Tuesday, June 18, 2013

கோவை மன்றல்!


                                                                                                                                                                                                   

சென்னை மன்றல், திருச்சி மன்றல், மதுரை மன்றல் என ஒவ்வொன்றும் வரலாற்றுப் பதிவுகளான நிலையில், இப்போது கோவை மன்றல் முடிந்துள்ளது. அடுத்த மன்றல் எங்கே எனக் கேட்டுப் போகும் தமிழர்கள்  நிறைந்து வருகிறார்கள்.  சரியான திட்டமிடுதலுக்குச் சாதனைகள் தூரமில்லை. இந்த தேதியில், இந்த ஊரில் மன்றல் என முதலில் முடிவாகிறது. அதற்கான ஆயத்தங்கள் சில ஆகின்றன. குறிப்பிட்ட நாளில், வெவ்வேறு இடங்களில் இருந்து சிலர் ஒன்று சேர்கின்றனர்.  வேலையைக் கச்சிதமாக முடித்துவிட்டு போய்க் கொண்டே இருக்கின்றனர். களைப்பும் இல்லை; மலைப்பும் இல்லை!

மக்களின் விழிகள் விரிய !

இப்படித்தான் முடிந்தது கோவை மன்றலும்! கோயம்புத்தூர் பெரிய நகரம்தான். எனினும் சுவர்கள் முழுக்க மன்றல் வாசகங்கள் அவ்வூரையே அழகுப்படுத்தி இருந்தன. இவ் வாசகங்களைக் கண்ட கோவை மக்கள் பலருக்கும் விழிகள் விரிய, சமூக ஆர்வலர்கள் உற்சாகத்தில் மிதக்கின்றனர். காரணம் இதுபோன்ற நிகழ்ச்சிகள் செய்திட யாரும் முன்வருவதில்லை. கூடவே தைரியமும் வேண்டும். அதை நாம் செய்கிற போது அவர்களின் மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. மற்றொரு முக்கியமான விசயம், நாம் செய்வது முழுக்கவும் பொதுக் காரியம். மற்ற பலரும்தான்  செய்கிறார்கள், அவை ஒரு ஜாதி ஜாடிக்குள் மூழ்கிப் போகிறது. சிலரோ  பொதுவாகச் செய்கிறோம் எனக் கூறிப் பயனாக்காமல், பணமாக்கி விடுகின்றனர். மன்றலைப் பொறுத்தவரை ஒரு பெரும் சிறப்பு என்ன தெரியுமா? சென்னை மன்றலில் 300 பேர் வந்தார்கள். இந்த 300 பேர் விவரங்களும் திருச்சி மன்றலில் வழங்கப்பட்டன. அடுத்து மதுரையில் நடந்தது. அங்கு சென்னை, திருச்சி விவரங்கள் வழங்கப்பட்டன. இப்போது கோவை. இங்கு மூன்று ஊர்களின் விவரங்களும் வழங்கப்பட்டது. ஆக இந்த விவரங்களின் தொகுப்பை வைத்துதான் பலரும் இங்கே வணிகம் செய்கிறார்கள். நமக்கோ அது நோக்கமல்ல. நம் நிலை என்பது திறந்த மனநிலை.
இவைகளைப் பார்த்துதான் மக்கள் பூரித்து, வியக்கிறார்கள். 91767 57083, 91767 57084 இந்த எண்கள் தமிழ்நாடு முழுக்கவும் பிரபலமாகி வருகிறது. ஒவ்வொரு மாநகராட்சியிலும் நூற்றுக்கணக்கானோர் தங்கள் கைப்பேசிகளில் சேமித்து வைத்திருக்கிறார்கள். காரணம் அவர்கள் வாழ்விற்கான வழி அங்கே இருக்கிறது. 



கைகோர்த்துப் பயணிக்கிறார்கள் ! 
கோவை மன்றலை அங்குள்ள லயன்ஸ் கிளப்பில்  சொன்னதும், அடடா! என்னே ஒரு வாய்ப்பு! எங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள் என்றார்கள். வாருங்கள் இணைவோம் என்றோம். இணைப்பில் தானே நம் மகிழ்ச்சியே இருக்கிறது. அதேபோல மன்றலில் பங்கேற்கும் மணமக்கள் மற்றும் அவர்களின்  பெற்றோர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்றதும், தமிழ்நாட்டின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவன இயக்குனர் காரையடி செல்வன் என்பவர் அந்த வாய்ப்பை எனக்கே தாருங்கள் எனக் கேட்டு வாங்கிக் கொண்டார். மன்றல் நிகழ்ச்சிக்கு அரங்கம் வடிவமைக்கும் அந்த இளைஞரை நாம் மறக்க முடியாது. ஒவ்வொரு நிகழ்ச்சியையும் அவர்தான் வடிவமைக்கிறார். எவ்வளவோ விழாக்கள், என்னென்னமோ விழாக்கள் பார்த்தாயிற்று. எனினும் வாழ்க்கை இணைய தேடல் பெரு விழாவைத் தன் வீட்டுத் திருமணமாய் அலங்கரிக்கிறார். ஊடகங்கள் குறித்தும் சொல்ல வேண்டும். மன்றல் நடைபெறுவதை முன்கூட்டியே அறிவிப்பதில் அவர்கள் பங்கும் அளப்பரியது. குறிப்பாகத்  தினத்தந்தி, ஹலோ எப்.எம். வானொலிகள் கைகோர்த்துப் பயணிக்கிறார்கள்.

நம்பிக்கைதான் பெரியாரின் சொத்து!
மன்றலில் ஜாதி மறுப்பு, மத மறுப்பு, மணமுறிவு பெற்றோர், துணை இழந்தோர், மாற்றுத் திறனாளிகள் என அய்ம்பெரும் பிரிவுகள் உள்ளனர். இதில் மற்ற பிரிவினர் பொது இடங்களுக்கு அதிகம் செல்வதும், பத்திரிகை விளம்பரங்கள் பார்ப்பதும் மிகுதி. மாற்றுத் திறனாளிகளுக்கு அந்த வாய்ப்புகள் குறைவு. ஆனாலும் நண்பர்களே! நம் மன்றல் நிகழ்சிகளுக்கு மாற்றுத் திறனாளிகள் அதிகமாகவே வருகின்றனர். அவர்களுக்குச் செய்தி போகும் வண்ணம் நம் செயல்பாடுகள் அமைந்துள்ளன. இதில் இன்னொரு சிறப்பு, சில ஊர்களில் மாற்றுத் திறனாளிகள் தனியாகவே வந்தனர். கோவையில் கூட இரண்டு கால்களையும் முற்றிலும் இழந்த ஒரு நண்பர் தனியாகவே வந்தார். பெரியார் நிகழ்சிகளுக்குத் தனியாகவும், தைரியமாகவும் செல்லலாம் என்கிற அவர்கள் நம்பிக்கை. பொதுவாகக் கூட்ட நெரிசல் இருக்கிற இடங்களுக்கு இவர்களைப் போன்றோர் துணையுடன் கூட செல்வதில்லை. மாறாக நம் நிகழ்ச்சிகளில் அவர்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர். இதுபோன்ற நம்பிக்கைகள்தான் பெரியாரின் சொத்து!

அதிரச் செய்து, குலுங்கச் செய்த மக்கள் !

அதேபோல பக்தி கொண்ட மக்கள் நம் மீது காட்டும் ஆர்வமும், ஆதரவும் அதிகமாகவே இருக்கிறது. கோவை மன்றலில் நாள் முழுக்க நம் கூடவே இருந்தார்கள். இடையிடையே நம் தோழர்கள் பேசும் கருத்துகளை மிகுந்த உற்சாகத்தோடு வழிமொழிகிறார்கள். எல்லாக் கருத்துகளையும் பொறுமையோடு கேட்கிறார்கள். மக்கள் பழமையில் ஊறிப் போயுள்ளனர், அவர்களுக்குப் புதுமைகள் பிடிப்பதில்லை என ஊடகங்களும், திரைத்துறையினரும் சொல்லி வருவது மெகா மோசடி என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இதற்கு இன்னொரு எடுத்துக்காட்டையும் நம்மால் எழுத முடியும். கழகத்தின் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் மன்றல் நிறைவில் ஒரு திருமணத்தை நடத்தி வைத்தார். பிரவீன்குமார் - அமுதா என்பது அந்தத் தோழர்களின் பெயர். அவர்கள் இருவரையும் அறிமுகம் செய்துவிட்டு, மாப்பிள்ளை கேரளா நாயர் சமூகத்தைச் சார்ந்தவர் என்று கூறினார். உடனே மக்கள் கரவொலியால் அரங்கை அதிரச் செய்தனர். பெண் தாழ்த்தப்பட்ட என்று சொல்லக் கூடிய அருந்ததி இனத்தைச் சார்ந்தவர் என்று சொன்னதுதான் தாமதம், மக்கள் அரங்கத்தையே  குலுங்கச் செய்தனர். இதற்கு என்ன பொருள்? அவர்கள் எல்லாவற்றையும் விட்டு வெளிவந்து பல நாட்களாகிறது. ஆனாலும் உள்ளேயே இருக்கிறார்கள். வாய்ப்பிருக்கும் போது வெடித்து வெளிவருவார்கள். அப்படி வெடித்து, வெடித்துத்தான் இவ்வளவு தூரம் சமூக மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் வெடிப் பொருளாக, கருப் பொருளாக நம் பெரியார் இருக்கிறார்.


மக்களிடம் கேளுங்கள்!
இவ்வளவு சிறப்பு வாய்ந்த மன்றல் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு எதுவுமே இல்லையா எனக் கேட்கிறீர்கள்?  இருக்கிறது. அங்கொன்றும், இங்கொன்றுமாகக்  கைப்பேசி வழி வருகிறது. கோவையில் கூட ஒரு நண்பர் கோபமாகக் கேட்டார், " ஜாதி மறுப்புத் திருமணங்கள் செய்ய நீங்கள் யார்?" என்றார். நாங்கள் யார் என்பதை மண்டபத்தில் வந்து மக்களிடம் கேளுங்கள் என்றோம், இணைப்பைத் துண்டித்துவிட்டார். அவர் மீது நமக்குக் கோபமில்லை. ஏனெனில் வேறொரு மன்றல் நிகழ்ச்சிக்குத் தன் மகளோடு அவர் வரக்கூடும்.  
  
                                                                                                                           வி.சி.வில்வம்

No comments:

Post a Comment