Friday, March 21, 2014

சிறீரங்கம் யானைப் பாகன் வேலை இழந்த கதை


திருச்சி மாவட்டப் பத்திரிகைகளால், அண்மை நாட்களில் அதிகம் பேசப்பட்டவர்.  இவர் யார் என்று விசாரித்த  போது  யானைப் பாகன் என்றார்கள். நாம் நேரில் சென்று சிவசிறீதரன் அவர்களிடம் பேசினோம்.  பின்புதான் தெரிந்தது, அவர் யானைக்குப் பாகன் மட்டுமல்ல; அந்த யானையின் நண்பர்! ஆண்டாள் என்ற பெயருடைய அந்த யானையுடன் 27 ஆண்டுகள் நண்பராக இருந்துள்ளார். இப்போது என்ன பிரச்சினை என்கிறீர்களா? அது குறித்துதான் பேசப் போகிறோம். 

இதோ அடுத்த பக்கத்தில், அவரை நீங்கள் பார்க்கிறீர்கள். பெரிய தாடியுடன் 56 வயது நிறைந்தவராக, நெற்றி நிறைய விபூதியுடன் காட்சி தருகிறார். அவர் ஓர் ஆன்மீகவாதி என்று நமக்குத் தெரிகிறது. இருக்கட்டும்! உங்களுக்கும், எங்களுக்கும் தெரிந்தால் போதுமா? அய்யங்கார் அண்ணன்களுக்குத் தெரிய வேண்டாமா? அவர்கள் இவரை ஆன்மீகவாதியாக ஏற்கவில்லை.காரணம் என்ன? அவர் திருநீறு பட்டைப் போட்டதை நாங்கள் ஏற்கமாட்டோம், நாமம் போட வேண்டும். அதுவும் தென்கலை நாமம் போட வேண்டும், அப்போதுதான் அவரை ஏற்போம் என அய்யங்கார் அண்ணன்கள் மனு மேல் மனுவை 26 ஆண்டுகளாக, கோயில் நிர்வாகிகளுக்கு அனுப்பியுள்ளனர். இது ஒரு பிரச்சினையா? நீங்களோ தமிழர்! நீங்கள் எப்படி இருந்தால் அவர்களுக்கென்ன? என நாம் சிவசிறீதரனிடம் கேட்டோம். என்ன அப்படிக் கேட்கிறீர்கள்? தினமும் காலை 6 மணிக்கு யானையுடன் கோயிலுக்குச் செல்வேன். கருவறை முன்பு நான், யானை, நிறைய அய்யங்கார்கள் நிற்போம். யானை உட்பட எல்லோருமே நாமம் போட்டிருப்பார்கள். நான் மட்டும் பட்டைப் போட்டிருப்பேன்.

அதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நான் வேலைக்குச் சேர்ந்த நாள் முதல், இதை ஒரு பிரச்சினையாகப் பேசி வந்தார்கள். எனினும் அதுகுறித்து நான் கவலைப்படவில்லை. என் அப்பா சிவராமன் சிறீரங்கம் மற்றும் திருவானைக்காவலில் யானைப் பாகனாக இருந்தவர். மாதம் 6 ரூபாய் சம்பளத்தில் சேர்ந்தவர், 35 ஆண்டுகள் பணி புரிந்தார்.  நான் பிறந்தது திருவானைக்காவல் யானைக் கொட்டகையில். அதனால் யானைகள் குறித்து நான் நன்கு அறிவேன். அதுமட்டுமின்றி யானையும், நானும் எப்போதும் சுத்தமாக இருப்போம்.  நேர்மையாய் இருப்பதிலும், நேர விசயத்திலும் நான் கவனமாய் இருப்பேன். எனினும் அய்யங்கார்களுக்கு இதுவெல்லாம் பெரிய விசயமல்ல. ஒழுக்கம் கெட்ட செயல்கள் எவ்வளவும் செய்யுங்கள், போதையில் தள்ளாடுங்கள், மாமிசத்தைத் தோளில் தூக்கி வாருங்கள், அவர்களுக்குக் கவலையில்லை. நாமம் இருக்கிறதா? அதுபோதும். ஆத்தில் நாராயண அய்யராக இருப்பவர், ஆலயத்தில் நாராயண அய்யங்காராக இருக்க வேண்டும். அதுதான் அவர்களின் கொள்கை, என்கிறார் சிவசிறீதரன். நாமம் போடும் விசயத்தில் எவ்வளவு கவனமாக இருந்துள்ளார்கள் பார்த்தீர்களா? இப்படித்தான் இவர்களுக்குள் பிரச்சினை தொடங்கியுள்ளது.

இந்நிலையில் கோயில் அறங்காவலர் குழுத் தலைவராக டி.வி.எஸ். நிறுவனத் தலைவர் வேணுசீனிவாசன் நியமிக்கப்படுகிறார். அவர் சிறீரங்கம் அரங்கநாதருக்கு வழங்கப்படும் மரியாதையைவிட,  தனக்கு அதிகம் வேண்டும் என எதிர்பார்க்கிறார். இச்சூழலில் யானைப் பாகன் குனிவதில்லை, பணிவதில்லை என்பது அறங்காவலரின் குற்றச்சாட்டு. இதுவாவது பரவாயில்லை, யானை என்னை மதிக்கவில்லை, ஆசீர்வதிப்பதில்லை என்கிற குற்றச்சாட்டும் வேறு. வேணு சீனிவாசன், திருநெல்வேலியில் உள்ள கோயில்களுக்கு நான்கு யானைகள் சொந்தமாக வாங்கிக் கொடுத்துள்ளார். அந்த யானைகளும், யானைப் பாகன்களும் நிறைய மரியாதையுடன் இருப்பார்களாம்.

அப்படியிருக்கும் போது இப்படியிருந்தால் வேணு சீனிவாசன் எப்படி ஏற்பார்?  சிறீரங்கம் கோயிலுக்கென்று சில சம்பிரதாயங்கள் (?) உண்டாம். அந்தச் சம்பிரதாயங்களை வேணு சீனிவாசன் தம் வசதிக்கு ஏற்ப மாற்ற முயற்சித்துள்ளார். அதன் உச்சமாக கடவுள் வீதி உலா (வாக்கிங்) போகும் போது, யானை முன்னால் செல்லுமாம். அந்த யானையின் மீதேறி அமர்ந்து செல்ல அறங்காவலர் ஆசைப்பட்டுள்ளார். இதை அய்யங்கார்களும், யானைப் பாகனும்  ஏற்கவில்லை. உடனே வெளியிலிருந்து யானையை வாடகைக்குப் பிடித்து, அதில் ஏற முயற்சித்துள்ளார். அதை அவ்வூரின் மக்கள் ஏற்கவில்லையாம். இதனால் சீனிவாசனின் சினம் மேலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஓர் உதவி யானைப் பாகன் தேவை என்கிற விளம்பரம் 2012இல் நிருவாகத்தால் கொடுக்கப்படுகிறது. என்னால் நன்றாகப் பராமரிக்கும் போது, ஏன் உதவிப் பாகன் என சிவசிறீதரன் கேட்டுள்ளார்.


கோயில்களுக்குத் தேவைப்பட்டால், உதவிப் பாகனை நியமித்துக் கொள்ளலாம் என்கிற அரசாங்க அறிவிப்பை நிருவாகம் காட்டுகிறது. தேவைப்பட்டால்தானே? இங்கு, இப்போது தேவையில்லையே என்பது இவரின் பதில். மேலும் தமிழ்நாட்டில் பல கோயில்களில் உதவியாளர்கள் இல்லை. அருகிலுள்ள திருவானைக்காவலில்கூட இல்லை என விளக்கம் அளித்துள்ளார். இவரின் விளக்கம் அவர்களுக்குக் கோபத்தை அதிகரித்துள்ளது. ஒன்று, பணிந்து குனிந்து செல்ல வேண்டும். இல்லையேல் விலகியிருக்க வேண்டும். அந்த அடிப்படையில் வேலையிலிருந்து தாம் விலகுவதாக அறிவிப்புச் செய்துள்ளார். அதற்கு அங்கிருந்து எந்தப் பதிலும் இல்லை. நான் 27 ஆண்டுகளாக யானையுடன் வசித்து வருகிறேன். திருமணம் செய்து கொள்ளவில்லை. சிறந்த யானைப் பாகன் என்று பெயர் பெற்றவன். யானையை என் பிள்ளைப் போல பாவித்தேன். யானைக்கு உடல் நலம் இல்லாமல் இருக்கிறது.  அந்தப் பெண் யானை, 3,500 கிலோ எடை இருக்க வேண்டும். ஆனால் 4,855 கிலோ இருக்கிறது.

அதனால் மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் யானைக்கு உணவுக் கட்டுப்பாடு உள்ளது. அகத்திக் கீரை, ஆப்பிள், வாழைப்பழம், இனிப்புகள் அறவே கொடுக்கக் கூடாது. தினமும் ஒரு கிலோ கொள்ளு கொடுத்து, நடைப்பயிற்சி அழைத்துச் செல்வதுண்டு. ஆனால், வேணு சீனிவாசன் யானையின் உடல்நிலை அறிந்தும், ஒருமுறை அகத்திக் கீரையை அள்ளி வந்து கொடுத்தார். நான் மறுத்துவிட்டேன். நான் என் வேலையில் சரியாக இருக்க  நினைப்பேன். மூன்று வேளை உணவு சாப்பிடுவேன். இடையில் பிரசாதம் கொடுத்தால்கூட சாப்பிட மாட்டேன். சமஸ்கிருதம் கொஞ்சம் தெரியும். யானையைப் பயன்படுத்தி அவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் பொருள்(!) அறிவேன். நான் நாமம் போடவில்லை என்பது மட்டும்தான் அய்யங்கார்களின் குற்றச்சாட்டு. என் வேலையை அவர்கள் குற்றம் சொன்னதில்லை. ஆனால் நாமம் போடாவிட்டாலும் பரவாயில்லை; எனக்கு அதீத மதிப்புத் தர வேண்டும் என்பது வேணு சீனிவாசனின் எதிர்பார்ப்பு என்கிறார் சிவசிறீதரன்.

வேணு சீனிவாசனுக்கு நாமம் குறித்து ஏன் கவலையில்லை என விசாரித்த போது, அவர் வடகலையாம். சிறீரங்க ஆசாமிகளோ தென்கலை. இவர்கள் தங்களுக்குள் கலைகள் பிரித்து, கொலைகள் செய்ததுதான் அதிகம் என வரலாறு சொல்கிறது. ஆக அய்யங்கார்களுக்கு நாமம் போட வேண்டும், அறங்காவலருக்குக் காவடி தூக்க வேண்டும் என்ற நிலையில் யானைப் பாகன் இருந்துள்ளார். நான் யானைப் பாகனாய் சரியாய்த்தானே இருக்கிறேன், அது போதாதா? என்பது சிவசிறீதரனின் அடிப்படைக் கேள்வி. அதெல்லாம் எங்களுக்குப் போதாது. நாங்கெல்லாம் அப்பவே அப்பிடி என்பது இவாள்களின் முழக்கம். ஆகப் பிரச்சினை முற்றவும், 2013 டிசம்பரில் உதவிப் பாகனை வேலைக்கு அமர்த்திவிட்டார்கள்.

அந்த நேரம் யானைக்கு மறுமலர்ச்சி (?) கொடுக்க, இந்த ஆண்டாள் யானையை, பாகன் முதுமலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, உங்களை வேலையிலிருந்து நீக்கிவிட்டோம். உடனே சிறீரங்கம் வரவும் என ஒரு கடிதம் போகிறது. யானைகள் முகாம் முடிந்ததும் வருகிறேன் என இவர் பதில் சொல்கிறார். எதுவும் பேச வேண்டாம், உடனே வரவும் என்பது வேணு சீனிவாசனின் உத்தரவு. வந்ததும் வேலை போனது.

யானையைப் பிரிந்த துக்கத்தில் இப்போது சிவசிறீதரன். எல்லோரும் அவர் வீட்டிற்கு வந்து போகிறார்கள். விசாரிப்புகள் நடந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக பத்திரிகை நண்பர்கள் போகிறார்கள். ஆனால் அவர் சொன்னதை இவர்கள் எழுதவில்லை. அய்யங்கார்களுக்கும், அறங்காவலருக்கும் பாதிப்பு வராமல் எழுதி முடித்தார்கள். குறைந்தபட்சம் சிவசிறீதரன் சொல்வதை அப்படியே பதிய வேண்டும் அல்லவா? அதனால்தான்  நாம் பதிவு செய்திருக்கிறோம்.
- வி.சி.வில்வம்

No comments:

Post a Comment