Saturday, February 8, 2014

ஜப்பானில் ஒலிக்கும் தமிழர் குரல்!

  உலகின் அனைத்து நாடுகளிலும் தமிழர்கள் வாழ்கிறார்கள். சில நாடுகளின் பெயர்களைப் புதிதாய் கேட்போம். அங்கும் தமிழர்கள் இருப்பதைக் கேட்டு வியப்படைவோம். மலேசியா, சிங்கப்பூர், அரபு நாடுகளில் தமிழர்கள் வாழ்வதில் நமக்கு ஆச்சர்யம் இல்லை. அதேபோல அய்ரோப்பிய நாடுகள் முழுக்கவும் கூட தமிழர்கள் நிறைந்துள்ளனர். இன்னும் சொன்னால் ஆப்பிரிக்க நாடுகளில் கூட நம்மவர்கள் இருக்கிறார்கள். ஆனால் எண்ணிக்கையில் குறைவு. அதேபோன்று ஜப்பானிலும் தமிழர்கள் குறைவாய் இருக்கின்றனர்.  "ஒ.. அந்த நாட்டிலா இருக்கின்றீர்கள்?" என்கிற வியப்புக் கேள்விக்குள்ளே ஜப்பானும் வருகிறது. 

பொதுவாக வெளிநாட்டில் வாழ்கிறவர்கள் தங்களுக்குச் சிறப்புத் தகுதி இருப்பதாக நினைத்துக் கொள்வதுண்டு. சொந்த நாட்டிற்குள் வரும்போது அந்த மிடுக்குத் தெரியும். அதேநேரம் வெளிநாட்டில் வசிக்கும் போது மிக இயல்பாகவே இருப்பர். தானுண்டு தன் வேலையுண்டு எனத் திகழ்வர்.  சக தமிழர்களைச் சந்திப்பதிலும், அறிமுகம் கொள்வதிலும் ஆர்வமின்றி இருப்பர். அந்த நாட்டில்  உள்ள தமிழ் அமைப்புகளில் பங்கேற்காமலும், பல நேரம் அது தொடர்பாய் அறியாமலுமே காணப்படுவர். இதற்கு ஆர்வமின்மைக் காரணமாக இருந்தாலும், வெளிநாட்டில் ஏன் இந்த வேண்டாத வேலை? இதனால் பணி பாதிக்கப்பட்டால் என்ன செய்வது? என்கிற பயமாகவும் இருக்கலாம். 

ஆனால் எல்லோரும் அப்படியா என்றால் கிடையாது. பத்தாயிரம் பேருக்குப் பத்து பேர் எங்காவது ஒரு மூலையில் வேலை செய்கிறார்கள். அந்தப் பத்துப் பேரைத்தான் சிறுபான்மை என்றும், உங்களால் என்ன செய்துவிட முடியும் என்றும் பெரும்பான்மைக் கேள்விக் கேட்கிறது. ஆனால் அந்தப் பத்துப் பேர் உருவாக்குகிற "நெருப்புப் பொறி"யில் தான் பல ஆயிரம் பேர் வெளிச்சம் பெறுகிறார்கள்.

அப்படியான 'பொறி" வைக்கிற பணியை நம் தோழர் ஒருவர் செய்து வருகிறார். அதுவும் ஜப்பானில். அந்த நாட்டின் வரலாற்றிலே இல்லாத ஒன்றையும் அவர் செய்திருக்க, ஜப்பான் அரசாங்கம் அவரை மேலும் கீழும் பார்க்கிறது. ஆனால் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. காரணம் அவர் செய்த நேர்மையான முறைகள். சில நாள்கள் விடுப்பில் தமிழகம் வந்த அவரை, உண்மை இதழுக்காய் சந்தித்தோம். கொஞ்ச நேரம் அவருடன் இருப்போம், வாருங்கள். 

உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

என் பெயர் இரா.செந்தில்குமார். மன்னார்குடி என் சொந்த ஊர். தஞ்சை பூண்டிக் கல்லூரியிலும், சென்னையில் மேற்படிப்பும் முடித்து, 2002 ஆம் ஆண்டு ஜப்பான் சென்றேன். 12 ஆண்டு கால வெளிநாட்டு வாழ்க்கையோடு இன்னும் தொடர்கிறேன். 

உங்களின்  கொள்கை என்பது ? 

மன்னார்குடி தேரடி திடல் அருகே எங்கள் வீடு. அங்கு நடைபெறும் கூட்டங்கள் அனைத்தையும்  நான் விரும்பினாலும், இல்லாவிட்டாலும் கேட்டுத்தான்   ஆக வேண்டும். எனினும் நான் விரும்பியே கேட்டேன். அப்போது என் வயது பத்தாக இருந்தது. மிகச் சிறிய வயது. எனினும் திராவிடர் கழகக் கூட்டங்களும், கம்யூனிஸ்ட் கூட்டங்களும் எனக்குள் ஏதோ செய்து வந்தன. ஒரு விசயத்தை வீட்டில் ஒரு மாதிரி சொல்ல, கூட்டங்களில் வேறு மாதிரி சொல்கிறார்களே என்கிற சிந்தனையின் தொடர்ச்சியில் தொடங்கியது  என் கருத்தாக்கம்.  என் வயது நண்பர்கள் விளையாட்டிலும், திரைப்படத்திலும் இருக்க நான் வேறு மாதிரியாக காணப்பட்டேன். கூட்டங்கள் நடைபெறும் தொடர் வேளைகளில், எல்லோரும் வீடுகளில் இருக்க, நான் மட்டும் மேடை முன் முதலில் நின்று, கடைசி ஆளாய் திரும்புவேன்.  இறுதியாய் எனக்கான கருத்தை உருவாக்க அதுவே காரணமானது.

கூட்டங்கள் கேட்பதற்கு வீட்டில் எதிர்ப்பு இல்லையா ?

என்னமோ தெரியவில்லை, யாருமே எதிர்க்கவில்லை. ஒருவேளை படிப்பிற்கு இடையூறு இல்லாத வகையில் நான்  செயல்பட்டது அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். பள்ளி இடைவேளையில், வாசல் முன்பு  திராவிடர் கழகத் தெருமுனைக் கூட்டம் நடைபெறும். நன்றாக நினைவிருக்கிறது. சாரங்கன் அய்யாவை அங்கு பார்ப்பேன். இருக்கும் கொஞ்ச நேரத்திலும் தெருமுனைக் கூட்டம் கேட்டுவிட்டு, பள்ளிக்கு ஓடுவேன். இதுபோன்ற தெருமுனைக் கூட்டங்கள்  நேரடியாக இல்லாவிட்டாலும், மறைமுக விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். இப்படித்தான் நான் வளர்ந்து கொண்டேன்.

ஜப்பான் வாழ்வு குறித்துச் சொல்லுங்கள் ?

தமிழ்நாட்டில் இருந்த வரை பல்வேறு கூட்டங்கள் செல்வதும், படிப்பதுமாக இருந்தேன். ஜப்பான் சென்ற பிறகு என்னால் வேலை, வீடு என்றிருக்க முடியவில்லை. அப்போது  "மனவெளிப் பயணம்"  (manavelippayanam.blogspot.inஎன்கிற வலைப்பூ தொடங்கி எழுதி வந்தேன். தினமும் தமிழ்நாடு, இந்தியச் செய்திகளை ஒரு மணி நேரம் வாசித்து வந்தேன். இப்போதும் வாசிக்கிறேன். பணிச்சுமை அதிகம் இருந்தாலும், அதை வாசிக்காமல் இருந்தால் சுமைக் கூடுவதாய் உணர்ந்தேன். என் வாசிப்பில் பத்துக்கும் மேற்பட்ட இலக்கிய இதழ்கள் உள்ளிட்ட எந்த ஒன்றையும் நான் விடவில்லை. ஜப்பானில் எங்காவது தமிழர்கள் கிடைத்தால் பேசி மகிழ்வேன். ஏனெனில் அங்கு நம்மவர்கள் குறைவு. இப்படியான வேளையில் அங்கு தமிழர் திருநாளில் தமிழர்கள் ஒன்று கூடுவார்கள் என்பதை அறிந்து மகிழ்ந்தேன். ஆனால் மகிழ்வதற்கு அங்கு ஒன்றுமில்லை என்பதைப் பிறகு அறிந்தேன். தமிழர்களை ஒன்று திரட்ட  வேண்டும், பயன் தரும் எதையாவது செய்ய வேண்டும் என்பது என் எண்ணமாக இருந்தது. குறைந்தபட்சம் சமூகம் குறித்துப் பேசிக் கொள்ளவாவது தமிழர்கள் வேண்டும் என்பது என் ஆவலாக இருந்தது. 

தமிழர்கள் கிடைத்தார்களா?

கிடைத்தார்கள். பொங்கல் விழா குறித்துச் சொன்னேனே! அங்கு ஒன்றிரண்டு பேரைக் கண்டுபிடித்தேன். அவர்களுடன் நட்பு பாராட்டினேன். தொடர்ந்து என் முயற்சிக்குக் கொஞ்சம்  தமிழர்கள் கிடைத்து வந்தார்கள். இப்படியான நிலையில்தான் ஈழப்போரில் தமிழர்கள் அநியாயமாய் செத்துப் போனார்கள். என்னால் ஜப்பானில் இருக்கவே முடியவில்லை. என்றாலும் எதையாவது செய்ய வேண்டும் எனத் தவித்தேன். எனக்குத் தெரிந்த அனைத்து இணையத் தளங்களிலும் எழுதிக் குவித்தேன். பேஸ்புக், ஆர்குட் போன்ற வலைத் தலங்களையும் ஆக்கிரமித்தேன். ஆனால் நான் செய்வது போதுமானதாக இல்லை. எனினும் என் செயல்கள் எனக்கு மேலும் சில நண்பர்களைத் தேடித் தந்தது. அந்த நேரத்தில் நீயா? நானா? என்கிற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று ஜப்பானில் பதிவு செய்யப்பட்டது. அதில் நான் பேசினேன். வேறு சிலரும் பேசினார்கள். அங்கே நாங்கள் அடையாளம் தெரிந்து கொண்டு, கைக்கோர்த்தோம். இப்படியான வேளையில் தான் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் இறப்பைக் கணினி வழி காண்கிறோம். என்ன செய்வதென்றே தெரியாமல், ஆனால் செய்ய வேண்டும் என்கிற கொதிப்பு அதிகமானது. உடன் நான்கு பேர் ஒன்று சேர்ந்து, ஒன்றைச் செய்தோம். 

என்ன செய்தீர்கள் ?

ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்ற பொருளில் ஒரு விளக்க மனுவை, ஜப்பானிஷ் மொழியில் எழுதி, ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் கொடுக்கிறோம். ஒரு 0.30 நிமிடம் எடுத்துக் கொள்ளுங்கள் என ஆசியாவிற்கான வெளியுறவுத் துறை அதிகாரியிடம்  கொண்டு விட்டார்கள். நாங்கள் பேசினோம். எல்லாவற்றையும் பேசினோம். எங்கள் தமிழர்களை ஜப்பானாவது காப்பாற்ற வேண்டும் எனக் கேட்டோம். அந்த அதிகாரி அனுமதித்த முப்பது நிமிடத்தில் இருந்து இரண்டு மணி நேரமாகச் சந்திப்பை நீட்டித்தார். உங்கள் நியாயம் எங்களுக்குப் புரிகிறது, ஏற்கிறோம். ஆனால் இந்தியா எதனாலோ மறுக்கிறதே என்றார். எல்லா இடத்திலும் இந்தியா இடையூறாக இருக்கிறதே என எண்ணி, இந்தியத் தூதரகம் முன்பு நாங்கள் உண்ணாநிலைப் போராட்டம் செய்ய வேண்டும் என்றோம். அவர்கள் ஆச்சர்யமாகப் பார்த்தார்கள். அவர்களுக்குப் அதுவெல்லாம் புதிது. வலியுடன் போராடி ஒரு வழியாய் அனுமதி பெற்றோம். காலை 8 முதல் 6 முடிய என்று நிர்ணயித்து, சில நிபந்தனைகள் கொடுத்தார்கள். நாங்களும் தேதி அறிவித்து, இணைய வழி விளம்பரம்  செய்து, 30 தமிழர்களாவது கூடுவார்கள் என்று தயாரானோம். ஆனால் நூறு தமிழர்கள் உண்ணாவிரத இடத்தை நிரப்பிவிட்டனர். குடும்பத்துடன், குழந்தைகளுடன் வந்தனர். சிலிர்த்துப் போனோம். போராட்டக் கோரிக்கைகளை தமிழ், ஆங்கிலம், ஜப்பானிஷ் ஆகிய மொழிகளில் எழுதி வைத்தோம். நிறைய தமிழர்களும், ஒரு ஜப்பானியக் குடும்பமும் கையெழுத்துப் போட்டார்கள். 

இந்தியத் தூதரகம் என்ன செய்தார்கள் ?

இப்படிச் செய்வோம் என்று நினைத்திருக்கவே மாட்டார்கள். அதுவும் பெருந்திரள் உணர்வோடு! உண்ணாநிலை முடிந்து கோரிக்கைக் கொடுக்கச் சென்றோம். தூதர் இல்லை, வேறு அதிகாரியிடம் கொடுங்கள் என ஒரு பஞ்சாபியைக் காட்டிச் சென்றார்கள். அவரிடம் பேசினோம். அவர் சொன்னார். நான் ஏற்கனவே உங்கள் விசயங்களை அறிவேன். ஒரு அதிகாரியாய் உங்கள் நிலையை நான் ஆதரிக்க மாட்டேன். தனி மனிதனாய் உங்கள் பக்கம்தான் நியாயம் என்பேன் என்றார். ஜப்பான் அரசாங்கம் உண்ணாநிலை போராட்டத்திற்கு அனுமதி வழங்கியது வரலாற்று சாதனை. இளைஞர்கள் நீங்கள் சாதித்துள்ளீர்கள் என்றார்கள். 

உங்களின் பணிகளில் வேறு என்ன ?

"முழுமதி" என்கிற அறக்கட்டளையை நண்பர் ஒருவர் இயக்கி வருகிறார். அதில் அய்ம்பது பேர் அளவில் உறுப்பினர்கள். தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்கு உதவி செய்வது அதன் நோக்கம். பள்ளிகளைத் தத்தெடுப்பது, கல்வி உதவித் தொகை வழங்குவது எனத் தொடர்கிறோம். உறுப்பினர்கள் ஆண்டுக்கு ஒரு தொகை வழங்குவோம். பிறந்த, திருமண நாள்களில் நம் தமிழர்கள் பணம் தருகிறார்கள். தமிழகம் மட்டுமின்றி, ஜப்பானில் புகுசிமா அணு உலை விபத்தின் போது நேரடியாகச் சென்று உதவிகள் செய்தோம். பூகம்பம் ஏற்பட்ட பகுதிகளிலும்  உதவி வருகிறோம். 

சீனப் பொருள்கள் ஜப்பானைப் பாதித்துள்ளதா ? 

இல்லை என்றே சொல்வேன். சாதாரண மற்றும் தொழில் நுட்பப் பொருள்களையும் ஒரு காலத்தில் ஜப்பானே தயாரித்தது. இப்போது சாதாரணப் பொருள்களை  சீனா வழங்குகிறது. அதுபோன்ற பொருள்களை யார் வேண்டுமானாலும் தயாரிக்கலாம். ஆனால் தொழில் நுட்பப் பொருள்களில் ஜப்பான் மேலும் வளர்ந்தே வருகிறது. 

உலகமயத்தால் ஜப்பான்  பாதிக்கப்பட்டுள்ளதா ? 

உலகமயத்தால் ஜப்பான் பாதிக்கவில்லை. மாறாக உலகமயம் மூலம் வெற்றி பெற்ற நாடுகளில் ஜப்பானும் ஒன்று. 

ஜப்பான் மொழி ?

ஜப்பானில் "காஞ்சி" என்கிற வடிவில் 2000 எழுத்துகள் உள்ளன. ஒரு ஜப்பானிய மாணவன் 8 ஆம் வகுப்பு முடிக்கும் போதே, இந்த காஞ்சி எழுத்துக் கொண்டு அவரால் எழுத, வாசிக்க முடியும். அவ்வளவு தாமதத்திலும் அவர்கள் மொழியை விடவில்லை. ஆனால் நமக்கு இருப்பதோ 247 எழுத்துகள். அதையே படிக்க மறுக்கிறோம். ஆங்கிலம் படிப்பவர்கள் கூட, தமிழைக் கண்டிப்பாக இரண்டாவது மொழியாகப் படிக்க வேண்டும் என்கிற நிலை வேண்டும். தமிழே தெரியாத நிலையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. 


ஜப்பானியர்கள் குறித்து ? 

நிறுவனங்களிடம் தங்களை ஒப்படைத்துக் கொள்கிறார்கள். விளைவு மன அழுத்தம்.  இலக்கியம், புத்தகங்கள், திரைப்படம் குறைந்து விட்டன. அமெரிக்காவின் பண்பாட்டு ஆதிக்கம் அதிகரிக்கின்றன. ஆண்டுக்கு தற்கொலைகளின் எண்ணிக்கை முப்பதாயிரம் தொட்டுவிட்டது.  மற்றபடி உண்மைக்கும், உழைப்புக்கும் பேர் பெற்றவர்கள். மத உணர்வு என்பது மிகச் சிறியது. ஒரு தெருவில், ஒரு வீட்டில், ஒரு கண்ணாடி உடைந்தால் உடனே சரி செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். (Broken Window Theory) 
இல்லாவிட்டால் அடுத்தடுத்த கண்ணாடிகளுக்கும் ஆபத்து வரும் என்கிறார்கள். அந்தக் கண்ணாடியை வீட்டுக்காரர் அல்லது பக்கத்து மனிதர் அல்லது வழிப்போக்கர் அல்லது அரசாங்கம் யாராவது சரி செய்ய வேண்டும். தவறினால் எல்லோருக்கும் ஆபத்துப் பரவும் என்பது அவர்களின் எண்ணம். 

பெரியார் ?

அவர்தான் எல்லாவற்றிற்கும் அடிப்படை. அடிமை மனப்பான்மையை ஒழித்தவர். மற்ற மாநிலங்களில்  ஒரு சிலர் முற்போக்குப் பேசினர். ஆனால் பெரியார் பெரிய தாக்கம் செய்தவர். திராவிடர் கழகத்திற்கு அரசியல் வேண்டாம் எனப் பெரியார் எடுத்த முடிவு வராலற்றுச் சிறப்பு மிக்க முடிவு. இயக்கம் நீர்த்துப் போகாமல் இருப்பதற்கு அது முக்கியக் காரணம். பெரியாரின் அடிப்படைக் கொள்கைகள் பிறழாமல் இருப்பதற்கும் தேர்தல் மறுப்பு ஒரு சிறப்பு. பெரியார் அழுத்தமாகக் கொள்கையைச் சொன்னவர் என்கிறார்கள் சிலர். அப்படிச் சொன்னதாலே இந்தளவு தமிழ்ச் சமூகம் வெற்றிப் பெற்றுள்ளது. தொடர்ந்து அக்கொள்கையை முன்னெடுத்து, சமூகத்தை மேம்படுத்துவோம். நன்றி!                                                                                                                                                                                                                                    
                                                                                                                                                                   சந்திப்பு  - வி.சி.வில்வம்           
                                                                                                                                

  

1 comment:

  1. அன்பள்ள செந்தில் உங்களுக்கு தமிழன்னை எப்போதும் துணை இருக்கட்டும்.

    ReplyDelete