Friday, October 3, 2014

பெருகட்டும் பெரியார் குடும்பங்கள்! அருகட்டும் சமூக அவலங்கள்!!

தந்தை பெரியாரின் 136 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, குடும்பச் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தது தஞ்சாவூர் மாவட்டத் திராவிடர் கழகம். எதையும் திட்டமிட்டு செய்திடும் அம்மாவட்டம், இந்நிகழ்வையும் தயார் செய்துக் காத்திருந்தது. தஞ்சாவூரில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருங்குளம் கிராமம். மருங்குளமா ? அது எங்கே என யாரும் "மருகத்" தேவையில்லை. தஞ்சாவூரில் இருந்து செல்லும் போது, முதன்மைச் சாலையில் எண்ணற்ற கொடிகளும், விளம்பரப் பதாகைகளும் நம்மைச் சிரமமின்றி வழி நடத்துகின்றன.

காட்சியும்...மாட்சியும் !

விழா நடைபெற்ற அறிவுச்சுடர் பள்ளி இயற்கைத் ததும்ப காட்சித் தருகிறது. தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைவாணர் என்.எஸ்.கே, மணியம்மையார், தமிழர் தலைவர் ஆகியோரின் முகப்பு ஒளிப்படங்கள், குடும்பமாய் வருகைத் தந்த தோழர்களின் விழிகளில் பட்டு, முகமெங்கும் மகிழ்ச்சி தெறிக்கிறது. ஆயூத பூஜை, சரஸ்வதி பூஜை, பக்ரித் என மதப்பண்டிகைகள் வரிசைக் கட்டி நின்ற அந்த வாரத்தில்தான், பெரியார் குடும்பங்களும் களைக் கட்டி வந்தனர்.  சிறியதும்,பெரியதுமான வாகனங்களில் தோழர்களின் அணிவகுப்பு பெரும் உவப்பு! வருகைத் தந்தோர் அரங்கினுள் செல்லாமல், அவர்களே வரவேற்பு குழுவாய் மாறிய காட்சி, மனிதநேய மாட்சி !
வருகைத் தந்தோர் பதிவு செய்யவும், குடும்பமாய் ஒளிப்படம் எடுக்கவும் தொடர்ந்து வந்தன அறிவுப்புகள். கருப்புடையில் குடும்பப் படம் இல்லாத தோழர்களுக்கு அன்று அது கிடைத்துவிட்டது. ஆக, சுவையான காலை உணவு தந்து, மகிழ்ச்சியான வரவேற்பு வழங்கி, குடும்பப் படமும் எடுத்து இருக்கையில் இருத்தி விட்டார்கள். இனி நிகழ்ச்சிகளின் சங்கமம். 
குழந்தைகளின் நெஞ்சுரம் !
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் காலை 8 மணிக்கு வருகைத் தந்து, இறுதிவரை நிகழ்ச்சிகளைச் சிறப்பு செய்து கொடுத்தார்கள். தொடக்க நிகழ்ச்சிக்கு அ.கலைச்செல்வி தலைமையேற்க, க.தமிழ்ச்செல்வி வரவேற்புரை வழங்கினார். கோ.செந்தமிழ்ச்செல்வி, இ.அல்லிராணி, ஏ.பாக்கியம், ச.அஞ்சுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடவுள் மறுப்பைப் பெரியார் பிஞ்சு அ.காவியா அழுத்திக் கூற, ஏனையோர் சமூகத்திற்கு அதைத் திருப்பிக் கூறினர். மேடையில் கடவுள் மறுப்பை காவியா மட்டும் தான் முழங்கினார். ஆனால் அவரைச் சுற்றி மேடையில் படர்ந்த பிஞ்சுகளோ இருபதுக்கும் மேல். எவ்வளவோ விஞ்ஞானிகள் நாட்டில் உள்ளனர். ஆனால் கடவுளை மறுக்கும் நெஞ்சுரம் பெரும் விஞ்ஞானம் அல்லவா?  தொடர்ந்து குடந்தை அறிவுவிழி வழங்கிய வரவேற்பு நடனம். பாங்கான நடனம் என்பதுடன், பானையில் ஏறி நின்று ஆடிய அசத்தல் நடனம். பின்னர் பெரியார் பிஞ்சு பு.வி.கியூபா ஒரு நடனத்தை வரவேற்பாகக் கொடுத்தார். நிகழ்வில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, மணியம்மையார் படங்களைக் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் திறந்து வைத்தார். தொடந்து  கழகப் பொருளாளர் சு.பிறைநுதல்செல்வி தொடக்கவுரை ஆற்றினார்.கோ.செந்தமிழ்ச்செல்வி, இ.அல்லிராணி, ச.அஞ்சுகம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தொடக்க நிகழ்வுகளில் பங்கேற்ற அனைவருக்கும் மகளிரே சிறப்புச் செய்த சிறப்பு அங்குக் காணப்பட்டது.
விளையாட்டுப் போட்டிகள்!
குடும்ப மகிழ்வின் அடுத்த நிகழ்வாக விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. பெரியார் பிஞ்சுகள் மற்றும் மகளிருக்கான போட்டிகளை மா.இராசப்பன், மாணவரணி, இளைஞரணி, பெரியவர்களுக்கான போட்டிகளை வ.இளங்கோவன், வெ.ஜெயராமன், மு.அய்யனார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஓட்டப் பந்தயம், கூடைப் பந்து, குண்டு எறிதல், வலைப்பந்து, கயறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகள் இருபாலருக்கும் நிகழ்ந்தது. "போட்டி" என்கிற வார்த்தைப் பெயரளவுக்கு இருந்தாலும், அங்கு மகிழ்ச்சியே எல்லா விளையாட்டிலும் முதலிடம் பிடித்தது. அதுதான் விழா அமைப்பாளர்களின் நோக்கமாகவும் இருந்தது.
சொற்றொடர் விளையாட்டு!
இது நம் பிஞ்சுகளுக்கான விளையாட்டு. தொடங்கி வைத்தவர் நா.இராமகிருஷ்ணன். நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த மாநிலக் கலைத்துறைச் செயலாளர் ச.சித்தார்த்தன், பார்வையாளர் கூடத்தில் இருந்த குழந்தைகளுக்கு ஒரு அறிவுப்பு செய்தார். "நான் ஒரு வாசகம் சொல்வேன். அதைப் பிழையின்றி சொல்ல வேண்டும். தயாராய் இருப்பவர்கள், தைரியம் இருப்பவர்கள் மேடைக்கு வாருங்கள்", என்றார். அடுத்த நிமிடம் மேடையே  நிரம்பியது. ஆம்! அத்தனைக் குழந்தைகளும் மேடையில் இருந்தார்கள். தயாராய் இருப்பவர்கள் என்றால் பொறுக்கலாம்... தைரியம் இருப்பவர்கள் என்றால் எப்படி பொறுப்பது? அதுவும் சுயமரியாதைக் குழந்தைகளிடம் செல்லுமா? போட்டிக்கு நிரம்பிய குழந்தைகளைக் கண்டு சித்தார்த்தன் மகிழ்ந்தார். கூடவே பெரியார் குடும்பங்களும் மகிழ்ந்தன. பெரியார் வாழ்க! அன்னை மணியம்மையார் வாழ்க! தமிழர் தலைவர் கி.வீரமணி வாழ்க! என்கிற முழக்கத்தோடு, சுயமரியாதை, பகுத்தறிவு வாசகங்களை ஒருங்கிணைப்பாளர் கூற, குழந்தைகளும் கூறினர். ஒவ்வொரு குழந்தைக்கும் வெவ்வேறு வார்த்தைகள். மகிழ்ச்சி, நெகிழ்ச்சி, சிறப்பு, சிரிப்பு என எல்லோரும் இரண்டு கிலோ எடை கூடினர்.
அறிவுசார் பட்டிமன்றம் !
அடுத்தத் தலைமுறையை அறிவுசார்ந்த சமுதாயமாக மாற்றுவதில் விஞ்சி நிற்பது பெரியார் பிஞ்சு இதழே! உண்மை இதழே! என்பதுதான் அதன் தலைப்பு. மா.அழகிரிசாமி பட்டிமன்றத்தைத் தொடங்கி வைக்க, வழக்கறிஞர் பூவை.புலிகேசி நடுவர் பொறுப்பு ஏற்றார். பகுத்தறிவு, யாழினி, திரிபுரசுந்தரி, தமிழருவி,திராவிடமணி,தமிழ்ச்செல்வன் ஆகிய அறுவர் அழகாய் பேசினர்.
அலறும் பேய்.. பிசாசுகள்!
அறிவுசார் பட்டிமன்றம் முடிந்த வேளை, அலறும் பேய், பிசாசு குறித்துப் பேச வந்தார் மருத்துவர் கவுதமன். அந்தக் காலப் பேய்கள் எப்படிக் கத்தும், இந்தக் காலப் பேய்கள் எப்படிக் கத்தும் எனக் கத்திக் கத்திக் காண்பித்தார். சாமி ஆடுவது குறித்து, ஆடி, ஆடியும் காண்பித்தார். பிள்ளைகளுக்கு ஏற்ற உடல் மொழி காட்டிய அவர், பிள்ளைகள் உடலுக்குள் புகுந்து கொண்டார். பேய்கள் வெளியேறின.
அறிவுக் கவிதைகள் !
பெரியார், பாரதிதாசன், மணியம்மையார் குறித்தக் கவிதைகளைப் பிள்ளைகள் வாசிக்க, பிரமித்துப் போனார் தங்க.வெற்றிவேந்தன். அவர்தான் அந்நிகழ்வைத் தொடங்கி வைத்தார். அக்கவிதைகளில் சிலவற்றை, அக்குழந்தைகளில் சிலர் எழுதாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவர்கள் வாசித்த அந்த ஆர்வம், வெளிப்படுத்திய அந்த உணர்ச்சி, கண்களில் அந்தக் கோபம், இவையாவும் வெளிப்படுத்தின, இவர்கள்தான் இச்சமூகத்துக் குழந்தைகள்!
ஓவியங்கள் !
ஓவியங்கள் பங்கேற்ற  ஓவியப் போட்டிகள் பிற்பகலில் நடைபெற்றன. தொலைநோக்காளர் பெரியார், அய்யா ஒரு சமுதாய விஞ்ஞானி, பெரியார் ஒரு முழுப் புரட்சியாளர்  எனும் தலைப்புகளில் ஓவியப் போட்டிகள் நடைபெற்றன. பெரியார் என்ற காவியம், ஓவியம் கொண்டு அசத்தப்பட்டது.  ந.காமராஜ், இரா.பாலு, இரா.சரவணக்குமார் ஆகியோர் ஒவ்வொரு பிரிவிக்குமான போட்டியைத் தொடங்கி வைத்தனர்.

கலை நிகழ்ச்சிகள்!

ஏமாறாதீங்க! மந்திரமா? தந்திரமா? எனும் தலைப்பில் பி.பெரியார் நேசன், வே.தமிழ்ச்செல்வன், பங்குபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் பெரியார் பிஞ்சுகளும் கலந்து கொண்டு கலக்கினர். உறந்தை கருங்குயில் கணேசன், வீதி நாடக வித்தகர் ச.சித்தார்த்தன் இருவரும் "மூச்செல்லாம் பெரியார்" எனும் தலைப்பில் இசை நிகழ்ச்சி நடத்தினர். தொடர்ந்து நகைச்சுவை, சிந்தனை, இசைப் பட்டிமன்றம் நடைபெற்றது. தமிழர்களின் பண்பாட்டைப் பெரிதும் சீரழிப்பது ஊடகங்களே! மதச் சடங்குகளே! என்பது அதன் தலைப்பு. துரை.சித்தார்த்தன் இந்நிகழ்வைத் தொடங்கி வைக்க, எஸ்.பி.பாஸ்கர் நடுவர் பொறுப்பை ஏற்றார். ஆலங்குடி வெள்ளைச்சாமி, இரா.தனிக்கொடி, யாழ்.திலீபன், சு.சிங்காரவேலர் ஆகியோர் களமிறங்கினர். சமூகச் சிந்தனைகளை நகைச்சுவையில் நனைத்து, இசையில்  தோய்த்துக் கொடுக்க மக்கள் குலுங்கினர். நிகழ்வின் இறுதியில் பொதுச் செயலாளர்கள்  இரா.செயக்குமார், இரா.குணசேகரன், மாநில மாணவரணி செயலாளர் ச.பிரின்சு என்னாரசு பெரியார் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

பாராட்டும்! பரிசளிப்பும்!
மனிதருக்கான உந்து சக்தியாகப் பாராட்டும், பரிசளிப்பும் இருக்கிறது! அதிலும் குழந்தைகளுக்கு அதுதான் முதல் சக்தி!  "எல்லோருக்கும் வாழ்த்துத் தெரிவியுங்கள். அதிலும் உங்கள் வாழ்த்து முதலாவதாக இருக்கட்டும்!'' என ஒரு பொன்மொழி உண்டு. அந்த வகையில் அனைத்துக் குழந்தைகளுக்கும் பாராட்டும், பரிசளிப்பும், பிற தோழர்களுக்குப் பங்கேற்பு சான்றிதழும் வழங்கப்பட்டன. கூடுதலாக ஜாதி, மத மறுப்பு மற்றும் மறுமணம் செய்து கொண்ட தோழர்களுக்கு நினைவுப் பரிசு அளிக்கப்பட்டன. பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு தலைமைச் செயற்குழு உறுப்பினர் கோ.தங்கராசு தலைமை வகித்தார். ஆர்,பி.எஸ்.சித்தார்த்தன், கே.வீரையன், சி.அமர்சிங், அ.அருணகிரி, சி.மணியன், ச.சந்துரு, குருசாமி, பாலு ஆகியோர் முன்னிலை ஏற்றனர். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அனைவருக்கும் பரிசளித்து, பாராட்டிப் பேசினார். இறுதியாக அறிவுச்சுடர் பள்ளியின் புதிய கட்டிடப் பகுதியில் கவிஞர் அவர்கள் மரக்கன்றுகள் நட்டு வைத்தார்.
உணவுத் திருவிழா !
நிகழ்வன்று காலை சுவையான சிற்றுண்டி. பின்னர் 11 மணியளவில் சுக்கு, மிளகு, திப்பிலி, அதிமதுரம், நன்னாரி, சித்தரத்தை, ஏலம், ரோஜா, மொக்கு, மல்லி, சீரகம், லவங்கம் உள்ளிட்ட 18 வகையான மூலிகைகள் அடங்கிய திரிகடுகம் தேநீர் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டை தஞ்சாவூர் அன்னை இயற்கை உணவு அங்காடி உரிமையாளர் எம்.ஆர்.ரவி அவர்கள் செய்திருந்தார்கள். அதேபோல கண்ணை தாமரைக்கண்ணன் அவர்கள் ரசாயன உரம் சேர்க்காத நொறுவல்கள் (ஸ்நாக்ஸ்) வழங்கினார். பிற்பகல் உணவும் பார்த்துப் பார்த்துச் செய்து பதமாய், பாசமாய் பரிமாறப்பட்டது. மதிய வேளையில் பழக்கடை கணேசன் அவர்கள் வாழைப்பழங்கள் வழங்க, மாலை வேளையில் பாம்பே இனிப்பகம் உரிமையாளர் இனிப்புபும், நொறுக்குத் தீனிகளும் கொடுத்து உதவினார். இனி சுவையக உரிமையாளர் பாலசுப்பிரமணியன் வாழைப்பூவில் 1000 வடைகள் செய்து அசத்தினார். 


விழா ஒருங்கிணைப்பு !
திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் இரா.செயக்குமார், மாநில கலைத்துறைச் செயலாளர் ச.சித்தார்த்தன், பி.பெரியர்நேசன், வெ.நாராயணசாமி, கோபு.பழனிவேல், தி,பொய்யாமொழி, வே.ராஜவேல், இரா.வெற்றிக்குமார், இரா.இளவரசி, இரவி.தர்மசீலன்,
சி.பிரபாகரன், சி.அமிர்தசுபா, வே.தமிழ்ச்செல்வன், செ.ஏகாம்பரம், கோ.இராமமூர்த்தி, வ.ஸ்டாலின், பேபி.ரெ.இரவிச்சந்திரன், சு.முருகேசன், சாமி.அரசிளங்கோ, தனபால், சுப்பிரமணியன், இரா.சிவக்குமார், மனோஜ், இராயபுரம் சேது, மன்னை தமிழ்ச்செல்வம் மற்றும் மருங்குளம் அறிவுச்சுடர் பள்ளி நிருவாகி க.தமிழ்ச்செல்வி, பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள், வாகன ஓட்டுநர்கள்.                                                                                                                                                          
                                                        

வி.சி.வில்வம்

No comments:

Post a Comment