Sunday, January 20, 2013

தென்றல் வீசிய மன்றல் !

                                                        தென்றல் வீசிய மன்றல் !

 
"மறக்க முடியாத நாள்!" என்பார்களே, அப்படித்தான் இருந்தது 25.11.2012. இதே மாதத்தில் தான் 13.11.2012 ஆம் தேதியும்  வந்து போனது. அன்றுதான் நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம் என்றார்கள் சில தமிழர்கள். காரணம், அன்றுதான் தீபாவளியாம்.  தமிழர்களே! வழி கிடைத்தால் மகிழ லாம்; வலியை எப்படிக் கொண்டாட முடிகிறது? சராசரி வாழ்வுக்கும் வழியில்லாத நிலையில் கடன் பெற்று, சுமை சுமந்து, நிமிரவே முடியாத வலியிலும் எப்படி  உங்களால் சிரிக்கவும், மகிழவும் முடிகிறது?

இதோ... அதே நவம்பரில் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் என்ன செய்தது தெரியுமா? உங்களுக்கு நல் வழி காட்டி,  உள் வலிக்கு மருந்து தடவியது. ஆம் தமிழர்களே! உங்கள் சகோதர, சகோதரிகளை அக்கறையோடு பார்த்தது.  திருமணம் முடியாமலும், விவாகரத்து முடிந்தும், துணைவரை இழந்தும், உடலுறுப்பு களைத் துறந்துமாக அல்லல்படும் அவர்கள் வாழ்வு பூத்துக் குலுங்க, தேதி குறித்துக் காத்துக் கிடந்தது மன்றல்!  காரணம், உங்கள் வாழ்வில் வீச வேண்டும் தென்றல்! "மகிழ்வித்து மகிழ்" என்பார்கள்! பெரியார் கொள்கை முழுவதுமே அதுதான் தமிழர்களே!

ஜாதி மறுத்துத் தமிழினம் தழைக்கவும், மதம் மறுத்து மனிதம் மலரவும், மணமுறிவுகளுக்கு மனச் செறிவுக் கூட்டவும், விதவை எனும் சொல்லின் வேர்ச் சொல் பிடுங்கவும், மாற்றுத் திறனாளிகளை மற்றுமொரு திறனாளிகளாக உருவாக்கவும் உருவானதே இந்த மன்றல். இது ஓர் ஜாதி மறுப்பு இணை தேடல் பெருவிழா! அங்கொன்றும், இங்கொன்றுமாக  வட மாவட்டங்களில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நிகழ்ந்துள்ளன. தமிழ்நாட்டை  ஒருங்கிணைத்த முதல் நிகழ்ச்சி இதுதான். வாழ்க்கைத் துணைவரைத் தேடி சற்றொப்ப 300 பேர்கள்  பதிவு செய்ய, அவர்களுக்குத் துணையாக 600 பேர்கள் பங்கேற்க, ஆக மொத்தம் ஆயிரம் மனிதர்களை   அரங்கத்தில் காண முடிந்தது. அவர்களில் தமிழ்நாடு கடந்து வந்தவர்களும் உண்டு.

தன்னிரு விழிகளை முற்றும் இழந்தவர், வாய் பேச முடியாதவர், இரண்டு கால்கள் இல்லாதவர், 18 வயதில் துணைவரை  இழந்தவர் - பிரிந்தவர், தன் 80 வயதிற்குத் துணைத் தேடியவர் எனப் பலரையும் பார்க்க முடிந்தது.  "எப்பொழுதும் பார்ப்பனர்களை திட்டுகிறீர்கள்?" என அறியாமையில் சில தமிழர்கள் கேட்பதுண்டு.  இதோ... அவர்களுக்கு இந்த வரிகள். துணை தேடி வந்தவர்களில் தமிழர்கள் மட்டுமல்ல, பார்ப்பனர்களும்தான்!  தங்கள் ஜாதி உயர்ந்தது என்றாலும், அவர்கள் ஜாதியிலேயே அவர்களுக்குத் துணை கிடைக்கவில்லை.  உதவிகள் மறுக்கப்பட்டுள்ளன. எத்தனை நாள் பொறுப்பது? தன் சுயமரியாதைக் காக்க, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தை நோக்கினர். 

பெரியார் கொள்கை என்பது கடினமானது அல்ல. உங்களுக்கும் சுகவாழ்வு, எங்களுக்கும் சுகவாழ்வு, எல்லோருக்கும் சுயமரியாதை வாழ்வு! அவ்வளவுதான். இதைத் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  புரிந்து கொள்ளவில்லை என்கிற கோபம் எங்களுக்கு இல்லை;  ஆனால் புரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவல் இருக்கிறது. அதற்கான காரணங்களைக் கூட இப்படி எளிதாகக் கூறிட முடியும். கடவுளை நம்பாதீர்கள் என்றோம்,  நம்பினீர்கள். ஜாதகம் பார்க்க வேண்டாம் என்றோம், பார்த்தீர்கள். மொத்தத்தில் மூடநம்பிக்கைகள் ஒழியுங்கள் என்றோம், அதில்தான் நம்பிக்கைக் கொண்டீர்கள். இதன் விளைவுகள் தானே  நம் எல்லா பாதிப்புகளுக்கும் காரணம். 

மாறாக மனிதர்களிடம் அன்பு செலுத்துங்கள், விட்டுக் கொடுங்கள், மனம்விட்டுப் பேசுங்கள், உதவிக் கொள்ளுங்கள் என்பதுதானே பெரியார் கொள்கை. இதை ஏற்காமல் போனால் வாழ்வில்  இழப்புகள் நேரும் என்றோம். ஏற்பதற்குத் தயங்குகிறீர்கள்; இழப்புகளைத் தாங்குகிறீர்கள்! உங்களுக்கு ஓர் இழப்பு என்றால், "நாங்கள் முன்பே சொன்னோம் கேட்டீர்களா?" என நாங்கள் கேட்பதில்லை. காரணம் பெரியார் எங்களுக்கு அப்படி சொல்லிக் கொடுக்கவில்லை. சகமனிதன் துன்பப்படும் போது, நீயும் துன்பப்படு என்றவர்தான் பெரியார்! அதனால்தான் அனைவரையும் ஒன்று திரட்டினோம்.  

எங்கள் ஒன்று திரட்டலில் ஜாதி, மதம் கிடையாது, கத்தரிக்காய், வெண்டைக்காய் கிடையாது. மனிதனாக இருக்க வேண்டிய ஒரே தகுதிதான்! அப்படித்தான் வந்து மேடை ஏறினார்கள் அனைவரும்.  இந்த நவநாகரிகக் காலத்திலும் ஜாதிச் சங்கப் பிழைப்பு மற்றும் அரசியல் பிழைப்பு நடத்துகிறவர்கள் ஜாதி  மறுத்துத் திருமணம் செய்தால் குத்துவோம், வெட்டுவோம் என்கிறார்கள். ஜாதிக்கு மாறாக  எதுவும் நடக்கக் கூடாது எனத் தீர்மானம் போடுகிறார்கள். அவர்கள் ஜாதியில் அவர்கள் அப்பாவும், தாத்தாவும் எப்படி வாழ்ந்தார்கள் எனத் தெரிந்துதான் பேசுகிறீர்களா? பிற ஜாதியை அசிங்கப்படுத்த நினைத்தால், அதைவிட கீழான உங்கள் ஜாதி அசிங்கமும் வெளியாகும் என்பதை மறந்து விடாதீர்கள். ஜாதிக்கு ஆதரவாக  என்னதான் நீங்கள் தீர்மானம் போட்டாலும், உங்களைப் பற்றியும் மக்கள் என்றோ தீர்மானித்து விட்டார்கள். 

ஜாதி மறுப்பு இணை தேடலுக்கு வந்தவர்களில் 300 பேரும் ஜாதி மறுத்துத்தான் கேட்டார்கள். இவர்கள் அனைவரும்  முற்போக்காளர் என்றோ, பெரியாரை முழுமையாக ஏற்றார்கள் என்றோ நாம் சொல்லவரவில்லை. ஆனாலும்  ஜாதியால் பாதிக்கப்பட்டுள்ளனர் அல்லது  ஜாதி மறுத்தாவது குழந்தைகளுக்கு நல்ல வாழ்க்கை ஏற்படுத்த எண்ணுகிறார்கள்.  ஆக ஜாதி என்பது தடை அல்லது தேவை யில்லை என்கிற முடிவுக்கு வருகிறார்கள். இந்த முடிவுக்கு வந்தவுடன்  அவர்களுக்கு நினைவில் வருவது பெரியார் இயக்கம்! அந்த வாய்ப்பைத் தான் இந்த இயக்கம் ஏற்படுத்திக்  கொடுத்தது, இன்னும் ஏற்படுத்திக் கொடுக்கும். 

சென்னையில் தொடங்கிய பயணம் கன்னியாகுமரி சென்று, மீண்டும் சென்னையில் தொடங்கும். டிசம்பர் 30-ல் திருச்சிராப்பள்ளியில் அடுத்த மன்றல் நிகழ்வு நடக்கவுள்ளது.ஒரு முடிவுக்கு வரும்வரை, இதற்கும் முடிவு இல்லை. சமூகத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் வேண்டுமானால் ஜாதியை ஒழிக்க வேண்டும். நம் உயிரை எடுக்கும் ஜாதியின் உயிரை எடுக்கும் வரை நாம் ஓயக்கூடாது. தொடர்ந்து ஓடுவோம்!


                                                                                                                            வி.சி.வில்வம்No comments:

Post a Comment