"முன்னேற்றத்தை நோக்கி அடியெடுத்து வையுங்கள். அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை" என்பார் நார்மன். தேவகோட்டை பதிப்பாளர் சங்கத்தின் "அடி" கொஞ்சம் பெரியதாகவே இருக்கிறது.
"தேவகோட்டை பதிப்பாளர் சங்கம்" நவம்பர் 1 முதல் 9 முடிய புத்தகத் திருவிழாவை இனிதே முடித்திருக்கிறது, தேவகோட்டை என்பது நகரமும், கிராமும் இல்லாத ஊர். ஜாதி ஆதிக்கத்தால் பெயரைக் கெடுத்துக் கொண்ட ஊர். ஆன்மீகத்திற்கு நேரத்தையும், பொருளையும் நிறையவே இழக்கும் ஊர். இப்படியான நிலையில் வணிகச் செழுமை, மக்களின் பொருள் ஆதாரம், ஊர் வளர்ச்சி என்பது எங்களின் ஏக்கமாகவே இருக்கிறது. நேற்று முளைத்த ஊர்கள் எல்லாம் பிரமிப்பாய் இருப்பதால், எங்களுக்கு நிறையவே கவலை.
இப்படியான வேளையில், தேவகோட்டையில் புத்தகத் திருவிழா நடந்திருப்பது எங்களையும் கடந்து, எங்களின் உள்ளத்திற்குக் கொண்டாட்டம். அறிவுப்பூர்வமும், ஆக்கப்பூர்வமும் வளர வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஏற்படும் ஆனந்தக் கொண்டாட்டம். ஜாதி, மத மரச் சிந்தனைகள் மறைந்து, மனிதச் செடித் துளிர்க்க வேண்டுமே என்கிற வாட்டம்.
இந்த ஏக்கம், புத்தகத் தாக்கம் ஏற்பட்டால் போகும் என்பதாலே, புத்தகத் திருவிழாவைக் கட்டித் தழுவுகிறோம். ஒருமனிதருக்கு குறிப்பிட்ட அறிவை மட்டுமா புத்தகங்கள் கொடுக்கின்றன? இல்லை! இந்த உலகையே புத்தகங்கள்தான் கொடுத்துள்ளன. எல்லாவற்றிலும் கவனம் செலுத்தும் நாம், அதைப் புத்தகங்களின் மீது கொடுத்துப் புது வாழ்வு பெறலாம் தானே! அந்தப் புது வாழ்வு எங்கள் ஊருக்கு வந்தால், எங்கள் கால்கள் நாட்டியம் ஆடாமல் என்ன செய்யும்? சொல்லுங்கள் நண்பர்களே!
அந்த மகிழ்ச்சிதான் இந்தக் கணம்!
தங்கள் மீது கனம் ஏற்றி, இந்தக் கணத்தை எங்களுக்குக் கொடுத்த தேவகோட்டை பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் கவிதா பதிப்பகம் திருமிகு சேது.சொக்கலிங்கம், உமா பதிப்பகம் திருமிகு இராம.லெட்சுமணன், குமரன் பதிப்பகம் திருமிகு எஸ்.வைரவன் மற்றும் எல்லோருக்கும் கரம் கூப்பி நன்றி!
வி.சி.வில்வம்
No comments:
Post a Comment