Wednesday, December 3, 2014

தலித்துகளின் எதிரி பெரியாரா? கடவுளா?


 தலித்துகளின் எதிரி பெரியாரா? கடவுளா? எனத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் கவிஞர் நந்தலாலா கேள்வி எழுப்பினார்.  ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 82 ஆம் ஆண்டு பிறந்த நாள் கூட்டத்தில், "தத்துவத் தலைவரின் சிந்தனைக் கொள்கலன்" என்ற தலைப்பில் நந்தலாலா பேசியதாவது: 

வீரமணி என்கிற ஓவியம்!

ஆசிரியர் அவர்களுடன் பழகும் வாய்ப்பு எனக்கு உண்டு. என்னைப்  பிடித்தது அவரின் எளிமை. வீரமணி என்கிற "ஓவியம்" வரைந்த போது பார்த்தவர்கள் இங்குண்டு.  சற்று நெருக்கமாகப் பார்ப்பவர்களும் இப்போதுண்டு. நான் சற்றுத் தள்ளிப் பார்க்கிறேன். தள்ளியிருந்துப் பார்க்கையில் அந்த ஓவியம் பேரழகாய்த் தெரிகிறது. சில ஆண்டுகளுக்கு முன் மலேசியாவின் ஈப்போ நகரில்  நடைபெற்ற தமிழர் மாநாட்டில் அவரைச் சந்திக்கிறேன். அவரின் பேச்சு,அணுகுமுறை என்னை வெகுவாக ஈர்த்தது. தொடர்ந்து பேசுகையில், உங்கள் குரல் எனக்கு மிகவும் பிடிக்கும். குரலைப் பாதுகாக்க என்ன செய்கிறீர்கள் என்று  கேட்டேன். எதுவும் செய்வதில்லை என்றார். அதனால்தான் அவரின் குரல் நன்றாக இருக்கிறது. ஒரு சிலரின் பேச்சில் கருத்துகள் நன்றாக இருக்கும், குரல் சரிவராது. ஆனால் ஆசிரியர் பேச்சை இரண்டு, மூன்று மணி நேரம் கூட  கேட்கலாம். திருச்சியில் 30 ஆம் தேதி நடைபெற்ற " சாமியார்கள் ஜாக்கிரதை" என்கிற அவரின் பேச்சைக் கேட்டேன். நிறைய பேச்சாளர்கள் படிப்பதே இல்லை. அரசியல் தலைவர்களோ எல்லா மேடையிலும் ஒரே மாதிரி பேசுவார்கள். ஆனால் ஆசிரியரோ முற்றிலும் வேறுபட்டவர்.   


நானும், நண்பரும் வியந்த சம்பவம்! 

திருச்சியில் மோடி கலந்து கொண்ட கூட்டதிற்கு எதிர்வினையாக திராவிடர் கழகம் சார்பில், கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது.அதில் நானும் பங்கேற்றேன். அக் கூட்டத்திற்கு மார்க்சிய அறிஞர் ஒருவரும் பார்வையாளராக  வந்திருந்தார். ஆசிரியர் பேசுகையில். ஒரு நூலை எடுத்து மேற்கோள் காட்டிப் பேசினார். அது எந்த நூல் என்று நான் பார்த்து முடிக்கையில், அசந்து போயிருந்தேன். ஆம்! அது தேவபேரின்பன் எழுதிய தமிழும் சமஸ்கிருதமும் - பொய்யும், மெய்யும் என்ற நூலாகும். நான் மகிழ்ச்சியோடு என் எதிரில் இருந்த அந்த மார்க்சிய நண்பரைப்  பார்க்கிறேன். அவரும் தன்னிச்சையாய் என்னை பார்க்கிறார். நாங்கள் சிரித்துக் கொண்டோம்.காரணம் அந்த நூலை வெளியிட்டவரே அவர்தான். தமிழ்நாட்டில் வெளிவருகிற பெரும்பாலான நூல்களை இயக்கம் கடந்து வாசிப்பவராக ஆசிரியர் இருக்கிறார். அவரின் பரந்த வாசிப்புத் திறன் எங்களை வியக்க வைத்தது. 

படித்த ஆசிரியர்! படிக்கின்ற ஆசிரியே!

ஆசிரியரின்  ஒரு கூட்டம், பத்து நூல்களுக்குச் சமம் என்பேன்.  பொதுவாகப் படித்த ஆசிரியரிடம் மாணவர்கள் படிக்கக் கூடாது என்பார்கள். படிக்கின்ற ஆசிரியரே மாணவர்களுக்குச் சிறந்தவர். நம் நாட்டில் குழந்தைகளை அவமானப்படுத்தும் கல்வி முறைதான்  இருக்கிறது. மதிப்பெண் கல்வி உலகம் முழுவதும் நீக்கப்பட்ட பின்னரும், இந்தியாவில் தொடர்கிறது. எதிர்காலத்தில்  மாணவர்கள் மதிப்பெண் வழங்கி, ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஆசிரியருக்கு முன் மதிப்பிழந்த கோடிகள்!

ஆசிரியரின்  கொள்கை நேர்மைக்குச் சான்றாக மேலும் ஒரு செய்தி அறிந்தேன். ஆசிரியர் அவர்களின் மாமனார் இறந்த போது அவருக்கு கொள்ளி வைக்கச் சொன்னார்களாம். அப்படி செய்யாவிட்டால் பல கோடி ரூபாய்  சொத்துகளை இழக்க நேரிடும் என்று கூறப்பட்டதாம். இறுதியில் ஆசிரியருக்கு முன்னால் கோடிகள் மதிப்பிழந்து போனதாய் அறிந்து மகிழ்ந்தேன். அதேபோல ஜீவா அவர்களின் குல வழக்கப்படி, அவர்களின் சமூக ஆடை அணிந்து கொள்ளி வைக்க வேண்டும் என்று கூறினார்களாம். கதராடை இழந்து எதையும் செய்ய மாட்டேன் என அவர் உறுதியாக இருந்த வரலாறு இங்குண்டு. இவைகள் இப்போது அல்ல, அந்தக் காலத்திலே நடந்தவை என்பதுதான் வியப்பு. 

நாம் ஒன்றாய் இல்லை!

இப்படியான புரட்சிகள் விதைந்த மண்ணில் வேரூன்ற நினைக்கிறது பாரதீய ஜனதா. காங்கிரஸ் கட்சியில், தலைவர்களைக் கொண்டு தத்துவங்கள் மாறும். ஆனால் பாரதீய ஜனதாவில் எல்லோருக்கும் ஒரே கொள்கை. மனிதனை மனிதனாக மதிக்க மாட்டோம் என்கிற கொள்கை. அய்.ஏ.எஸ். படிப்புக்கு வயதைக் குறைத்து விட்டார்கள். கேட்டால் தகுதி போதவில்லை என்கிறார்கள். அம்பேத்கர் கேட்டார், "தகுதியுள்ளவனே ஆள வேண்டும் என்றால் வெள்ளைக்காரன் அல்லவா ஆளவேண்டும்? இங்கே ஆள்வதற்கு தகுதி அல்ல, உரிமையே முக்கியம் என்றார்". பெரியார், அம்பேத்கரை எல்லோரும் ஏன் பின்பற்றுகிறோம்? அவர்களின் கருத்துகள் அனைத்தையும் படித்து முடித்துவிட்டா பாராட்டுகிறோம்? மாறாக சூத்திரன் என்கிற குடையின் கீழ் பெரியாரும், தலித் என்கிற குடையின் கீழ் அம்பேத்கரும் இந்த மக்களை ஒன்று சேர்த்தார்கள். இன்றைக்குப்  பாரதிய ஜனதா தமிழ்நாட்டில் அதிகம் பேசி வருகிறது. எங்கிருந்து வந்தது இதற்கான தைரியம்? நாம் ஒன்றாய் இல்லை என்பதில் இருக்கிறது அவர்களின் தொடக்கம்.  தருண் விஜயை தமிழ்நாட்டில் சிலர் கொண்டாடுகின்றனர். அவர்களுக்கு என்ன தேவையோ நமக்குத் தெரியாது. இன்னும் ஒருவர் திருக்குறள் "ஹிந்து" மதத்திற்குச் சொந்தம் என்கிறார். நால்வருணம் பேசிய ஹிந்து மதமும், பிறப்பொக்கும் எல்லா உயிர்கட்கும் என்று சொன்ன குறளும் எப்படி ஒன்றாகும்? இந்தச் சூட்சமம் அறிந்த ஆசிரியர் அறிவியல் பூர்வ மறுப்பை விடுதலையில் சிறப்பாகப் பதிவு செய்தார்.

பகவத்கீதை படித்தவர் யார் ?
"எதைக் கொண்டு வந்தாய் எடுத்துச் செல்ல" என நிறைய உணவகங்களில் எழுதி வைத்துள்ளார்கள். நாமும் சாப்பிட்டு முடித்து, இந்த சுலோகத்தைச் சொன்னால் விட்டு விடுவார்களா? அதேபோல கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே என்று கீதையில் இருப்பதாகக் கூறுகிறார்கள். இவை எதுவுமே கீதையில் இல்லை என்பதுதான் உண்மை. கீதையைப்  படிக்காமலே பலரும் பேசி வருகிறார்கள். ஆனால் ஆசிரியர் அவர்கள் கீதையைப் படித்து, அறிவுசார் மறுப்பு நூலை வெளியிட்டடார். அதற்கான தகுதியும் அவருக்கே உண்டு. வேறெந்த அரசியல் தலைவர்களும் இதைச் செய்ய முடியாது; செய்யவும் மாட்டார்கள். பெரியார் இல்லாமல் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்பது ஒருபுறம் இருக்க, பெரியாருக்குப் பிறகு ஆசிரியர் இல்லாமல் போயிருந்தால் என்ன ஆகியிருக்கும்?  

தலித்துகளின் எதிரி பெரியாரா? கடவுளா?

பெரியார் தலித் மக்களின் எதிரி என்று தலித் தலைவர்கள் சிலர்  சொல்கின்றனர். ஜாதி என்பது கோபுரம் போன்ற அமைப்பாகும். அடித்தட்டில் இருந்து மேல் வரை நாம் இருக்கிறோம்.  கலசமாகப் பார்ப்பனர்கள் இருக்கிறார்கள்.  ஏன் தலித் இருக்கிறது? ஜாதி முறை இருக்கிறது. ஜாதி ஏன் இருக்கிறது? இந்து மதம் இருக்கிறது.  இந்து மதம் ஏன் இருக்கிறது? சாஸ்திரம் இருக்கிறது. சாஸ்திரம் ஏன் இருக்கிறது? கடவுள் இருக்கிறார். இப்போது கடவுளை ஒழித்துப் பாருங்கள். ஜாதியும், தலித்தும் சேர்ந்தே ஒழியும். பெரியார் கொள்கை மட்டுமே அறிவியல் பூர்வமான நாத்திகம் என்பதை நாம் உணர வேண்டும். பகத்சிங்கை தமிழ்நாட்டிற்கு அறிமுகம் செய்தவர்  பெரியார். தூக்கிலிடும் முன், ஏதாவது ஆசை இருக்கிறதா என்று பகத்சிங்கிடம் கேட்டார்கள். பேபி கையால் ரொட்டி சாப்பிட வேண்டும் என்று பகத்சிங் கூறினார். சிறைக்காவலர் அதிர்ந்து போனார். காரணம் பேபி என்ற பெண்மணி சிறையில் மலம் அள்ளுபவர். பகத்சிங் உறுதியாய் இருக்க, பேபி அழைத்து வரப்பட்டார். "நான் மலம் அள்ளுபவர். ரொட்டி தயார் செய்து தர மாட்டேன்", என பேபி கூறுகிறார். "என் தாயும் மலம் அள்ளுகிறார். அதற்காக என் தாயின் கைகளில் சாப்பிடாமல் இருக்கிறேனா? ஒரு பிள்ளையின் மலம் அள்ளுகிறவரே தாய் என்றால், ஊரார் பிள்ளைகளின் மலத்தை அள்ளும் நீங்கள் தாயின் மேலானவர் என்கிறார் பகத்சிங். பெரியாரியமும், கம்யூனிசமும் இப்படியான இளைஞர்களைத்தான் தோற்றுவித்தது. 

தமிழ்நாட்டில் இன்று தத்துவ வறட்சி ஏற்பட்டுள்ளது. அதைப் போக்கும் தகுதி ஆசிரியருக்கு உண்டு. இந்தியாவில் ஒவ்வொரு  மனிதனும் ஒரு சாமியாராக இருக்கிறான்.  கால் சாமியார்,  அரைச் சாமியார், முக்கால் சாமியார் என விழுக்காடு அளவில் வித்தியாசம் இருக்கிறது. இவர்கள் எல்லோரும் சேர்ந்து முழு (?) சாமியாரைக் கொண்டாடுகின்றனர். இன்றைக்கு  மூடநம்பிக்கைகள்  நவீனம் கொள்கின்றன. பெரியார் அரசியல் கட்சி நடத்தியவர் இல்லை. கல்வி என காமராஜர் எழுத, பெரியார் எனும் கரும்பலகைத்  தமிழ்நாட்டில் இருந்தது. இந்தியாவில் எங்குமே காண முடியாத சிறப்புகள் தமிழ்நாட்டிற்கு  உண்டு. அந்தச் சிறப்பை இந்த இயக்கம் காக்கும்; ஆசிரியர் காப்பார். அதற்காகவே இந்த பிறந்த நாள் பாராட்டுகள்'', என கவிஞர் நந்தலாலா பேசினார்.  
                                                                                                                                                                  
வி.சி.வில்வம் 

No comments:

Post a Comment