சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் இருக்கிறது தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளி. மிகச் சிறந்த பள்ளி எனத் தமிழக அளவில் பெயர் பெற்றது. ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளை 1986,
87ஆம் ஆண்டுகளில் அங்குதான் முடித்திருந்தேன். இன்றைக்கும் அப்பள்ளியின்
தனித்தன்மையில் எள்ளளவும் மாற்றமில்லை; எனினும் எவ்வளவோ கூடுதல்
மாற்றங்கள்! நாம் பேசுவது கல்வி மற்றும் மதிப்பெண்கள் குறித்து மட்டுமல்ல;
படைப்பாளிகளாக மாறிப்போன ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் ஆற்றல்கள்
குறித்து! ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து சுழல் எனும் மாத இதழ்
நடத்துகிறார்கள்.
சமூகச் சிந்தனையுடன் அவ்விதழ் தமிழ்நாடு
முழுக்க வலம் வருகிறது. இதில் பெரு மகிழ்ச்சி ஒன்றும் இருக்கிறது.
ஆசிரியர்களின் வழித்தடத்தில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களும் இதழ்
நடத்துகிறார்கள்.
ஒரு பள்ளியில் ஆசிரியர்களும், மாணவர்களும்
தனித்தனியாக இதழ்கள் நடத்துகிறார்களா? நம்ப முடியவில்லையே! என நீங்கள்
எண்ணினால், நம்பித்தான் ஆக வேண்டும். காரணம், அந்த நம்பிக்கையை
அப்பள்ளியின் தலைமையாசிரியர் அள்ளிக் கொடுக்கிறார். இன்னும் சொன்னால்,
தந்தை பெரியாரின் சிந்தனையை ஒட்டிய பாதையில் அவர்களின் பயணம் இருக்கிறது.
சுழல் மாத இதழ்
வேலை நாளின் ஒரு பொழுதில் நாம்
பள்ளிக்குச் செல்கிறோம். எல்லோரிடமும் பேச வேண்டும் என நாம் கோரியபோது,
தலைமையாசிரியர் முகமலர்ந்து அனுமதிக்கிறார். சுழல் மாத இதழின்
பொறுப்பாளர்களைச் சந்திக்கிறோம். நாங்கள் இதழ் தொடங்கி 20 மாதங்கள்
முடிந்துவிட்டன. பள்ளி முடிந்து ஆசிரியர்கள் பேசிக் கொண்டிருப்போம்.
அப்போது சுழலத் தொடங்கியது எங்கள் சுழல்.
தமிழ்நாடு முழுக்க 1000 பிரதிகள்
அனுப்புகிறோம். மாணவர்களுக்குப் படிப்பு மட்டும் முக்கியமல்ல என்பது எங்கள்
கருத்து. சுழல் இதழில் மாணவர் அரங்கம் வைத்திருக்கிறோம். அதில் அவர்கள்
எழுதுகிறார்கள். நாங்களும் அவர்களுக்கு நிறைய இதழ்கள் மற்றும் படைப்புகளை
அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறோம். எந்த ஒன்றையும் நாங்கள் திணிக்க
விரும்பவில்லை. தாமே இச்சமூகத்தை உணர்ந்து, தாமே ஒரு கருத்தை உருவாக்கி,
தங்களைத் தாங்களே தயார் செய்து கொள்ளும் ஒரு சூழலை உருவாக்க
விரும்புகிறோம்.
கண்டுபிடிக்கும் கலை
வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றம் எனும்
அமைப்பு இப்பள்ளியில் செயல்படுகிறது. அதில் மாணவர்களுடன் நாங்கள் ஒன்று
சேர்வோம். அங்கு அவர்கள் கவிதை வாசிப்பார்கள் , ஓவியம் வரைவார்கள், தாங்கள்
வாசித்த படைப்புகள் குறித்து விமர்சனம் செய்வார்கள். ஆண்டுதோறும் ஜூலை
மாதம் ஒரு வாரம் விழா எடுப்போம். அங்கு எங்கள் மாணவர்களின் தனித்திறன்களைக்
கண்டுபிடிப்போம். அது அவர்களின் திறன்களை மேலும் வளர்த்தெடுக்க
எங்களுக்கு உதவும். இவ்வாறான செயல்பாட்டில், எங்கள் மாணவர்கள் வாசித்த
கவிதைகளை மொட்டுகளின் வாசம் எனத் தலைப்பிட்டு ஒரு நூலாகக் கொண்டு வந்தோம்.
தமிழ்நாட்டில் வெளியாகும் பிற இதழ்கள், புதிய நூல்கள், நாவல்கள் எனக்
கேட்டு, கேட்டு வாசிக்கும் நிலையில் அவர்கள் இருக்கிறார்கள்.
உயர் எண்ணம் உருவாக்கல்
மொழி வள ஆய்வு மையம் என ஒரு கூடம் எங்கள்
பள்ளியில் உள்ளது. அங்கு நல்ல பேச்சுகளை ஒளிபரப்புவோம். அதையும் அவர்கள்
தொடர்ந்து கேட்டு, வளர்கிறார்கள். அதேபோல சுபம் எனும் அமைப்பு உள்ளது.
மாணவர்களுக்காக மாணவர்கள் என்பது அதன்
தத்துவம். தினமும் உண்டியல் ஏந்தி வகுப்புகள் தோறும் செல்வார்கள். தங்களால்
முடிந்த காசுகளை மாணவர்கள் அளிப்பார்கள். அப்பணம் வாய்ப்பில்லாத
மாணவர்களுக்குச் செலவழிக்கப்படும். சக மனிதருக்குப் பயன்படும் வகையில் வாழ
வேண்டும் என்பதைச் சுபம் அமைப்பின் மூலம் உணர்த்தியுள்ளோம். மேற்சொன்ன
அத்தனை நிகழ்வுகளுக்கும் பின்னால் எங்களின் தலைமையாசிரியர் யாகு அவர்கள்
இருக்கிறார்கள்.
சிறந்த மாணவர்களை உருவாக்குவது மட்டும் அவர்களின் பணியல்ல,
அதைவிடச் சிறந்த ஆசிரியர்களை உருவாக்குவதும் அவர்களின் பணியாக இருக்கிறது.
அதனால்தான் நாங்கள் இப்படி இருக்கிறோம், என ஆசிரியர்கள் கூறி
முடித்தார்கள்.
சக ஆசிரியர்களின் பாராட்டுக்குரிய தலைமையாசிரியர் என்ன
சொல்கிறார்? பெரியார் தந்த பாடமல்ல; பாடமே பெரியார்! சந்தியாகு எனும்
பெயரை யாகு என மாற்றிக் கொண்டேன். பர்மாவில் இருந்து 1960 இல் தமிழகம்
வந்தது எங்கள் குடும்பம்.
புனேயில் உள்ள இறையியல் தத்துவக்
கல்லூரியில் (சேசு சபை) பயிற்சி மேற்கொண்டேன். ஏதாவது ஒரு தத்துவத்தை
விரும்பிப் படிக்கலாம் என்ற போது, நான் பெரியாரைப் படித்தேன். நான்
வாசித்து முடித்த நிறைய பெரியார் புத்தகங்கள், இன்னும் புனே இறையியல்
கல்லூரியில் உள்ளது. துறவறம் என்பது அனைத்தும் சேர்ந்தது என்றே நான்
நினைக்கிறேன். பழையது பேசுவது மட்டுமே என் நோக்கமல்ல. கலை, இலக்கியம்
போன்றவற்றில் ஆர்வமாக இருப்பேன். இசை குறித்துப் பேசுவேன், சினிமா
விமர்சனம் செய்வேன், நேற்றைய அரசியல் வரை தெரிந்து வைத்திருப்பேன்.
விளையாட்டு எனக்குப் பிடித்த ஒன்று. ஜெபம் செய்ய நேரமானாலும், மாலை
நேரங்களில் விளையாடாமல் இருந்ததில்லை. எல்லா விளையாட்டிலும் நான்
இருப்பேன். சுறுசுறுப்பாய் இருப்பதில் எனக்கு எப்போதுமே பிரியம். அதனாலே
எனக்கு நோய்கள் வருவதில்லை. மாத்திரை, மருந்துகளும் தேவைப்படுவதில்லை.
எனக்குப் பிடிக்காத ஒரே விளையாட்டு கிரிக்கெட். அதை அறவே வெறுக்கிறேன்.
கிளிப்பிள்ளை மாணவர்கள்
என் மாணவர்களிடம் நான் சமூகக் கருத்துகள்
பேசுவேன். மாணவர்கள் பேச வேண்டும், எழுத வேண்டும், நடக்க வேண்டும், ஓட
வேண்டும் என்பது என் விருப்பம். மாணவர்களுக்குப் படிப்பு மட்டும் போதாது.
இன்றைக்கு 9 ஆம் வகுப்பு வரை எல்லோரும் தேர்ச்சி என்கிறார்கள். இது
ஆசிரியர்கள், மாணவர்கள் இருவரின் வளர்ச்சிக்கும் தடை. மாணவர்களின்
உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத ஆசிரியர்களின் நிலை மாற வேண்டும். வெறும்
சதைப் பிண்டமான, கிளிப்பிள்ளை மாணவர்கள் நமக்குத் தேவையில்லை. இயல்பான,
ஆற்றல் கொண்ட தலைமுறையை உருவாக்குவது நம் கடமை.
மனித உறவு முக்கியம்
புத்தகம் வாசிப்பதில் குறைவு
ஏற்பட்டாலும், மனிதர்களை வாசிப்பதில் குறைவு இருக்கக் கூடாது என எண்ணுவேன்.
மாணவர்களுடன் நல்ல உறவு வேண்டும் என்பது என் அபிப்பிராயம். ஆசிரியர்கள்
வீட்டு நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் செல்வேன். விழாக்கள் நிறைய ஏற்பாடு
செய்வேன். அது உறவுகளை வளர்க்கும் என்பது என் நம்பிக்கை. ஓரியூர் என்ற
கிராமத்தில், 1991 இல் நான் முதன்முதலில் வகுப்பு எடுத்த 58 மாணவர்களுடன்
இன்றும் நட்பில் இருக்கிறேன். அவர்களுடன் சேர்ந்து என்னாலான சமூக சேவைகளைச் செய்து வருகிறேன்.
பெரியாரின் தாக்கம்
உடல் ஊனமுற்ற ஒரு இளைஞர், சக்கர
நாற்காலியில் எங்கள் பள்ளிக்கு வந்தார். ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு முன்
அந்த இளைஞரைப் பேசச் சொன்னேன். எங்கள் மாணவர்களுக்கு ஏதாவது ஒரு வழியில்
நாங்கள் தைரியத்தைக் கொடுக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் குப்பையாகச்
சேர்ந்துள்ள தாள்களை (paper), விடுதி மாணவர்கள் மூலம் சேகரிக்கச் சொன்னேன்.
ஆண்டு இறுதியில் அதை விற்று, சிறப்பான பொங்கல் விழா எடுத்தோம். அதேபோல சக
மாணவனுக்கு உதவவும், அவனை நேசிக்கவும் சுபம் என்றொரு அமைப்பை
ஏற்படுத்தியுள்ளோம். நல்ல மாணவர்களை உருவாக்குவதே ஆசிரியர் பணி. அந்த
வேலையைச் செய்வதோடு, ஆசிரியர்களை முடுக்கிவிடுவதையும் முக்கியக் கடமையாக
நினைக்கிறேன். முடிவு செய்துவிட்டால், செய்தே தீருவது என் இயல்பு. இப்போது
இல்லாவிட்டால் எப்போது ? என்பது நான் அடிக்கடி கேட்டுக் கொள்ளும் கேள்வி.
ஒட்டு மொத்தத் தமிழரின் ஆளுமையையும்
நிமிர்த்தி வைத்த பெரியாரின் தாக்கம், எனக்குள்ளும் இருக்கிறது என்பது, என்
செயல்களின் பின்புலமாக இருக்கலாம். ஆசிரியர்கள், தலைமையாசிரியர்
சந்திப்புக்குப் பின்னர் மாணவர்களைச் சந்திக்கிறோம். சமூகமே எந்திரி இதழின்
ஆசிரியர் சி.சேதுராஜா, துணையாசிரியர் சு.மணிகண்டன். இவர்கள் 10 ஆம்
வகுப்பு மாணவர்கள். பேனா முனை இதழின் ஆசிரியர் இ.ஆரோக்கிய மார்சலின்,
துணையாசிரியர் கா.விமல். இவர்கள் 9 ஆம் வகுப்பு மாணவர்கள்.
இவர்கள் என்ன சொல்கிறார்கள்? நாம்
வாழ்வதற்கு ஏதாவது பொருள் வேண்டும், நம் பயணம் சமூகம் நோக்கி இருக்க
வேண்டும் என எங்கள் ஆசிரியர்கள் கூறுவார்கள். அவர்களின் சுழல் இதழைத்
தொடர்ந்து வாசித்தோம். பின்னர் நாமே ஏன் நடத்தக் கூடாது என யோசித்து,
இதழைத் தொடங்கி விட்டோம்.
மாதம் 100 புத்தகங்கள் தயார் செய்கிறோம்.
மாணவர்கள் நாங்களே செலவுகளைப் பகிர்ந்து கொள்கிறோம். ஆசிரியர் குழுவில் 10
பேர் இருக்கிறோம். சக மாணவர்கள், ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் அனைவரின்
ஒத்துழைப்பும், பாராட்டும் எங்களை வழி நடத்துகிறது என்கிறார்கள் மாணவர்கள்.
- வி.சி.வில்வம்
No comments:
Post a Comment