சென்ற
வாரம் தமுஎகச - வின் "களம்" சார்பில், திருச்சியில் பொங்கல் விழா
நடைபெற்றது. நூல் வெளியீடு, கவியரங்கம், உரையரங்கம் என ஏகப்பட்ட
நிகழ்வுகள். ச.தமிழ்ச்செல்வன், நந்தலாலா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
என்றுமே இல்லாத வகையில், அன்று நான் முதல் வரிசையில் அமர்ந்திருந்தேன்.
நிகழ்ச்சியின் முந்தைய நாளிரவில், அறவே தூங்காமல் இருந்திருந்தேன். எனவே
நிகழ்ச்சி நடைபெறும் போது, முதல் வரிசையில் நன்றாகத்
தூங்கியிருக்கிறேன்.
இதை
மேடையில் இருந்து கவனித்த நந்தலாலா, என் அருகில் இருந்த ஒரு பத்திரிகை
நண்பரிடம், "வில்வத்தை எழுப்புங்கள்" என சைகை மொழி பேசியிருக்கிறார். ஆனால்
நண்பரோ அதைப் புரிந்து கொள்ளவில்லை. நானோ தொடர்ந்து தூங்குகிறேன். என்ன
செய்வதென்று நந்தலாலாவுக்குப் புரியவில்லை.
அப்போதுதான்
அந்த வினோத நிகழ்வு நடந்தது. நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்த என்னை யாரோ
உலுப்புவது போல் இருந்தது. பதறியடித்து கண் விழித்தேன். என்னருகில் இருந்த
பத்திரிகை நண்பர், "வில்வம் உன்னை மேடைக்கு அழைக்கிறார்கள், போ !"
என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்னை எதற்கு மேடைக்கு
அழைக்கிறார்கள்? நானோ இன்னும் தூக்கம் கலையாமல் இருக்கிறேன்.
இருப்பினும்
சுதாரித்துக் கொண்டு மேடைக்குப் போனேன். நந்தலாலா என்னை அழைத்து, கையில்
10 புத்தகங்களைக் கொடுத்து, மேடையில் இருக்கிற எல்லோரிடமும் இந்த நூலைக்
கொடு என்றார். ஒன்றுமே புரியாமல், எல்லோரிடமும் வரிசையாக நூலைக்
கொடுக்கிறேன். அதை ஒளிப்படம் வேறு எடுத்தார்கள். ஏதோ...அந்த நூலை நான்
வெளியிடுவது போல. எல்லாம் முடிந்து கீழே வந்துவிட்டேன்.
பிறகுதான்
எனக்கு எல்லாமே புரிந்தது. என்னை உசுப்பிவிட வேண்டும் என்பதில் நந்தலாலா
தீர்மானமாக இருந்துள்ளார். நிகழ்ச்சித் தொகுப்பாளரிடம் கூறி, வில்வத்தை
மேடைக்கு அழையுங்கள் எனக் கூறியுள்ளார். அவரும் கூப்பிடுகிறார்...
கூப்பிடுகிறார்... நான் போகவில்லை. நான்தான் தூங்கிக் கொண்டிருக்கிறேனே!
பிறகுதான் பக்கத்தில் உள்ளவர், உலுப்பி எழுப்பியுள்ளார். வெளியிடப்பட்ட
நூலை எல்லோருக்கும் "சும்மாச்சுக்கும்" கொடுக்கச் சொல்லி, நந்தலாலா என்
தூக்கத்தை நிறுத்தியுள்ளார். அந்த நேரத்தில் எனக்கு வருத்தமும்,
வெட்கமும் இருந்தது. ஒரு வாரம் ஆனதால், இதைப் பதியத் தோன்றியது.
No comments:
Post a Comment