புதுக்கோட்டை அருகே எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவருக்கு அண்மையில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்யப் பேசி முடித்தார்கள். ஒரு சில நாட்கள் சென்ற பிறகு, அப்பெண்ணுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. பரிசோதனைக்குப் பின்னர் அப்பெண்ணுக்கு
வயிற்றில் "புற்றுநோய் கட்டி" இருப்பது தெரிய வருகிறது.எல்லோருமே ஆடிப்போனார்கள். குணப்படுத்தவே முடியாத கட்டி என்றும், புற்றுநோயின் கடைசியில் அவர் இருப்பதாகவும் மருத்துவர்கள் அறிவித்துவிட்டனர். இந்நிலையில் என்ன நடந்தது தெரியுமா நண்பர்களே? இன்றைய தினம் (02.09.2012) அப்பெண்ணுக்கும், என் நண்பருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது. அதற்கு என் நண்பன், " நான் அப்பெண்ணை திருமணம் செய்வதாக ஒப்புக் கொண்டுவிட்டேன். வார்த்தை மீறுவது தற்கொலைக்குச் சமம். நடப்பது நடக்கட்டும் !" என இயல்பாகக் கூறினான்.
அதேபோன்று திருச்சி கே.கே. நகரில் வசிக்கும் இன்னொரு நண்பரின்
நேயமும், நினைவில் வருகிறது. ஒரு வயதான தம்பதிக்கு 23 வயதில்
ஒரு மகள். பக்கத்து வீட்டில் என் நண்பர் இருக்கிறார். அப்பெண்ணுக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கிறது. வயதான அம்மா,அப்பாவால் தினமும் மருத்துவமனைக்குச் செல்ல இயலவில்லை. இந்நிலையில் என் நண்பரிடம் வருகிறார்கள். மாத்திரைகள் வாங்கவும், மருத்துவமனைப் போகவும் தொடர்ந்து அவர் உதவுகிறார். ஆனாலும் நோய் குணமாகவில்லை. குணமாகாது என்றும் மருத்துவர்கள்கூறிவிட்டார்கள்.
இறந்து போகவும் அப்பெண் தயாராகிவிட்டார். இந்நிலையில் என்ன நடந்தது தெரியுமா நண்பர்களே? உதவி செய்யப் போன நண்பனால் ஓர் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை, அதேநேரம் அப்பெண்ணின் உணர்வுகளைச் சிறிதும் காயமின்றி காப்பாற்ற முடிந்தது. ஆம்! அப்பெண்ணையே நண்பர் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின் 15 ஆண்டுகள் கழித்து அப்பெண் இறந்து போனார். திருமண வாழ்வில் ஒருநாள் கூட அவர்கள் உடலுறவு வைத்துக் கொண்டதில்லை. காரணம் அதற்கான உடல் தகுதியை அப்பெண் பெற்றிருக்கவில்லை.
நான் சொல்ல வருவது இதைத்தான் நண்பர்களே ! முதல் செய்தியில்
நிச்சயதார்த்தம் செய்து கொண்ட நண்பரும், இரண்டாவதில் திருமணம்
செய்து கொண்டவரும் நம்மிடையேதான் வாழ்கிறார்கள். நாமும்தான்
வாழ்கிறோம்! நான் யாரையும் பிழை சொல்லவில்லை. மாறாக
நாம் அதிகம் சிந்திக்க வேண்டியிருக்கிறது.
வி.சி.வில்வம்
No comments:
Post a Comment