தினமும் பிற்பகல்2 மணிக்குத் தொடங்கி, இரவு 9 மணிக்கும், விடுமுறை தினங்களில் காலை 11 மணிக்கும் தொடங்குகிறது.
பொங்கல் நிகழ்ச்சியும், புத்தகக் காட்சியும் :
சற்றொப்ப 750 புத்தகக் கடைகள் அறிவை விசாலமாக்குகின்றன. பொதுவாகத் தமிழர்கள் ஆண்டிற்கு நாற்பது, அய்ம்பது விழாக்களைக் கொண்டாடுகின்றனர். இதில் நம்முடையது என்றால் "பொங்கல்" மட்டுமே தங்கி நிற்கும். தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதி மக்களும்
சென்னையில் வாழ்கிறார்கள். இவர்கள் மற்ற விழாக்களுக்குச் சொந்த ஊர் செல்கிறார்களோ இல்லையோ தமிழர் திருநாள் பொங்கலுக்குக் குடும்பம் குடும்பமாகச் செல்வர். அதுசமயம் சென்னையே பாதியாகிவிடும்.
இந்த நேரத்தில்தான் ஒவ்வோர் ஆண்டும் புத்தகக் காட்சி தொடங்குகிறது. ஆனாலும் மக்கள் கூட்டம் குறையவில்லை. புத்தகக் காட்சியின் இடத்தை அவ்வப்போது மாற்றினாலும், தேடிப் பிடித்து அசர வைக்கின்றனர் நம் மக்கள். இரண்டொரு நாளில் விடுமுறைக்
கழித்து வரும் மக்களும் திரள், திரளாகச் சென்று மேலும் மெருகூட்டுவர்.
தமிழ்நாட்டிற்கே பெரியார் பாதை :
புத்தகக் காட்சியை மக்கள் இப்படிக் கொண்டாடுவது, பிற மாநிலங்களில் இருக்குமா எனத் தெரியவில்லை ? ஆனால் தமிழ்நாட்டில் கல்வியாளர்களும், குறைந்தபட்சம் படித்தவர்களும் மிகுதி. இந்த இடத்தில் பெரியாரையும், காமராசரையும் நன்றியோடு நினைத்துப் பார்க்கலாம்.
புத்தக அரங்குகளை விசாலமாக உருவாக்கி, நுழைவுக் கட்டணத்தை வெகுவாகக் குறைவாக்கிப் பார்வையாளர்களைக் குளிர்விக்கிறார்கள். தானியங்கி பணம் பெறும் வசதி, அரங்கம் குறித்தும், புத்தகங்கள் குறித்தும் முழுமையாக அறிந்து கொள்ள தொடு திரை கணினி வசதி, விற்பனையாளர்களுக்குத் தேவையான சில்லறை வசதி எனக் கூடுதல் சிறப்பைப் பெறுகிறது இப்புத்தகக் காட்சி .
மொத்தம் 15 வரிசைகள் அமைத்து, எண்ணற்ற விற்பனை நிலையங்கள் அரங்கை அழகுறச் செய்கின்றன. ஒவ்வொரு வரிசைக்கும் ஒரு தலைவரின் பெயரைச் சூட்டியுள்ளனர். அதாவது வரிசை எண் - 10,
பெரியார் பாதை என எழுதியிருக்கிறார்கள். ஒரு உதாரணத்திற்காக நாம் பெரியார் பாதை என எழுதியிருக்கிறோம். ஆனால் அங்கு ஆகப்பெரும்பாலும் "நூலோர்" பெயர்தான் இருக்கிறது. தமிழ்நாட்டிற்கே பாதை அமைத்தவர் பெரியார்தான் என்பது அங்குள்ள மக்களுக்குத் தெரியாதா என்ன ?
புத்தகம் கேட்கும் குழந்தை :
சற்றொப்ப 750 புத்தகக் கடைகளைத் துறைவாரியாகப் பிரித்தால் பொதுத் தன்மையுடையவை நிறைய இருக்கின்றன.கல்வி, ஆங்கிலம் மற்றும் குழந்தை நூல்களும் அதிகம் காணப்படுகின்றன. ஆன்மிகம் சார்ந்த நூல்கள் ஆங்காங்கே இருந்தாலும், ஆன்மீகத்திற்கு என்றே அமைக்கப்பட்டுள்ள தனி நிலையங்கள் ஜனவரி குளிரில் மேலும் காற்று வாங்குகின்றன. இப் புத்தகக் காட்சிக்கு மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து குவிகின்றனர்.பெரியார் புத்தக நிலையத்தைக் கடந்து சென்றது ஒரு குடும்பம். பத்து வயதுள்ள ஒரு சிறுமி,"அப்பா ! அப்பா ! எனக்கு ஒரு புத்தகம் வாங்கிக் கொடுப்பா !", எனக் கெஞ்சலாகக் கேட்டது. பொம்மைக் கேட்கும் வயதில், புத்தகம் கேட்கிறது குழந்தை. வாங்கிக் கொடுத்தால் அது வளர்ந்து கொள்ளும் !
நவீனமான பெரியார் புத்தக நிலையம் :
எண் - 227 இல் அமைந்திருக்கிறது பெரியார் புத்தக நிலையம். சீருடையில் இருக்கிறார்கள் தோழர்கள்! இடாப்புகள் (Bills) "பார் கோடு "மூலம் பதிவு செய்யப்பட்டு, இயந்திரம் மூலம் வெளியாகிறது. அழகழகான
வடிவமைப்பில், விதவிதமான விளம்பரங்கள் ஓர் தனித்தன்மையை ஏற்படுத்துகின்றன. புத்தக நிலையத்திற்கு முன்பு அழகான பொங்கல் பானை வைத்து, அது பொங்குவது போல வைத்து, ஆறு கரும்புகளை அதனருகே வைத்துத் தமிழர் திருநாளை மேலும் செழுமைப்படுத்தியிருந்தது பெரியார் புத்தக நிலையம். அதனருகே நின்று ஒளிப்படம் எடுத்துக் கொண்டனர் சிலர்.
பெரியார் பொங்கல் :
பொங்கல் அன்று புத்தகக் காட்சியில் பலருக்கும் பொங்கல் கொடுக்கப்பட்டது. "டப்பாவில்" வைத்து, அது மூடப்பட்டு, சிறிய கரண்டியுடன் 750 கடைகளுக்கும் வழங்கப்பட்டது. அதுதவிர பெரியார் புத்தக நிலையத்திற்கு வந்தோருக்கும், அவ்வழியே கடந்தோருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. "இது என்ன ?", என அவர்கள் கேட்ட போது தோழர்கள் சொன்னார்கள் இதுதான் "பெரியார் பொங்கல்!"
இந்த இனிப்பில் கூட ஓர் கசப்பு! பொங்கலால் ஏற்பட்ட தங்கல்! பெரியார் புத்தக வரிசையில் ஒரு புத்தக நிலையம் இருக்கிறது. அவை இந்து மதத்தை வலியுறுத்துகிற, பார்ப்பனீயப் புத்தகங்கள். அங்கு சென்று நம் தோழர்கள் பொங்கல் கொடுத்த போது, அங்கிருந்தவர் வாங்க மறுத்து,
நான் சாப்பிடமாட்டேன் என்று சொன்னதோடு, மேலும் சில விமர்சனங்களும் செய்துள்ளார். நம் தோழர்கள் மறுபேச்சின்றி அமைதியோடு வந்துவிட்டார்கள். நம்முடைய தோழமையும்,
அவர்களின் வெறுப்பும் எப்படி இருக்கிறது என்பதற்கான சான்று இது.
எனக்கான புத்தகங்கள் :
பெரியார் புத்தக நிலையத்தைக் கடந்து செல்வோருக்கு ஒரு வணக்கம் வைத்துவிட்டு, அய்யா வாருங்கள்! உள்ளே வந்து பாருங்கள் ! என நம் தோழர்கள் அழைக்கும் போது, அந்த மரியாதையை ஆச்சரியத்தோடும்,
ஆவலோடும் ஏற்கிறார்கள்! நெற்றியில் நாமம் போட்டு ஒருவர் வந்தார். அவர் அய்யங்காராக இருக்கலாம்; அம்பாசிடர் காராக இருக்கலாம். கடவுள் ஓர் பொய் நம்பிக்கை என்ற நூலும், கீதையின் மறுபக்கமும் கொடுங்கள் என்றார். மகிழ்ச்சியோடு எடுத்துக் கொடுக்கப்பட்டது. ஒருவர் 10 புத்தகங்கள் எடுத்துக் கொண்டு "தொகை எவ்வளவு?"
என்றார். ரூபாய் 190 என்றதும், "அட! இவ்வளவுதானா?" எனக் கேட்டுக் கொண்டே மேலும் 100 ரூபாய்க்கான புத்தகங்களை அள்ளி வந்தார். காவி வேட்டி அணிந்த சிலர், கை நிறையப் புத்தகம் வாங்கிச் சென்றனர்.
இவையெல்லாம் வழக்கமாக நம் நிலையத்தில் நடப்பவைதான். பெரியார் செய்து வைத்த அதிசயங்கள் இவை!
பெரியார் புத்தக நிலையத்தை நோக்கி ஒரு இணையர் வந்தனர். வந்ததும் அக்கணவர் வேறு இடத்திற்குப் போய்விட்டார். அப்பெண்மணி மட்டும் பெரியார் நூல்களை வாங்கிக் கொண்டார். சிறிது நேரத்தில்
அப்பெண்ணின் கணவர் வேறு சில நூல்களோடு வந்தார். அதைப் பார்த்த அப்பெண்மணி சொன்னார், "நீங்கள் உங்கள் துறைச் சார்ந்து வாங்கியுள்ளீர்கள். நான் என் துறைச் சார்ந்து வாங்கியுள்ளேன்", என்றார் சிரிப்போடு ! அதாவது நான் பகுத்தறிவுத் துறை என்கிறார் அப்பெண். இவை "எனக்கான புத்தகங்கள்" என அப்பெண்மணி கூறியபோது, அவரிடம் மகிழ்ச்சியையும், தோழர்களிடத்தில் பெருமையையும் காண முடிந்தது.
ஒற்றைக் கேள்விக்கே ஓடிப்போனவர்:
பெரியார் புத்தக நிலையத்தைக் கடந்து எல்லோரும் செல்கிறார்கள். கூடவே பார்ப்பனர்களும் போகிறார்கள். போகட்டும், நமக்கொன்றும் அதில் சங்கடமில்லை. ஆனால் ஒரு பார்ப்பனர் நம் புத்தகங்களை மேலும், கீழும் பார்த்துக் கொண்டே சென்றார். சென்றுவிட்டார் என்றுதான் நினைத்திருந்தோம், ஆனால் திரும்பி வந்துவிட்டார்.
நம் தோழர்களைப் பார்த்து, "ஏன் பொங்கல் பானை, கரும்பு எல்லாம் வைத்துள்ளீர்கள் ? உங்களுக்குத்தான் கடவுள் இல்லையே ?", என்று கேட்டார். நம் தோழர்கள் சிரித்தார்களே தவிர, பதில் சொல்லவில்லை.
காரணம் கேள்வியில் தகுதி இல்லை. மீண்டும் அவர், "அது என்ன பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி? என எழுதியுள்ளீர்கள். பறையர் புரட்டுக்குப் பதிலடி என எழுத முடியுமா? எனக் கேட்டார். தோழர்கள்
அமைதியாகச் சொன்னார்கள். "பறையர் என நீங்கள் சொல்லக் கூடியவர்கள் இந்த நாட்டிற்கு எந்தக் கெடுதலும் செய்யவில்லை. உங்களால் முடிந்தால் பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி எனும் நூலுக்கு மறுப்பு எழுதிப் பாருங்கள்" என்றனர். ஒன்றுமே சொல்லாமல் ஓடிப்போனார்.
புத்தகங்களால் என்ன கிடைக்கும் ?
புத்தகங்களால் எல்லாம் கிடைக்கும்! புத்தகங்களைத் தொடர்ந்து படிக்கும் போது, உங்களுக்கே அது பிடிக்கும்! புத்தகம் வாசிப்பதனால் அறிவு, ஆற்றல், சிந்தனை,உணர்ச்சி, மகிழ்ச்சி, கோபம், வேகம் என எல்லாமும் கிடைக்கும்.
தமிழர்கள் அனைத்தையும் பெற, புத்தகங்களைப் பெற வேண்டும் !
வி.சி.வில்வம்
No comments:
Post a Comment