Friday, July 25, 2014

கடவுளின் கதை !


                

    வயல் அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் திருச்சி செவனா விடுதியில், 15.07.2014 அன்று நடைபெற்றது. "கடவுளின் கதை"  என்ற தலைப்பில் பேராசிரியர் அருணன் பேசியதாவது:

கடவுளும், சிக்கலும்!

கடவுளின் கதைக் குறித்துப் பேசச் சொல்கிறார்கள். தலைப்பிலே கதை வருவதால், கடவுளும் கதைதான் என்பதை அறியலாம். பொதுவாகக் கடவுளின் கதைகளை எழுதவே எனக்கு வாய்ப்பு இருந்தது. யாரும் பேச அழைத்ததில்லை. ஒருவேளை சிக்கல் வரக்கூடும் என  நினைத்திருக்கலாம். 

உலகில் மாறாதவை இரண்டு !
உலக வரலாறுகளை நான் வாசிக்கத் தொடங்கிய நேரம், அது நிறைய செய்திகளை யோசிக்கக் கொடுத்தது. ஆண்டான் அடிமை யுகத்தைவிட, நிலப்பிரபுத்துவம் சிறந்தது. நிலப்பிரபுத்துவ யுகத்தைவிட, முதலாளித்துவம் சிறந்தது என உலகம் மாறிக் கொண்டே வந்திருக்கிறது. முதலாளித்துவ யுகத்தைவிட, சிறந்த இன்னொரு யுகம் வர வேண்டும் என்றே  நாம் விரும்புகிறோம். 
"நாகரிகக் கதை" என்கிற நூலின் 11 பாகத்தையும் நான் முடித்திருந்த நேரம். அந்த நூல்தான் எனக்குக் "கடவுளர்களின் கதையை" அறிமுகம் செய்து வைத்தது. இந்த உலகில் எல்லாமும் மாறி இருக்கிறது. ஆனால் கடவுளும், மதமும் அப்படியே இருக்கிறது. ஆதி கால மனிதன் மரத்தைக் கும்பிட்டான். இன்றைக்கும் மரத்தைக் கும்பிடுகிறான். தன்னை எதுவெல்லாம் மிரட்டியதோ, அதற்கெல்லாம் பணிந்தான். தனக்குக் கட்டுப்படாத ஒன்றைக் கண்டு பயந்தான் அல்லது கெஞ்சினான் அல்லது இறைஞ்சி வணங்கினான். அதனால் தான் கடவுளர்களின் எண்ணிக்கை அதிகமானது. 

இறந்தாலும் சாகமாட்டோம் !

முதன்முதலில் ஒரு மனிதன் சக மனிதனையே வணங்கினான்.  தாத்தா நெருப்பு உண்டாக்குவதைப் பெயரன் ஆச்சர்யமாய் பார்த்தான். முன்னோர்கள் அதிசயம்  வாய்ந்தவர்கள்  என எண்ணினர். அவர்கள் இறந்தாலும் சாகவில்லை, உயிரோடு வாழ்வதாக நினைத்தனர். அதுதான் ஆன்மா என்பது அவர்களின் நம்பிக்கை. ஆக கடவுளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது இந்த ஆன்மா. 

எகிப்தில் "மம்மி' என்பது பிணம். அதற்குப் பயன்படும் பிரேதப் பெட்டியில் ஒரு வரைபடம் இருக்கும். அந்த வரைபடத்தில் "மேலுலகம்" செல்வதற்கான வழி இருக்குமாம்.  இறந்தவர்கள் வழி தெரியாமல் தடுமாறக் கூடாதல்லவா? ஆக ஆன்மாக்கள் எல்லோரும் ஒன்றாய் வாழ்வதாய் நம்பினர். அவர்களுக்கான  தலைவர்தான் கடவுள். 

உலகில் கடவுள் தொகை !
கடவுளின் வாமன வடிவம் மனிதன் என்றார்கள். ஆனால் மனிதனின் விஸ்பரூபமே கடவுள்! மனிதன் தன்னிடம் இருக்க வேண்டிய அனைத்தையும் கடவுளிடம் கொடுத்து விட்டு, தான் ஒன்றும் இல்லாதவன் ஆகிவிட்டான். 

உலகம் ஒன்றுதான், அதில் மனிதகுலமும் ஒன்றுதான். பின் ஏன் இத்தனைக் கடவுள்கள்? ரோம ராஜ்ஜிய நூலில், "மனித எண்ணிக்கையை விட, கடவுள் எண்ணிக்கை அதிகம்", என அப்போதே எழுதினார்கள்.   இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே கடவுளர்கள் அதிகம். கடவுள்களின் சித்தரிப்பு விதவிதமாக உள்ளது. ஆப்பிரிக்கக் கடவுள் கருப்பாகவும், வெள்ளையர் கடவுள் சிவப்பாகவும்  இருப்பதில் ஆச்சர்யமில்லை. மனிதன்தான் கடவுளைப் படைத்தான் என்பதற்கான உதாரணம் அது. பறவைகளுக்குக் கடவுள் இருந்திருந்தால், அக்கடவுளுக்கு இறக்கைகள் இருந்திருக்கும். பிராந்தியத்திற்கு ஏற்பவும், அக, புறச் சூழலுக்கு ஏற்பவும் கடவுளர்களை நிறைய உருவாக்கித் தள்ளினார்கள்.
                                                                                                                                              
கடவுள் எண்ணிக்கையைக் குறையுங்கள் !
 
கடவுளர் எண்ணிகையில் மிரண்டு போன மனிதன், அதனைக் குறைக்கச் சிந்தித்தான். ஒரு உலகத்திற்கு, ஒரு மனிதக் குலத்திற்கு ஏன் ஒரே கடவுள் இல்லை என்கிற கேள்வி எழுந்தது. விளைவு, கிறிஸ்துவ மதத்தில் கர்த்தர், குமாரர், பரிசுத்த ஆவி என மூன்றாகச் சுருங்கியது. இசுலாமில் ஏகக் கடவுள் ஒருவரே, அவர் பெயர் அல்லா என்றார்கள். பல கடவுள் வழிபாடு தேவையில்லை, ஒரே கடவுள் போதும், அதற்கு உருவ வழிபாடும் தேவையில்லை என இந்து மதமும் முடிவு செய்தது. ஆனால் அவர்களால் இன்று வரை முடியவில்லை. 

கடவுள் தேவையா ? இல்லையா ?
கடவுள் உண்டா? இல்லையா? என்பது போய், கடவுள் தேவையா? இல்லையா? எனச் சிந்திக்கிற காலம் வந்தது. கடவுள் இல்லை என்பது தெரியும். அதனால் என்ன? உண்டாக்கிக் கொள்ளுங்கள் என்றார்கள். கடவுள் இல்லையென்றால் ஒழுங்கு, தர்மம் போய்விடும் என்றார்கள் சிலர்.  அதேநேரம் ஒழுங்கு, தர்மம் என்பது அது தன்னளவில் நிலையானதாக இருக்க வேண்டும். அதற்குக் கடவுள் என்கிற கைத்தடி தேவையில்லை. அதனால் நீண்ட காலத்திற்கு முட்டுக் கொடுக்க முடியாது என்றும் பேசப்பட்டது.

முதலாளித்துவத்தில் முதலாளித்துவத் தர்மமும், சோசலிசத்தில் சோசலிசத் தர்மமும் பேசப்பட்டு, தர்மங்கள் மாறிக் கொண்டே இருக்கும்.  இதில் கடவுள் தர்மம் என்பது  கிடையாது என வாதிடப்பட்டது. மேலும் ஒரு அறிஞர் ," சுத்த அறிவைக் கொண்டு கடவுள் இருப்பதை நிராகரிக்க முடியும். ஆனால் நடைமுறைச் சூழலைக் கொண்டு கடவுள் இருப்பதை நம்புகிறார்கள்", என்றார். 

ஒரு விசயம் நமக்குப் பயன்பட்டால், அது உண்மை என்றே வலியுறுத்தப்பட்டது. ஆக உண்மை என்பதற்கு என்னதான் பொருள் ? அதற்குத் தனிப் பொருள் ஏதும் இல்லையா? உலகம் உருண்டையா? தட்டையா ? எனில், தட்டை எனச் சொல்வதால் பயன் இருக்கிறது என்றால், தட்டை என்றே சொல்வோம் என்கிறார்கள். இந்தச் சிந்தனைதான் அமெரிக்கா முழுவதும் இருக்கிறது. கடவுள் இருந்தால் இலாபமா? இல்லாவிட்டால் இலாபமா? என்பதே கணக்காக இருந்துள்ளது.  மற்றபடி "கடவுள் நம்பிக்கை" என்பது தனித்த பொருளாக எப்போதும் இருந்ததில்லை. இதில் பாமர மக்களின் நிலை வேறு  என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
                                                                                                                                             
மதங்களில் பகுத்தறிவு !
அய்ரோப்பாவில் பிசப்புகள்,  பெரும்பாலும் நிலப்பிரபுத்துவ மனிதர்களாகவே இருந்துள்ளனர். கிறிஸ்துவ மதம் நிலப்பிரபுத்துவத்தில் இருந்து முதலாளித்துவம் நோக்கி வளர்ந்த நேரம். அப்போதுதான் பிரெஞ்ச் புரட்சி ஏற்படுகிறது. அது அரசியல் புரட்சி என்று  நிறைய பேர் நினைத்தார்கள். ஆனால் அது மதத்திற்கு எதிரான, பகுத்தறிவு புரட்சி ! கடவுள் நம்பிக்கை இருந்தாலும் மூட நம்பிக்கையை ஒழிக்க வேண்டும் என்கிற எண்ணம் உருவானது. அதற்காக ஓர் இயக்கமும் துளிர்த்தது. அவ்வகையில் கிறிஸ்துவ மதத்தில்தான் முதலில் பகுத்தறிவு நுழைந்தது. அதில் உருவானதே 'புராட்டஸ்டண்ட்' பிரிவு.  ரூசோ சொன்னார்,"குழந்தைகளின் 18 வயது வரை கடவுள், மதம் குறித்துப் பேசாதீர்கள். வளர்ந்த பின்பு அவர்களாகவே முடிவு செய்து கொள்ளட்டும்", என்றார். 

இந்நிலையில் கத்தோலிக்கர் மட்டுமே வழக்கறிஞகராக முடியும். புராட்டஸ்டண்ட் பிரிவுக்கு அந்த வாய்ப்பு இல்லை என்ற நிலையெல்லாம்  இருந்தது. 1789 - 1804 ஆம் ஆண்டுகளில் மூட நம்பிக்கைகளுக்கு எதிரான இயக்கமும், கடவுளுக்கு எதிரான சிந்தனையும் பெருகி வந்த நேரம். அந்த நேரத்தில் தன்னைத் தளர்த்திக் கொண்டு, பகுத்தறிவுக்கு இடம் கொடுத்ததால், கிறிஸ்துவ மதத்தில் ஏராளமான அறிவியலார் உருவாகினர்.

அதேநேரம்  இஸ்லாம், பௌத்தம், இந்து மதங்கள் தங்களை மாற்றிக் கொள்ள முன்வரவில்லை. அதனால் அவற்றிற்கு வளர்ச்சியும், அறிவியல் கண்டுபிடுப்புகளும் இல்லாமலே போய்விட்டன. 

கடவுள்களின் தோல்வி!
அய்ரோப்பாவில், ஜோதிடத்தை எதிர்த்து 1600 ஆண்டுகளுக்கு முன்பே கேள்வி எழுந்தது. ஒரே நேரத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகளின் வாழ்வு கூட, ஒரே மாதிரியாய் இருப்பதில்லையே என்றார்கள். வரலாற்றில் கடவுளர் கதைகள் எப்போதும் பின்வாங்கியே வந்துள்ளன. அப்படியிருந்த காரணத்தாலே மனிதம் வளர முடிந்தது. ஆதி காலத்திலும் நாத்திகர்கள் இருந்துள்ளனர். கோடிக்கணக்கான மக்கம் கடவுளை நம்பும்போது, நாத்திகர்கள் உலகில் சிறுபான்மையே. ஏங்கெல்ஸ் 1882 இல் எழுதினார்,"கடவுள், மதம் கற்பிதம். சமுதாயச் சூழல் அவர்களை அப்படி நம்ப வைக்கிறது. எப்போது கடவுள், மதம் ஒழியும்? மனிதனால் உருவாக்கப்பட்ட கடவுளும், மதமும் மனிதச் சமுதாயம் ஒழியும் போது, ஒழியும் என்றார்.   

இந்து மதம் திருந்த வேண்டும் !

புண்ணிய பூமியில் உள்ள  இந்து மதத்தில், எந்த மாற்றமும் இன்று வரை வரவில்லை. உங்கள் கடவுள், மதத்தை வைத்துக் கொள்ளுங்கள். பகுத்தறிவுச் சிந்தனைகளுக்கு வழி கொடுங்கள்.  மூட நம்பிக்கைகளுக்கு எதிராக மாறுங்கள். கடவுள் உண்டா? இல்லையா? என விவாதிக்கத் தொடங்குங்கள்!  இந்திய அரசியல் சாசனம் கூட, விஞ்ஞான வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. அதன்படியாவது நடங்கள். இந்த மண்ணை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கோலோச்சி வந்துள்ளது பிராமணீய மதம். ஆனாலும் 800 ஆண்டுகள் இஸ்லாமும், 200 ஆண்டுகள் கிறிஸ்துவமும் இந்தியாவைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. 


காரணம் பிராமணீய மதம் பகுத்தறிவுக்கும்,  விஞ்ஞானத்திற்கும் எதிராக மட்டுமே இருந்துள்ளன. மூடநம்பிக்கை என்பது உங்கள் கடவுளுக்கே எதிரானது என்பதையாவது அறியுங்கள். அய்ரோப்பாவில் அந்த அளவில்  பகுத்தறிவுக்கு இடம் கொடுத்ததாலே, உலகில் வளர்ச்சி நிலையையும், அறிவியல் ஆச்சர்யத்தையும் வழங்கி வருகிறார்கள். இந்தியாவும் அந்த நிலைக்கு வர வேண்டும். முயற்சி செய்யுங்கள் ! இன்னும் காலம் இருக்கிறது!        

                                                                                                     தொகுப்பு :
                                                                                               வி.சி.வில்வம்


                                              

No comments:

Post a Comment