Saturday, February 8, 2014

மலேசியத் தமிழர்களும்; திராவிடர் கழகமும் !

              

மலாயா! 
 
இப்படித்தான் அழைத்தார்கள் இன்றைய மலேசியாவை ! மலாயா அப்போது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தது. உலகின் பல நாடுகள் அவர்களின் கீழ்தானே இருந்தது. இந்தியாவும் அப்படி இருந்த நேரம். தமிழர்களைக் கூலி வேலைக்காக மலாயா அழைத்துச் சென்றார்கள் பிரிட்டிஷ்காரர்கள். தங்களின் தோட்டங்களிலும், பல்வேறு உடலுழைப்பு வேலைகளிலும் அவர்களை ஈடுபடுத்தினர். தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடு சென்ற போதும், தமிழர்களின் மன வேதனை குறையவில்லை என்பதுதான் நாம் பார்க்க இருக்கும் சோக வரலாறு.

இன்றைய மலேசியா முன்னேறிய நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. நவீனங்கள் பெருகிவிட்டன. இசுலாம் மதத்தில் ஈடுபாடு கொண்டாலும், பெரிய கட்டுப்பாடுகள் ஏதுமில்லை. அனைத்து மத, இன மக்களும் உரிமையுடன் வாழ்கின்றனர். குறிப்பாகத் தமிழர்கள் நல்ல வண்ணம் வசிக்கின்றனர். அரசியல் மற்றும் தொழில் துறைகளில் வெற்றிகளைக் குவிக்கின்றனர். உலகில் எந்த நாட்டிலும் காணாத வகையில், தமிழர்களின் பேச்சு மொழி தொண்ணூறு விழுக்காடு மேல் தமிழாகத்தான் இருக்கிறது. எனினும் இப்போதைய குழந்தைகள் பலர் தமிழ் எழுதவும், வாசிக்கவும் தடுமாறுகிறார்கள். ஒரு மொழி பேசுவதில் மட்டுமின்றி, எழுத்து நடையும் அவசியம் என்பார்கள். தவறும்போது மொழியும் தவறும் அபாயம் உள்ளது.

இன்றைய மலேசிய வாழ் தமிழர்கள், தமிழ்நாட்டிலே இருந்திருந்தால் இப்படியான வசதியான  வாழ்வு கிடைத்திருக்குமா என்பது அய்யமே. அதற்காக நாம் தமிழ்நாட்டைக் குறைத்து மதிப்பிடவில்லை. எனினும் வரலாற்றின் போக்கோடு சென்று ஒப்பிட்டுப் பார்க்கிறோம். சரி ! இப்படியான மலேசியத்  தமிழர்கள் அன்று எப்படி இருந்தார்கள்? 

தமிழ்நாட்டில் இருந்து அனைத்தையும் இழந்து மலேசியா சென்றார்கள். ஆனால் ஒன்றே ஒன்று அவர்களின் அனுமதி இல்லாமல் கூடவே சென்றது. ஆம்! அதுதான் அவர்களின் ஜாதி! அந்த ஜாதியும் விமானம் ஏறி சென்றதுதான் பெருங்கொடுமை. உலகில் எல்லோரையும் மனிதராகப் பார்த்தவர்கள், தமிழனை ஜாதியாகப் பார்த்தார்கள். தமிழர்களுக்கு வெளிநாடு வந்த மகிழ்ச்சி இல்லை, கூடுதல் வருமானம் என்ற இன்பம் இல்லை. மாறாக ஜாதி நோய் அவர்களைக் கொன்றுக் குதறியது. மலேசியாவிலும்  அப்படியா என்று நீங்கள் கேட்டால், ஆம் அப்படித்தான் என்பதே பதில். அந்த வரலாறுகளை இன்று நினைத்தாலும் வலி நிற்காது.

1901 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் - மலாயா அரசு ஒரு விதி (எண் - 18) வைத்தது. அதில் ,"ஒரு தொழிலாளி இந்த நாட்டில் குடி புகுந்த பிறகு, அவர்கள் சொந்த நாட்டில், அன்றாட வாழ்க்கையில் அனுசரிக்கப்பட்ட  ஜாதிப் பிரிவினை, குடி புகுந்த நாட்டில் தளர்த்தப்படும் என்று எதிர்பார்க்கக் கூடாது", என எழுதினார்கள். எப்படி இருக்கும் போனவர்களுக்கு ? வேலை எடுப்பதில் ஜாதி பார்த்தார்கள், குடியிருப்புகளைத் தனியே வைத்தார்கள், கோவிலுக்குள் விடமாட்டேன் என்றார்கள். திருமண விழாக்களில் மற்றவர்களுடன் சாப்பிடவும், வீதிகளில் காலணி அணியவும், வேட்டியை இறக்கி விடவும், தலைப்பாகைக் கட்டவும் அனுமதி கிடையாது என்றார்கள். பொது நிகழ்ச்சிகளில் பொறுப்பு ஏற்கவும் தடை விதித்தார்கள். தமிழ்நாட்டில் இருந்த எல்லாமும்  அங்கு இருந்தது. ஆனால் வாழுமிடம் மலேசியா என்பது மட்டும் மாறியிருந்தது. 

இப்படியான கொடுமைகளில் இருந்து தமிழர்களுக்கு எப்போது  மாற்றம் ஏற்பட்டது? அதை மலேசியாவின் வரலாற்றுப் பக்கங்களில் தேடினால் அது "1929" எனும் ஆண்டை நமக்கு விடையாகத் தருகிறது. அப்படி என்ன 1929 இல் நடந்தது? மலேசியத் தமிழர்களிடம் புரட்சி ஏதும் ஏற்பட்டதா? அல்லது ஆதிக்கவாதிகள் தாங்களாகவே  மாறிப் போனார்களா ? இவ்விரண்டில் எதுவும் இல்லை! அந்த ஆண்டில் தான் தந்தை பெரியார் மலேசியா சென்று இறங்குகினார். சரியாகச் சொன்னால் 19.12.1929 காலை நாகம்மையார் அவர்கள், எஸ்.இராமநாதன், சாமி.சிதம்பரனார், நடராஜன் ஆகியோருடன் "எஸ்.எஸ்.ரஜுலா" எனும் கப்பலில் பினாங்கு விக்டோரியா துறைமுகம் சென்று கால் பதிக்கிறார் பெரியார். கடலின் மூன்று மைல் தூரத்தில் கப்பல் நிறுத்தப்பட, அந்த இடத்திற்கே சென்று பெரியாரை வரவேற்கின்றனர்.           

பெரியார் வந்தது தெரியாமலும், அவர் வருவதினால் என்ன பயன் என்பது தெரியாமலும் தமிழர்கள்  கூட்டம் ஆங்காங்கே அடிமை வாழ்வு வாழ்ந்து வந்தது.  தத்தம் அடிமை வாழ்வு நீங்க இதற்கு முன்னர் அவர்கள் அழுதிருக்கக் கூடும் அல்லது முதலாளிகளை கெஞ்சியிருக்கக் கூடும் அல்லது ஆண்டவர்களை (?) அழைத்திருக்கக் கூடும். எந்தப் பயனுமின்றி போகவே, அடிமை வாழ்வைத் தொடர்ந்திருக்கக் கூடும். இதோ... பெரியார் இறங்கினார். நகரங்களுக்குப் போகிறார். பின்னர் தோட்டங்களுக்குப் போகிறார். தமிழர்கள் முன்பாகத்  தொடர்ந்து பேசுகிறார்.விளைவு, மொத்தமும் மாறிப் போகிறது. மலேசியத் தமிழர்களுக்குச்  சிரிக்கவும், சிந்திக்கவும் அதுதான் தொடக்கம்.  அவர்கள்  உடலின் பழைய  இரத்தம், புது பாய்ச்சலைக் கொடுக்க, சிலிர்த்துப்  போகிறார்கள். 

பின் நாள்களில் குடியரசு இதழ் தமிழ்நாட்டில் இருந்து விமானம் ஏறுகிறது. தினம் தினம் பெரியாரைப் படிக்க, சுயமரியாதைப் பெறுகிறார்கள். மீண்டும் பெரியார் 14.12.1954 இல் மலேசியா செல்கிறார். முதல் பயணத்தில் பெரியாரை எதிர்த்தவர்கள், ஜாதி, மதத்திற்கு வால் பிடித்தவர்கள் எல்லாம் இந்த முறை பெரியாரை  ஒன்றாய் சேர்ந்து வரவேற்க, தமிழர்கள் நிலை ஏறுமுகம் காண்கிறது. விளைவு 10.02.1946 இல் மலேசியாவில் திராவிடர் கழகம் உதயமாகிறது. மலேசியாவின் அனைத்து  மாநிலங்களிலும் தமிழர்கள் தோழர்களாக வெளிவரத் தொடங்கினர். மலேசிய சாலைகளில் கறுப்புச் சட்டைகள் அணிவகுக்கத் துவங்கின. தோட்டத் தொழிலாளர்கள், தாங்கள் பெரியார் சிந்தனையாளர்கள் என்பதை வலியுறுத்தும் பொருட்டு, கறுப்புத் துணி கட்டிக் கொண்டு வேலை செய்த நிகழ்வுகள் அரங்கேறுகிறது. அதேநேரம்  கொள்கைப் பேசியதாலே வேலையை இழந்தத் துயரங்களும் அரங்கேறின. இதனிடையே மலேசியாவில்  பல்வேறு பெயர்களில் செயல்பட்ட எண்ணற்ற அமைப்புகள் திராவிடர் கழகத்தோடு தங்களை இணைத்துக் கொண்டன.  ஒரு கட்டத்தில்  மலேசிய அரசாங்கத்தால் திராவிடர் கழகம் அங்கீகரிக்கப்படுகிறது. சுயமரியாதைத் திருமணங்களும் ஏற்கப்படுகின்றன. சுயமரியாதைப் பிரச்சாரம், கல்விப் பணி, இலக்கியப் பணி, சுயமரியாதைத் திருமணங்கள் செய்து வைத்தல், பாலர் பள்ளி, தையல் வகுப்பு, மொழி வளர்ச்சி என இயக்கப் பணிகள் இன்றைக்கு விரிவடைந்து இருக்கின்றன. இந்த அற்புதமான வரலாறுக்குப் பின்னால் அய்யாறு வாத்தியார், திருச்சுடர் கே.ஆர்.இராமசாமி என ஒரு நீண்ட பட்டியலே உண்டு.  

இறுதியாகத்  திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறித்துக் கூற வேண்டும். மலேசியாவின் ஒவ்வொரு அணுவும் அறிந்தவர் நம் ஆசிரியர் அவர்கள். மேலே எழுதப்பட்டுள்ள வரலாறு என்பது ஒரு சுருக்கம் தான். அதன் முழு வரலாறுகளையும், ஆணிவேர் வரை அறிந்தவர் தமிழர் தலைவர் அவர்கள். மலேசியாவிற்கும், ஆசிரியருக்கும் அய்ம்பது ஆண்டு கால தொடர்பு இருக்கிறது. "தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களும், மலேசியத் திராவிடர் கழகமும்" என தனி நூல் எழுதும் அளவிற்கு வரலாற்றுச் செய்திகள் உள்ளன.    

முடிவாக, தமிழ்நாட்டில் மட்டுமின்றி மலேசியாவிலும் தமிழர்கள் உரிமையுடன் வாழ, "பெரியாரே அடிப்படை" என்பதோடு பதிவை நிறைவு செய்வோம்.  

No comments:

Post a Comment