Tuesday, January 29, 2013

ஜாதி மறுப்பே! சமூகக் காப்பு!

                                             
ஜாதி மறுப்பே! சமூகக் காப்பு!!


இந்தியாவிற்குப் பார்ப்பனர்கள் செய்த கொடுமைகளுள் ஆகப் பெரியது ஜாதியாகும்! உலகில் வாழும் மக்களுக்குள் எண்ணற்ற வேறுபாடுகள் உள்ளன. அவை மாறக் கூடியதும், மறையக் கூடியதும் ஆகும். ஆனால் ஜாதியானது, உலக நஞ்சுகளில் எல்லாம் தலையானது. ஜாதிக்கு எதிரான போராட்டம், பல காலம் நாட்டில் நடந்துள்ளது. ஆனால் அதற்கென்ற தொடர்ச்சி இன்றி, தொய்வாகிப் போனது.  ஈரோட்டின் ஈ.வெ.இராமசாமி, தமிழ்நாட்டின் பெரியாரான போது புதிய வரலாறு எழுந்தது. அதன் விளைவாய்  எண்ணற்ற மாற்றங்கள் நிகழ்ந்தன.


இன்றைக்கு நாம்  அனுபவிக்கும் அத்தனையும் அதில்தான்  அடங்கும். அன்றைய வலியும், வரலாறும் புரியாதவர்கள் பெரியாரைப் பெரிது செய்யாமல் இருக்கக் கூடும். ஆனால் எத்தனை  நாள் தெரியாமலும், தெரிந்தும் புரியாமலும், புரிந்தும் ஏற்காமலும் இருக்க முடியும்?


உலக நஞ்சுகளில் மிக முக்கிய ஜாதிய நஞ்சால், இன்றைக்கு எத்தனை மரணங்களை கண்டு வருகிறோம். வாழை மரங்களைப் போல, மனிதர்களை வெட்டுகிறார்கள். நம் நாட்டில் அரிவாளை தொடர்ந்து அசிங்கப்படுத்துகிறார்கள். ஒவ்வொரு பொருளையும், அதனதன் தேவைக்கே பயன்படுத்த வேண்டும். அறிவியல் அதைத்தான் சொல்கிறது.  இன்றைக்கு மொத்த அறிவியலையும் அனுபவித்துக் கொண்டு, ஆனால் காட்டுமிராண்டி யாய் சமூகத்திற்குத் தொல்லைக்  கொடுப்போம்  என்றால், எப்படி அதை அனுமதிக்க முடியும்?


எனவே எல்லா வகையிலும் ஜாதி என்பது வேரோடும், வேரடி மண்ணோடும் பிடுங்கி எறியப்பட வேண்டியது அவசர, அவசியமாகும் ! அதற்கான வழிகளைகளையும்  பெரியார் ஏராளமாய் சொல்லிச் சென்றுள்ளார். அவற்றை ஏற்று நடந்தாலே, இச்சமூகம் எழில் கொஞ்சும் பூங்காவாக மாறிப் போகும். அந்த வழிகளில் ஒன்றுதான் ஜாதி மறுப்புத் திருமணங்கள். "திருமண செய்ய  ஒரு பெண்ணுக்கு ஆண் வேண்டும். ஒரு ஆணுக்குப்  பெண் வேண்டும். இதற்கு ஜாதி ஏன் வேண்டும்?" என்பது சாதாரண மனிதக் கேள்வியாகும்.

 ஒரே ஜாதிக்குள், அதுவும் ஒரே பிரிவிற்குள் திருமணம் செய்து வைக்கப்  பெற்றோர்கள் அனுபவிக்கும் வேதனைகள் சொல்லி மாளாது. ஒரே பிரிவில் இரண்டு, மூன்று மாப்பிள்ளைகளே  இருப்பார்கள். அதில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் கட்டாயம் ஏற்படும். ஒரே பிரிவின்றி, வேறு சில பிரிவுகளிலும் மாப்பிள்ளைத் தேடினால் பத்து, இருபது தேறும். ஜாதியின் அனைத்துப் பிரிவுகளிலும் தேடும் போது முப்பது, நாற்பது தேறும். இதையே ஜாதிகளை மறுத்துப் பார்த்தால் நூற்றுக்கணக்கில் வாய்ப்புகள் குவியும். ஆக விசாலமான சிந்தனைகளுக்கு ஏற்ப நமக்கு வாய்ப்புகளும் , வசதிகளும் வந்து சேரும். நெருங்கிய உறவுக்குள் திருமணம் செய்து கொண்டால் பாதிப்புகள் பல  உருவாகலாம் என மருத்துவம் கூறுகிறது. அதேபோல  ஒரே ஜாதிக்குள் திருமணம் முடிப்பதால் சிறப்புப்  பலன்கள் ஏதும் கிடைப்பதில்லை. இந்தப் பெண்  நம்முடைய ஜாதிதான், எனவே வரதட்சணை வாங்க வேண்டாம் என யாரும் முடிவெடுப்பதில்லை.  மாறாக ஒரே ஜாதியில் நடைபெறுகின்ற திருமணங்கள் ஆயிரக்கணக்கில் விவாகரத்தில் வந்து நிற்கின்றன. இதை எந்த ஜாதித் தலைவரும், சங்க உறுப்பினர்களும் வந்து சரி செய்வதில்லை. ஆனால் ஜாதி மறுப்புத் திருமணங்கள் செய்யக் கூடாது என மிரட்டுகிறார்கள். இவர்கள் சமூகம் வளர்ச்சி பெறக்கூடாது என விரும்புகிறவர்கள்.

 ஜாதி மறுப்புத் திருமணங்கள் என்பது,  ஏதோ இருவர் தொடர்புடைய தனி விசயமல்ல. அது ஒரு அற்புதமான சமூக மாற்றத்திற்கான வித்து.  ஜாதிகள் கலக்கும் போது மனிதர்கள் பிறப்பார்கள். மனிதர்களாக உருவாகும் போது  மனிதநேயமும் சேர்ந்து வரும், ஒற்றுமை உணர்வு வரும், உதவும் மனப்பான்மை எங்கும் நீக்கமற நிறைந்து காணப்படும். இதன் தொடர்ச்சியாய் சமூகம் மீது நமக்கு நம்பிக்கை உருவாகும். பக்கத்து மனிதனை நேசிக்கத் தொடங்குவோம். பொறாமை, பழி வாங்குதல்கள் நின்று போகும் வாழ்கையில் பிடிப்பு வரும். வாழ்வதற்கு ஆசை ஏற்படும் ! இது நமக்கான தனி மனித பலன்கள். சமூகப் பிரச்சினைகளில் வேற்றுமை  குறையும். ஒருமித்த உணர்வு பிறக்கும். உரிமைக்குக் குரல் கொடுக்க அது உதவும். மொழிப் பிரச்சினை, காவிரி, பெரியாறு  பிரச்சினைகள், ஈழப் பிரச்சினை, ஒரே ஒரு தமிழன் ஆப்பிரிக்கக் கண்டத்தில்  பாதிக்கப்பட்டு இருந்தாலும், அவனை மீட்கும் உணர்வு என நாம் அடையும் நன்மைகள் ஏராளம், ஏராளம்!

இவை எல்லாம் நம் கற்பனைப் புதினம் அல்ல. உலகம் முழுவதுமுள்ள மனிதர்களின் வாழ்வியல் நடைமுறை இதுதான். அவற்றை நோக்கி நம் பாதைகளை திசை திருப்ப வேண்டும். ஜாதிப் பிரச்சினைகளை ஒழித்து, மேற்சொன்ன மனித வாழ்வை நடைமுறைப்படுத்த அரசியல் அதிகாரத்தால் முடியும். ஆனால் சுய (பெரு) நலம் கருதி அவர்கள் இதைச் செய்யமாட்டார்கள். ஒவ்வொரு தனி மனமும்  முடிவு செய்யும் போது, நாமே இதைச் சாத்தியமாக்கிக் கொள்ளலாம். இவ்வளவு பயன்களும் இருப்பதால்தான் காதலை நாம் வரவேற்கிறோம். காதல் திருமணங்கள் பெரும்பாலும் ஜாதி மறுத்த, சமூக நலனாகவே இருக்கும். காதலர்களுக்கு ஜாதி மறுக்க வேண்டும் என்ற எண்ணமில்லை எனினும் ஜாதியை விட காதல் பெரிது என்கிற முடிவு துணிச்சலானது. அந்தக் காதல் விரும்பியவரோடு சேர்ந்து வாழ வைக்கிறது, ஜாதியைச் சிதைக்கிறது, சக மனிதர்களை  நேசிக்கத் தூண்டுகிறது. அதேநேரம் காதல் என்பதை உணர்ச்சிகளின் வடிகாலாகவும், புரிந்து கொள்ளாமலும் தொடரும் போது அது தோல்வியில் முடிகிறது. அந்நிலைகள் மாற வேண்டும். 

எனவே சமூகம் மாறவேண்டும் என நினைக்கிற ஒவ்வொரு மனிதரும், கட்டாயம் ஜாதியை மறுக்க வேண்டும். பெரியார் சிந்தனையாளர்கள், மொழிச் சிந்தனையாளர்கள், கம்யூனிச தோழர்கள் உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சமூக இயக்கங்களும் ஜாதி மறுத்த மனிதர்களாக உலா வர வேண்டும். பிறகு படிப்படியாகப்  பொது மக்களையும் அந்நிலைக்கு அழைக்க வேண்டும். அப்படி செய்கிற போது, மேற்சொன்ன நன்மைகள் முதலில் நமக்குக் கிடைக்காவிட்டாலும்,  ஜாதீயப் பிரச்சினைகள் வலுவிழந்து போகும் ! 

ஆகவே தோழர்களே ! இந்தச் செய்திகளையெல்லாம் முன்வைத்துத் தான் திராவிடர் கழகம் சார்பில் எதிர்வரும் நவம்பர் 25,சென்னை பெரியார் திடலில் "மன்றல்" எனும் தலைப்பிட்டு, ஜாதி மறுப்புத் திருமணம் செய்வோருக்கு பெரும் வாய்ப்புகளையும், வழிகளையும்  உருவாக்கிட முனைந்துள்ளது.

பெரியார் சுமரியாதைத் திருமண நிலையம் எனும் அமைப்பு இப்பணியை பல்லாண்டுகள் செய்து வருகிறது. அதன் வீரியத் தொடர்ச்சியாகத் தமிழ்நாடு முழுவதையும் ஒருங்கிணைத்து, பல்வேறு இயக்கங்கள், அமைப்புகளை ஒன்றுபடுத்தி செய்யவிருக்கிறது. இதில் கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள் என எந்த வேறுபாடுகளும் இல்லை. நாம் ஜாதி மறுத்த மனிதர்களாக, தமிழர்களாக விளைச்சல் கொடுக்க வேண்டும் என்பதுதான் அதன்  நோக்கம். திரள்வீர் ! திரள்வீர் !!  உங்களோடு உறவினர்களும், உங்களோடு நண்பர்களும் திரள்வீர்! சமூக  அமைப்புகள் இச் செய்தியைத் திக்கெட்டும் கொண்டு சேர்த்து, மாற்றத்திற்கான பயணத்தில் கரம் சேர்ப்பீர்!  சிந்திப்போம்... பின்னர் சந்திப்போம்! நவம்பர் 25!

                                                                                                                வி.சி.வில்வம்

No comments:

Post a Comment