Thursday, May 16, 2013

மாநாடு நடத்துவது எளிது !


                                                                                                                         

இந்தத் தலைப்பைப் படித்தவுடன் "எழுதுவது எளிது"  என்று நீங்கள் எண்ணக் கூடும். எண்ணிய பிறகும் கூறுகிறோம், "மாநாடு நடத்துவது எளிது".   உதாரணம் இராஜபாளையம்!
வாய்ப்பு, வசதிகள் குறைந்த ஊரில், ஜாதி, மதம். ஆர்.எஸ்.எஸ். பூச்சாண்டிகள் நிறைந்த ஊரில் சாதனைப் படைப்பது கூட, நம் தோழர்களுக்கு எளிதுதான்!   அதனால் தான் ஆசிரியர் அவர்கள் 07.05.2013 நாளிட்ட தம் அறிக்கையில்," இராஜபாளையம் மாநாடு உண்மையிலேயே ஒரு வரலாறு படித்த மாநாடாகும். தென்திசையில் ஏற்பட்ட புத்துணர்ச்சி வெள்ளத்தில் பூரிப்பின் உச்சிக்கே சென்றேன்," என எழுதி இருக்கிறார்கள்.

அந்தளவிற்கு இது திட்டமிடப்பட்ட மாநாடாக அமைந்துவிட்டது.  எதிர் காலங்களில் இம்மாநாட்டின் செயல் முறைகள் நமக்கு வழிகாட்டும் திசைக் கருவியாக விளங்கிடும்.

தலைமைச் செயற்குழுக் கூட்டம்  ஜனவரி 19 அன்று சென்னையில் நடைபெறுகிறது. அன்றுதான் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் இம் மாநாட்டை அறிவிக்கிறார்கள். அறிவிப்பு வெளியான அக்கணமே, தோழர்கள் தங்களைத் தயார் செய்து கொள்கிறார்கள். மாநாட்டுச்  சீருடை அணிவகுப்பில் மூவாயிரம் தோழர்களைப் பங்கேற்கச் செய்வது எனவும், 15 இலட்சம் ரூபாய் நன்கொடைத் திரட்டுவது என்றும் தீர்மானிக்கிறார்கள்.
அதற்கு முன்னோடியாக 24.02.2013 அன்று 12 மாவட்டங்கள் பங்கேற்ற, மதுரை -  திருநெல்வேலி மண்டலக்  கூட்டம் இராஜபாளையத்தில் நடைபெறுகிறது. துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பங்கேற்ற அக்கூட்டத்தில் நன்கொடையாக 1,48,000 அறிவிக்கப்பட்டது. இதில் இளைஞரணியின் அறிவிப்பு மட்டும் ரூபாய் 80 ஆயிரம் ஆகும். அறிவிப்பு மட்டுமல்ல, 50 ஆயிரம் ரூபாய் அங்கேயே வசூலாகி, சாதனையானது.

அதன் மூலம் சுவரெழுத்துகள் முடுக்கிவிடப்பட்டன. தெற்கின் 12 மாவட்டத்திற்கும், மாநாட்டின் சார்பாகவே எழுதப்பட்டன. அவைகளின் எண்ணிக்கை 50, 100 இல்லை, 300 க்கும் மேற்பட்ட சுவரெழுத்துகள். தென்மாவட்டங்களை அழகுறச் செய்து, அதிரச் செய்த பணிகள் அவை.  இதைத் தொடர்ந்து  தமிழகம் முழுவதும் சுவரெழுத்துகள் பரவத் தொடங்கின. தஞ்சாவூர் நகரில் மட்டும் 22 இடங்களில் இராஜபாளையம் பெருமைப் பேசப்பட்டது.
இவைகள் ஒருபுறமிருக்க மானமிகு கலி.பூங்குன்றன், வீ.அன்புராஜ், இரா.செயக்குமார் உள்ளிட்ட 10 பேர் ஒருங்கிணைப்புப் பணி ஏற்கிறார்கள். தென்மாவட்டப் பொறுப்பாளர்கள் 8 பேர் வரவேற்புக் குழுவில் இடம் பெறுகிறார்கள். இதன் உறுப்பினர்களாக 12 மாவட்டத்தைச் சார்ந்த 67 பேரும், விளம்பரக் குழுவிற்குத் தனியாக 20 பேரும் நியமிக்கப்பட்டு, மாநாட்டுப் பணிகள் வேகமெடுக்கத் தொடங்குகின்றன.

கலந்துரையாடல் கூட்டம் நடத்த வலியுறுத்தியும், சமூகக் காப்பணி, சீருடை அணிவகுப்புக்கு இளைஞர்களைத் தயார் செய்திடக் கோரியும், விளம்பரங்களை வேகப்படுத்தத் தூண்டியும்  தமிழகம் முழுவதும் கடிதங்கள் பறக்கின்றன, பொதுச் செயலாளர் அன்புராஜ் அவர்கள் மூலம். இதில் ஏற்கனவே மாநாட்டின் சமூகக் காப்பணியில் பங்கேற்ற 80 தோழர்களுக்கும் கடிதங்கள் செல்கின்றன.
அதனைத் தொடர்ந்து 24.03.2013 அன்று மாநில இளைஞரணி, மாணவரணி கலந்துரையாடல் கூட்டம் மதுரையில் நடைபெறுகிறது.
அங்கு இரு அணிகளும் பட்டைத்  தீட்டப்பட்டு, கூராக்கப்படுகின்றன.  இதற்கிடையில் 06.07.2002 ஆம் ஆண்டு நடைபெற்ற சேலம் மாநாட்டு  அணிவகுப்புப் புகைப்படத்தை விடுதலையில் வெளியிட்டு,  இதுபோல தோழர்கள் ஆயத்தமாக வேண்டும் எனக்  கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். இப்பெரு முயற்சியினால் 105 தோழர்கள் சமூகக் காப்பணியில் பங்கேற்கின்றனர். திருச்சி புத்தூர் மாளிகையில் நடைபெற்ற இப்பயிற்சியை, பல்வேறு பணிகளுக்கிடையேயும் தமிழர் தலைவர் அவர்கள் பார்வையிட்டுப் பாராட்டிச் செல்கிறார்கள். தொடர்ந்து சமூகக் காப்பணித் தோழர்களுக்குப் பெரியாரியல் வகுப்பு  25.04.2013 தொடங்கி 03.05.2013 வரை நிகழ்த்திப் புத்துயிர் ஊட்டப்படுகிறது.

பிறகு மாநாட்டை பெரு வெற்றியாக்கிட 3 மாவட்டங்களை உள்ளடக்கிய  தஞ்சை மண்டலம், 
5 மாவட்டங்களை உள்ளடக்கிய  சென்னை மண்டலம், 5 மாவட்டங்களை உள்ளடக்கிய  வேலூர் மண்டலம்,  3 மாவட்டங்களை உள்ளடக்கிய  ஈரோடு மண்டலம், 5 மாவட்டங்களை உள்ளடக்கிய  கோவை மண்டலம் மற்றும்  திருவாரூர், நாகப்பட்டினம், சிதம்பரம், கடலூர், விருத்தாசலம், திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பாண்டிச்சேரி, திருச்சி, இலால்குடி, அரியலூர், பெரம்பலூர், கரூர், மதுரை, திண்டுக்கல், பழனி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி என அனைத்து மாவட்டங்களிலும் தோழர்கள் கலந்து பேசி, மாநாட்டைச் சிறப்பாக்க முடிவு செய்கின்றனர்.
கண்ணைக் கவரும் அழகிய சுவரொட்டிகள் ஆறாயிரம் தயார் செய்யப்பட்டு, மாநாட்டிற்குப் பத்து நாள்களுக்கு முன்னரே தமிழகம் முழுக்க வழங்கப்படுகிறது. அழைப்பிதழ்கள் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு திராவிடர் கழக நிர்வாகிகள், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, மாணவரணி, வழக்கறிஞரணி, விவசாய அணி, தொழிலாளரணி, பொதுக்குழு உறுப்பினர்கள் என எந்த ஒருவரும் விடுபடாதவாறு  1500 - க்கும்  மேல் அனுப்பப்படுகிறது. அதுமட்டுமின்றி மாநாட்டுப் பொறுப்பாளர்கள் தமிழ்நாட்டின் 60 கழக மாவட்டங்களோடும்  தொடர்ந்து இணைப்பில் இருக்கிறார்கள்.
மாநாடு நெருங்கி வரும் வேளை. ஏப்ரல் 15 ஆம் தேதி இராஜபாளையத்தில் நன்கொடை பணியைத் தொடங்குகிறார்கள். அவர்களுக்குத் தேவைப்பட்டது 20 நாட்கள் மட்டுமே. சிவகாசி, விருதுநகர், திருத்தங்கல், அருப்புக்கோட்டை, சாத்தூர், சங்கரன்கோயில், ராயகிரி, வாசுதேவநல்லூர், சேத்தூர், வத்திராயிருப்பு, தளவாய்புரம், திருவில்லிபுத்தூர், இராஜபாளையம் ஆகிய பகுதிகளில் பொறுப்பாளர்கள் வேகமெடுத்தும்,  இதே பகுதிகளின் கடைத் தெருக்களில் தோழர்கள் திரண்டு சென்றும் நன்கொடை பணிகளை முடிக்கிறார்கள்.

இதனிடையே தமிழகம் முழுக்கவுள்ள  நம் தோழர்களுக்கு இராஜபாளையம் நினைவில் வந்து கொண்டே இருக்கிறது. நினைவூட்டும் அந்தப் பணியை விடுதலை விடாமல் செய்தது. குறிப்பாக 29.04.2013 அன்று, "சிறைக்கு அனுப்பிட தீர்மானிக்கும் மாநாடு ! ஜாதி ஒழிப்புக்குப் போர்ச் சங்கு ஊத இராஜபாளையம் நோக்கி வாரீர் ! வாரீர் !  தோழர்களே !! ", என்கிற ஆசிரியரின்  அறிக்கை எவரையும் அவரின் சொந்த ஊரில் இருக்கவிடவில்லை.

இவ்வளவு சிறப்போடு ஏற்பாடுகள் முடிந்தன.  பொழுது விடிந்தால் மாநாடு. அந்திசாய்ந்த அந்த நேரத்தில் காவல்துறை அழைக்கிறது.  "பேரணிக்கு அனுமதி இல்லை. கூட்டம் நடத்தி விட்டுப் போங்கள்", என்கிறார்கள்.  எந்த ஒன்றுக்கும் பதறுவதும், சிதறுவதும் தோழர்களுக்குப் பழக்கமில்லையே ! எங்குமே காணக் கிடைக்காத  நம் கழக அணுகுமுறைக்குத் தோல்வியும் ஏற்படுமோ?  வெற்றி தான் கிடைத்தது.

பொழுது விடிந்தது ! மாநாடு பிறந்தது ! அது எப்படியெல்லாம் மலர்ந்தது என்பதைக் கண்டு இரசித்தோம்.  இராஜபாளையத்தை விட்டு எல்லோரும் ஊருக்குப் போய்விட்டார்கள். ஆனாலும் இராஜபாளையத்தை விட்டு வெளிவர முடியவில்லை.

திட்டமிட்டு செய்தால் எல்லாமே சாத்தியம்தான் ! இப்போது சொல்லுங்கள், மாநாடு நடத்துவது எளிதா இல்லையா ?

  வி.சி.வில்வம்

No comments:

Post a Comment