Thursday, August 21, 2014

நாளைய தலைமுறைக்கான நாற்றங்கால் - பெரியார் 1000 !

                 

மகிழ்வும்! நெகிழ்வும் !
"1000 பெரியார் வந்தாலும் மூட நம்பிக்கைகளைத் திருத்த முடியாதோ ?" என நடிகர் விவேக் ஒரு படத்தில் வருத்தம் கொள்வார்.  "பெரியார் 1000" அந்த வருத்தங்களை உறுதியாய் நீக்கும் என நாம் நம்புகிறோம். தமிழகச் செய்திகள் மகிழ்வையும், நெகிழ்வையும் ஒரு சேர தந்து போகின்றன. பணம் பத்தும் செய்யும் என்பார்கள். சமூகத்திற்குப் பயன்படாத அந்த பத்தால் என்ன பயன்? கொடிகள் கொண்ட எல்லோரிடமும் கோடிகள் இருக்கிறது. கோடிகள் செய்யாததைக் நாம் செய்கிறோம்.  அந்த வலிமையின் வழி செய்தவர் பெரியார்.          
பெரியார் 1000 - அறிமுகமும்! பரிணாமும்!
நம் சமூகம் குறித்து அறியவும், அச்சமூகத்தில் நம்மை அறியவும் உதயமானதே பெரியார் 1000. எழுதப்படாத காகிதங்கள் மாணவர்கள்! அவர்களே இத்திட்டத்தின் இலக்கு. பெரியார் என்பவர் கடவுள் இல்லை என்றல்லவா சொன்னார்? ஆம்! "இல்லை" என்றுதான் சொன்னார். ஆனால் "உன்னிடம் எல்லாமே" இருக்கிறது என்றவர் அவர்!  பாடம் சொல்லும் பெரியார் கள்ளுக்கடை மறியலிலும், வைக்கம் வீரருமாய் சுருங்கிப் போகிறார். ஆனால் அவர் குறித்து அறிய ஆயிரம் இருக்கிறது. அதுதான் "பெரியார் 1000".
தமிழ், ஆங்கில மொழிகளில் 1000 கேள்விகளுடன் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் ஒரு பிரிவும், தமிழில் "சிந்தனைச் சோலை - பெரியார்" எனத் தலைப்பிட்டு 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றொரு பிரிவிலும் சிந்திக்கத் தொடங்குகிறார்கள். இதில் 600 கேள்விகள் அடங்கும். சமூகத்தில் அடங்க மறுக்கும் அனைத்தையும் இக்கேள்விகள் அடக்கும்! இதுதவிர புதுச்சேரியில் பிரெஞ்சு மொழியில் பெரியார் உலகமயமாகிறார். 

புது உலகின் ஏணி !

ஆகஸ்ட் 23,24,  30,31 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெற இருக்கிறது. தேவையெனில் தேதிகள் நீட்டிக்கப்படலாம். தேர்வில் 90 கேள்விகளும், 90 நிமிடங்களும் வழங்கப்படும். இந்தத் தேர்வு வெற்றிக்கானது அல்ல; வாழ்வுக்கானது! புது வாழ்வின் படிகளில் ஒரு இலட்சம் மாணவர்கள் ஏற இருக்கிறார்கள் என்பது எவ்வளவு சிறப்பு!  சென்ற ஆண்டு 67 ஆயிரம் மாணவர்களை அழகுபடுத்திய பெரியார் 1000, விசாலப் பார்வையால் உலகை விழுங்கும்!

தமிழகமும்,பெரியாரும் நீருபூத்த நெருப்பு!
அந் நெருப்பு எவரையும் அழித்ததில்லை. மாறாக வெளிச்சமாக்கியது. அதில்தான் நீங்கள், நாங்கள், அவர்கள் என எல்லோருமே பயணிக்கிறோம். இதோ... தோழர்களின் அனுபவம் கேட்போம்!
1. எங்கள் பள்ளிக்கு ஏன் பெரியார் 1000 அமைப்பினர் இன்னும் வரவில்லை எனும் நிருவாகத்தின் ஆவல் கேள்விகள்.
2. எங்கள் பள்ளிக்கு 20 புத்தகம் போதும் என்றவர்கள், அடுத்த நாளில் 200 புத்தகம் கேட்ட மாற்றம். இதுவே சில பள்ளிகளில் 500 க்கு            மேல் உயர்ந்த அற்புதம்.
3. எங்கள் பள்ளியில் "பெரியார் 1000" வருமா எனத் தெரியவில்லை. ஆனால் நான் எழுத வேண்டும் என்ன செய்ய? என மாணவர்கள் ஆர்வமுடன் கேட்பது. (தேர்வு எழுதுவதில் இவ்வளவு ஆர்வமா? இது தேர்வல்ல... நகர்வு!)
4. எங்கள் பிள்ளைகள் எழுத வேண்டும். அதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்? எனப் பெற்றோரும் கேட்பது.
5. உங்கள் புத்தகத்தில் முக்கியமாய் ஒரு எழுத்துப் பிழை உள்ளது என உன்னிப்பாய் சொன்ன மாணவரை எண்ணிப் பார்த்துப் பெருமை கொண்டது.
6. பெரியார் குறித்து எப்படி பேசலாம் என ஒரு தமிழர்(?), வம்புடன் தலைமை ஆசிரியரை அணுக, அவர் அன்புடன் பதில் சொல்லியுள்ளார். பெரியார் இல்லாவிட்டால் நீங்களும் இல்லை, உங்கள் மகனும் இங்கு மாணவர் இல்லை, நானும் தலைமை ஆசிரியர் இல்லை எனச் சொல்லி, ஆர்வம் இருந்தால், அதுவும் விடுமுறை நாளில் எழுதலாம். இல்லாவிடில் உங்கள் மகனை நீங்கள் நிறுத்திக் கொள்ளுங்கள். பள்ளிக்குத் தடை விதிக்க முடியாது என்றாராம். (தேர்வு எழுத எதுவும் கட்டாயம் இல்லை. தன் கருத்துகளையே கட்டாயமாய் ஏற்கக் கூடாது எனச் சொன்னவர் அல்லவா பெரியார்!)
7. மாணவர்கள் ஆர்வத்தில் ஆசிரியர்களும், ஆசிரியர்கள் உற்சாகத்தில் மாணவர்களும், இவர்கள் இருவரின் அன்பில் நம் தோழர்களும் இணைந்துச் சமூகத்தை அழகு செய்ய இருக்கிறார்கள்.
அந்த அழகான சமூகத்தில் பெரியாரை யாரும் தவறாகப் பேசிவிட முடியாது. காரணம் மாணவர்களுக்கு வரலாறு தெரியும்.  

 வி.சி.வில்வம்

No comments:

Post a Comment