்ள திருச்சிக்கும். தஞ்சாவூருக்கும் நடப்பீங்களான்னு கேட்டால், நாங்க என்ன கூமுட்டையான்னு கேக்குறீங்க... 150 கி.மீ. துரமுள்ள திருச்சிக் கும் வேளாங்கண்ணிக்கும் நடக்கிறாங்களே! அதுக்குப் பேரு என்ன அய்யா என்றேன். யோவ்! அது மாதாவை வழிபட வேண்டிக் கிட்டு, பயபக்தியா நடக்குறது. அப்ப உங் களுக்கு வேண்டுதல், பயபக்தி இல்லையா...? எங்களுக்கும் இருக்கே... அப்ப நீங்க ஏன் நடக்கல என்றேன். அய்யோ... தாங்க முடியலையே! இந்த ஆளை வெளியேத்துங்களே என அலறினார். பேருந்தில் எல்லோரும் என்னை ஒரு மாதிரியாகப் பார்க்க, நான் சன்னல் வழியே பார்த்தேன். வல்லம் வந்திருந்தது. சரி! நாம பேசாம தஞ்சாவூர் வரை நடந்தே போவோம் என பேருந்திலிருந்து இறங்கிவிட்டேன்.
இறுதிக் காட்சி

நான் பாட்டுக்கு சாலையில் சும்மா நடந்து போனேன், ஒருவர் வந்து, அண்ணே! ஏன் நடந்து போறீங்க என்றார்? நான் எதுக்கோ போவேன், உனக்கு என்னய்யா என்றேன்? அதுக்கு இல்லைண்ணே! பேண்டு போட்டுகிட்டு நடக்குறீங்களே, அதான் கேட்டேன். காவிச்சாமி, கண்ணுச் சாமி, (இவரு குருடர்களுக்குப் பார்வை தர்றவர்) கை கால் சாமி (இவரு நுடவர் களை நடக்க வைப்பவர்) எனப் பல சாமிகள் இருப்பது மாதிரி, நான் பேண்ட் சாமின்னு வச்சுக்க போ என்றேன். ஏன்ணே! இப்படி கிறுத்துவமா பேசிறீங்க என்றார். ஆமா! நீங்க மட்டும் கிறிஸ்தவம் பேசலாம், நாங்க கிறுத்துவம் பேசக் கூடாதோ?  சரி.. சரி.. நீங்க எங்கதான் போறீங்கன்னு சொல்லவே இல்லையே என்றார். நான் தஞ்சாவூர் போறேன். என்னண்ணே விளை யாடுறீங்களா ? 100 பேருந்து போகுது. இப்படி நடந்து போறீங்களே என்றார். ஆமா! நீங்க எங்க போறீங்க? நாங்க வேளாங்கண்ணி போறோம். ஏன் உங்களுக்குப் பேருந்தே இல்லையா? அப்படியெல்லாம் பேசாதீங்க சாமி, நாங்க மாதாவுக்கு வேண்டிக்கிட்டு நடக்கிறோம்.

அப்ப ரொம்பப் பேரு பேருந்துல போராங்களே, அவங்க? அவுங்களுக்கு என்ன சாமி, அவுங்க வசதியானவங்க, பஸ்ல வாராங்க. நாங்க ஏழைங்க... நடக்கிறோம். எத்தனை வருசமா நடக்குறீங்க 40 வருசமா நடக்கு றோம். அப்ப 40 வருசமா ஏழையாகவே இருக்கீங்க அப்படித்தானே. சரி! இன்னும் எத்தனை வருசம் இப்படியே நடப்பீங்க? சாவுற வரைக்கும் நடப்போம். அப்ப சாகிற வரை ஏழையாகவே இருக்கப் போறீங்களா என்றேன். ஏங்க இப்படியெல்லாம் பேசுறீங்க வேறெப்படி பேசச் சொல்றீங்க.. .சொல்லுங்க?

இங்க நடக்குற அத்தனை பேரும் அன்றாடம் வேலைக்குப் போனால்தான் சாப்பாடு, ஒரு வாரம் வர்ற வருமானம் போச்சு. நடைப் பயணத்திற்குத் தேவையான பணத்தை வட்டிக்குக் கடன் வாங்கி யிருப்பீங்க. இனிமேல் வேலைக்குப் போய் அன்றாடம் வரும் வருமானத்தில் வயிற்றுக்கு சாப்பிடுவீங்களா... வட்டிக்கு அழுவீங்களா... இந்த வட்டி போடுற குட்டி களையே சமாளிக்கத் திணறும் நிலையில், உங்கள்  குழந்தைக் குட்டிகளுக்கு நீங்க என்ன செய்துவிட முடியும்? இந்தக் கடனை அடைக்கிறதுக்குள்ள நல்ல வெள்ளி, கெட்ட வெள்ளி, இயேசு பிறப்பு, இயேசு இறப்பு, ஆணி அறையப்பட்டது, ஸ்குரு கழற்றப்பட்டது என அடுத்தடுத்த நிகழ்ச்சிகளும், விழாக்களும் உங்கள் விலா எலும்பை நொறுக்கிவிடுமே... நீங்க சொல்றதுல நியாயம் இருக்குண்ணே, இருந்தாலும் எல்லாம் ஒரு நம்பிக்கைதானே...

என்ன நம்பிக்கை? பொல்லாத நம்பிக்கை... நீங்க 40 வருசமா நடக்குறீங்க, உங்க அப்பா 50 வருசம் நடந்தாரு, உங்க தாத்தா 80 வருசம். அதுக்கும் முன்னால உங்க தாத்தா, கொள்ளு தாத்தான்னு 100, 200 வருசமா நடக்குறீங்க...? என்ன பலனைக் கண்டீங்க? இருக்கிறதெல்லாம் வெளியில போச்சே தவிர, உள்ள என்ன வந்துச்சு சொல்லுங்க பார்ப்போம்? உங்க தாத்தா கடனை உங்க அப்பா அடைச்சு,  உங்க அப்பா கடனை நீங்க அடைச்சு, உங்க பிள்ளைக்கு நீங்க கடனைச் சேர்த்து வைக்குறீங்க..  சல்லிக்காசுக்குப் பயனில்லாவிட்டாலும், பலநூறு வருசமா நம்பி நடக்குறீங்க பாருங்க... உங்க வலிமைக்கு முன்னால அம்மன் முறுக்குக் கம்பிகளெல்லாம் தோத்துப் போச்சு போங்க...! 

இனிமேலாவது உழைக்கணும்னு நம்பிக்கை வைங்க, உயரணும்னு நம்பிக்கை வைங்க, வாழ்க்கையில சிறக்கணும்னு நம்பிக்கை வைங்க...! 100, 200  வருசமா எது எதுக்கோ நம்பிக்கை வச்ச நீங்க ஒரு 10 வருசத்திற்கு இதுல மட்டும் நம்பிக்கை வைங்க!  நிச்சயம் ஜெயிப்பீங்க! சந்தோசமா இருப்பீங்க!  போய்ட்டு வரவா !
 வி.சி. வில்வம்


.

No comments:

Post a Comment