Saturday, August 9, 2014

களப்பணி பயிற்சி முகாம் !

தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில்
  13 மண்டலங்கள், 59 மாவட்டங்களுக்கு, 16 மய்யங்களில்
களப்பணி பயிற்சி முகாம் !
                                     பெருந்திரள் தோழர்கள் அணிவகுப்பு !                                                                
                                                                                                                                             
களப்பணி தோற்றம் :
தஞ்சாவூரில் 09.05.2014 அன்று நடைபெற்ற, திராவிடர் தலைமைக் கழகச் செயற்குழுக் கூட்டத்தில், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஒர் அறிவிப்பு செய்தார். புதுச்சேரி உள்ளிட்டு தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பொறுப்பாளர்களுக்கான "களப்பணி பயிற்சி முகாம்" நடத்த வேண்டும். அது நம்மை மேலும் உத்வேகம் செய்வதுடன், புதிய பரிணாமத்திற்கும் வித்திடுவதாய் அமைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆசிரியரின் விருப்பத்தை நிறைவேற்றிட தயக்கம் ஏது? சுணக்கம்தான் ஏது? உடன் களப்பணி பயிற்சிக் குழு தயாரானது. தமிழகம் முழுவதும் தேதிகள் அறிவிக்கப்பட்டன.
நாளும், தளமும் :

ஆசிரியர் அறிவித்த 15 ஆம் நாளில், அதாவது மே 24 ஆம் தேதி முதல் களப்பணி பயிற்சி முகாம் புதுச்சேரியில் தொடங்குகிறது. புதுச்சேரி, காரைக்கால் மண்டலங்கள் இப்பயிற்சியை மேற்கொள்கின்றன. தொடர்ந்து கடலூர், சிதம்பரம் மாவட்டங்கள் பங்கேற்ற பயிற்சி வகுப்பு மே 25 ஆம் தேதி வடலூரிலும்/   மதுரை மாநகர், புறநகர்,விருதுநகர் மாவட்ட வகுப்புகள் ஜூன் 7 ஆம் தேதி மதுரை பசுமலையிலும்/   திண்டுக்கல், பழனி, தேனி மாவட்டங்களுக்கு ஜூன் 8 ஆம் தேதி திண்டுக்கல் சிறுமலையிலும்/  திருவள்ளூர், காஞ்சிபுரம், அரக்கோணம், செங்கல்பட்டு, வேலூர் மாவட்ட வகுப்புகள் ஜூன் 22 இல் நெமிலியிலும்/  திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டப் பயிற்சி வகுப்பு ஜூன் 27 ஆம் நாளில் குற்றாலம் வீகேயென் மாளிகையிலும்/  சேலம், மேட்டூர், ஆத்தூர், மாவட்ட களப்பணி முகாம் ஜூலை 5 இல் சேலத்திலும்/ திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டத் தோழர்களுக்கு ஜூலை 6 ஆம் தேதி திருப்பத்தூரிலும் மிகச் சிறப்பாக நடந்தேறுகிறது. 

தொடர்ந்து கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையம், தாராபுரம், நீலகிரி மாவட்ட முகாம் ஜூலை 12 ஆம் தேதி மேட்டுப்பாளையத்திலும்/
ஈரோடு, கோபி, நாமக்கல், மாவட்டத் தோழர்களுக்கு ஜூலை 13 ஆம் தேதி ஈரோட்டிலும்/  திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம், கள்ளக்குறிச்சி, செய்யாறு, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு ஜூலை 19 ஆம் தேதி திண்டிவனத்திலும்/ வடசென்னை, தென்சென்னை, கும்மிடிப்பூண்டி,ஆவடி, தாம்பரம் மாவட்டப் பயிற்சி முகாம் ஜூலை 20 ஆம் தேதி தலைநகர் சென்னையிலும் - திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருத்துறைப்பூண்டி ஆகிய மாவட்டங்களுக்கு ஜூலை 25 இல் திருவாரூரிலும்/  காரைக்குடி, சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, அறந்தாங்கி மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு ஜூலை 26 இல் வீகெயென் மாளிகையிலும்/  திருச்சி, இலால்குடி, கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டதிற்கு ஜூலை 27 இல் திருச்சி பெரியார் கல்வி வளாகத்திலும்/ தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம் ஆகிய மாவட்டத் தோழர்களுக்கு அதே ஜூலை 27 ஆம் தேதி வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திலும் நடைபெற்று முடிந்தது.

சுழற்சியில் பயிற்சி !

திராவிடர் கழகத்தின் 13 மண்டலங்கள், 59 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலம் உள்ளிட்டு, இந்தக் களப்பணி பயிற்சி முகாம் சற்றொப்ப 2 மாதங்கள் தொடர்ந்து அதன் வீச்சை வெளிப்படுத்தி வந்துள்ளன. ஜூன் 27 மற்றும் ஜூலை 20 முறையே குற்றாலம், சென்னை ஆகிய பயிற்சி முகாம்களில் தமிழர் தலைவர் அவர்கள் பங்கேற்று அற்புதமான ஓர் வகுப்பைத் தோழர்களுக்கு எடுத்துச் சென்றார். தொடர்ந்து "கழகப் பொறுப்பாளர்களின் செயல்பாடுகள்"  என்ற தலைப்பில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்,  "இயக்கத்தில் மகளிர் பங்கு"  என்ற தலைப்பில் கழகப் பொருளாளர் பிறைநுதல் செல்வி, "பதிவேடுகள், ஆவணங்கள் பராமரிப்பு, தொழிலாளரணி விரிவாக்கம்" என்பது குறித்துச் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, "பன்முகப் பிரச்சார ஏடுகள்" தொடர்பாகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன், "பிரச்சார அணுகுமுறையும், அறிவியல் தொழில் நுட்பமும்" குறித்துப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், "இளைஞரணி, மாணவரணி கட்டமைப்பு, புதிய இடங்களில் அமைப்புகளை உருவாக்குதல் குறித்துப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், விடுதலைச் சந்தா சேர்த்தல், நன்கொடை பெறுதல் தொடர்பாய் பொதுச் செயலாளர் இரா.குணசேகரன், இடஒதுக்கீட்டின் இன்றைய நிலை, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் குறித்து கோ.கருணாநிதி ஆகியோர் ஒன்றன்பின் ஒன்றாக வகுப்புகளை எடுத்தனர்.

நோக்கமும், தாக்கமும் !
 
மொத்தம் 13 மண்டலங்களில் நடைபெற்ற இக் களப்பணி பயிற்சி முகாம்களில் குற்றாலம், சென்னை ஆகிய இடங்களில் தமிழர் தலைவர், ஆசிரியர் அவர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தார்கள். அவர்கள் ஆற்றிய உரையில், நம் இயக்கம் வேறெந்த இயக்கத்திற்கும் மற்றும்  அரசியல் அமைப்புகளுக்கும் சளைத்தது அல்ல என்பதை ஆதாரபூர்வமாக விளக்கினார்கள். புதுதில்லி தொடங்கி, தமிழ்நாட்டுக் குக்கிராமம் வரையிலான  இயக்கச் சொத்துகள் குறித்துக் குறிப்பிட்டார்கள். ஒவ்வொரு ஊரிலும் இயங்கும் நம் நூலகங்கள், படிப்பகங்கள் வேறு எவருக்குமே இல்லாதது; வேறு எங்குமே இல்லாதது என்பதை நினைவுபடுத்தினார்கள். இன்றைக்குப்  "பெரியார் உலகத்தை" உருவாக்கும் பெரும் பணியில் நாம்      இருக்கிறோம். அப்படியான நம் இயக்கச் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். தலைமையில் ஓர் அறிவிப்பு என்றால்,  இருட்டும் முன்பே கிளைக் கழகக் காதுகளுக்கு அது சென்று சேர வேண்டும். மனிதர்கள் தங்களைப் புதுப்பித்துக் கொள்வது  நித்தமும் அவசியமாகிறது என்றார் ஆசிரியர்.

சுவரெழுத்தே ஆயுத எழுத்து !
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் "கழகப் பொறுப்பாளர்களின் செயல்பாடுகள்" என்ற தலைப்பில் பேசுகையில்,  பாரதீய ஜனதா, இன்று வலுவான சக்தியாக வளர்ந்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் ஏதும் செய்ய முடியவில்லை. காரணம் பெரியார் கொள்கை!  தொடர்ந்து செயல்படுவதன் மூலம் இதனை நாம் தக்க வைக்க முடியும். விடுதலை நம் உயிர் மூச்சு என்பதை நீங்கள் அறிய வேண்டும். மாவட்ட, ஒன்றிய,நகர, கிளைக் கழகக் கூட்டங்களை 3 மாதத்திற்கு ஒருமுறையும், அதேகால இடைவெளியில் தெருமுனை மற்றும் பொதுக் கூட்டங்களை நடத்துங்கள். நிறைய புதுத் தோழர்கள் கிடைப்பார்கள். அவர்களை விடுதலை வாசகர் வட்டத்திற்குள் அழைத்து போங்கள். உடன் உறுப்பினர் சேர்க்கையைத் துவங்குங்கள். உங்களின் வணிக நிறுவனங்களில் இயக்க நூல்கள் கிடைக்கச் செய்யுங்கள். ஆண்டிற்கு நான்கு முறை இயக்கக் கொடிகளைப்  புதிப்பியுங்கள். புதிய, புதிய பகுதிகளில் படை எடுங்கள். எளிமையான மந்திரமா? தந்திரமா ? தீமிதி போன்ற போன்றவற்றை செய்து காட்டுங்கள். குறிப்பாகத் தோழர்களே ! உங்கள் ஊரில் அல்லது தெருவில் சிறு கரும்பலகை வைத்து எழுதுங்கள். அதன் பலனை வெகு சீக்கிரமே  நீங்கள் பெறுவீர்கள். அதேபோல சுவர் எழுத்தே நம் சமூகத்திற்கான ஆயுத எழுத்து என்பதை அறிந்து மறவாதீர்கள் என்று கலி.பூங்குன்றன்  பேசினார்.

மகளிரும் வெற்றியும் !
"இயக்கத்தில் மகளிர் பங்கு"  என்ற தலைப்பில் கழகப் பொருளாளர் பிறைநுதல் செல்வி அவர்கள் பேசும்போது, எந்த இயக்கத்தில் பெண்கள் பங்கு அதிகம் இருந்ததோ, அது மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இது ஓர் வரலாற்றுப் பதிவு. அவ்வகையில் மகளிரை அதிகம் முன்னிலை ஏற்ற இயக்கம் நம்முடையது. இதை அதிகமாக்க வேண்டும். ஒரு பெண் கல்வி கற்றால், அக்குடும்பமே கல்வி பெறுவதுபோல,  ஒரு மகளிர் கொள்கை ஏற்றால் அக்குடும்பமே கொள்கைக் குடும்பமாக மாறும். எனவே பெண்களுக்கு நிறைய முக்கியத்துவம் அளியுங்கள். குழந்தைகள் மற்றும் மகளிர் சந்திப்புகள் நிறைய நடக்க வேண்டும். நிகழ்ச்சிகளில் அவர்களே கடவுள் மறுப்புக் கூற வேண்டும், அவர்களே தலைமை, முன்னிலை ஏற்க வேண்டும், எல்லாமும் அவர்களாகவே இருக்க வேண்டும். இதன் மூலமே கொள்கை வாரிசுகளை நாம் எளிதில் உருவாக்க முடியும் என பிறைநுதல் செல்வி  பேசினார்.
ஆவணங்களே அளவீடு !

"பதிவேடுகள்,ஆவணங்கள் பராமரிப்பு, தொழிலாளரணி விரிவாக்கம்" என்பது குறித்துச் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்கள் பேசுகையில், இயக்க ஆவணங்கள், பதிவேடுகள் பின்பற்றுவதில் கவனம் அவசியம். இயங்குவது எவ்வளவு முக்கியமோ, அதைப் பதிவிடுவதும் மிக அவசியம். மாவட்டம், ஒன்றியம், நகரம், கிளைக்கழகம், மாணவரணி, மகளிரணி, தொழிலாளரணி, வழக்கறிஞரணி என எல்லாவற்றிற்கும் பதிவுகள் அவசியம். பொறுப்பாளர்கள் மாறும் போது, பயன்படுத்திய ஆவணங்களைப்  புதியவர்களிடம் கொடுக்க வேண்டும். தனித்தனி ஆவணங்கள் கூடாது. இயக்கக் கூட்டங்கள் முடிந்த பிறகு வரவு, செலவு ஆவணங்களைத் தலைமைக்கு அனுப்பிய வரலாறுகள் நம்மிடம் நிறைய உள்ளன. அதேபோன்று தலைமையில் இருந்து வரும் கடிதங்களை ஒரு கோப்பிலும், நீங்கள் அனுப்பும் பதில்களை மற்றொரு கோப்பிலும் பத்திரப்படுத்துங்கள். தோழர்களின் முகவரி, தொடர்பு எண்கள், மின்னஞ்சல் அனைத்தையும் ஆவணப்படுத்துங்கள். அது நம்முடைய சொத்து என்பதையும் கூடவே நினைவில் கொள்ளுங்கள் என சு.அறிவுக்கரசு  பேசினார்.

அடையாளம் அவசியம் ! 

"பன்முகப் பிரச்சார ஏடுகள்" தொடர்பாகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் அவர்கள் தம் உரையில், பெரியாரியலை வாழ்வியலாக கொண்டவர் தன் ஒவ்வொரு அசைவிலும் தம்மை அடையாளம் காட்ட வேண்டும். மக்கள்  தொடர்புகளில் நிறைய ஆர்வம் கொள்ள வேண்டும். நம் தேகத்தில், வாகனங்களில், வீட்டில் என எல்லா இடங்களிலும் நாம் யார் என்பதை அவர்களுக்கு அறிவிக்க வேண்டும். அது அய்யா கொடியாக  இருக்கலாம், அய்யா, ஆசிரியர் படமாக இருக்கலாம். எந்த நேரமும், ஏதாவது ஒரு வடிவில் மக்களுக்கான நினைவூட்டல் அவசியம். நல்ல அம்சங்கள் எதுவும் இல்லாத அரசியல் கட்சிகளில் இவ்வளவு  மக்கள் திரள் எப்படி வந்தது? "அங்கே பதவியும், பணமும் கிடைக்கிறது", என நீங்கள் சொன்னால் அதை நான் மறுப்பேன். பல இலட்ச உறுப்பினர்களில் வெகு சிலருக்கே நீங்கள் சொல்லும் சுகம் கிடைக்கிறது. மற்றவர் நிலை மிகச் சாதாரணமே. அப்படியிருக்க  குறிக்கோள், கொள்கை எதுவும் இல்லாத, சுயமரியாதை உணர்வு பெற முடியாத அந்நிலையிலிருந்து அம்மக்களை நம்மால் வெகுவாக கவர முடியும். தெருமுனை மற்றும் பொதுக் கூட்டங்கள் மூலம் எப்போதும் மக்களுடன் களத்தில் இருங்கள் என துரை.சந்திரசேகரன்  பேசினார்.

 
சிறியதாயினும் தொடர்ந்து செய்யுங்கள் !

"பிரச்சார அணுகுமுறையும், அறிவியல் தொழில் நுட்பமும்" குறித்துப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் பேசும்போது, புதிய மனிதர்களை அடையாளம் காண்பதும், நம் அருகில் இருக்கும் நண்பர்களை கைப்பிடித்து அழைத்து வருவதும் நம் முக்கிய பணி. சேலத்தில் சாமியாடி வந்த ஒரு பெண்மணி சில நாட்களாக நம் கூட்டங்களுக்கு வந்து போகிறார். தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஒரு பிச்சைக்காரர் சொன்னாராம்,"திருடர்களை உருவாக்கும் இடம் கோவில். மனிதர்களை உருவாக்கும் இடம் திராவிடர் கழகம்" என்று. இந்த வார்த்தையின் ஈர்ப்பால் நம் இயக்கத்தில் இணைந்த ஒரு தோழர் தஞ்சாவூரில் இருக்கிறார். இப்படியான  எண்ணற்ற மக்கள் நம் அருகிலேயே வாழ்ந்து வருகிறார்கள். இந்தியாவில் திட்டமிட்டுச் சிலர் பொய் பேசி வந்தார்கள். அதுவும் திரும்பத் திரும்ப அதே பொய்யை பேசினார்கள். அதன் மொத்த விளைவாக இன்றைக்கு மோடியைப் பார்க்கிறோம். பொய் பேசவே அவர்களுக்குத்  தொடர் முயற்சியும், விடா உழைப்பும் இருக்கும் போது, சமூகத்தைப் பாதுகாக்கும் பொருட்டு நம் வேகம் எந்தப் பாய்ச்சலில் இருக்க வேண்டும்? அதேநேரம் கொள்கைகளைப்  புதிய விதங்களில், சிறந்த அணுகுமுறைகள் கொண்டு கையாளுங்கள். கிடைப்பது வெற்றியாக மட்டுமே இருக்கும் என வீ.அன்புராஜ் பேசினார்.

விதைப்பதை அறுவடை செய்யுங்கள் !

"இளைஞரணி, மாணவரணி கட்டமைப்பு, புதிய இடங்களில் அமைப்புகளை உருவாக்குதல் குறித்துப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்கள் பேசுகையில், இயக்க உறுப்பினர்கள் குறைவு என எண்ணாதீர்கள்.அதைக் கொண்டு தான் தமிழகத்தில் பெரும் புரட்சிகள், மாற்றங்கள் கொண்டு வந்தோம். ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் நாம் இருக்கிறோம். இன்று பெரியாரை உலகம் பேசுகிறது. முன்பு மாவட்டங்கள் மிகப் பெரியதாக இருக்கும். வாகன வசதி, தொடர்பு சாதனங்கள் இல்லாத, அந்தக் காலத்திலே நம் தோழர்கள் வரலாறு படைத்தவர்கள். இன்றைக்கு நம்மிடம் எல்லாம் இருக்கிறது. நல்ல அணுகுமுறையும், உழைப்பும் உள்ள மாவட்டங்களில் தோழர்கள் எண்ணிக்கை கூடி கொண்டே இருக்கும். பழைய, புதிய தோழர்களிடம் எப்போதும் தொடர்பில் இருங்கள். மாநாடு நடத்தி விட்டு ஆறு மாதம் அமைதியாய் இருந்தால், அதன்  அறுவடையை யார் செய்வது? அதேபோல ஊர் நண்பர்கள், இயக்கத் தோழர்கள் வீட்டு  நிகழ்ச்சிகளுக்குக்  கறுப்புச் சட்டையுடன் அய்ந்தாறு பேர் செல்லுங்கள். இவையெல்லாம் மனிதர்களிடம் ஊடுருவிச் செல்ல எளிய வழியாகும் என்று இரா.ஜெயக்குமார் பேசினார்.

விடுதலைப் படிக்கச் செய்யுங்கள் !

விடுதலைச் சந்தா சேர்த்தல், நன்கொடை பெறுதல் தொடர்பாய் பொதுச் செயலாளர் இரா.குணசேகரன் அவர்கள் பேசும்போது, விடுதலை வாழ்வின் 80 ஆண்டுகளில், அதன் ஆசிரியராக தமிழர் தலைவர் அவர்கள் 52 ஆண்டுகள் ஆசிரியராக இருந்து வருகிறார். வெளிநாட்டுப் பத்திரிகை ஒன்றில் 22 ஆண்டுகளே இருந்த ஒருவருக்கு கின்னஸ் சாதனை வழங்கப்பட்டது. அதைவிட பெரும் சிறப்பு பெற்ற நம் ஆசிரியர் அவர்களுக்கு, நிறைய சந்தாக்களை வழங்க வேண்டும். தமிழ்நாட்டின் ஏனைய பத்திரிகைகளோடு விடுதலையை ஒப்பிடும்போது, வாழ்வை  உயர்த்தும் பகுத்தறிவுக் கருத்துகள் நம்மிடம் மட்டுமே உள்ளன. தினமும் பல்வேறு துறைச் சார்ந்த செய்திகளை, மிகக் குறைந்த விலையில் நாம் மட்டுமே வழங்கி வருகிறோம்.எனவே தொடர்ந்து மக்களைச் சந்தித்து, குறித்த நேரத்தில் விடுதலை சந்தாக்களை வழங்க வேண்டும் என இரா.குணசேகரன் பேசினார்.

படிப்புக்கான வேலை : வேலைக்கான படிப்பு !

இடஒதுக்கீட்டின் இன்றைய நிலை, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் குறித்து கோ.கருணாநிதி அவர்கள் பேசும்போது, இடஒதுக்கீட்டைப்  பெற்றுத் தந்த இயக்கம் திராவிடர் கழகம். இந்த உருவாக்கம் குறித்தும், இதன் பயன் குறித்தும் நம் கழகப் பிள்ளைகள் அறியச் செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்கள் பலரிடமும் எடுத்துக் கூறுவார்கள். சமூகநீதியால் தமிழ்நாட்டில் நாம் பயன்களை   அனுபவிக்க முடிகிறது. மற்ற மாநிலங்களில் அந்த நிலை இல்லை. அதேநேரம் மத்திய அரசு தொடர்பான நிறைய வேலை வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. அதை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். நமது  மாணவர்கள் பொறியியல் உள்ளிட்ட உயர் படிப்புகள் பயின்றாலும், வங்கி வேலை மற்றும் ஏனைய அலுவலக வேலைகளுக்குத் தங்களைத் தயார் செய்து கொள்வதில்லை. மாறாக வட இந்தியாவில் மற்ற படிப்புகள் எப்படி இருந்தாலும், அரசு வேலைகளுக்கான தேர்வுகளில் ஆர்வம் காட்டுகின்றனர். அந்நிலை இங்கும் வர வேண்டும் என கோ.கருணாநிதி பேசினார்.
 
 
 
தொகுப்பு
 
வி.சி.வில்வம்

No comments:

Post a Comment