Thursday, May 1, 2014

ஆண்டுக்கு 240 நாள் வேலை செய்தால் நிரந்தரம் ஆகலாம் என்பது சட்டம்! 30 ஆண்டுகள் ஆகியும், இன்னும் 240 நாள்கள் வரவில்லை !


திருச்சி - திருவெறும்பூரில் அமைந்துள்ள பாரத மிகுமின் நிறுவனம் (பெல்) 1964 ஆம் ஆண்டு காமராஜ் அவர்களால் தொடங்கப்பட்டது. திருச்சி மாவட்டப்  புகழுக்கு இந்நிறுவனம் முக்கிய காரண மாகும். அய்ம்பதாவது பொன் விழாவைக் கொண்டாடும் இந்நிறுவனத்தில், பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர்  பணி செய்கின்றனர். இந்தியாவின் பொதுத் துறை நிறு வனங்களில், குறிப்பிடத்தக்க இடத்தில் இந்நிறுவனம் உள்ளது. மின்சாரம் தயாரிக்க உதவும் கருவிகளை உற்பத்தி செய்வது   இந்நிறுவனத்தின் முக்கிய பணி. இந்தியாவின் மத்திய அரசாங்கம் இந்நிறுவனத்தைக் கேரள மாநிலத்தில் அமைக்க முயற்சி மேற்கொண்ட போது, அதைத் தமிழகத்தின் திருச்சியில் அமைத்தவர் காமராஜர்.

வீச்சுடன் திராவிடர் கழகம்

இவ்வாறான பல சிறப்புகளைக் கொண்ட இந்நிறு வனத்திற்குப் பிரச்சினைகளும் தொடர்ந்தே வருகின்றன. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு உரிய வேலை வாய்ப் பைத் தராத நிலையில், பலரும் போராடினர். குறிப்பாகக் திராவிடர் கழகம் அதற்கான பணியைச் சிறப்பாகச் செய்தது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் பலமுறை பெல் வளாகம் வந்து பேசியிருக்கிறார். பெல் நிறுவனத்தில் செயற்படும் "திராவிடர் தொழிலாளர் கழகத்தை" யாரும் அறியாமல் இருக்க முடியாது. தொடர்ந்து வீச்சுடன் செயற்பட்டு வருகிறது.

தலைமுறை கடந்த பிரச்சினை

இந்நிலையில் சற்றொப்ப 30 ஆண்டுகளுக்கு முன்னர் பணியில் அமர்த்தப்பட்ட ஆயிரக்கணக்கான  "ஒப்பந்தத் தொழிலாளர்கள்"  இன்று வரை அதே ஒப்பந்தத்திலே  நீடிப்பது, நாம் மேலே கூறிய நிறுவனப் பெருமையைக்  கொஞ்சம் அசைத்துப் பார்ப்பதாய்  இருந்து வருகிறது.  இப்பிரச்சினைத் தொடர்பாக ஒப்பந்தத் தொழிலாளர் கள் மற்றும் எண்ணற்ற சங்கங்கள் 30 ஆண்டுகளாய்  மோதிப் பார்த்துவிட்டன. ஆனால் அதிகாரிகள் அசைவ தாய் இல்லை. இதற்கிடையில் தற்காலிகப் பணியில் இருந்த  சிலர், நிரந்தரமாகவே உலகை விட்டுப் பிரிந்து போயினர். தலைமுறை கடந்த இப்பிரச்சினைக்கு என்ன தான் தீர்வு ? எனப் பலரும் சோர்ந்த நிலையில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களைப் பல சங்கப் பிரதிநிதிகளும் சந்தித்தனர்.

வழக்குத் தொடங்கியதும்!  நினைத்தது நடந்ததும்! 

திருவெறும்பூர் பகுதித் தோழர்களைச் சந்திக்கும் போதெல்லாம், ஒப்பந்தத் தொழிலாளர் பிரச்சினைக் குறித்துக் கவலையோடு கேட்பது கழகத் தலைவரின் கட மைகளில் ஒன்றாகவே இருந்தது. தொடர்ந்து நீடிப்பதை, முறியடித்தே தீர்வது என்ற முடிவுக்கு அப்போது கழகத் தலைவர் வந்திருந்தார். உடனே வேலைகள் தொடங்கின. ஆயிரக்கணக்கான அறவழிப் போராட்டங்கள் அவர்களை அசைக்கவில்லை. "சந்திப்போம் சட்டப் பூர்வமாக" என முடிவு எடுத்தார். சட்டம் என்றால் இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனத்திற்குக் கைவந்த கலையாக இருக்குமே எனப்  பலரும் பயமுறுத்தினர். வல்லுனர்களுக்கு எல்லாம் வல்லுனர்கள் இருப்பார்களே என வாதாடினர். இருந்து விட்டுப் போகட்டுமே! ஆயிரக்கணக்கான மனிதர்களை ஒடுக்குவதற்கு அவர்களுக்குப் பயன்படும் சட்டம், அவர்களை வாழ வைப்பதற்கு வழியா தராது? என வழக்குத் தொடங்கியது!  ஆசிரியர் நினைத்தது நடந்தது ! நீதியின் குரலால் நெஞ்சம் நிறைந்தது !

"முப்பது ஆண்டு கால ஒப்பந்தத் தொழிலாளர்களை உடனே நிரந்தரம் செய்து, வாழ வழி செய்," என நீதிமன்றம் நீதி தந்தது.  "நீதியின் குரல்" நிறுவனம் முழுக்க ஒலித்தது. ஒவ்வொரு அறையாகச் சென்று அதிரச் செய்தது. ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஒரு சேர நெகிழ்ந்தார்கள். எல்லோ ருக்கும் மகிழ்ச்சி. அதேநேரம் அதிகாரிகள் நீதியைப் பின்பற்ற வேண்டுமே? நீதிக்கு நீதி (?)  வேண்டும் என அவர்கள் மேலே மேலே போனால், இவர்கள் வாழ்க்கைக் கீழே கீழே அல்லவா போகும் எனத் தோழர்கள் கவலை கொண்டனர். உடனே தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளின் சங் கங்களும் ஒன்று சேர்க்கப்பட்டன. ஒப்பந்தத் தொழிலாளர்களுடன், நிரந்தரத் தொழிலாளர்களும் சேர்ந்து கொண்டனர். 

பெல் நிறுவனத்தில் இயங்கும் திமுக, அதிமுக, மதிமுக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ், அம்பேத்கர் சங்கம், ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம், தேசியத் தொழிலாளர் கழகம், மக்கள் கலை இலக்கியக் கழகம், பி.எம்.எஸ் உள்ளிட்ட அனைவரும் திராவிடர் தொழிலாளர் கழகம் ஏற்பாட்டில் ஒன்றிணைந்தன.  கணேசபுரம் பகுதியில் 29.04.2014 அன்று மாலை 6 மணிக்கு, 13 சங்கங்களின் சங்கமிப்பு கூடியது. திருச்சி மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் மு.சேகர் தலைமை வகிக்க, ம.ஆறுமுகம் ஒருங்கிணைத்தார். மண்ணின் மைந்தர்கள் துயரத்தில் !

அனைத்துச் சங்கங்களும் இணைந்துத் தொடுத்த வழக்காகவே இதை நாம் கொள்வோம். நம்முடைய ஒருமித்த குரலுக்குக் கிடைத்த நீதி இது. இந்த நீதியை எடுத்துச் சென்று வெல்வது நம் கடமை. முப்பது ஆண்டு கள் உழைத்து, உழைத்துத் தம் இன்னுயிரை இழந்தவர்கள், நம் தொழிலாளர்கள். பெல் நிறுவனத்திற்கு "மகா ரத்னா" விருதைப் பெற்றுத் தந்தவர்கள் வீழ்ந்து விடக்கூடாது. முப்பது ஆண்டுகள் உழைத்தும்,  இன்னமும் பெல் நிறுவனச் சீருடை அணிய முடியவில்லை. தன் வீட்டில் வேலை பார்த்த, தன் ஊரில் சுற்றி வந்தப் பலருக்கும் வேலை பெற்றுத் தந்த நல்ல நல்ல அதிகாரிகள் இங்கே இருந்தனர். இன்று வெளி மாநில மக்கள் குளிர்சாதன அறையை  அனுபவிக்க, மண்ணின் மைந்தர்கள் துயரத்தில் உழல்கின்றனர். மற்ற, மற்ற மாநிலங்களில் இதுபோன்ற  காணமுடியுமா? வாழ்க்கையை நிரந்தரப்படுத்துங்கள் !

ஆண்டுக்கு 240 நாள் வேலை செய்தாலே, நிரந்தரம் ஆகலாம் என்கிறது சட்டம். 30 ஆண்டுகள் ஆகியும், 240 நாள்கள் இன்னும் வரவில்லை என்கிறது நிருவாகம்.     தனியார் நிறுவனங்களுக்கு முன்மாதிரியாய் இருக்க வேண்டாமா பொதுத்துறை நிருவாகம்? சக மனிதரின் உழைப்பைச் சுரண்டுவதும், வாழ்வை வஞ்சிப்பதும்    எந்த வகையில் நியாயம்?   உடல் பலம் இல்லாத, உணவு பலம் இல்லாத தொழிலாளர்களுடன் பெரிய நிருவாகம் மோத லாமா?  ஏழ்மையான, உழைக்க மட்டுமே தெரிந்த நேர்மை யான மனிதர்கள் அவர்கள். பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப் பட்ட  இனங்களில் இருந்து வந்தவர்கள். நீங்கள் அவர்கள் வேலையை அல்ல... வாழ்க்கையை நிரந்தரப்படுத்துங்கள்.

 போராட்டமே நம் ரத்தவோட்டம் !

முப்பது ஆண்டு கால எங்களின் போராட்டத்தில் பொது மக்களுக்கு எவ்வித இடையூறும்  இல்லை, நிருவாகத் திற்கோ சிறு இழப்பும் இல்லை. எங்களை நாங்களே வற்புறுத்திக் கேட்டோம். எனினும் அதிகாரிகள் நியாயம் தரவில்லை. அதிகாரிகள் பலரும் உயர்ஜாதியில் இருக் கிறார்கள். ஒடுக்கப்பட்டவர்களில் சிலர் நல்ல பதவிக்கு வருகிறார்கள்.  உயரத்திற்கு வந்ததும், அவர்களும் உயர் ஜாதியாய் மாறிப் போகிறார்கள். எனினும் போராட்டம் எங்கள் ரத்தவோட்டம் என்பதற்கிணங்க எல்லா சங்கங் களும் இணைந்தே இருப்போம். நல்லதொரு தீர்ப்பு நம்மை நாடி வந்துள்ளது. இந்த நேரத்தில் வெல்லாமல் போனால், பிறகு எப்போது? தீர்ப்பைப் பெற்றுக் கொடுத்த திராவிடர் கழகத்திற்கும், அதன் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களுக்கும் நன்றி தெரிவித்து, தொடந்து போராடுவோம்! வெற்றி பெறுவோம்!
  
                                                                                                                         வி.சி.வில்வம்


Read more: http://www.viduthalai.in/page1/79530.html#ixzz30XSl2S3A