Friday, February 1, 2013

அன்புள்ள அப்பாக்களுக்கு !

                                                    
சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் ஆண்களின் ஆதிக்கமே மேலோங்கி இருக்கிறது. ஒரு குடும்பம் என்கிற போது ஆண் என்கிற அந்த "அப்பாக்களின்" செயல்கள்  அக்குடும்பத்தையே சிதைக்கிறது. வெளியில் சொல்ல முடியாமல் அவர்களின் மனைவிகள் வெந்துச் சாகிறார்கள்.  இவைகள் பொறுக்க முடியாமல் போகிற போதுதான் வன்முறைகளும், கொலைகளும்  தீர்வாக வந்து நிற்கின்றன.மனைவிகளுக்குக் கோபம் வராததும், அவமானமாய்த் தெரியாததும் அப்பக்களுக்குச் சாதகமாய் இருந்து வருகிறது. 


தன்னுடன் சேர்ந்து நட்பாய், துணையாய், தோழராய், எல்லாமுமாய் வாழ வந்த அந்த மனைவியை, ஒரு பொருளாய் மிருகமாய், கேவலமாய் நடத்துவது எந்த விதத்தில் நியாயம் ? நீங்கள் சிரித்தால் மனைவியும் சிரிக்க வேண்டும் ;  நீங்கள் அழுதால் அவர்களும் சேர்ந்து அழவேண்டும்! அப்பாக்களுக்குக் கோபம் வந்தால் மனைவிகள் நிலை பரிதாபம். சம்பந்தமே இல்லாத விசயங்களுக்கும் சித்திரவதைச் செய்துவிடுவார்கள்.அப்பாக்கள் முறைத்தால் மனைவிகள் தள்ளி நிற்க வேண்டும் ; சிரித்தால் அருகில் வர வேண்டும் ! அதாவது குறிப்பால் உணர்ந்து சேவை செய்ய வேண்டும். இல்லையெனில் அப்பாக்கள் குதறிவிடுவார்கள். நாய் கூட நாம் சொல்வதைச் சிலநேரம் கேட்பதில்லை. இங்கு நாய்களைவிட, தாய்களின் நிலை மோசமாய் இருப்பதாய்ச்  சேய்கள் கண்ணீர் விடுகின்றன. 

பாதிக்கும் மேற்பட்ட அப்பாக்களுக்குத் திறமைகளே இருப்பதில்லை. ஆண்  என்கின்ற ஒரே காரணத்திற்காக தேவையற்ற அதிகாரத்தைச் இச்சமூகம்  அ(ழி)ளித்து வைத்திருக்கிறது. இன்னும் தன்  உடையைத் துவைக்கத் தெரியாது,  சாப்பிட்ட தட்டை, தேநீர்க் குடித்த குவளையைக் கழுவியது கிடையாது. மனைவிகள் இறுமி, இறுமி நோய் வாய்ப்பட்டாலும் ஒரு குவளைத் தண்ணீர் கொடுத்துப் பழக்கமில்லை. ஆனால் அவர்களது வெள்ளை வேட்டிகளும், வெள்ளைச் சட்டைகளும், பொது இடங்களில் அவர்கள் பேச்சுகளும் அருமையாக இருக்கும். வீட்டில் ஒன்று, வெளியில் ஒன்று என எல்லா அப்பாக்களுக்குமே இரண்டு முகங்கள் !

சில அப்பாக்களின் அராஜகம் இது மட்டுமா ? பொது இடங்களில் பார்த்தால் தெரியும் ! அடிப்படை நாகரிகமே இன்றி, பலர் மத்தியில் மனைவிகளைக் கொத்திக் கொண்டே இருப்பார்கள். சில அப்பா விலங்குகள் பொது இடங்களில் கை நீட்டி அடித்துக் கொண்டிருக்கும். பொது ஒழுக்கம், பொது நாகரிகம் எதுவுமே தெரியாது. ஆனால் அப்பா என்கிற ஆணவம் மட்டும் அதிகம் இருக்கும்.  அப்பாக்களுக்கு வருகிற  கோபங்களில் பாதிக்கும் மேல் அர்த்தமே இருக்காது. இவர்களின் கோபங்கள் குடும்ப மகிழ்ச்சியைச் சீரழித்திருக்கிறதே  தவிர, வேறு யாதொரு பயனும் இல்லை. 


இங்கே சில அப்பாக்களுக்கு ஒன்றை நாம் சொல்ல விரும்புகிறோம் உங்கள் மனைவிகளுக்கு எல்லாம் வாழ்நாளில் ஒரு சாவு கிடையாது. உங்களால் தினமும் செத்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களோடு வாழ வந்த பெண்ணை, நெருப்பில் வேக வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்பாக்களே! கொஞ்ச நேரம் ஓரமாய் அமர்ந்து யோசித்துப் பாருங்கள். மேற்கூறிய அனைத்தும் உண்மை என்பது புரியவரும். இன்னும் சொல்லப்படாத உண்மைகள் ஏராளம் இருக்கிறது என்பதும் தெரியவரும். உங்களின் ஆதிக்கக் குணத்தை, அதிகாரக் குணத்தை மாற்றிக் கொள்ளுங்கள் உங்கள் குணங்களால் குடும்பமே அழிகிறது, குடும்ப அழிவால் சமூகம் சிதைகிறது, சமூகச் சிதைவால் இனமே பாழ்படுகிறது. ஏனெனில் தனி மனித குணங்களில்தான்  சமூக வளர்ச்சி உள்ளது.

ஆகவே மாற்றிக் கொள்ளுங்கள்.அனைத்தையும் தேடித் தேடி அழித்து விடுங்கள்.  இல்லையேல், இனிவரும் காலங்களில் எதுவும் நிகழலாம்.
"அப்பாக்கள் கைநீட்டி அடித்த போது, அந்தக் கைகள் வெட்டப்பட்டன, தேவையற்ற முறையில் திட்டிய போது நாக்குகள் அறுத்தெறியப்பட்டன  எனும் செய்திகள் வருவதற்கு முன் திருந்திக் கொல்லுங்கள; உண்மை நிலையை உணர்ந்துக் கொள்ளுங்கள் !

                                                         பேசத் தெரிந்த ஊமைகளின் சார்பாக


                                                                               வி.சி.வில்வம்

No comments:

Post a Comment