Tuesday, January 29, 2013

பொன்மொழித் தொகுப்பு !


 களஞ்சியம் 
(பொன்மொழித் தொகுப்பு )  




 அண்மையில் 1000 பொன்மொழிகள் அடங்கிய புத்தகம் ஒன்றினைப் 
படித்தேன். அதில் அறிவுக்கும், அறிவியலுக்கும் ஏற்புடையவை சுமார்
100 இருந்தால் அதுவே அதிகம். மீதமெல்லாம் முடைநாற்றம் வீசும் மூடக் கருத்துகள் ! இந்நிலையில், இயல்பாகவே எனக்குப் பொன்மொழிகள் தீராக் காதல். 1995 - இல் தொடங்கிய சேகரிப்புப் பணி இன்னமும் தொடர்கிறது. இவைகள் அனைத்தும் தன்னம்பிக்கை, பகுத்தறிவு,  மனிதநேயம் எனச் சமூகப் பங்களிப்புள்ள அனுபவ மொழிகள் ! இதுவரையிலான எண்ணூரில், அய்நூறு  மட்டும்  தேர்வு செய்யப்பட்டு, புத்தகமாக வெளிவந்துள்ளது.

(சில பொன்மொழிகளுக்கு கூறியவர் பெயர் அறியமுடியவில்லை.)

கீழே உள்ள தொடுப்பச் சொடுக்கினால்...

                  "பொன்மொழிகள் !"

http://issuu.com/thamizham/docs/2386

                                                                                வி.சி.வில்வம்  

ஜாதி மறுப்பே! சமூகக் காப்பு!

                                             
ஜாதி மறுப்பே! சமூகக் காப்பு!!


இந்தியாவிற்குப் பார்ப்பனர்கள் செய்த கொடுமைகளுள் ஆகப் பெரியது ஜாதியாகும்! உலகில் வாழும் மக்களுக்குள் எண்ணற்ற வேறுபாடுகள் உள்ளன. அவை மாறக் கூடியதும், மறையக் கூடியதும் ஆகும். ஆனால் ஜாதியானது, உலக நஞ்சுகளில் எல்லாம் தலையானது. ஜாதிக்கு எதிரான போராட்டம், பல காலம் நாட்டில் நடந்துள்ளது. ஆனால் அதற்கென்ற தொடர்ச்சி இன்றி, தொய்வாகிப் போனது.  ஈரோட்டின் ஈ.வெ.இராமசாமி, தமிழ்நாட்டின் பெரியாரான போது புதிய வரலாறு எழுந்தது. அதன் விளைவாய்  எண்ணற்ற மாற்றங்கள் நிகழ்ந்தன.


இன்றைக்கு நாம்  அனுபவிக்கும் அத்தனையும் அதில்தான்  அடங்கும். அன்றைய வலியும், வரலாறும் புரியாதவர்கள் பெரியாரைப் பெரிது செய்யாமல் இருக்கக் கூடும். ஆனால் எத்தனை  நாள் தெரியாமலும், தெரிந்தும் புரியாமலும், புரிந்தும் ஏற்காமலும் இருக்க முடியும்?


உலக நஞ்சுகளில் மிக முக்கிய ஜாதிய நஞ்சால், இன்றைக்கு எத்தனை மரணங்களை கண்டு வருகிறோம். வாழை மரங்களைப் போல, மனிதர்களை வெட்டுகிறார்கள். நம் நாட்டில் அரிவாளை தொடர்ந்து அசிங்கப்படுத்துகிறார்கள். ஒவ்வொரு பொருளையும், அதனதன் தேவைக்கே பயன்படுத்த வேண்டும். அறிவியல் அதைத்தான் சொல்கிறது.  இன்றைக்கு மொத்த அறிவியலையும் அனுபவித்துக் கொண்டு, ஆனால் காட்டுமிராண்டி யாய் சமூகத்திற்குத் தொல்லைக்  கொடுப்போம்  என்றால், எப்படி அதை அனுமதிக்க முடியும்?


எனவே எல்லா வகையிலும் ஜாதி என்பது வேரோடும், வேரடி மண்ணோடும் பிடுங்கி எறியப்பட வேண்டியது அவசர, அவசியமாகும் ! அதற்கான வழிகளைகளையும்  பெரியார் ஏராளமாய் சொல்லிச் சென்றுள்ளார். அவற்றை ஏற்று நடந்தாலே, இச்சமூகம் எழில் கொஞ்சும் பூங்காவாக மாறிப் போகும். அந்த வழிகளில் ஒன்றுதான் ஜாதி மறுப்புத் திருமணங்கள். "திருமண செய்ய  ஒரு பெண்ணுக்கு ஆண் வேண்டும். ஒரு ஆணுக்குப்  பெண் வேண்டும். இதற்கு ஜாதி ஏன் வேண்டும்?" என்பது சாதாரண மனிதக் கேள்வியாகும்.

 ஒரே ஜாதிக்குள், அதுவும் ஒரே பிரிவிற்குள் திருமணம் செய்து வைக்கப்  பெற்றோர்கள் அனுபவிக்கும் வேதனைகள் சொல்லி மாளாது. ஒரே பிரிவில் இரண்டு, மூன்று மாப்பிள்ளைகளே  இருப்பார்கள். அதில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் கட்டாயம் ஏற்படும். ஒரே பிரிவின்றி, வேறு சில பிரிவுகளிலும் மாப்பிள்ளைத் தேடினால் பத்து, இருபது தேறும். ஜாதியின் அனைத்துப் பிரிவுகளிலும் தேடும் போது முப்பது, நாற்பது தேறும். இதையே ஜாதிகளை மறுத்துப் பார்த்தால் நூற்றுக்கணக்கில் வாய்ப்புகள் குவியும். ஆக விசாலமான சிந்தனைகளுக்கு ஏற்ப நமக்கு வாய்ப்புகளும் , வசதிகளும் வந்து சேரும். நெருங்கிய உறவுக்குள் திருமணம் செய்து கொண்டால் பாதிப்புகள் பல  உருவாகலாம் என மருத்துவம் கூறுகிறது. அதேபோல  ஒரே ஜாதிக்குள் திருமணம் முடிப்பதால் சிறப்புப்  பலன்கள் ஏதும் கிடைப்பதில்லை. இந்தப் பெண்  நம்முடைய ஜாதிதான், எனவே வரதட்சணை வாங்க வேண்டாம் என யாரும் முடிவெடுப்பதில்லை.  மாறாக ஒரே ஜாதியில் நடைபெறுகின்ற திருமணங்கள் ஆயிரக்கணக்கில் விவாகரத்தில் வந்து நிற்கின்றன. இதை எந்த ஜாதித் தலைவரும், சங்க உறுப்பினர்களும் வந்து சரி செய்வதில்லை. ஆனால் ஜாதி மறுப்புத் திருமணங்கள் செய்யக் கூடாது என மிரட்டுகிறார்கள். இவர்கள் சமூகம் வளர்ச்சி பெறக்கூடாது என விரும்புகிறவர்கள்.

 ஜாதி மறுப்புத் திருமணங்கள் என்பது,  ஏதோ இருவர் தொடர்புடைய தனி விசயமல்ல. அது ஒரு அற்புதமான சமூக மாற்றத்திற்கான வித்து.  ஜாதிகள் கலக்கும் போது மனிதர்கள் பிறப்பார்கள். மனிதர்களாக உருவாகும் போது  மனிதநேயமும் சேர்ந்து வரும், ஒற்றுமை உணர்வு வரும், உதவும் மனப்பான்மை எங்கும் நீக்கமற நிறைந்து காணப்படும். இதன் தொடர்ச்சியாய் சமூகம் மீது நமக்கு நம்பிக்கை உருவாகும். பக்கத்து மனிதனை நேசிக்கத் தொடங்குவோம். பொறாமை, பழி வாங்குதல்கள் நின்று போகும் வாழ்கையில் பிடிப்பு வரும். வாழ்வதற்கு ஆசை ஏற்படும் ! இது நமக்கான தனி மனித பலன்கள். சமூகப் பிரச்சினைகளில் வேற்றுமை  குறையும். ஒருமித்த உணர்வு பிறக்கும். உரிமைக்குக் குரல் கொடுக்க அது உதவும். மொழிப் பிரச்சினை, காவிரி, பெரியாறு  பிரச்சினைகள், ஈழப் பிரச்சினை, ஒரே ஒரு தமிழன் ஆப்பிரிக்கக் கண்டத்தில்  பாதிக்கப்பட்டு இருந்தாலும், அவனை மீட்கும் உணர்வு என நாம் அடையும் நன்மைகள் ஏராளம், ஏராளம்!

இவை எல்லாம் நம் கற்பனைப் புதினம் அல்ல. உலகம் முழுவதுமுள்ள மனிதர்களின் வாழ்வியல் நடைமுறை இதுதான். அவற்றை நோக்கி நம் பாதைகளை திசை திருப்ப வேண்டும். ஜாதிப் பிரச்சினைகளை ஒழித்து, மேற்சொன்ன மனித வாழ்வை நடைமுறைப்படுத்த அரசியல் அதிகாரத்தால் முடியும். ஆனால் சுய (பெரு) நலம் கருதி அவர்கள் இதைச் செய்யமாட்டார்கள். ஒவ்வொரு தனி மனமும்  முடிவு செய்யும் போது, நாமே இதைச் சாத்தியமாக்கிக் கொள்ளலாம். இவ்வளவு பயன்களும் இருப்பதால்தான் காதலை நாம் வரவேற்கிறோம். காதல் திருமணங்கள் பெரும்பாலும் ஜாதி மறுத்த, சமூக நலனாகவே இருக்கும். காதலர்களுக்கு ஜாதி மறுக்க வேண்டும் என்ற எண்ணமில்லை எனினும் ஜாதியை விட காதல் பெரிது என்கிற முடிவு துணிச்சலானது. அந்தக் காதல் விரும்பியவரோடு சேர்ந்து வாழ வைக்கிறது, ஜாதியைச் சிதைக்கிறது, சக மனிதர்களை  நேசிக்கத் தூண்டுகிறது. அதேநேரம் காதல் என்பதை உணர்ச்சிகளின் வடிகாலாகவும், புரிந்து கொள்ளாமலும் தொடரும் போது அது தோல்வியில் முடிகிறது. அந்நிலைகள் மாற வேண்டும். 

எனவே சமூகம் மாறவேண்டும் என நினைக்கிற ஒவ்வொரு மனிதரும், கட்டாயம் ஜாதியை மறுக்க வேண்டும். பெரியார் சிந்தனையாளர்கள், மொழிச் சிந்தனையாளர்கள், கம்யூனிச தோழர்கள் உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சமூக இயக்கங்களும் ஜாதி மறுத்த மனிதர்களாக உலா வர வேண்டும். பிறகு படிப்படியாகப்  பொது மக்களையும் அந்நிலைக்கு அழைக்க வேண்டும். அப்படி செய்கிற போது, மேற்சொன்ன நன்மைகள் முதலில் நமக்குக் கிடைக்காவிட்டாலும்,  ஜாதீயப் பிரச்சினைகள் வலுவிழந்து போகும் ! 

ஆகவே தோழர்களே ! இந்தச் செய்திகளையெல்லாம் முன்வைத்துத் தான் திராவிடர் கழகம் சார்பில் எதிர்வரும் நவம்பர் 25,சென்னை பெரியார் திடலில் "மன்றல்" எனும் தலைப்பிட்டு, ஜாதி மறுப்புத் திருமணம் செய்வோருக்கு பெரும் வாய்ப்புகளையும், வழிகளையும்  உருவாக்கிட முனைந்துள்ளது.

பெரியார் சுமரியாதைத் திருமண நிலையம் எனும் அமைப்பு இப்பணியை பல்லாண்டுகள் செய்து வருகிறது. அதன் வீரியத் தொடர்ச்சியாகத் தமிழ்நாடு முழுவதையும் ஒருங்கிணைத்து, பல்வேறு இயக்கங்கள், அமைப்புகளை ஒன்றுபடுத்தி செய்யவிருக்கிறது. இதில் கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள் என எந்த வேறுபாடுகளும் இல்லை. நாம் ஜாதி மறுத்த மனிதர்களாக, தமிழர்களாக விளைச்சல் கொடுக்க வேண்டும் என்பதுதான் அதன்  நோக்கம். திரள்வீர் ! திரள்வீர் !!  உங்களோடு உறவினர்களும், உங்களோடு நண்பர்களும் திரள்வீர்! சமூக  அமைப்புகள் இச் செய்தியைத் திக்கெட்டும் கொண்டு சேர்த்து, மாற்றத்திற்கான பயணத்தில் கரம் சேர்ப்பீர்!  சிந்திப்போம்... பின்னர் சந்திப்போம்! நவம்பர் 25!

                                                                                                                வி.சி.வில்வம்

பிராமணாள் ஹோட்டலும் சிறீரங்கம் கூட்டமும் !

            பிராமணாள் ஹோட்டலும்  சிறீரங்கம் கூட்டமும் !

 நாம் செய்ய வேண்டியதை நாம் தீர்மானிப்பது ஒருபுறம் ; பார்ப்பனர்கள் தீர்மானிப்பது மறுபுறம்.
நமக்கு வேலை கொடுத்துவிட்டு,  அதன் விளைவுகளை மொத்த விலைக்கு வாங்கிக் கொள்வது அவர்களின் வாடிக்கை! அப்படித்தான் தொடங்கியிருக்கிறது  "கிருஷ்ணய்யர் பிராமணாள் கபே" விவகாரமும்!  இது சாதாரண கபே அல்ல,  பாரம்பரிய பிராமணாள் கபே. என்ன பாரம்பரியம் ? எனக் கேட்காதீர்கள்.தொட்டுத் தொடரும் பட்டுப் பாடம்பரியம் போல இது ஒரு வகை. பிராமணன் என்றால் உயர்ந்தவர்  என்று எல்லாப் புத்தகத்திலும் எழுதி வைத்துள்ளனர். (எத்தனை அடி உயர்ந்தவர் என்பதற்கான சான்றுகள் அதில் இல்லை).  இப்படி அவர்கள் எழுதியும் , சொல்லியும் வந்ததைச்  சற்றொப்ப 80 ஆண்டு காலமாக ஒரு இயக்கம் மறுத்து வருகிறது. அவர்கள் கேட்ட  ஒரே கேள்வி,  நீங்கள் உயர்ந்தவர் என்றால் நாங்கள் யார் ?

காலச் சக்கரங்கள் வேகமாக ஓடிய  நிலையில், "நாங்கள் உயர்ந்தவர்கள்" என்பதை  வெளிப்படையாகச்  சொல்வதை விட்டிருந்தார்கள். இதோ இப்போது வந்திருக்கிறார்
"கிருஷ்ணய்யர் பிராமணாள் கபே" உரிமையாளர்  மணிகண்டன். விடாக் கொண்டான், கொடாக் கொண்டான் என்றெல்லாம் சொல்வார்களே, அதுபோல இருக்க ஆசைப்படுகிறார்
இக்கண்டன். இருந்துவிட்டுப் போகட்டும் நமக்கு ஒன்றுமில்லை. அதேநேரம்  அவரின் முரளி தாத்தா (கபே)  குறித்தெல்லாம் தெரிந்து கொள்வது நலம் நலமறிய ஆவல் என்கிறோம்.

கடந்த 04.11.2012 திருவானைக்காவலில் நடைபெற்ற கூட்டம்  என்பது ஆரம்பம்! மற்ற முடிவுகளை நாங்கள் எப்படி எடுக்க  வேண்டும் என்பதை அந்த ஹரிஹரசுதன் (அதான் மணிகண்டன்) எடுப்பார்! இது ஒருபுறமிருக்க  சிறீரங்கத்தில் நடைபெறும்  இந்த விவகாரத்தைப் பொது மக்கள் எப்படிப்  பார்க்கிறார்கள் என்பதை அறிய ஆவல் கொண்டோம்.

நாம் இன்னார் என அறிமுகம் செய்து கொள்ளவில்லை. செய்தியாளர் என்பதாகப்  பொதுவாகவே  நடந்து கண்டோம். இந்த இயக்கம், இன்ன பத்திரிகை என்றால், அதற்கேற்ப அவர்கள் கருத்தில் ஆதரவோ, சார்போ இருந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். நம்முடைய கேள்வியை நாம் இப்படித்தான் அமைத்திருந்தோம். "சிறீரங்கத்தில் ஒருவர் "பிராமணாள் கபே"  எனக் கடைக்குப் பெயர் வைத்திருக்கிறார். இதைத் திராவிடர் கழகம் கடுமையாக எதிர்த்து வருகிறது.  நான்காம் தேதி
கூட பொதுக் கூட்டம் நடத்தினார்கள், இந்தப் பிரச்சினையைப் பொது மனிதராய்  நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் ? இதுகுறித்த உங்களின் கருத்து என்ன ?"

முதலில் "ஜெயம் சேவா சங்கத்தின்" நிறுவனரும், கடவுள் பக்தியும் நிறைந்த தா.ஜெயராஜன் (63)  அவர்களைச் சந்தித்தோம். "பிராமணன் என்பதே கிடையாதே, இங்கு ஒருவராவது பிராமணராக  இருக்கிறார்களா என்பதே என் கேள்வி. பிரம்மன் நெற்றியில் பிறந்தோம் என அடிக்கடி சொல்கிறார்களே,  அப்படி என்றால் உங்களுக்கு அம்மா, அப்பா இல்லையா ?  பெண்களை பஞ்சமன் மற்றும் தாழ்த்தப்பட்டவருக்குக் கீழாக ஆறாவது இடத்தில் வைத்துள்ளீர்கள். அப்படி என்றால் அப்பெண் பிராமணாள் இல்லை.  பிராமணாள் இல்லாத பெண்ணோடு வாழும் நீங்கள் எப்படி பிராமணராக இருக்க முடியும் ? பிராமணாள் என்றால் வெங்காயம், உப்பு உள்ளிட்ட உணர்வுகளைத் தூண்டும் எப்பொருளும் சேர்க்காமல், தினமும்  5 குவளம் மட்டுமே  உணவு செய்ய வேண்டும். அதில் ஒரு குவளை பட்சிக்கும், இன்னொரு குவளை பிராணிக்கும், மீதம் 3 குவளை  தனக்கும்  வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்த வேலைக்கென்று உணவை சேமித்து வைக்கக் கூடாது. அதேபோல் சத்திரியன், வைசியன், சூத்திரன் ஆகிய மூவருக்காகவும் மட்டுமே பிரார்த்தனை செய்ய வேண்டும், தனக்காகப் பிரார்த்தனைச் செய்து கொள்ளக் கூடாது. இங்கு அப்படியா நடக்கிறது? வைசியன் என்றால் யார் ?  வியாபாரி. அதாவது வியாபாரம் செய்பவன் வைசியன்.  நீங்கள் ஹோட்டல் வியாபாரம் செய்க்ரீர்கள்...நான் கேட்கிறேன் , நீங்கள்  வைசியரா? பிராமணரா?. சரி ! அதுபோகட்டும். உங்கள் கடையில் சமைப்பவர் யார் ? சூத்திரர். சாப்பிடுபவர் யார் ? சூத்திரர். பிறகு எதற்கு பெயரில் மட்டும் "பிராமணாள் கபே ?" என நெற்றியில்  திலகமிட்டவாறே பேசி முடித்தார் தா.ஜெயராஜன்.

அவரைத் தொடர்ந்து மு.கருணாநிதி (25) என்ற இளைஞரைக் கேட்ட போது, தான்  எம்.பி.ஏ., எம்.எஸ்.டபுள்யு முடித்திருப்பதாகக் கூறினார். "வெள்ளைகாரன்  இந்த நாட்டை விட்டு போகக் கூடாது எனச் சொன்னவர்
பெரியார்" என பிராமணர்கள் ஒரு துண்டறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள் வெள்ளைக்காரன் தானே உணவு, மருத்துவம், கல்வி எல்லாம் கொடுத்தனர்.  நீங்களோ  அடிமை வாழ்வை மட்டும் தானே கொடுத்தீர்கள்", எனச் சுருக்கமாக முடித்தார் .

மூன்றாவதாக, சிறீரங்கம் காளியம்மன் கோயில்  நிர்வாகியும், டிவிஎஸ் அய்யங்கார் நிறுவனத்தில் 13 ஆண்டுகள் வேலை செய்தவருமான மா.முத்துக்கண்ணன் (80) நம்மிடையே பேசினார். "நான் திருச்சி டிவிஎஸ் நிறுவனத்தில்தான் வேலை பார்த்தேன். நல்ல சம்பளம், நிறைவான வேலை. அதற்காக அவர்கள் செய்யும் தவறுகளை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் ?  நான் சாதரணமாகவே கொஞ்சம் புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளவன். அதில் பிராமணன்  என்ற சொல்லுக்கு உயர்ந்த ரகம் என்பதாகப் பொருள் உள்ளது. நீ உயர்ந்த ரகம் என்றால் நான்  யார் என்ற கேள்வி எனக்கு இயல்பாகவே எழும்.  பிறகு எப்படி பிராமணாள் கபே என்பதை ஏற்க முடியும் ?  நம்மைவிட அவர்கள் உயர்ந்தவர்கள்  என்பதை என்னால் ஏற்க முடியாது. நாம் செய்யும் ஒரு வேலையையாவது அவர்களால் செய்ய முடியுமா? சிறீரங்கத்தில்  அய்யங்கார், அய்யர்  உள்ளிட்ட வேறு சில பிரிவுகளும் உள்ளனர் . எனினும் அய்யங்கார் ஆதிக்கமே அதிகம். அவர்கள் நிறைய பிரிவுகளில் இருந்தாலும், நம்மை இழிவுபடுத்தும்போது மட்டும் பிராமணர்களாகச் சேர்ந்து கொள்கிறார்கள்" என அழகுக் கூறினார்.

அவரைத் தொடர்ந்து ஒலி ஒளி அமைப்பாளர் கலியபெருமாள் (44) என்பவர் கூறும்போது, பிராமணர் என்ற வார்த்தை தமிழர்களை இழிவுபடுத்துவதாகச் சொல்கிறார்கள். அப்படி என்றால் அவர்கள் கடைக்கு நாம் போகாமல் இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் தங்கள் பெயரை மாற்றிக் கொள்வார்கள்" என்று கூறினார்.

தேநீர் கடை வைத்திருக்கும் கலைவாணன் (35) என்ன சொல்கிறார் பார்ப்போம். "பொதுவாகப் பார்த்த போது பிராமணாள் என்பது எனக்குப் பிரச்சினையாகத் தெரியவில்லை. அவர்கள் கடைக்கு அவர்கள் பெயர்
வைத்திருக்கிறார்கள் என்றே கருதினேன். ஆனால் பிராமணாள்  என்பதற்குப் பொருள் தெரிந்த பிறகு, என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பிராமணாள் என்பதை ஜாதிப் பெயராகவே இவ்வளவு நாள் கருதி வந்தேன்", என மனதில்பட்டதைப்  பளிச்சென்று கூறினார்.

ரைஸ்மில் ஊழியர் செல்வராஜ் (58) என்ன சொல்கிறார்?   "எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அதுதான்  என் ஆசை.  பிராமணாள் எனப் பெயர் வைத்துப் பிரச்சினை செய்ய வேண்டாம் என்பதே என் கருத்து. சைவ உணவகம் என்று வைத்தாலே போதுமே? உயிர்களைக் கொள்ளக் கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் சைவம் சாப்பிடுகிறோம் என்கிறார்கள். அய்ந்தறிவு உயிர்களைக் கூடக் கொள்ளக் கூடாது எனக் கருதும் அவர்கள், சக மனிதர்களை  இழிவுபடுத்துவது எந்த விதத்தில் நியாயம்? அய்யர் என்றால் சுத்தமானவர் என்கிறார்கள். பிறகு நாங்கள் எல்லாம் அசுத்தமானவர்களா?  சமுதாயத்தில் எல்லோரும் மனிதர்கள் என்ற நிலை வர வேண்டும் என செல்வராஜ்  தன் ஆசையை வெளிப்படுத்தினார்.

அதேபோல வெற்றிலை வியாபாரி தயாநிதி (38) கூறுகையில், "அந்தப் பெயரில் அவுங்க பெரியவுங்க, நாம தாழ்ந்தவுங்க என இருப்பதாகச் சொல்கிறார்கள். இது தொடர்பா பழைய விசயங்களும் கேள்விப்பட்டிருக்கிறேன்.  ஏற்கனவே நடந்ததிலும், இப்போது நடப்பதிலும்  ஏதோ பொருள் உள்ளதாகவே கருதிகிறேன் என்றார். 



இறுதியாக ஒருவரை நாம் தொடர்பு கொண்டோம். அவர் பெயர் வீரராகவன். வயது 50. பெயரைப் படித்ததும் அய்யராக இருப்பாரோ என நீங்கள் எண்ணக்கூடும்? அப்படியெனில்  உங்கள் எண்ணம் சரிதான். தமிழர்களாகப் பார்த்து மட்டும் ஏன் கேட்க வேண்டும் ? அவர்களில் ஒருவரைக் கேட்கலாமே என நினைத்த  போது  நமக்குக் கிடைத்தவர் வீரராகவன். இப்போது அவரைப்  பேச விடுவோம்."தொழில் நிலையங்களில் பிராமணர் என்று சொல் பயன்படுத்துவது மறைந்து போன ஒன்று. பொது மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தவும், சிறீரங்கத்தில் வாழும் எங்களுக்குப் பிரச்சினை உண்டாக்கவும் செய்த செயலாகவே இதனை நான் பார்க்கிறேன்.
இதையே தி.மு.க ஆட்சியில் செய்திருப்பார்களா ? அ.தி.மு.க ஆட்சி வந்ததும் செய்கிறார்கள். உணர்வு என்பது எப்போதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். ஆட்சிக்குத் தகுந்தார் போல மாறக்கூடாது.   நான்  கடை உரிமையாளர் மணிகண்டனிடம் நேரடியாகவே இதனைத் தெரிவித்தேன்.



தமிழர்களுக்குப் பெரியார் பெற்றுத் தந்த  பல்வேறு  உரிமைகளை நாங்களும்  அனுபவிக்கிறோம். பெரியாரிடம் நாங்கள் ஏற்காதது இரண்டு. ஒன்று கடவுள் மறுப்பு, இன்னொன்று ஜாதி மறுப்பு. ஒரு காலத்தில் கணவன் இறந்ததும், மனைவிக்கு மொட்டை அடிப்பார்கள்.  "மொட்டைப் பாப்பாத்தி" என்ற சொல் கூட இருந்தது. ஆனால் இன்றைக்கு யார் மொட்டை அடிக்கிறார்கள்?  மொட்டை அடிக்காமல் இருப்பது மட்டுமல்ல, பூ வைத்துக் கொள்கிறார்கள், மூக்குத்தி அணிந்து கொள்கிறார்கள், மறுமணம் செய்து கொள்கிறார்கள்... இந்த வாய்ப்பும்,  மகிழ்ச்சியும் எங்களுக்கு எப்படிக் கிடைத்தது ? பெரியார் தானே  காரணம். இதை வெளியில் சொல்வதற்குத் தயங்கலாம். அதற்காக  உண்மையை மறைத்துவிட முடியாதே !



சிறீரங்கத்தில் அய்யர், அய்யங்கார்கள் எத்தனையோ பேர் உணவகம் வைத்திருக்கிறார்கள். ஆனால் இப்படி யாரும் பெயர் வைக்கவில்லையே? அதேநேரம் நேரம் உள்ளூரில் இருக்கும் பெரும்பாலான நாங்கள் இதனை விரும்பவில்லை. அதற்குச் சான்றாகவும் ஒன்றை நான் சொல்வேன். கடந்த 04.11.2012 அன்று  சிறீரங்கத்தில் நடைபெற்ற பிராமணர் சங்க உண்ணாவிரதத்தில், சிறீரங்கத்தைச் சேர்ந்தவர்கள் மூன்று பேர் மட்டுமே நேரடியாகக் கலந்து கொண்டார்கள்.  எனவே இந்தப் பெயர் வைத்ததில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதைச் தைரியமாகச் சொல்வேன். இன்னும் சொல்லப் போனால் ஜாதிய உணர்வுக்குக் கூட நான் தகுதியானவன் இல்லை.   பிராமணன் என்றால் வேதம் படித்திருக்க வேண்டும் உள்ளிட்ட ஏகப்பட்ட நிபந்தனைகள் உள்ளன. அதில் எந்த ஒன்றையும் நான் செய்யவில்லை. பிறகு எப்படி பிராமணன் என்று சொல்லிக் கொள்வேன் ? என் மனதுக்குப்பட்ட நியாயங்களை நீண்ட நாட்களாகவே நான் ஒப்புக் கொண்டு வருகிறேன்," என நீண்ட விளக்கம் கொடுத்தார்.


ஆக இந்தக் கருத்துகளின் வாயிலாக பொதுவான தமிழர்களும், கணிசமான  பார்ப்பனர்களும் கூட  இதை விரும்பவில்லை எனத் தெரிய வருகிறது.  ஆக ஏதோ  ஒரு காரணத்தை முன்னிட்டு, திட்டமிட்டு செய்வதாகவே  நாம் கருதமுடிகிறது. அவர்களால் முடிகிறபோது, அதை வெல்வதற்கு நம்மால் நிச்சயம் முடியும் என்பதையும்  அவர்கள் அறிவர்.

தமிழ்நாட்டின் பிற பகுதித்  தோழர்களுக்கும், சிறீரங்கம் போன்ற பகுதித் தோழர்களுக்கும்   உள்ள   வித்தியாசங்களை நாம் அறிய வேண்டியிருக்கிறது. தலையில் உச்சுக்குடிமியுடன், பஞ்சக்கச்சம் கட்டிக் கொண்டு, பூணூல் மேனியாய் போய்  வருபவர்களை பிற பகுதிகளில் ஒன்றிரண்டுதான் நாம் காண முடியும். ஆனால் சிறீரங்கம் பகுதிகளில்  நூற்றுக்கணக்கில் காணலாம். தொழிற்சாலையில் வேலை முடித்துப் போய் வருவதைப் போல, ரெங்கநாதர் கோவிலுக்குள்  போவதுமாக வருவதும் இருப்பார்கள்.  அதிகாரம், ஆதிக்கம் இவைகளைக் கொண்டு  என்னென்னமோ செய்யப் பார்க்கிறார்கள் சிறீரங்கத்துப் பார்ப்பனர்கள். ஆனாலும் நமது சிறீரங்கம் தோழர்கள் எதையும் விடுவதாய் இல்லை. அவர்களிடம்  அய்யா சிலை உண்டு,  படிப்பகம் உண்டு,  இயக்க அலுவலகம் உண்டு,  அடிக்கடி கூட்டம் போடும் ஆற்றல் உண்டு.  மொத்தத்தில் இனமானம் காக்கும் போரில் அவர்களுக்குரிய சவால்களை  லாவகமாக சமாளித்து, தொடர் சாதனை படைத்து வருகிறார்கள் ! 


                                                                                                                          வி.சி.வில்வம் 

Sunday, January 27, 2013

நன்றி - ஆனந்த விகடன்

 
                       நன்றி - ஆனந்த விகடன்
                                                                                      
                                                                 குழந்தையின் அரசியல் கேள்வி!

 
திருச்சியைச் சேர்ந்த என் நண்பரும் பத்திரிகையாளருமான வி.சி.வில்வம், தன்னுடைய அய்ந்து வயது மகள் கியூபாவுடன் திருச்சி பகுதியில் இரு சக்கர வாகனத்தில் போய்க் கொண்டிருந்தபோது கியூபா கேட்டாராம், ''ஏம்ப்பா, நிறைய சுவரில் 'அம்மா அம்மா’ - ன்னு எழுதி இருக்காங்க?'' நண்பரோ பதில் சொல்லத் தடுமாறியபோது, மீண்டும் கியூபா, ''ஆடு, இலை, ஈ... இதெல்லாம் எப்பப்பா எழுதுவாங்க?'' எனக் கேட்டாராம். அய்ந்து வயது குழந்தையின் அட்டகாச அரசியல் நகைச்சுவையோ?   
                                                                                                      
                                                                                                   எழுதியவர் 
                                                                                       கவிஞர் முத்துநிலவன்,
                                                                                                 புதுக்கோட்டை. 

Saturday, January 26, 2013

கியூபா - வுக்குப் பிடல் காஸ்ட்ரோ கடிதம் !

பிடல் காஸ்ட்ரோ கையொப்பமிட்ட வாழ்த்து அட்டை !
                                 
கியூபா அரசின் முத்திரைத் தாளில் (Letter bad) கடிதம் - ஸ்பானிஷ் மொழியில் !

பிடல் காஸ்ட்ரோ கையொப்பமிட்ட வாழ்த்து அட்டை !

ஸ்பானிஷ் மொழி -  ஓரளவு ஆங்கில மொழிபெயர்ப்பு !


Sunday, January 20, 2013

தென்றல் வீசிய மன்றல் !

                                                        தென்றல் வீசிய மன்றல் !

 
"மறக்க முடியாத நாள்!" என்பார்களே, அப்படித்தான் இருந்தது 25.11.2012. இதே மாதத்தில் தான் 13.11.2012 ஆம் தேதியும்  வந்து போனது. அன்றுதான் நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம் என்றார்கள் சில தமிழர்கள். காரணம், அன்றுதான் தீபாவளியாம்.  தமிழர்களே! வழி கிடைத்தால் மகிழ லாம்; வலியை எப்படிக் கொண்டாட முடிகிறது? சராசரி வாழ்வுக்கும் வழியில்லாத நிலையில் கடன் பெற்று, சுமை சுமந்து, நிமிரவே முடியாத வலியிலும் எப்படி  உங்களால் சிரிக்கவும், மகிழவும் முடிகிறது?

இதோ... அதே நவம்பரில் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் என்ன செய்தது தெரியுமா? உங்களுக்கு நல் வழி காட்டி,  உள் வலிக்கு மருந்து தடவியது. ஆம் தமிழர்களே! உங்கள் சகோதர, சகோதரிகளை அக்கறையோடு பார்த்தது.  திருமணம் முடியாமலும், விவாகரத்து முடிந்தும், துணைவரை இழந்தும், உடலுறுப்பு களைத் துறந்துமாக அல்லல்படும் அவர்கள் வாழ்வு பூத்துக் குலுங்க, தேதி குறித்துக் காத்துக் கிடந்தது மன்றல்!  காரணம், உங்கள் வாழ்வில் வீச வேண்டும் தென்றல்! "மகிழ்வித்து மகிழ்" என்பார்கள்! பெரியார் கொள்கை முழுவதுமே அதுதான் தமிழர்களே!

ஜாதி மறுத்துத் தமிழினம் தழைக்கவும், மதம் மறுத்து மனிதம் மலரவும், மணமுறிவுகளுக்கு மனச் செறிவுக் கூட்டவும், விதவை எனும் சொல்லின் வேர்ச் சொல் பிடுங்கவும், மாற்றுத் திறனாளிகளை மற்றுமொரு திறனாளிகளாக உருவாக்கவும் உருவானதே இந்த மன்றல். இது ஓர் ஜாதி மறுப்பு இணை தேடல் பெருவிழா! அங்கொன்றும், இங்கொன்றுமாக  வட மாவட்டங்களில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நிகழ்ந்துள்ளன. தமிழ்நாட்டை  ஒருங்கிணைத்த முதல் நிகழ்ச்சி இதுதான். வாழ்க்கைத் துணைவரைத் தேடி சற்றொப்ப 300 பேர்கள்  பதிவு செய்ய, அவர்களுக்குத் துணையாக 600 பேர்கள் பங்கேற்க, ஆக மொத்தம் ஆயிரம் மனிதர்களை   அரங்கத்தில் காண முடிந்தது. அவர்களில் தமிழ்நாடு கடந்து வந்தவர்களும் உண்டு.

தன்னிரு விழிகளை முற்றும் இழந்தவர், வாய் பேச முடியாதவர், இரண்டு கால்கள் இல்லாதவர், 18 வயதில் துணைவரை  இழந்தவர் - பிரிந்தவர், தன் 80 வயதிற்குத் துணைத் தேடியவர் எனப் பலரையும் பார்க்க முடிந்தது.  "எப்பொழுதும் பார்ப்பனர்களை திட்டுகிறீர்கள்?" என அறியாமையில் சில தமிழர்கள் கேட்பதுண்டு.  இதோ... அவர்களுக்கு இந்த வரிகள். துணை தேடி வந்தவர்களில் தமிழர்கள் மட்டுமல்ல, பார்ப்பனர்களும்தான்!  தங்கள் ஜாதி உயர்ந்தது என்றாலும், அவர்கள் ஜாதியிலேயே அவர்களுக்குத் துணை கிடைக்கவில்லை.  உதவிகள் மறுக்கப்பட்டுள்ளன. எத்தனை நாள் பொறுப்பது? தன் சுயமரியாதைக் காக்க, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தை நோக்கினர். 

பெரியார் கொள்கை என்பது கடினமானது அல்ல. உங்களுக்கும் சுகவாழ்வு, எங்களுக்கும் சுகவாழ்வு, எல்லோருக்கும் சுயமரியாதை வாழ்வு! அவ்வளவுதான். இதைத் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  புரிந்து கொள்ளவில்லை என்கிற கோபம் எங்களுக்கு இல்லை;  ஆனால் புரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவல் இருக்கிறது. அதற்கான காரணங்களைக் கூட இப்படி எளிதாகக் கூறிட முடியும். கடவுளை நம்பாதீர்கள் என்றோம்,  நம்பினீர்கள். ஜாதகம் பார்க்க வேண்டாம் என்றோம், பார்த்தீர்கள். மொத்தத்தில் மூடநம்பிக்கைகள் ஒழியுங்கள் என்றோம், அதில்தான் நம்பிக்கைக் கொண்டீர்கள். இதன் விளைவுகள் தானே  நம் எல்லா பாதிப்புகளுக்கும் காரணம். 

மாறாக மனிதர்களிடம் அன்பு செலுத்துங்கள், விட்டுக் கொடுங்கள், மனம்விட்டுப் பேசுங்கள், உதவிக் கொள்ளுங்கள் என்பதுதானே பெரியார் கொள்கை. இதை ஏற்காமல் போனால் வாழ்வில்  இழப்புகள் நேரும் என்றோம். ஏற்பதற்குத் தயங்குகிறீர்கள்; இழப்புகளைத் தாங்குகிறீர்கள்! உங்களுக்கு ஓர் இழப்பு என்றால், "நாங்கள் முன்பே சொன்னோம் கேட்டீர்களா?" என நாங்கள் கேட்பதில்லை. காரணம் பெரியார் எங்களுக்கு அப்படி சொல்லிக் கொடுக்கவில்லை. சகமனிதன் துன்பப்படும் போது, நீயும் துன்பப்படு என்றவர்தான் பெரியார்! அதனால்தான் அனைவரையும் ஒன்று திரட்டினோம்.  

எங்கள் ஒன்று திரட்டலில் ஜாதி, மதம் கிடையாது, கத்தரிக்காய், வெண்டைக்காய் கிடையாது. மனிதனாக இருக்க வேண்டிய ஒரே தகுதிதான்! அப்படித்தான் வந்து மேடை ஏறினார்கள் அனைவரும்.  இந்த நவநாகரிகக் காலத்திலும் ஜாதிச் சங்கப் பிழைப்பு மற்றும் அரசியல் பிழைப்பு நடத்துகிறவர்கள் ஜாதி  மறுத்துத் திருமணம் செய்தால் குத்துவோம், வெட்டுவோம் என்கிறார்கள். ஜாதிக்கு மாறாக  எதுவும் நடக்கக் கூடாது எனத் தீர்மானம் போடுகிறார்கள். அவர்கள் ஜாதியில் அவர்கள் அப்பாவும், தாத்தாவும் எப்படி வாழ்ந்தார்கள் எனத் தெரிந்துதான் பேசுகிறீர்களா? பிற ஜாதியை அசிங்கப்படுத்த நினைத்தால், அதைவிட கீழான உங்கள் ஜாதி அசிங்கமும் வெளியாகும் என்பதை மறந்து விடாதீர்கள். ஜாதிக்கு ஆதரவாக  என்னதான் நீங்கள் தீர்மானம் போட்டாலும், உங்களைப் பற்றியும் மக்கள் என்றோ தீர்மானித்து விட்டார்கள். 

ஜாதி மறுப்பு இணை தேடலுக்கு வந்தவர்களில் 300 பேரும் ஜாதி மறுத்துத்தான் கேட்டார்கள். இவர்கள் அனைவரும்  முற்போக்காளர் என்றோ, பெரியாரை முழுமையாக ஏற்றார்கள் என்றோ நாம் சொல்லவரவில்லை. ஆனாலும்  ஜாதியால் பாதிக்கப்பட்டுள்ளனர் அல்லது  ஜாதி மறுத்தாவது குழந்தைகளுக்கு நல்ல வாழ்க்கை ஏற்படுத்த எண்ணுகிறார்கள்.  ஆக ஜாதி என்பது தடை அல்லது தேவை யில்லை என்கிற முடிவுக்கு வருகிறார்கள். இந்த முடிவுக்கு வந்தவுடன்  அவர்களுக்கு நினைவில் வருவது பெரியார் இயக்கம்! அந்த வாய்ப்பைத் தான் இந்த இயக்கம் ஏற்படுத்திக்  கொடுத்தது, இன்னும் ஏற்படுத்திக் கொடுக்கும். 

சென்னையில் தொடங்கிய பயணம் கன்னியாகுமரி சென்று, மீண்டும் சென்னையில் தொடங்கும். டிசம்பர் 30-ல் திருச்சிராப்பள்ளியில் அடுத்த மன்றல் நிகழ்வு நடக்கவுள்ளது.ஒரு முடிவுக்கு வரும்வரை, இதற்கும் முடிவு இல்லை. சமூகத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் வேண்டுமானால் ஜாதியை ஒழிக்க வேண்டும். நம் உயிரை எடுக்கும் ஜாதியின் உயிரை எடுக்கும் வரை நாம் ஓயக்கூடாது. தொடர்ந்து ஓடுவோம்!


                                                                                                                            வி.சி.வில்வம்



கிளம்பிட்டாங்கய்யா... கிளம்பிட்டாங்க...

                                கிளம்பிட்டாங்கய்யா... கிளம்பிட்டாங்க...


திருச்சி மத்தியப் பேருந்து நிலையம். ஒரே கூட்டமாக இருந்தது. தலையா, கடல் அலையா என நானே வசனம் பேசிக் கொண்டேன். என்ன ஆச்சு இவர்களுக்கு? ஏன் ஒரே இடத்தில் கூடியிருக்கிறார்கள்...? கோக-கோலா, பெப்சியில் நஞ்சிருப்பதை எதிர்த்து நெஞ்சுயர்த்தும் போராட்டமா? அல்லது இட ஒதுக்கீட்டை மறு பேச்சின்றி அமுல்படுத்தக்கோரும் போராட்டமா? அல்லது வேறு என்னதான் போராட்டம்? எதற்குத்தான் கூடியுள்ளார்கள்? 

சதா கேள்வியே கேட்டுக் கொண்டிராமல், சற்று அருகில் போய் பார்த்தால்தான் என்ன? என என் சிந்தனை என்னை உசுப் பேற்றியது. நானும் என் சிந்தனைக்குக் கட்டுப்பட்டு (நாம் தாம் சாமிக்குக் கட்டுப் படாத அடங்காப்பிடாரிகளாச்சே!) அருகில் சென்றேன். காவி வேட்டியும், காவி சேலையும், காவி பெர்முடாசுமாக (இளைஞர் சாமிகள்) குழுமியிருந்தனர். என்னங்க எல்லோரும் எங்க போறீங்க? என்று சாதாரணமாகக் கேட்டேன். நாம பாட்டுக்கு நக்கலா கேட்டு, அது சாமிக் குத்தம் ஆயிடுச்சுண்ணா? அதற்கு ஒரு பாவி சொன்னார். (குறிப்பு : பாவி என்பதை சாமி என்று திருத்தி வாசிக்கவும். தவறுக்கு வருந்தவில்லை) நாங்கள் வேளாங்கண்ணி போறோம், அடுத்த வாரம் கொடியேற்றம் நடக்குது என்றார். அதுதான் போன வாரமே கொடி ஏற்றியாச்சே, இப்ப என்ன  வாம்? என்றேன். யோவ்! போன வாரம் ஏத்தினது ஆகஸ்டு --15 சுதந்திரக் கொடி, இப்ப ஏத்தப் போறது வேளாங்கண்ணி மாதா கொடி என்றார். 

அப்ப வேளாங்கண்ணி விழாவிற்குத்தான் கூட்டம் கூட்டமா நிக்கிறாங்களா? நான் கூட ஏதோ போராட்டம் அது இதுன்னு தப்பா நினைக்சுட்டேன். என் நினைப்புக்கும், இவுங்கப் பொழப்புக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையோ சரி... சரி... பேருந்துப் பிடித்து ஊர் போற வேலையைப் பார்ப்போம் என்ற முடிவுக்கு வந்தேன். அப்பொழுது ஒரு நண்பர் அருகில் வந்து, அண்ணே! இங்க என்ன ஒரே கூட்டமா இருக்கு எனக் கேட்டார். கிளம்பிட்டாங்கய்யா... கிளம்பிட்டாங்க... என்றேன். ஏங்க இப்படிக் கோபப்படுறீங்க? என்றார். நான் உங்களைச் சொல்லலை, இவுங்க எல் லோரும் வேளாங்கண்ணி போறாங்கண்ணு சொல்ல வந்தேன். அப்படியாண்ணே! நீங்களும் போறீங்களா எனக் கேட்டார். சரியாப் போச்சுப்போ! இனி இங்க நிற்கக் கூடாது, உடனே பேருந்தில் இடம் பிடித்தாக வேண்டும். சரி இவ்வளவுக் கூட்டமா இருக்கே, பேருந்தில் உட்கார இடம் கிடைக்காதோ என அருகில் இருந்த வரைக் கேட்டேன். அவனவன் வேளாங்கண்ணிக்குத் தொங்கிட்டுப் போறான், இவுங்களுக்கு இடம் வேணூமாமில்ல இடம் என நக்கல் பேச்சு பேசினார். பக்தர்கள் அந்தரத்தில் தொங்கிட்டுப் போகலாம். அவர்களுக்கு ஒரு விபத்து என்றால் பரலோகத்திலிருந்து வந்து இயேசு  காப்பாற்றுவார். நமக்கு யாரு இருக்கா? எனவே பொறுமை காத்து நின்றேன்.

காட்சி - 2

அப்பாடா! ஒரு வழியா பேருந்தில் ஏறி இடம் பிடிச்சாச்சு. நீண்ட நேரம் பேருந்து நிலையத்தில் நின்றதால் கால் வலித்தது. பயணச்சீட்டை வாங்கிவிட்டு கொஞ்சம் துங்கலாம் என்று நினைத்தேன். (பயணச் சீட்டு வாங்காமல் துங்கினால் நடத்துனர் ஏதாவது நினைப்பாரல்லவா?) பேருந்தில் ஒரே கூட்டம். சத்தமும் அதிகமாக இருந் தது. என் அருகிலும், சுற்றிலும் ஒரே பாவிகள் கூட்டம். பேருந்தில் அய்ந்து, ஆறு பேர்தான் அப்பாவிகள் இருப்போம். நல்ல களைப்பாக இருந்ததால் எப்போது துங்கினேன் என்று தெரியவில்லை. திடீரென கண் விழித்துப் பார்த்த போது, துவாக்குடி வந்திருந்தது. எனக்கோ கோபம் வந்துவிட்டது. காலை 8 மணிக்குத் திருச்சி யில் புறப்பட்ட பேருந்து 10 மணிக்குத்தான் துவாக்குடி வந்துள்ளது. நானோ நாகப் பட்டினம் போயாக வேண்டும், நிறைய வேலை இருக்கிறது. பேருந்து ஏன் இவ்வளவு மெதுவாகச் செல்கிறது என முன்னாடி கண்ணாடி வழியே பார்க்கிறேன். சாலையின் இருபுறமும் மக்கள் சாரை சாரையாக நடந்துச் செல்கின்றனர். 

வேகாத வெயிலில் வெந்து நடந்து போகிறார்கள்... எங்கே போகிறார்கள் எனக்கு உடனே தெரிந்தாக வேண்டும், இல்லாவிட்டால் தொப்பை வெடித்துவிடும். முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு, அருகிலிருந்த பாவியைக் கேட்டேன். ஏன் இந்த மக்கள் சாலையில் நடந்து போறாங்க-? -அவங்க வேளாங்கண்ணி போறாங்க என்றார். அப்ப நீங்க எங்க போறீங்க...? - நாங்களும் வேளாங்கண்ணி தான் போறோம். அவங்க வேளாங் கண்ணிக்கு எதுக்குப் போறாங்க? மாதாவை வழிபட. சரி.... நீங்க எதுக்குப் போறீங்க? நாங்களும் வழிபடத்தான். (ம்ம்..... அதாவது யோசிக்கிறேன்னு அர்த்தம்) எனக்கு எங்கோ இடிக்குதே என்றேன் உங்களுக்கு எங்கேயும் இடிக்கல, என்னைத்தான் நீங்க இடிக்கிறீங்க. கொஞ்சம் தள்ளி உக்காருங்க என்றார். மன்னிக்கணும் பாவி, தள்ளி இருக்கேன் என்றேன். யாரைப் பார்த்துப் பாவின்னு சொன்னே! என்று குதித்துவிட்டார். 

நான் ஒருத்தன் திருச்சியிலிருந்து மனசுக்குள்ளேயே பாவி, பாவின்னு சொன்னவன், உணர்ச்சி வசப்பட்டு இவருகிட்ட உளறிட்டேன். இருந்தாலும் சமாளிக்கணுமே! அதாவதுங்க...நானா உங்களைப் பாவின்னு சொல்லலை. பாதர்ஸ் முன்மொழிவதை நான் வழிமொழிஞ்சேன், அவ்வளவுதான். அவரும் கொஞ்சம் சமாதானமானார். மீண்டும் பேச்சுத் தொடங்கியது, நீங்களும் மாதாவை வழிபடப் போறீங்க... அவங்களும் மாதாவை வழிபடப் போறாங்க, உங்க நோக்கமும். அவுங்க நோக்கமும் ஒரே மாதிரிதான் இருக்கு. அப்ப நீங்க ஏன் பேருந்தில் போறீங்க? அவங்க ஏன் நடந்து போறாங்க? எனக் கேட்டேன். அவங்களுக்கு ஏதாவது வேண்டுதல் இருக்கும், நடக்குறாங்க என்றார். அப்ப உங்களுக்கு எதுவும் வேண்டுதல் இல்லையா? எங்களுக்கும் வேண்டுதல் இருக்கே! அப்ப நீங்க ஏன் பேருந்தில் போறீங்க? யோவ்! அது அவங்க விருப்பம். இது எங்க விருப்பம், உனக்கு என்னய்யா வந்துச்சு... எனக் கத்திவிட்டார். இப்படிச் சொன்னா எப்படிண்ணே?

இப்ப உங்க சொந்த ஊர் திருச்சி, சரி! அடுத்த வாரம் தஞ்சாவூர்ல ஒரு திருமணம். உங்க உறவினர்கள் ஒரு 10 பேர் போறீங்க, எல்லோரும் நடந்தே போவீங்களா? என்றேன். என்னய்யா கேள்வி கேக்குற...? நடந்து போறதுக்கு நாங்க என்ன கூமுட்டையா என்றார். 50கி.மீ. துரமுள்ள திருச்சிக்கும். தஞ்சாவூருக்கும் நடப்பீங்களான்னு கேட்டால், நாங்க என்ன கூமுட்டையான்னு கேக்குறீங்க... 150 கி.மீ. துரமுள்ள திருச்சிக் கும் வேளாங்கண்ணிக்கும் நடக்கிறாங்களே! அதுக்குப் பேரு என்ன அய்யா என்றேன். யோவ்! அது மாதாவை வழிபட வேண்டிக் கிட்டு, பயபக்தியா நடக்குறது. அப்ப உங் களுக்கு வேண்டுதல், பயபக்தி இல்லையா...? எங்களுக்கும் இருக்கே... அப்ப நீங்க ஏன் நடக்கல என்றேன். அய்யோ... தாங்க முடியலையே! இந்த ஆளை வெளியேத்துங்களே என அலறினார். பேருந்தில் எல்லோரும் என்னை ஒரு மாதிரியாகப் பார்க்க, நான் சன்னல் வழியே பார்த்தேன். வல்லம் வந்திருந்தது. சரி! நாம பேசாம தஞ்சாவூர் வரை நடந்தே போவோம் என பேருந்திலிருந்து இறங்கிவிட்டேன்.
இறுதிக் காட்சி

நான் பாட்டுக்கு சாலையில் சும்மா நடந்து போனேன், ஒருவர் வந்து, அண்ணே! ஏன் நடந்து போறீங்க என்றார்? நான் எதுக்கோ போவேன், உனக்கு என்னய்யா என்றேன்? அதுக்கு இல்லைண்ணே! பேண்டு போட்டுகிட்டு நடக்குறீங்களே, அதான் கேட்டேன். காவிச்சாமி, கண்ணுச் சாமி, (இவரு குருடர்களுக்குப் பார்வை தர்றவர்) கை கால் சாமி (இவரு நுடவர் களை நடக்க வைப்பவர்) எனப் பல சாமிகள் இருப்பது மாதிரி, நான் பேண்ட் சாமின்னு வச்சுக்க போ என்றேன். ஏன்ணே! இப்படி கிறுத்துவமா பேசிறீங்க என்றார். ஆமா! நீங்க மட்டும் கிறிஸ்தவம் பேசலாம், நாங்க கிறுத்துவம் பேசக் கூடாதோ?  சரி.. சரி.. நீங்க எங்கதான் போறீங்கன்னு சொல்லவே இல்லையே என்றார். நான் தஞ்சாவூர் போறேன். என்னண்ணே விளை யாடுறீங்களா ? 100 பேருந்து போகுது. இப்படி நடந்து போறீங்களே என்றார். ஆமா! நீங்க எங்க போறீங்க? நாங்க வேளாங்கண்ணி போறோம். ஏன் உங்களுக்குப் பேருந்தே இல்லையா? அப்படியெல்லாம் பேசாதீங்க சாமி, நாங்க மாதாவுக்கு வேண்டிக்கிட்டு நடக்கிறோம்.

அப்ப ரொம்பப் பேரு பேருந்துல போராங்களே, அவங்க? அவுங்களுக்கு என்ன சாமி, அவுங்க வசதியானவங்க, பஸ்ல வாராங்க. நாங்க ஏழைங்க... நடக்கிறோம். எத்தனை வருசமா நடக்குறீங்க 40 வருசமா நடக்கு றோம். அப்ப 40 வருசமா ஏழையாகவே இருக்கீங்க அப்படித்தானே. சரி! இன்னும் எத்தனை வருசம் இப்படியே நடப்பீங்க? சாவுற வரைக்கும் நடப்போம். அப்ப சாகிற வரை ஏழையாகவே இருக்கப் போறீங்களா என்றேன். ஏங்க இப்படியெல்லாம் பேசுறீங்க வேறெப்படி பேசச் சொல்றீங்க.. .சொல்லுங்க?

இங்க நடக்குற அத்தனை பேரும் அன்றாடம் வேலைக்குப் போனால்தான் சாப்பாடு, ஒரு வாரம் வர்ற வருமானம் போச்சு. நடைப் பயணத்திற்குத் தேவையான பணத்தை வட்டிக்குக் கடன் வாங்கி யிருப்பீங்க. இனிமேல் வேலைக்குப் போய் அன்றாடம் வரும் வருமானத்தில் வயிற்றுக்கு சாப்பிடுவீங்களா... வட்டிக்கு அழுவீங்களா... இந்த வட்டி போடுற குட்டி களையே சமாளிக்கத் திணறும் நிலையில், உங்கள்  குழந்தைக் குட்டிகளுக்கு நீங்க என்ன செய்துவிட முடியும்? இந்தக் கடனை அடைக்கிறதுக்குள்ள நல்ல வெள்ளி, கெட்ட வெள்ளி, இயேசு பிறப்பு, இயேசு இறப்பு, ஆணி அறையப்பட்டது, ஸ்குரு கழற்றப்பட்டது என அடுத்தடுத்த நிகழ்ச்சிகளும், விழாக்களும் உங்கள் விலா எலும்பை நொறுக்கிவிடுமே... நீங்க சொல்றதுல நியாயம் இருக்குண்ணே, இருந்தாலும் எல்லாம் ஒரு நம்பிக்கைதானே...

என்ன நம்பிக்கை? பொல்லாத நம்பிக்கை... நீங்க 40 வருசமா நடக்குறீங்க, உங்க அப்பா 50 வருசம் நடந்தாரு, உங்க தாத்தா 80 வருசம். அதுக்கும் முன்னால உங்க தாத்தா, கொள்ளு தாத்தான்னு 100, 200 வருசமா நடக்குறீங்க...? என்ன பலனைக் கண்டீங்க? இருக்கிறதெல்லாம் வெளியில போச்சே தவிர, உள்ள என்ன வந்துச்சு சொல்லுங்க பார்ப்போம்? உங்க தாத்தா கடனை உங்க அப்பா அடைச்சு,  உங்க அப்பா கடனை நீங்க அடைச்சு, உங்க பிள்ளைக்கு நீங்க கடனைச் சேர்த்து வைக்குறீங்க..  சல்லிக்காசுக்குப் பயனில்லாவிட்டாலும், பலநூறு வருசமா நம்பி நடக்குறீங்க பாருங்க... உங்க வலிமைக்கு முன்னால அம்மன் முறுக்குக் கம்பிகளெல்லாம் தோத்துப் போச்சு போங்க...! 

இனிமேலாவது உழைக்கணும்னு நம்பிக்கை வைங்க, உயரணும்னு நம்பிக்கை வைங்க, வாழ்க்கையில சிறக்கணும்னு நம்பிக்கை வைங்க...! 100, 200  வருசமா எது எதுக்கோ நம்பிக்கை வச்ச நீங்க ஒரு 10 வருசத்திற்கு இதுல மட்டும் நம்பிக்கை வைங்க!  நிச்சயம் ஜெயிப்பீங்க! சந்தோசமா இருப்பீங்க!  போய்ட்டு வரவா !
 வி.சி. வில்வம்


.

சென்னை 36 ஆவது புத்தகக் காட்சி - ஒரு கண்ணோட்டம் :



"புத்தகங்கள்தான் என் உண்மையான நண்பன் என்றும், புத்தகங்களுக்குச் செலவிடுவதால்  என்னை ஊதாரி என்றாலும் அதற்கு கவலைப்படமாட்டேன்" என்றார் ஓர் அறிஞர். இது உண்மை என்றுதான் தெரிகிறது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில்  36 ஆவது புத்தகக் கண்காட்சி தொடங்கியிருக்கிறது. ஜனவரி 11 முதல் 23 வரை
தினமும் பிற்பகல்2 மணிக்குத் தொடங்கி, இரவு 9 மணிக்கும், விடுமுறை தினங்களில் காலை 11 மணிக்கும் தொடங்குகிறது.

பொங்கல் நிகழ்ச்சியும், புத்தகக் காட்சியும் :

சற்றொப்ப 750 புத்தகக் கடைகள் அறிவை விசாலமாக்குகின்றன. பொதுவாகத் தமிழர்கள்  ஆண்டிற்கு நாற்பது, அய்ம்பது விழாக்களைக் கொண்டாடுகின்றனர். இதில் நம்முடையது  என்றால் "பொங்கல்" மட்டுமே தங்கி நிற்கும். தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதி மக்களும்
சென்னையில் வாழ்கிறார்கள். இவர்கள் மற்ற விழாக்களுக்குச் சொந்த ஊர் செல்கிறார்களோ  இல்லையோ தமிழர் திருநாள் பொங்கலுக்குக் குடும்பம் குடும்பமாகச் செல்வர். அதுசமயம் சென்னையே பாதியாகிவிடும்.

இந்த நேரத்தில்தான் ஒவ்வோர் ஆண்டும் புத்தகக் காட்சி தொடங்குகிறது. ஆனாலும் மக்கள் கூட்டம் குறையவில்லை. புத்தகக் காட்சியின் இடத்தை அவ்வப்போது மாற்றினாலும்,  தேடிப் பிடித்து அசர வைக்கின்றனர் நம் மக்கள். இரண்டொரு நாளில் விடுமுறைக்
கழித்து வரும் மக்களும் திரள், திரளாகச் சென்று மேலும் மெருகூட்டுவர்.

தமிழ்நாட்டிற்கே பெரியார் பாதை :

புத்தகக் காட்சியை மக்கள் இப்படிக் கொண்டாடுவது, பிற மாநிலங்களில்  இருக்குமா எனத் தெரியவில்லை ? ஆனால் தமிழ்நாட்டில் கல்வியாளர்களும், குறைந்தபட்சம் படித்தவர்களும் மிகுதி.  இந்த இடத்தில் பெரியாரையும், காமராசரையும் நன்றியோடு நினைத்துப் பார்க்கலாம்.

புத்தக அரங்குகளை விசாலமாக உருவாக்கி, நுழைவுக் கட்டணத்தை வெகுவாகக் குறைவாக்கிப்  பார்வையாளர்களைக் குளிர்விக்கிறார்கள். தானியங்கி பணம் பெறும் வசதி, அரங்கம் குறித்தும், புத்தகங்கள் குறித்தும் முழுமையாக அறிந்து கொள்ள தொடு திரை கணினி வசதி, விற்பனையாளர்களுக்குத்  தேவையான சில்லறை வசதி எனக் கூடுதல் சிறப்பைப் பெறுகிறது இப்புத்தகக் காட்சி .

மொத்தம் 15 வரிசைகள் அமைத்து, எண்ணற்ற விற்பனை நிலையங்கள் அரங்கை அழகுறச் செய்கின்றன. ஒவ்வொரு வரிசைக்கும் ஒரு தலைவரின் பெயரைச் சூட்டியுள்ளனர். அதாவது வரிசை எண் - 10,
பெரியார் பாதை என எழுதியிருக்கிறார்கள். ஒரு உதாரணத்திற்காக நாம் பெரியார் பாதை என  எழுதியிருக்கிறோம். ஆனால் அங்கு ஆகப்பெரும்பாலும் "நூலோர்" பெயர்தான் இருக்கிறது. தமிழ்நாட்டிற்கே பாதை அமைத்தவர் பெரியார்தான் என்பது அங்குள்ள மக்களுக்குத் தெரியாதா என்ன ?

புத்தகம் கேட்கும் குழந்தை :

சற்றொப்ப 750 புத்தகக் கடைகளைத் துறைவாரியாகப் பிரித்தால் பொதுத் தன்மையுடையவை  நிறைய இருக்கின்றன.கல்வி, ஆங்கிலம் மற்றும் குழந்தை நூல்களும் அதிகம் காணப்படுகின்றன. ஆன்மிகம் சார்ந்த நூல்கள் ஆங்காங்கே இருந்தாலும், ஆன்மீகத்திற்கு என்றே அமைக்கப்பட்டுள்ள தனி நிலையங்கள் ஜனவரி குளிரில் மேலும் காற்று வாங்குகின்றன. இப் புத்தகக் காட்சிக்கு மக்கள்  குடும்பம் குடும்பமாக வந்து குவிகின்றனர்.பெரியார் புத்தக நிலையத்தைக் கடந்து சென்றது ஒரு  குடும்பம். பத்து வயதுள்ள ஒரு சிறுமி,"அப்பா ! அப்பா ! எனக்கு ஒரு புத்தகம் வாங்கிக் கொடுப்பா !", எனக் கெஞ்சலாகக் கேட்டது. பொம்மைக் கேட்கும் வயதில், புத்தகம் கேட்கிறது குழந்தை. வாங்கிக் கொடுத்தால் அது வளர்ந்து கொள்ளும் !

நவீனமான பெரியார் புத்தக நிலையம் :

எண் - 227 இல் அமைந்திருக்கிறது பெரியார் புத்தக நிலையம். சீருடையில்  இருக்கிறார்கள் தோழர்கள்!   இடாப்புகள் (Bills)  "பார் கோடு "மூலம் பதிவு செய்யப்பட்டு, இயந்திரம் மூலம் வெளியாகிறது. அழகழகான
வடிவமைப்பில், விதவிதமான விளம்பரங்கள் ஓர் தனித்தன்மையை ஏற்படுத்துகின்றன.  புத்தக நிலையத்திற்கு முன்பு அழகான பொங்கல் பானை வைத்து, அது பொங்குவது போல வைத்து,  ஆறு கரும்புகளை அதனருகே வைத்துத் தமிழர் திருநாளை மேலும் செழுமைப்படுத்தியிருந்தது  பெரியார் புத்தக  நிலையம். அதனருகே நின்று ஒளிப்படம் எடுத்துக் கொண்டனர் சிலர்.

பெரியார் பொங்கல் :

பொங்கல் அன்று புத்தகக் காட்சியில் பலருக்கும் பொங்கல் கொடுக்கப்பட்டது. "டப்பாவில்" வைத்து,  அது மூடப்பட்டு, சிறிய கரண்டியுடன் 750 கடைகளுக்கும் வழங்கப்பட்டது. அதுதவிர பெரியார் புத்தக  நிலையத்திற்கு வந்தோருக்கும், அவ்வழியே கடந்தோருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.  "இது என்ன ?", என அவர்கள் கேட்ட போது தோழர்கள் சொன்னார்கள் இதுதான் "பெரியார் பொங்கல்!"
இந்த இனிப்பில் கூட ஓர் கசப்பு!  பொங்கலால்  ஏற்பட்ட தங்கல்! பெரியார் புத்தக வரிசையில் ஒரு  புத்தக நிலையம் இருக்கிறது. அவை இந்து மதத்தை வலியுறுத்துகிற, பார்ப்பனீயப் புத்தகங்கள்.  அங்கு சென்று நம் தோழர்கள் பொங்கல் கொடுத்த போது, அங்கிருந்தவர் வாங்க மறுத்து,
நான் சாப்பிடமாட்டேன் என்று சொன்னதோடு, மேலும் சில விமர்சனங்களும் செய்துள்ளார்.  நம் தோழர்கள் மறுபேச்சின்றி  அமைதியோடு வந்துவிட்டார்கள். நம்முடைய தோழமையும்,
அவர்களின் வெறுப்பும்  எப்படி இருக்கிறது என்பதற்கான சான்று இது.

எனக்கான புத்தகங்கள் :

பெரியார் புத்தக நிலையத்தைக் கடந்து செல்வோருக்கு ஒரு வணக்கம் வைத்துவிட்டு, அய்யா வாருங்கள்!  உள்ளே வந்து பாருங்கள் ! என நம் தோழர்கள் அழைக்கும் போது, அந்த மரியாதையை ஆச்சரியத்தோடும்,
ஆவலோடும் ஏற்கிறார்கள்!  நெற்றியில் நாமம் போட்டு ஒருவர் வந்தார். அவர் அய்யங்காராக இருக்கலாம்;  அம்பாசிடர் காராக இருக்கலாம். கடவுள் ஓர் பொய் நம்பிக்கை என்ற நூலும், கீதையின் மறுபக்கமும் கொடுங்கள்  என்றார். மகிழ்ச்சியோடு எடுத்துக் கொடுக்கப்பட்டது. ஒருவர் 10 புத்தகங்கள் எடுத்துக் கொண்டு "தொகை எவ்வளவு?"
என்றார். ரூபாய் 190 என்றதும், "அட!  இவ்வளவுதானா?" எனக் கேட்டுக் கொண்டே மேலும் 100 ரூபாய்க்கான  புத்தகங்களை அள்ளி வந்தார். காவி வேட்டி அணிந்த சிலர், கை நிறையப் புத்தகம் வாங்கிச் சென்றனர்.
இவையெல்லாம் வழக்கமாக நம் நிலையத்தில் நடப்பவைதான். பெரியார் செய்து வைத்த அதிசயங்கள் இவை!

பெரியார் புத்தக நிலையத்தை நோக்கி ஒரு இணையர் வந்தனர். வந்ததும் அக்கணவர் வேறு இடத்திற்குப்  போய்விட்டார். அப்பெண்மணி மட்டும் பெரியார் நூல்களை வாங்கிக் கொண்டார். சிறிது நேரத்தில்
அப்பெண்ணின் கணவர் வேறு சில நூல்களோடு வந்தார். அதைப் பார்த்த அப்பெண்மணி சொன்னார், "நீங்கள் உங்கள் துறைச் சார்ந்து வாங்கியுள்ளீர்கள். நான் என் துறைச் சார்ந்து வாங்கியுள்ளேன்", என்றார் சிரிப்போடு !  அதாவது நான் பகுத்தறிவுத் துறை என்கிறார் அப்பெண். இவை "எனக்கான புத்தகங்கள்" என அப்பெண்மணி கூறியபோது, அவரிடம் மகிழ்ச்சியையும், தோழர்களிடத்தில் பெருமையையும் காண முடிந்தது.

ஒற்றைக் கேள்விக்கே ஓடிப்போனவர்:

பெரியார் புத்தக நிலையத்தைக் கடந்து எல்லோரும் செல்கிறார்கள். கூடவே பார்ப்பனர்களும் போகிறார்கள். போகட்டும், நமக்கொன்றும் அதில் சங்கடமில்லை. ஆனால் ஒரு பார்ப்பனர் நம் புத்தகங்களை மேலும், கீழும்  பார்த்துக் கொண்டே சென்றார். சென்றுவிட்டார் என்றுதான் நினைத்திருந்தோம், ஆனால் திரும்பி வந்துவிட்டார்.
நம் தோழர்களைப் பார்த்து, "ஏன் பொங்கல் பானை, கரும்பு எல்லாம் வைத்துள்ளீர்கள் ? உங்களுக்குத்தான்  கடவுள் இல்லையே ?", என்று கேட்டார். நம் தோழர்கள் சிரித்தார்களே தவிர, பதில் சொல்லவில்லை.
காரணம் கேள்வியில் தகுதி இல்லை. மீண்டும் அவர், "அது என்ன பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி?  என எழுதியுள்ளீர்கள். பறையர் புரட்டுக்குப் பதிலடி என  எழுத முடியுமா? எனக் கேட்டார். தோழர்கள்
அமைதியாகச் சொன்னார்கள். "பறையர் என நீங்கள் சொல்லக் கூடியவர்கள் இந்த நாட்டிற்கு  எந்தக் கெடுதலும் செய்யவில்லை. உங்களால் முடிந்தால் பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி  எனும் நூலுக்கு மறுப்பு எழுதிப் பாருங்கள்" என்றனர். ஒன்றுமே சொல்லாமல் ஓடிப்போனார்.


புத்தகங்களால் என்ன கிடைக்கும் ?

புத்தகங்களால் எல்லாம் கிடைக்கும்!  புத்தகங்களைத் தொடர்ந்து படிக்கும் போது,  உங்களுக்கே அது பிடிக்கும்! புத்தகம் வாசிப்பதனால் அறிவு, ஆற்றல், சிந்தனை,உணர்ச்சி, மகிழ்ச்சி, கோபம், வேகம் என எல்லாமும் கிடைக்கும்.

தமிழர்கள் அனைத்தையும் பெற, புத்தகங்களைப் பெற வேண்டும் !


                                                                                                                    
                                                                                                          வி.சி.வில்வம்