Wednesday, March 11, 2015

கைபர் கணவாய்!

பெரியாரும், அண்ணாவும் தமிழ்நாட்டில் பிறந்தது ஒரு விபத்து - ஹெச்.ராஜா.
நீ கைபர் கணவாயில் இருந்து தப்பி வந்ததே பெரும் விபத்தல்லவா?
(இப்ப கைபர் கணவாய் இருக்கா ராஜா? நல்ல புள்ளயில்லை... அப்படியே போயிரு ராஜா...)

தெரிந்த ஹிந்தி

தமிழக, தமிழ் மக்களின் வளர்ச்சிக்கு இந்தி படிப்பது அவசியம் - பாஜகவின் நிர்மலா சீதாராமன்.

உங்களுக்குத் தெரிந்த ஹிந்தியை வைத்து, முதலில் வட இந்தியாவை முன்னேற்றுங்கள் மிஸ்டர் சீதாராமன்!

மண்ணின் பாரம்!

2015 ஆம் ஆண்டு யார், யாருக்கு என்ன பலன்கள் என இரவு முழுவதும் தவமிருந்தேன். ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி எனக் கிழமைகள் வரிசையாக வருவதால் நாத்திகர்களுக்கு இந்த ஆண்டு பொன்னான ஆண்டு. அதேநேரம் 2015 இன் கூட்டுத் தொகையானது 2+0+1+5 = 8 வருவதால் ஆத்திகர்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.
நாட்டிற்கு அமைதியும், மக்களுக்கு மகிழ்ச்சியும் வேண்டும் என எண்ணுபவர்கள் இந்த ஆண்டு முழுக்கச் சுகமாக வாழ்வர்.
மாறாக நாட்டில் வன்முறையும், மக்களுக்குள் பிரிவினையும் செய்பவர்கள் இந்த மண்ணின் பாரமாகக் கருதப்படுவர்.
இதுவே எம் ஜோதிடம்.

பேசுவதே இல்லை!

திமுக தமிழன், அதிமுக தமிழனைத் திட்டுகிறான்.
அதிமுக தமிழன், மதிமுக தமிழனைத் திட்டுகிறான்.
மதிமுக தமிழன், பாமக தமிழனைத் திட்டுகிறான்.
பாமக தமிழன், தேமுதிக தமிழனைத் திட்டுகிறான்.
இப்படியாகக் கட்சி நியாயம் பேசும் தமிழன்,
தமிழ்நாட்டு நியாயத்தை மட்டும் பேசுவதே இல்லை!

"பிகே" என்ற இந்திப் படம்!

கடவுள் மறுப்பைப் பேசிய "பிகே" என்ற இந்திப் படம் சற்றொப்ப 630 கோடியை எட்டியதாகச் சொல்கிறார்கள். கடவுள், மதம், ஜாதிகளை மறுப்பது தமிழ்நாட்டிற்குக் கைவந்த கலை. ஆனால் வடமாநிலங்களோ இந்து வெறிக்கும், இந்து வன்முறைக்கும் பெயர் போன பகுதிகள். அப்படியிருக்க இது எப்படி சாத்தியம்?

ஒருமுறை இந்தி நாளேடு ஒன்று தமிழ்நாடு குறித்து இப்படித் தலையங்கம் எழுதியது. "தமிழ்த் திரைப்படங்களில் இந்துக் கடவுள்கள் மற்றும் சாஸ்திரங்கள் கடுமையாக விமர்சனம் செய்யப்படுகின்றன. ஆனால் தமிழர்களாகிய இந்துக்கள் அதை ரசித்துப் பார்க்கின்றனர். இது எப்படி சாத்தியம்? என இந்திப் பத்திரிகை எழுதியது. 

இப்போது நாம் கேட்கிறோம். எங்கள் ஊரை விட, உங்கள் ஊரில் கடவுள் மறுப்புக்கு இவ்வளவு வரவேற்பு உள்ளதே இது எப்படி சாத்தியம்?
விடை எளிதுதான். கடவுள் உள்ளிட்ட எல்லா சங்கதிகளுக்கும் அரசியல்வாதிகள், குறிப்பாகப் பத்திரிகைகள் தொடர்ந்து முக்கியத்துவம் கொடுக்கின்றன. மக்களை முட்டாளாக வைத்திருப்பது ஆதிக்கவாதிகளும் அவர்களின் பத்திரிகைகளும் மட்டுமே. மக்களுக்கு இவர்கள் இடையூறு செய்யாமல் இருந்தால், இந்தியாவின் எல்லா மொழிகளிலும் பிகே படங்களை வெற்றி பெறச் செய்வார்கள்.

பெருங்கவலை!

எண்ணற்ற அப்பாவி மக்களை இந்து மதம் கொலை செய்கிறது. அதனைக் கிறிஸ்துவம் கண்டிக்கிறது. இஸ்லாம் செய்யும் கொலைகளை இந்து மதம் கண்டிக்கிறது. அதேபோல கிறிஸ்துவ மதம் செய்யும் கொலைகளை இஸ்லாம் கண்டிக்கிறது . ஆக எல்லாம் மதங்களும் கொலை செய்கின்றன.
கொலை செய்யும் இப்படியான மதங்கள் எதற்கு? என நாம் கேட்டால், மூன்று பேரும் ஒன்றாய் சேர்ந்து கொண்டு, "எல்லா மதங்களும் மக்களுக்கு அன்பையே போதிக்கின்றன" என்கிறார்கள். உங்ககிட்ட போயி இந்த உலகம் மாட்டிக்கிருச்சே என்பது தான் எங்களின் பெருங்கவலை!

நாய்கள் கேவலமானது அல்ல.

என் உறவினர் ஒருவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருக்கிறார். அவர் எங்களை முகநூலில் "நாத்திக நாய்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்து மதத்தில் உங்களைத் "தேவடியா மகன்" என்று அழைக்கிறார்கள். தேவடியா மகனே என்பதைவிட நாய்கள் கேவலமானது அல்ல.

சகாயம் அய்.ஏ.எஸ்.

ஜப்பான் நாட்டில் பிப்ரவரி 14 ஆம் தேதி தமிழர் திருநாள் பொங்கல் விழா நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சிக்குத் தமிழ்நாட்டில் இருந்த சகாயம் அய்.ஏ.எஸ். அவர்களைச் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள். அவரும் சம்மதித்தார். அரசு ஊழியர்கள் வெளிநாடு செல்ல, தடையில்லா சான்று பெற வேண்டும். சகாயம் அவர்களும் விண்ணப்பித்தார். அரசிடம் பதில் இல்லை. இரு நாட்களுக்கு முன் அவரே தலைமைச் செயலகம் சென்றும் முயற்சித்தார். பயனில்லை. இந்நிலையில் சகாயம் வருகிறார் என, ஜப்பானில் விழா சீட்டுகள் முழுக்க விற்றுத் தீர்ந்தன. இடையில் விழாவுக்கு நான்கு நாட்களே உள்ளன. ஒரு நேர்மையான மனிதருக்கு கிடைக்கும் சங்கடத்தைப் பாருங்கள். நேர்மை இல்லை, நியாயம் இல்லை என ஒருபுறம் போராடுகிறோம். அப்படியாக வாழும் ஒரு மனிதர் வீழ்த்தப்படுவதையும் பார்க்கிறோம்.

வாழ்த்துகள்!

காதலித்த சில மாதங்களிலே, காரணமின்றி பிரிவது முதல் வகை. திருமணத்திற்கு முன்பு சில எதிர்ப்புகள் வரும். அப்போது பிரிவது இரண்டாம் வகை. திருமணத்திற்குப் பின்பு விட்டுக் கொடுக்காமலும், புரிந்து கொள்ளாமலும் பிரிவது மூன்றாம் வகை. முப்பது ஆண்டுகள் முடிந்தும் காதலை ரசித்து, ருசித்து, இன்னமும் சிரித்து வாழ்பவர்கள் நான்காம் வகை. அவர்களுக்கு "காதலர் தின வாழ்த்துகள்!"

ஜப்பான் வாழ்க்கை!

ஜப்பான் சென்று சுகபோக வாழ்க்கை வாழலாம். ஆனால் நீங்கள் மாறுப்பட்டவர்கள். இலங்கைப் பிரச்சினையின் போது ஈழத் தமிழர்களின் நியாயத்தை ஜப்பான் அரசாங்கத்திற்குப் புரிய வைத்தீர்கள். ஒரு அரசாங்கம் செய்யும் வேலையைச் சாதாரணமாய் செய்தீர்கள். ஜப்பானில் ஒரு அமைப்பை ஏற்படுத்தி, தமிழ்நாட்டின் சில அரசுப் பள்ளிகளுக்கு உதவிகள் செய்கிறீர்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு பள்ளியை, குழந்தையைப் போல தத்தெடுத்துச் சீராட்டி வருகிறீர்கள். தொடர்ந்தும் பல்வேறு உதவிகளைச் செய்கிறீர்கள். இன்றைய தினம் தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை, உணர்வுபூர்வமாகத் தமிழர்களுக்கு வழங்கி வருகிறீர்கள். வாழ்த்துகள் நண்பர்களே! பல்லாயிரம் மைல் கடந்தாலும் எங்கள் நினைவில் எப்போதும் நீங்கள்!

முடிவுக்கு வா!

பெரியாரை கன்னடர் என்கிறாய். உண்மைதான். தெரிந்துதான் அவரைப் பின்பற்றுகிறோம். தமிழனாய் நீ என்ன செய்தாய்? சொல், உன்னையும் பின்பற்றுகிறோம்.

அதேபோல பெரியார் ஒன்றுமே செய்யவில்லை என்கிறாய். ஆமாம்! ஒன்றுமே செய்யவில்லைதான். இப்ப அதுக்கு என்னங்கிற? நீ என்னென்ன செய்திருக்கிறாய் சொல்? உன்னையும் பாராட்டுகிறோம்.
ஏதாவது ஒரு முடிவுக்கு வா. சாகுறவரைக்கும் பேசாத... பேசிப் பேசி சாகடிக்காத...

கல்விக் கடவுள்!

இந்தியாவில் 8 கோடி குழந்தைகளின் பள்ளிப் படிப்பு பாதியிலேயே முடிகிறது. 80 இலட்சம் குழந்தைகள் பள்ளிக்கே செல்வதில்லை - இது ஆனந்த விகடன் வெளியிட்ட குறிப்பு.

நம் நாட்டில் கல்வித் துறைக்கு சரஸ்வதி என்ற கடவுள் இருக்கிறார். அதனால் சரஸ்வதியின் கைபேசிக்கு மேற்கண்ட புள்ளி விவரத்தைக் குறுஞ்செய்தியாக அனுப்பி, கீழே ஒரு வரியும் சேர்த்துள்ளேன். என்னம்மா... இப்படிப் பண்றீங்களேம்மா? உங்க துறையை நீங்க நல்லா கவனிக்கக் கூடாதா?

கராத்தே!

"மஞ்சள் பெல்ட்" வாங்கியதற்குப் பாராட்டுகள்!

எங்கள் மகள் கியூபா - வுக்கு நாங்கள் சொன்னது.
கடவுளை விட கராத்தே முக்கியம்!

மகளிர் தினம்!

மகளிர் தின வாழ்த்துகள் சொன்ன கையோடு, நான் குடிச்ச காபி டம்ளரையும், நான் சாப்பிட்ட தட்டையும் கழுவி வச்சேன். பேசுறதைச் செய்யும் போது மனசுக்கு நிறைவாவும், பிறரிடம் மதிப்பாவும் இருக்கு! சரியா தோழா?

பெல் நிறுவனம் விற்பனை!

பெல் நிறுவனத்தின் 5 விழுக்காடு பங்குகளைத் தனி ஒரு முதலாளிக்கு விற்பனை செய்ய இருக்கிறார்கள். பெல் நிறுவனம் இந்தியாவின் நவரத்ன தொழிற்கூடம். இலாபம் கொழிக்கும் பாய்லர் ஆலை. இந்த இந்திய அரசாங்க சொத்தை, இந்தியர்களின் சொத்தைத் தனி முதலாளிக்கு விற்பனை செய்வது எந்த விதத்தில் நியாயம்?

நேற்று திருச்சி, திருவெறும்பூரில் பெல் நிறுவன ஊழியர்கள் பேரணி மூலம் தங்கள் எதிர்ப்பைக் காட்டினர். சாதாரண ஒரு ஊழியர் இந்தியச் சொத்தை விற்காதே என்கிறார். தேசப்பற்று மிக்க அரசியல்வாதிகளோ அப்படித்தான் விற்போம் என்கிறார்கள். பாரத் மாத்தாகீ ஜே என்பவர்களே,. அவள் குரல்வளையை நெரித்து கொலை செய்யலாமா?